RANGWALI HOLI

ரங்வாலி ஹோலி – நங்கநல்லூர் J K SIVAN

நேற்றோடு ஹோலி பண்டிகை முடிந்து விடவில்லை. இதோ இன்று காலையும் ஆரம்பித்து விட்டது. தெருவில் நடக்க முடியவில்லை. சந்தோஷமாக சில இளைஞர்கள் தங்கள் மேலும் அருகே உள்ளவர்கள், தெருவில் போவோர் மீதும் வண்ணப்பொடிகளை தூவியும் பீச்சாங்குழலில் வண்ண வண்ண நீர் நிரப்பி குளிப்பாட்டியும் மகிழ்கிறார்கள். ஒன்றும் குறை சொல்ல முடியாது. இது குதூகலத்தின் வெளிப்பாடு. இந்தியர்களில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியோடு
கொண்டாடும் விஷயத்தில் எவரும் கலந்து கொள்ள வேண்டுமே தவிர குறை கண்டு பிடித்து நட்புற வில் விரிசல் கூடாது. வெறும் வண்ணச் சாய நீர் பீச்சி அடித்து உடையை கறைப்படுத்துவதோடல்லாமல் கூப்பிட்டு கை நிறைய இனிப்புகளையும் வழங்குகிறார்கள்.

முக்யமாக வடக்கே இது அதிகமாக எங்கும் கொண்டாடப்படுகிறது. பங்குனியில் தான் ஹோலி பண்டிகை வரும். பல்குனி என்று வடமொழியில் பெயர். அர்ஜுனன் அப்போது தான் பிறந்தான் என்பதால் அவனுக்கு பலபெயர்களில் பல்குனன் என்றும் ஒரு பெயர்.
பௌர்ணமி அன்று சாயந்திரம் போகி பண்டிகை அன்று நாம் சொக்கப்பனை தீ மூட்டுவது மாதிரி ஹோலி அன்று அவர்களும் கூட்டமாக அக்னியை சுற்றி வந்து ஆட்டம் பாட்டம்…ஹோலி நேற்று சாயந்திரம் ஆரம்பம்.
கெட்டதை நல்லது, தீமையை நன்மை வென்ற நாளாக . அன்பின் வெளிப்பாடாக. வசந்தத்தின் வரவை அறிவு றுத்தும் நாளாக ஹோலி பண்டிகை மகிழ்ச்சி யூட்டு கிறது. சந்தோஷம் எப்படி ,எந்த ரூபத்தில், வர்ணத்தில் வந்தால் என்ன?
ஹோலி கொண்டாடுவதில் வயது,மொழி, ஆண் பெண் எதுவுமே கணக்கில் வராது. ரங்வாலி ஹோலி அன்று வடக்கே கிழம் கட்டைகள் தான் உற்சாகமாக ஒருவர் மேல் ஒருவர் சாயம் பூசும், பீச்சும். அதுவும் உத்தர பிரதேசத்தில் மதுரா பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் பிறந்து விளையாடிய ஊரில் கேட்கவே வேண்டாம்.
இந்த மாதிரி ஹோலி பண்டிகை சமயத்தில் ஒரு வருஷம் நான் குஜராத்தில் ஜாம்நகரில் கப்பல் விஷய மாக சென்றிருந்தபோது இருந்தபோது என்னை கலர் கலராக குளிப்பாட்டி விட்டார்கள். முட்டாள் நான். விஷயம் தெரியாமல் வெள்ளை வெளேரென்று சட்டை பேண்ட் வேறு போட்டுக்கொண்டிருந்ததால் அவர்கள் ஆர்வம் இன்னும் அதிகமாயிற்று. இப்பொழுதே இப்படி என்றால் கண்ணன் காலத்தில்?
ஒரு காட்சி மனதில் உருவாகிறது.மாலை வேளை யமுனையிலிருந்து குளிர்ந்த தென்றல் எங்கும் உள்ள மலர்களின் நறுமணத்தோடு வீசுகிறது.தங்க நிறத்தில் சூர்யன் மறைய மனமின்றி கிருஷ்ணனை பார்த்துக் கொண்டே மலைவாயில் மூழ்குகிறான். கோபிகளோடு கிருஷ்ணன் யமுனா நதி தீரத்தில் ராஸ லீலையில் ஈடுபட்டு அனைவரையும் மகிழ்விக்கிறான். அப்போது ராதை எங்கிருந்தோ ஓடிவந்து அவனை இறுக அணைத் துக் கொள்கிறாள். மூச்சு முட்டுகிறது. அந்த சந்தோஷத்தோடு உரத்த குரலில் கண்ணன் மீது கொண்ட அன்பை பாசத்தை பெருமையோடு பாடுகிறாள். மற்ற கோபியர்களும் போட்டி போட்டுக்கொண்டு வந்து கண்ணன் மீது முட்டி மோதி அவனை தனதாக்கிக் கொள்ள முயல்கிறார்கள். கண்களில் ஆர்வம், மனதில் இன்பம். பக்தியும் பாசமும் கலந்த சொல்ல இயலாத சுகம்.
ஒருத்தி எப்படியோ அவனது முகத்தை இறுக்கி பிடித்துகொண்டு காதில் ஏதோ ரகசியம் சொல்வது போல் அவன் கன்னத்தில் நிறைய முத்தமிட்டு விட்டாள். அவளது நீண்ட நாளைய ஆவல் நிறை வேறியது.
ஒருவள் கிருஷ்ணனின் பீதாம்பரத்தை இழுத்து அவனைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு கரும்புதோட்டத்தில் தொபுகடீர் என்று அவனோடு சேர்ந்து வீழ்ந்தாள்.
ராதையும் கிருஷ்ணனும் நிஜமும் நிழலுமாகவே தோன்றினாலும், நிலவும் குளுமையும் போல் இணை பிரியாமலே நமக்கு காண்கிறார்கள். ராதையை நினைக்காமல் கண்ணனை எண்ண முடியவில்லை. ராதா இருந்தாளா, என்பதே கேள்வி இல்லை. கிருஷ்ணன் இருந்தான் என்றால் ராதை இருந்தாள் என்பதே விடை.
பிருந்தாவனத்தில் எவருக்குமே உடலும் உயிரும் கண்ணனே. அவர்கள் வாழ்க்கையே அவனைச் சுற்றியே அமைந்தி ருந்தது. கோபியர் அவனோடு சேர்ந்து விளையாடினர். அவன் குழல் நாதத்தில் மயங்கினர். அன்பை எவ்வளவு அவன்மீது கொட்டி னார்களோ அதைப் போல பல மடங்கு அவனிடமிருந்து அதை பெற்ற பாக்யசாலிகள். கோபியரில் தலை சிறந்த வளாக திகழ்ந்தவள் ராதா. அவளது குரல் கண்ணன் குழலைப் போன்று இனிமையானது என்று கூட சொல்லும் அளவுக்கு காந்த சக்தி கொண்டது. கண்ணன் குழல் ஒலி உலகையே தன்னுள் அடக்கும் சக்தி வாய்ந்தது. அதில் மயங்கிய அனைத் து கோபி யரும் கண்ணனை தங்கள் இதயத்தில் பிணைத் துக் கொண்டதோடு அல்லாமல் அவனைத் தங்க ளுடை யவன் என ஒவ்வொருவரும் சொந்தம் கொண்டாடினர். அவனையே மணாளனாக கருதினவர்கள் அதிகம். அதில் முதலாவது ராதா. கிருஷ்ணன் தனது பிரேமை யை அவளுக்கே அளித்தான். அவனிலும் 10 வருஷங் கள் அவள் மூத்தவள் என்பது அங்கு வித்யாசமாக படவே இல்லை. மனம் ஒன்று பட்டதால் மற்றது மறையும். தெய்வீக பிரேமைக்கு வயசோ, வித்தியா சமோ, மதமோ, மொழியோ எந்த பேதமும் கிடையாதே. இரு மனம் ஒன்றாய் கலந்த பின்னாலே எது வரும் குறுக்கே?
மனித காதலோடு தெய்வீக பிரேமையை ஒப்பிட்டு எடை போடவே கூடாது. தவறான சிந்தனைக்கு அது அடி கோலும். புத்தியை பேதலிக்க வைத்துவிடும். ”அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமா னது” என்று ஒரு டயலாக் கேட்டிருக்கிறேன். ராதாவின் தூய காதல் கண்ணனைக் கட்டிப்போட்டிருந்தது. எல்லா கோப கோபியரும் கண்ணனை விரும்பி னாலும் அவனது அன்பில் பங்கேற்றவர்களாக இருந்தும் ராதை எப்போதுமே தனி இடம் பெற்றி ருந்தாள் . கண்ணனின் எண்ண பிரதிபலிப்பு அவள். இளம் வயதில் கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் ராதையோடு சேர்ந்து விளையாடினான்.
ஒருநாள் கிருஷ்ணன் தேம்பி தேம்பி அழுதான். வெகு நேரம் யாரும் சமாதானம் செய்தும் அழுகை நிற்க வில்லை.
”எண்டா கிருஷ்ணா அழறே, உனக்கு என்ன தான் ஆச்சு சொல்லுப்பா ? பதறினாள் யசோதை.கண்ணன் சாப்பிட மறுத்தான். எவ்வளவோ சொல்லியும் முடியா து என்று தலை அசைத்தான். கெஞ்சிக் கூத்தாடி ஏன் அவன் அழுகிறான் என்று மெதுவாக கண்டுபிடித்தாள் யசோதை.
”ராதா மட்டும் அழகாக சிவப்பா இருக்கிறாளே ?” விம்மலுக்கு இடையே ஒவ்வொரு வார்த்தையாக காரணத்தை வெளியிட்டான் அந்த மாய கிருஷ்ணன்.
”அப்படி ஒண்ணும் இல்லைடா என் செல்லமே. நீ தான் ரொம்ப ரொம்ப ரொம்ப அழகு” யசோதை அவனைக் கட்டிக்கொண்டு ஆறுதல் அளித்தாள் .
”நான் அழகு என்று யார் உன் கிட்டே சொன்னது? ராதாவை விடவா?. அவள் தான் சிகப்பாக இருக்கி றாள். நான் கறுப்பாக தானே இருக்கேன்?”
”சிவப்பா இருந்தா தான் அழகு என்பதே தப்பு. கருப்பா மினுமினுன்னு இருக்கிற கண்ணைப் பறிக்கிற கிருஷ்ணா உன்னை விட யாருமே அழகு உலகத்திலேயே யாரும் கிடையாதுடா. கருப்பு இல்லாம வெளுப்பு இல்லை. இரவு இல்லாம பகல் இல்லை. இருண்ட பிரபஞ்சம் இல்லாமல் சூரியனோ நக்ஷத்திரங்களோ இல்லை. ”
ஒரு பிரசங்கமே செய்துவிட்டாள் யசோதை.
”ஒ அப்படியா. அப்போ கருப்பு தான் அழகு என்கிறா யா அம்மா ?”
”ஆமாம் ஆமாம்.கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ”
”சரி அப்போ, உன்னையும் அந்த ராதாவையும் கருப்பா பண்ணி விடுகிறேன் பார் ” விறுவிறுவென்று கண்ணன் யசோதை, ராதை, மற்றும் அருகே இருந்த கோபியர் அனைவர் முகம் கை எல்லாம் கருப்பும், நீலமுமாக வண்ணம் பூசினான். இதை வடக்கே கிராமிய ஓவியமாக பல இடங்களில் வீட்டுச் சுவற்றில் படமாக வரைந்திருக்கிறார்கள்.
கண்ணன் இவ்வாறு ராதைக்கும் மற்றோருக்கும் வண்ணங்கள் பூசியதை இன்றும் கொண்டாடு கிறார்களே இது தான் ஹோலி பண்டிகையோ? அன்று தெரிந்தவர் தெரியாதவர் எல்லோர் மீதும் வண்ணங்கள் கலந்த பொடிகள், கலவைகளை பூசுவார்கள், நீரில் கலந்து பீச்சுவார்கள். இன்றும் கண்ணன் ராதா சம்பந்தப்பட்ட பர்சானா, பிருந்தாவ ன், கோகுலம், மதுரா என்று அநேக இடங்க ளில் இந்த வண்ணக்கலவை பூசும் வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. அனைவருமே மகிழ்வர். கண்ணன் சம்பந்தப்பட்ட எல்லாமே மகிழ்ச்சி தானே.
போன வருஷம் ஹோலி அன்று என் எதிர் வீட்டில் ஒரு பீஹார்வாசிகள் குடும்பத்தில் குதூகலம். நிறைய ஆணும் பெண்ணுமாக சிரிப்பும் கும்மாளமும் பீஹாரி பாஷையில் பேச்சு ஜோக். சிரிப்பு. எல்லோர் கையிலும் வண்ணப்பொடிகள்.
அன்று பார்த்து விஷயம் தெரியாமல் பேங்க்கு போகலாம் என்று எனோ எண்ணினேன். என்று மில்லாமல் அன்று ஏன் எனக்கு புத்தி இப்படிப் போயிற்று. வெள்ளைச் சட்டை . வெள்ளை வேஷ்டி.. வாசலில் என்னைப் பார்த்ததும் சில இளசுகள் ஏதோ அவர்கள் மொழியில் பேசி சிரிக்கும்போது எனக்குள் ஒரு பக்ஷி சொல்லியது. உடனே எனக்கு எதிர்புறமாக ருந்த சந்தில் தீயணைக்கும் இன்ஜின் மாதிரி என் ஸ்கூட்டரை விட்டுக் கொண்டு வேகமாக சென்று வண்ணப்பூச்சில் ஹோலியிலிருந்து தப்பினேன். திரும்பி வரும்போதும் பால் திருட வரும் பூனை மாதிரி நாலு பக்கமும் பார்த்துக்கொண்டே குபீர் என்று வீட்டின் கேட் திறந்து ஸ்கூட்டரை உள்ளே வேகமாக விட்டேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *