KUMARA KOTTAM KANCHIPURAM J K SIVAN

”திகடச் சக்கர செம்முகன்…”    நங்கநல்லுர்  J K  SIVAN 

2024  மார்ச் 31 அன்று  நண்பர்  வரதராஜனுடன் சென்று காஞ்சிபுரத்தில் சில  ஆலயங்களை தரிசித்ததை பற்றி அவ்வப்போது எழுதி வருகிறேன். அதில் ஒன்று ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்ட  குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்.  காஞ்சியில்  நாலு கோட்டங்கள் இருக்கிறது. வரதராஜபெருமாள் கோயில் கொண்டுள்ள  ஸ்தலம் புண்ணிய கோட்டம்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டுள்ள ஸ்தலம் ருத்ரகோட்டம். அம்பாள்  காமாக்ஷி ஆட்சிபுரியும் ஸ்தலம் காம கோட்டம். மேல ராஜ வீதியில் விஸ்தாரமாக அமைந்துள்ள  வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் ஸ்தலம்  குமார கோட்டம்.
மேற்கே பார்த்த  வாசலில்  ஐந்து நிலை ராஜ கோபுரம். முதலில்  பெரிய பிள்ளையார். அவரை நமஸ்கரித்தேன். உள்ளே  ரெண்டு பக்கமும் பெரியக உயரமான திண்ணை. சுவற்றில்  பாம்பன் சுவாமி வாழ்க்கை  சித்ரம் . வலது கை  பக்கம் 11ம் நூற்றாண்டு கட்டிய  பதினாறு தூண் மண்டபம்  இருந்த இடம். இப்போது நூலகம். இங்கே  நவகிரஹங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. முருகன் மூலவர். பெயர் தேவசேனாபதீஸ்வரர். ருத்ராக்ஷம், கமண்டலத்தோடு தரிசனம் தருகிறார்.அனந்த சுப்ரமணியன், நாக சுப்ரமணியன் என்றும் திருநாமங்கள்.
ஒருநாள்  ப்ரம்மதேவன்  தேவர்களோடு  கைலாசம் சென்றார்.  முதல் வாயிலில்   லட்சத்து ஒன்பது வீரர்கள் சூழ கந்த பெருமான் விளையாடிக் கொண்டிருக்க  தேவர்கள் மகிழ்ந்து முருக பெருமானை வணங்கினார்கள். ஆனால் பிரம்மா மட்டும் வணங்க வில்லை. செருக்குடன் சென்ற பிரம்மாவை குமரப் பெருமான் அழைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார் குமரக்கடவுள். பிரம்மா தலையை சொரிந்தார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாத நீர் எப்படி படைக்கும் தொழிலை செய்கிறீர்? என்று தலையில் குட்டி பிரம்மாவை சிறையில் அடைத்தார். பிரம்மா பல காலம் சிறையில் இருந்தார். பிரம்மாவின்  படைக்கும் தொழிலை  கந்தனே  மேற்கொள்கிறார். பிரம்மாவின் கமண்டலத்தையும், ஜெபமாலையையும்  எடுத்துக் கொண்டு பிரம்ம சாஸ்தாவாக கட்சி அளித்தார்.  முருகனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் நல்லவைகளாக பாவம் செய்யாதவைகளாக இருந்தன. இதனால் பவாம் புண்ணியங்கள் எனஜ்ற தீர்ப்பே இல்லாமல் போயிற்று. உயிரினங்கள் துயரமே அனுபவிக்கவில்லை. காலனுக்கும் வேலை இல்லை. பூமாதேவி பாரம் தாங்காமல் தவித்தாள். கடைசியில் சிவனாரே நேரில் வந்து முருகனை சமாதானம் செய்து பிரம்மாவை விடுவித்தார். பிரம்மா சிறையிலிருந்த வெளியே வந்து முருகனிடம் பிரணவ உபதேசம் பெறுகிறார். சிவபெருமானிடம் காதோடு கந்தபெருமான் பிரணவ பொருளை சொன்னார். சிவனார் மகிழ்ந்தார்.முருகனிடம் பேசினார்.

”குமரா. நீ முதலில் என்  ஆணையை ஏற்கவில்லை. நந்தியெம் பெருமானை விரட்டி விட்டாய். நீ ஊழி காலத்திலும் அழியாமல் நிற்கும் பிருத்வி தலமான காஞ்சிமாநகரம் சென்று உன் திருப்பெயரால் தேவசேனா பதீசம் என்ற திருக்கோயில் அமைத்து எனை பிரதிஷ்டை செய்து வழிபாடுவாயாக” என்று உத்தரவிட்டார். அதுவே குமர கோட்டம் ஆலயம். 

ஏகாம்பரேஸ்வரர் என்கிற சிவன் (அப்பா) கோயிலுக்கும், காஞ்சி காமாட்சி என்கிற அம்மா கோயிலுக்கும் நடுவில் இருக்கிறது  குமர கோட்டம் எனும் முருகன் கோயில்.  வழக்கமான கோயில் போல நேராக இல்லாமல் மிக கோணலாக வளைந்த வடிவில் வேறெங்கும் இல்லாத ஒரு அதிசய  கோயில்.  பாம்பன் ஸ்வாமிகளுக்கு இந்த கோயில் தெரியாததால் வரவில்லை. முருகனே  சிறுவனாக சென்று அழைத்து வந்தான் என்று புராணம் சொல்கிறது. ப்ரஹாரத்தில் கிருபானந்த வாரியார்  சிலை உள்ளது.  இங்கே தான் கச்சியப்ப சிவாச்சாரியார்  கந்தபுராணத்தை  இயற்றி  அரங்கேற்றம் பண்ணினார்.  கச்சியப்ப என்ற அவர் பெயரிலிருந்து அவர் காஞ்சிபுரம் காரர் எனத் தெரியும்.  பரத்வாஜ கோத்திரம். அப்பா  காளத்தி சிவாச்சாரியார்.
”என் மேல்  ஒரு புராணம் பாடு” என்று கனவில்  முருகன் அவரை கேட்டான்.
”பகவான் , நான்  எப்படி  ஒரு புராணத்தை பாடுவேன் ?”
”உன்னால் முடியும்,  ஆரம்பிக்க வார்த்தை சொல்கிறேன். அதை வைத்து ஆரம்பி.  ”திகடச் சக்கர”என்கிற வார்த்தையிலிருந்து துவங்கு.
கந்தன்  அடியெடுத்து கொடுத்தபிறகு  என்ன? கச்சியப்பர்  கடகட வென்று ” திகடச் சக்கர செய்முகம் ஐந்துள்ளான் ”  என்று காப்புச் செய்யுளை  தொடங்கினார். ஒரு நாளைக்கு   நூறு பாடல் என்று கந்தபுராணம் முழுதும்  பனை ஓலைச் சுவடியில் எழுதி முடித்தார்.
இதில் என்ன ஆச்சர்யம் தெரியுமா?
ஒவ்வொரு நாளும் கச்சியப்ப சிவாச்சாரியார்  எழுதிய எட்டுச் சுவடிகளை  பூஜை அறையில் உருகன் காலடியில் வைத்துவிட்டு  தூங்கப் போவார். மறுநாள் காøயில் அந்த ஏட்டுச்சுவடியில் ஆங்காங்கே திருத்தங்கள் செய்யப்பட்டு  சொல் , கருத்துப் பிழைகள்  நிறுத்தப்பட்டிருக்கும்.
கந்தன் தமிழ்க்கடவுள் அல்லவா?  கச்சியப்ப  சிவாச்சாரியார்  ஆச்சர்யப்படுவார்.
வாரியார்  ஸ்வாமிகள்  அடிக்கடி  கந்தனைப் பற்றி சொல்லும்போது  ”தன்  சரிதத்தை  தானே சரிபார்த்து கொடுத்த சரித நாயகன்” என்பார்.  வாரியார் சிலை பிரகாரத்தில் இருக்கிறது.
கந்த புராணம் எழுதி பூர்த்தியாகிவிட்டது. அரங்கேற்ற நாளும்  குறித்தாகிவிட்டது. குமரக்கோட்டம் நிரம்பி வழிந்தது.  கற்றோர், சான்றோர்களும், ஆன்றோர்களும், புலவர்கள்  எல்லாம் கூடி ஒரே அமர்க்களம்.
கச்சியப்பர், குமரப் பெருமானை வணங்கி, ”திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான்…”  என்று படிக்க  ஆரம்பித்தார்.
‘நிறுத்து நிறுத்து” என்று  புலவர்கள்  ஆரவாரம்.
 ”ஏன்?  என்னவாச்சு?  என்று  கேட்டபடி  கச்சியப்பர் நிறுத்தினார்.
”இலக்கணப் பிழை இருக்கிறது உன் பாட்டில்” என்றார்கள்.
”புலவர்களே  பண்டிதர்களே, இது என் வார்த்தை அல்ல இது,  கந்தபிரானே  அடியெடுத்துக் கொடுத்த வார்த்தை ”
உங்கள்  குற்றத்துக்கு விடை  கந்தன் அருளால் நாளை கிடைக்கும்”
அன்று இரவு சாப்பிடாமல் கண்களில்  நீரோடு   கந்த  புராண  ஓலைச் சுவடிகளை பூஜையறையில் உள்ள குமரப் பெருமானின் காலடியில் வைத்து விட்டு அங்கேயே  சுருண்டு விழுந்து உறங்கிப்போனார்.
”கவலைப்படாதே  கச்சியப்பா. நாளை மாலை  நானே  அவைக்கு வந்து சந்தேகத்தை தீர்த்து வைப்பேன்” என்று கந்தன் கனவில் கூறினான்.
மறு நாள் சபை கூடியது.  புலவர்கள் எல்லோரும்  ஆவலாக காத்திருந்தார்கள்.  அங்கே அப்போது சோழநாட்டு புலவர் ஒருவர் புதிதாக  வந்தார்.
”நான் கேள்விப்பட்டேன், உங்களுக்கு என்ன சந்தேகம், எது பிழை?” என்று கேட்டார். அவர்கள் சொன்னார்கள்.
” புலவர்களே,  திகடச் சக்கர” என்றால் அர்த்தம் இல்லையா? யார் சொன்னது? வீர சோழியம் என்ற இலக்கண நூலில் 18 வது பாடலில் திகட என்ற பதத்திற்கு பொருள் உள்ளது. திகழ்+தசம் என்ற இரு சொற்கள் சேர்ந்தால்  ”திகடசம்” என்று வார்த்தை மாறும்.  ”திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான்” என்றால்  பத்து கரங்களும், ஐந்து திருமுகங்களையும் உடைய சிவ பெருமான் என்று பொருள்”  என்றார் சோழ புலவர்.
எல்லோரும் அசந்து போய்விட்டார்கள்.ஒருவேளை வீரசோழியம்  அறியாதவர்களோ?  சோழ தேசப் புலவரின் ஞானத்தில், அழகில்,  அனைவரும் மயங்கி போனார்கள். புலவராக வந்த குமரப்பெருமான்
”உங்கள் ஐயம்  இப்பொழுது நீங்கிற்றா ?”என்று கேட்டு மறைந்தார்.
அப்புறம் என்ன  கந்தபுராண அரங்கேற்றம் இனிதே தொடங்கி நிறைவேறியது. இந்த கந்த புராண விளக்க சொற்பொழிவு ஒரு வருஷம் பூரா நடைபெற்றது.  நிறைவு நாளில் தொண்டை நாட்டின் 24 கோட்டத்தாரும் ஒன்றாய் சேர்ந்து கச்சியப்பரையும், கந்தபுராணத்தையும் தந்த பல்லக்கில் வைத்து ஊர் முழுவதும் பவனி வர பண்ணினார்கள். சைவ சைவமதத்தில் பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் என்ற  மூன்றும்  சிவனின் முக்கண்கள் போன்றது.அருணகிரி இங்கே வந்து முருகனை கண்டு  ஆனந்தப்பட்டு பாடிய  திருப்புகழ் பாடுவோமா?
”அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
     அசடர்பேய்க் கத்தர் நன்றி …… யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்பு கழ்ந்து
     அவரைவாழ்த் தித்தி ரிந்து …… பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
     தெரிவைமார்க் குச்சொ ரிந்து …… அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
     தெளியமோ க்ஷத்தை யென்று …… அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
    இடபமேற் கச்சி வந்த …… உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
    இறைவர்கேட் கத்த குஞ்சொ …… லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
    குருவியோட் டித்தி ரிந்த …… தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
    குமரகோட் டத்த மர்ந்த …… பெருமாளே.”
முருகா,   அலைந்து திரிந்து, உன் திருவடி நினையாத  அறிவிலிகள்,  பைத்தியங்கள், வஞ்சகர்கள்,மூடர்கள், பேய்த் தன்மை கொண்ட பிசாசுகள், நன்றி சிறிதும் நெஞ்சில் இல்லாத, ப்ரயோஜனமில்லாதவர்கள்.  இப்படிப்பட்டவரக்ளை பாடி புகழ்ந்து , போற்றி, அவர்கள் கொடுக்கும் பொருளுக்கு ஆசைப்பட்டு சம்பாதித்து, அதை  பொதுமகள் உறவு சுகத்துக்கு இழந்து,  என் காலத்தை முட்டாளாக  வீணாக்கி விட்டேனே.    இந்த  நாள் வரை  நான் சம்பாதித்த அபவாதத்தைப்  போக்கி என் மீது கருணையும் அன்பும் கூர்ந்து நீ,  மோக்ஷம் அருளவேண்டும். எப்போது கொடுப்பாய்? சிவ பெருமானது மாற்றறியாத பசும்பொன்  உருவம்,  வேறாகும்படி பிரிந்து ரிஷப வாகனத்தில் ஏறி   காஞ்சி வந்த  காமாக்ஷி அம்பாள்  தவம்  புரிவதைக்  கண்டு அஞ்ஞான  இருள்  நீக்கி   அருள் புரிந்த  சிவபெருமானின்   திரு மகனே,முருகனே,  குறவர்களின் கூட்டத்துக்கு  இடையில்  ஒரு கிழவன் வேடத்தைக் காட்டிப்  புகுந்து நின்று, தினைப்புனத்தில் குருவி மற்றும் பக்ஷிகளை விரட்டி   தவம் புரிந்த  மான் போன்ற அழகி வள்ளியை மயக்கி  தன் தெய்வ வடிவம் காட்டிய  வள்ளி நாயகா,  காஞ்சி  குமரக்கோட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாளே*என்கிறார் அருணகிரி.
காஞ்சிபுரம் சென்றால் மறக்காமல் குமார கோட்டம் சென்று தரிசனம் பண்ணுங்கள். அவ்வளவு முக்யத்தவம்  வாய்ந்தது. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *