UNFORGETTABLE GRANDMA J K SIVAN

ஒரு பாட்டியின் கதை –     நங்கநல்லூர்  J K  SIVAN 

நாம்  எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்ட  வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும்? இதற்கெல்லாம் மற்றவர்கள் எவரும் காரணமில்லை. நமது மனம் ஒன்றே காரணம். நம்மை ஆட்டுவிக்கும் மனம், எண்ணங்கள், நம் செயலை நிர்ணயிக்கிறது. நம்மை அதன் ஆளுமையில்  இயங்க வைக்கிறது.  இப்படி வாழும் நாம் சிலரை மறப்பதில்லை.  மறக்க முடியாதபடி அவர்கள் செயல் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
அவள் பெயர் மதுராம்பாள். பாட்டி என்று தான் கூப்பிடுவோம்.  எனக்கு நினைவு தெரிந்து சிறுவயது பையனாக இருக்கும்போதே அவளுக்கு எழுபதுக்கு மேல் வயதிருக்கலாம். பரம ஏழை.  இப்படிப்பட்டவர்கள்  இயற்கையோடு ஒட்டி அது விட்ட வழியில் வாழ்ந்தவர்கள்.  வெயிலுக்கு  குளிர்  பிரதேசம்  நோக்கி  சென்றதில்லை.  மலை வாசஸ்தலங்கள் எது வென்று தெரியாதவர்கள்..  வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்புமின்றி  எதிர் கொண்டு  வாழ்ந்தவர்கள்.  எல்லோரும் ஒருவரை ஒருவர்  நம்பி  வாழ்ந்த  காலம்  அது.  வித்தியாசம்  மனிதர்களுக்குள்ளே  அப்போது  வரவில்லை.பின்  எப்போது   தான்  வந்தது  என்பது  இன்னும்  புரியவில்லை.

பாட்டி  ஈரத்துணியை  பிழிந்து  தலையில்  சுற்றிக்கொண்டு  வெயிலில்  காலில்  செருப்பின்றி  புரசை வாக்கத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு  நடந்து வருவாள்.  பூந்தமல்லி சாலையை கடந்து  சேத்துப்பட்டு  ரயில் நிலையம்  வரையில்  பெரும்  ஏரி பள்ளமாக இருக்கும்.   அதில்  குட்டியாக  பாலம்  போன்று  நடப்பதற்கு  போட்டு  வைத்திருப்பார்கள் . அதன்  வழியே  வந்தால்   நுங்கம்பாக்கம்  ரயில்வே  நிலையம்  வரை  நிறைய சந்துகள்.  அவற்றினூடே நுழைந்து  சூளைமேடு  வந்து விடுவாள்.
”பாட்டி  ரெண்டு  காலிலேயும்  என்ன  கட்டு?”
பொக்கை  வாய்  சிரிக்கும்.   மெதுவாக  கட்டுகளை  அவிழ்ப்பாள் .
அவளுடைய  கிழிந்த நார்மடிக்கு  இப்படியும்  ஒரு  உபயோகமா?  நார்மடி என்பது இளம் காவி வண்ண புடவை. சிவப்போ காவி நிறமோ பட்டை கரை. அதை மடிசார் போல் கட்டி   மொட்டைத் தலையையும் சுற்றி மறைத்திருப்பாள். நெற்றிக்கு மேல் வெள்ளையாக குச்சி குச்சியாக நரைமுடி தெரியும். அதை இழுத்து மறைத்துக் கொள்வாள்.  காவி அல்லது பழுப்பு  நிறத்தில் ஒரு ஜாக்கெட்.  இது தாள்  அவள் ஆடை.   காலில் செருப்பு கிடையாது. பாதங்கள் வளைந்து இருக்கும்.  கிழிந்த பழைய  நார்மடி புடவைத்துண்டுகள் தான் காலைச்சுற்றி அவள் அணியும் செருப்பு.  வெயிலில்  பாதங்களைப்  பாதுகாக்கும் காலணி  அது தான்.  விடு விடு வென்று  ஆடி ஆடி  நடந்தவள்.   வீட்டுக்கு வந்ததும் அந்த காலணி துணிகளை அவிழ்த்து நன்றாக தோய்த்து உலர்த்தி சுருட்டி   பையில் வைத்துக் கொள்வாள்.  அவள்  பைக்கு பெயர் மடிசஞ்சி. பழைய  நீலமோ கரும் பச்சையோ கலரில் கம்பளி போர்வையை கிழித்து  பையாக  தைத்து வைத்திருப்பாள். அதற்கு காது கிடையாது  கோணிமாதிரி என்று சொல்லலாம். அதில் தான் அவள் உலகமே இருந்தது. கம்பளிக்கு தீட்டு கிடையாதாம். .மடி. என்பதால் மடிசஞ்சி என்று அதற்கு பெயர். அவளே ஊசி நூலால் தைத்த  வாயகலமான, காது இல்லாத  கம்பளிப்பை. அந்த பையின்  வாயை  ஒன்று சேர்த்து  ஒரு கயிறால் முடிந்து இடுப்பில் தூக்கிக்கொண்டு செல்வாள்.இந்த மடிசஞ்சி ஒரு காலத்தில் முழுசாக அவளுடைய  போர்வையாக இருந்திருக்கும்.  வைத்திருந்த  விக்டோரியா  காலத்து  கம்பளி போல இருக்கிறது.  அவளது மடிசஞ்சியில்  எவ்வளவு  வெய்ட்  போட்டாலும்  கொள்ளும்.  இன்னும்  இருக்கா”  என்று  கேட்கும்.  அதை குழந்தை போல் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு நடப்பாள்.
”பாட்டி எதுக்கு இந்த  பழைய பச்சை  கம்பளிப்பை வச்சிண்டிருக்கே.”?
”அது  மடி டா. குளிச்சுட்டு  தொட்டா  கூட   பாதகம்  இல்லை.”
அவள்   எங்கள் வீட்டுக்கு வந்ததும் முதலில் இடுப்பில்  மடிசஞ்சியை இறக்கி வைத்துக்கொண்டு  தரையில் உட்கார்வாள். உட்காரும்போது எப்போதும் ஒரு தூண் மேல் சாய்ந்து தான் உட்கார்வாள். அது தான் நாற்காலி அவளுக்கு.  கம்பளிப்பையில்  அவள்  என்ன  கொண்டுவண்டிருக்கிறாள்  என்று  எல்லா  வாண்டுகளும்  அவளைச்  சுற்றி  வந்து  அமர்ந்து கொள்ளும்.  அவளுக்கும்  அது  தெரியும். வெறுங்கையுடன்  அவள்  எந்த  வீட்டுக்கும்  வந்ததாக  சரித்திரம்  இல்லை.   அப்போதெல்லாம்   உறவினர்கள்  எந்த வீட்டுக்கும் முன்கூட்டியே  சொல்லி விட்டு  வரமாட்டார்கள்.  திடீரென்று  வந்து  நிற்பார்கள்.  போன  இடத்தில்  உறவினர்  இல்லையென்றால்  அண்டை வீட்டில்  உபசாரம்  நடக்கும்.  

கம்பளிப்பை  யிலிருந்து  ஒரு பித்தளை   சம்புடம்  வெளியே   தலைகாட்டும்.  நிறைய  நசுங்கல் இருந்தாலும்  அழகாக  பள பளவென்று புளி   போட்டு  அதை  தேய்த்து  தங்கம் மாதிரி ஜொலிக்கும்.    அதற்குள்  நிறைய  பொரி , பொட்டுக்கடலை,  அச்சு  வெல்ல  துண்டுகள்,   சீனா கல்கண்டு.   காய்ந்த  திராட்சை நிரப்பி வைத்திருப்பாள்.  அது  தான்  அவள்  ஆகாரம்.  அதிலிருந்து  எங்களுக்கு  எல்லாம் நீட்டிய கைகளில் துளித்  துளி கொடுப்பாள்.

”அசத்துகளா,    ஏன்  இப்படி  எட்டி பாக்கிறீள் .  பேசாம  உக்காருங்கோ   தரேன்.  உங்களுக்காக  தானே  கொண்டு வந்திருக்கேன்.  பறக்காவட்டிகளா”. வாய்  வார்த்தைகளை   கடினம்  என்று  நினைக்க  வேண்டாம்.  சிரித்துக்கொண்டே   செல்லமாகத்  தான் அதட்டுவாள்.  அவளிடம்  எல்லோருக்கும்   பிரியம்.  தெருமுனையில்  அவள் ஆடி ஆடி   வருவதைப்   பார்த்தாலே அனைத்து  குழந்தைகளும் ஆனந்தமாக   ”ஹையா  புரசைவாக்கம் பாட்டி  வந்துட்டா”  என்று  கோலாகலமாக குதிப்போம்.   

அவளை சுற்றி உட்கார்ந்து கொண்டே  கைகள்  நீட்டுவோம் .  அனைத்திலும்  கொஞ்சம்  கொஞ்சம்   கலந்து கட்டியாக  மேற்கண்ட  தின்பண்டங்கள்  விழும்.  ஒரு  சில  கைகள்  அதை  அப்படியே  வாயில் போட்டுக்கொண்டு  மீண்டும்  நீண்டு  மறுபடியும்  பெறும். ”

”ஓடுங்கோ  எல்லாம்” என்று  சொல்லி விட்டு  சம்புடத்தை  மூடி விடுவாள்.  துளியூண்டு  அடியில்  மீந்து இருக்கும்.  பாவம்  அவளுக்கு  ஆகாரம்  அதுதான்  மிஞ்சும்.  நாலு  இடத்தில்  மீண்டும்  ஏதாவது காசு  தேற்றி  தின்பண்டங்களை வாங்கி  அதை  நிரப்பிக் கொள்வாள்.

அவளுக்கு  நிரந்தர  வருமானம்  என்று  ஒன்றில்லை.  கணவனின்  முகமே  மறந்தவள்.  இள  வயதிலேயே,  கல்யாணம் என்றால் என்ன  வென்று  புரிந்து  கொள்ளு முன்பே   பள்ளிக்கூடம்  போய் கல்வி அறிவில்லாத  பெண்ணாக, திருமணமாகி  அதே அவசரத்தில்  விதவையும்  ஆனவள்.  அவள் கணவன் தொச்சா (துரைசாமி  அய்யரை  எல்லாரும் அழைத்த  பெயர்) 22 வயதிலேயே  வயிற்றில்  ஏதோ  கோளாறு  என்று  வயிறு  வீங்கி   நாட்டு வைததியன்  கொடுத்த  மருந்தில் குணமாகாமல்  பட்டணத்துக்கு  ரயிலேறி  வந்து   பெரிய  ஆஸ்பத்ரிக்கு  குதிரை வண்டியில் போய்ச்   சேரு  முன்னேயே உலகிலிருந்தே  விடைபெற்றவன்.
எப்படியோ  அவனது காரியங்கள்  யாரோ  ஏற்று  நடத்தி வைக்கப்ட்டது.  ஒருவரை ஒருவர்  விட்டுக் கொடுப்பதில்லை.  அவளால் கூடப்  பிறந்தவர்களிடமோ,   கணவன் வீட்டாரிடமோ,  எவரிடமும்  நிலைத்து  இருக்க முடியவில்லை. அண்டை  அசல்,  தூரத்து  உறவுகள்,  தன்னை  நேசிப்பவர்கள்  என்று  எங்கு எல்லாம்  அவளால்  சில  காலம்  தள்ள முடியுமோ அங்கெல்லாம்  இருந்து வருவாள்  அவளது  உடைமைகள்  அனைத்து  அந்த  மடிசஞ்சியிலேயே உள்ளதால்  தனியே  வீடு  காலி செய்து கொண்டு  எங்கும்  போக  தேவையில்லை.  எப்பவும்  அவள்  வீடு காலிசெய்து கொண்டு  நகர்பவளாக aலாக  வாழ்ந்தாள்   என்பது  இப்போது  எனக்கு  புரிகிறது. 

அவள் எங்கு போனாலும்  ஓர்  உடைந்த  இலுப்பைக்கட்டி.  கன்னங்கறேலென்று   பளபளத்து  ஒரு காதும்  அதைச் சேர்ந்த  பாகமும்  உடைந்து   முக்கால் வாணலியாக  வைத்திருப்பாள். அதில்  அவளால் அருமையாக  அடை  தோசை  எல்லாம்   வார்க்க முடியும்.  குமுட்டியோ  அடுப்போ மூட்டி  அவள்  அதன்   எதிரில்  அமர்ந்துவிட்டால்  அடுக்கடுக்காக   ஒரே   அளவில்  ஒரே  கன  பரிமாணத்தில்,  பொன்னிற வட்டத்தில்  வட்டமாக  ஒரு  பாத்திரத்தில்  தோசைகளோ, அடைகள் நிறைக்க  முடியும்.  

”பாட்டி,   எனக்கு   எனக்கு”  என்று  போட்டியோடு  அனைவரும்  அவளைச்  சுற்றுவோம்.  ”அம்மாவைக்  கூப்பிடுங்கோ”  என்று  சொல்லி  டிஸ்ட்ரிபூஷன்   என்கிற  கடினமான  வேலையை  வேறு ஆளுக்கு விட்டு விடுவாள்.    அவளால்  எங்களை  சமாளிக்க  முடியாது.

காய்ந்த  மிளகாய், புளி , இஞ்சி, சில  பருப்புகள் இவற்றை  வறுத்து  இடித்து  என்னவோ  பண்ணி  கமகமக்க  நல்லெண்ணெய்  ஊற்றி ஒரு  சைட் side  dish   டிஷ்  பண்ணி விட்டால்  அம்பது  அறுபது தோசைகள்  அந்தர்தானம்  ஆகிவிடும்.

தோசை மாவு  அடுத்த  ஈடு  கல்லுரலில்  அரைக்க கிளம்பிவிடுவாள்.   பெரியவாளுக்கு  தான்  இனிமே  நீங்க  இந்த  பக்கமே  வரக்கூடாது  என்று   எங்களை விரட்டி  விடுவாள்.

மெல்லிய  தங்க  நிற  உடல்.  மூடாத  தலையை  நாங்கள்  பார்த்ததேயில்லை.  உடம்பில் மில்  ஒரே  கிழிந்த  கைத்தையலால்  தைத்து  அங்கங்கு  கிழிசலுக்கு  முடிச்சு  போட்டு உடுத்திய ஒரு  காவி நிற  ஆடை  அதன் பெயர்  தான்  நார்மடி.  அவளிடமிருந்த  ரெண்டே  ஆடைகளில் அவள்  திருப்திடைந்தவள் .  நல்லிக்கோ   குமரனுக்கோ அவள்  மனதில்  இடமில்லை.

காலில் பித்தவெடி பாளம்  பாளமாக  விரிசல் விட்டிருக்கும். பின்னால்  தோய்க்கும் கருங்கல்லில் இரண்டு குதிகால்களை தண்ணீர் விட்டு தேய்த்துக் கொள்வாள்.  ஒருகாலை மடக்கி ஒரு காலை நீட்டிக்கொண்டு  வீட்டில்  அங்கங்கு  நின்று கொண்டிருக்கும்  தூண்  ஒன்றில்  சாய்ந்துகொண்டு  உட்கார்வது அவள் பழக்கம். என்னென்னவோ  ராமநாடக கீர்த்தனை பாடல்கள் பாடுவாள்.  கண்ணாடி  ஒன்று  ஒரு  பக்கம்  நூல்  கட்டி  (காதில்  மாட்டிக்கொள்வதற்கு)  படிப்பதற்கு  மட்டும்  உபயோகிப்பாள் .  எங்கள்  அம்மாவிடம்  இருந்து   பெரிய விக்ரமாதித்தன்   கதை  எழுத்து  கூட்டி  ராகமாக  படிப்பாள் .  

மணவாழ்க்கை அறியாத பாட்டி  இளம் வயதில் தாயற்ற ஒரு பையனை  வளர்த்தாள்.  அவளது சகோதரி  மகன்.  பிள்ளைக்கும்  மேலாக  அவனிடம்  பாசம்.  அவன் அவளை  கவனிப்பதில்லை.  அவனுக்கென்று எது பிடிக்கும் என்று  தெரிந்து  வைத்து  பட்சணங்கள்  செய்வாள்.  அவன் வராததால்   மற்ற குழந்தைகளுக்கு  கொடுத்து  மகிழ்வாள். அவளைப்போன்றே  அவள் மனமும்  எனக்கு  ஒரு  புதிர்.  இன்னமும் கூட.  எப்படியோ  யார் காலைப் பிடித்தோ  அவனுக்கு  ஒரு அரசாங்க உத்யோகம் வாங்கி கொடுத்தாள் . அவனுக்கு வேலை செய்வதில் விருப்பமில்லாமல்  அடிக்கடி சொல்லாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவான். அவனுக்கு அழகான ஒரு நல்ல குடும்பத்து பெண் ஒன்றையும் கல்யாணம் பண்ணி வைத்தாள் . அவளோடு சேர்ந்து அந்த பெண்ணும் கடைசி வரை சுகம் என்ன வென்றே தெரியாமல் மறைந்து விட்டது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *