A GOOD FRIDAY J K SIVAN

நல் வெள்ளிக்கிழமை – நங்கநல்லூர் J.K. SIVAN
நேற்று 29.3.2024 ஒரு நல்ல வெள்ளிக்கிழமை. பல்லாவரத்தில் ஒரு நண்பர் இல்லத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணியதோடு பகவத் கீதை பாராயணமும் ஆரம்பித்தோம். சிறிய ஹால். முழுமனதோடு உச்சரிக்க வந்தவர்கள் நிரம்பி இருந்தார்கள். எங்கள் எதிரில் இடுப்பில் கை வைத்துக் கொண்டு நீல நிற கிருஷ்ணன் மலர்மாலை களை அணிந்து கொண்டு ரெண்டரை மூணு அடி உயரத்தில் புன்னகையோடு எங்களை பார்த்துக்கொண்டு நின்றான். இப்படித்தானே பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு விஷ்ணு ஸஹஸ்ரநாமம் உபதேசிக்கும்போது அதைக் கேட்டுக்கொண்டு குருக்ஷேத்திரத்திலும் நின்றிருப்பான்!
வெள்ளைக்காரர்களுக்கும் நேற்று நல்ல வெள்ளிக் கிழமை GOODFRIDAY தான் நேற்று.
ஒரு ஆசிரியை மாணவிகளைக் கேட்டாள் :”குட் ஃப்ரைடே GOOD FRIDAY எந்த நாளில் இந்த வருஷம் வருகிறது..?நிறைய குழந்தைகள் ஞாயிறு முதல் சனி வரை சொல்லிக் கொண்டே போனது. FRIDAY என்றால் வெள்ளிக்கிழமை தானே என்று கூட யோசிக்காத ஆசிரியை, அவளிடம் பயிலும் மாணவிகள்…! ஹெட் மாஸ்டரின் பெண் வியாழக்கிழமை என்று சொன்னது. HM பெண் என்பதால் அது சொன்னதே சரி என்று ஆசிரியை அதற்கு மார்க் 50 போட்டாள் .
”சிவன் மாமா, கிழமைகளில் எது புனிதமானது?” என்று சுப்புணி ஒரு தரம் என்னைக் கேட்டான்.
”சுப்புணி, எல்லா கிழமைகளும் புனிதமானது தான். நாம் ஹிந்துக்கள் ஒவ்வொரு கிழமையும் ஒரு கிரஹத்துக்கு என்று ஒதுக்கி வைப்பவர்கள், அதிலும் வெள்ளிக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அம்பாளை, தாயாரை வழிபடும் நாள். சுக்ரனுக்கு உகந்தநாள். வெள்ளி என்பது சுக்ர கிரஹம் .மற்றவர்க ளும் இதை வணங்குகிறார்கள். புனிதமான வெள்ளி என்று.”
”ஓஹோ கிறிஸ்தவர்களை சொல்கிறீர்களா?”
” ஆமாம் என்றோ வருஷத்தில் ஒருநாள் ஒரு வெள்ளிக் கிழமை நல்ல வெள்ளிக்கிழமை அவர்க ளுக்கு. GOOD FRIDAY. நமக்கு எல்லா வெள்ளிக் கிழமைகளும் நல்ல வெள்ளிக்கிழமைகள்”
”ஏன் மாமா அவர்களுக்கு ஒருநாள் நல்ல வெள்ளிக் கிழமை அது பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்
.”சுப்புணி, நான் படித்து தான் தெரிந்து கொண்டேனடா. தெரிந்ததை சொல்கிறேன் கேள்.
”கால்வரி என்கிற இடத்தில் ஒரு சின்ன மலை உச்சிக்கு கனமான பெரியவ மர சிலுவையை முதுகில் சுமக்க வைத்து இழுத்துக்கொண்டு போய் அங்கே இயேசுவை கை கால்களில் ஆணி அடித்து முள் கிரீடம் தலையில் சுற்றிக் கட்டி தொங்க விட்டார்கள். ரத்தம் சொட்டி சொட்டி இயேசு மரணம் அடைந் தார். மூன்றாம் நாள் உயிர்ப்பித்தெழுந்தார் என்பதால் அதை புனித நாளாக கொண்டாடுகிறார் கள். நமக்காக ஒருவர் தன்னுயிரை விட்டாரே என்று. கருப்பு வெள்ளி, பெரு வெள்ளி, புனித வெள்ளி என்றும் அதற்கு பெயர் உண்டு. ஊருக்கு ஊர் மாறுபடும். Holy Friday, Great Friday, and Black Friday. உண்மையில் அது good friday இல்லை. god friday. நம் ஊரில் கோவில்கள் ஊர்கள் பேர் போல் அதுவும் நாளடைவில் god , good ஆகிவிட்டது என்கிறார்கள். எனக்கு தெரியாது.
பைபிளில் ஒரு சங்கதி. கெத்சமெனே என்கிற ஊர் தோட்டத்தில் இயேசு உயிர் தப்ப ஒளிந்திருந்தபோது அவருடன் கூடவே இருந்த இஸ்காரி யோத் என்பவன் முப்பது வெள்ளிக் காசுக்கு ஆசைப்பட்டு இயேசுவைத் தேடிக்கொண்டிருந்த எதிரியான ராஜாவிடம் காட்டிக் கொடுத்து விடுகிறான். என்னுடன் வா நான் இயேசுவை காட்டுகிறேன் வா” என்று ராஜாவின் வீரர்களை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்றான்
.”எல்லோரும் தாடி மீசையோடு நீளமாக தொள தொள வென்று அங்கி அணிந்து கொண்டிருகிறார்களே. இதில் யார் ஏசு? என்று திகைத்தார்கள் காவலர்கள்
.”நான் யாரை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுக்கிறேனோ அவர் தான் இயேசு. அவரைப் பிடித்துக் கொண்டு போங்கள் ‘ என்றான் இஸ்காரி யோத்.
இயேசுவைப் பிடித்துக்கொண்டு போய் விசாரணை செய் வதாக பாவலா காட்டி தேச துரோகம், ராஜாவுக்கு வரி ஏய்ப்பு, தானே ராஜா என்று அறிவித்தது போன்ற குற்றங்கள் சுமத்தினார்கள். இயேசு பதிலே சொல்ல வில்லை. இயேசுவை ரோமாபுரி கவர்னர் பிலேட் முன் கொண்டு போய் நிறுத்தினார்கள். அவன் இயேசுவை குற்றவாளியாக கருதவில்லை. யூதர்களிடம் அபிப்ரா யம் கேட்டு அவர்களும் குற்றம் நிரூபணம் இல்லை என்கிறார்கள். பிலேட் அதனால் இயேசுவை ராஜா ஹெரோட் முன் கொண்டு நிறுத்தி அவனும் இயேசு குற்றவாளி இல்லை என்றான். சவுக்கடி கொடுத்து விடுதலை செய்யலாம் என்று பிலேட் எண்ணினான்.
இயேசு தன்னை கடவுளின் மைந்தன் என்று சொன்னது குற்றம் என்று அர்ச்சகர்கள் சொல்ல பிலேட் கலங்கி னான். ஒருவேளை இயேசு கடவுளின் மைந்தனாக இருந்தால்? என்ன செய்வது என்று யோசித்தான். ஏசுவுக்கு எதிரானோர் கொந்தளிக்க வேறு வழியின்று பிலேட் முடிவெடுத்தான்.
”நாசரேத்தை சேர்ந்த இயேசு, யூதர்களின் ராஜா” என்ற வாசகத்தை சிலுவையில் செதுக்கி அதை யேசுவையே சுமக்க வைத்து கால்வரி என்ற இடத்துக்கு கொண்டு சென்றார்கள். மற்ற ரெண்டு சாதாரண குற்றவாளி களுக்கும் அன்று அதே தண்டனை. மொத்தம் மூன்று மூன்று குற்றவாளிகளையும் முதுகில் சிலுவைகள் சுமத்தி நடக்க வைத்தான்..
இயேசு சிலுவையில் ஆறு மணி நேரம் வேதனைப் பட்டதாக தெரிகிறது. கடைசி மூன்று மணி நேரம் உச்சிப் பகல் பொழுதிலிருந்து மாலை மூன்று மணிவரை எங்கும் இருள் சூழ்ந்தது. இயேசு சிலுவை யிலிருந்து பேசின வார்த்தை
”இறைவா என் இறைவா, என்னை ஏன் கைவிட்டாய்?” (PSALM 22 ).
இயேசுவின் மூச்சு நின்றது. பூமி நடுங்கியது. கட்டிடங் கள் நொறுங்கி விழுந்தன. சூரைக் காற்று. யூதர்களின் கோவில் ஆட்டம் கண்டு விழுந்தது. யூத மக்கள் ஓடி வருகிறார்கள் அவர்கள் வழி படும் ஆலய அர்ச்சகரை விட இயேசுவை நம்புகிறார்கள். சிலுவையில் மூவரை யும் கண்காணிக்கும் காவலன் உரக்க கத்துகிறான்
”ஆம் உண்மையில் இயேசு தான் கடவுளின் மைந்தன்’. (Matthew 27:45–54)
இயேசு இறந்து போய்விட்டாரா என்று பிலேட் கேட்கி றான். காவலன் ஒரு ஈட்டியால் இயேசுவின் இடுப்பு பகுதியில் குத்தி ரத்தம் நிணம் வந்து விட்டது. இறந்தாகி விட்டது என்கிறான். (Mark 15:45).
நந்தவனம் போன்ற ஒரு மரங்கள் செடி கொடிகள் சூழ்ந்த இடத்தில் ஒரு மலை குகையில் ஒரு கல்லறை கட்டி அதில் இயேசுவின் உடல் வாசனை திரவியங்கள் சாற்றி புதிய துணியால் சுற்றி உள்ளே வைக்கப் படுகிறது. (Matthew 27:59–60)
ஒரு பெரிய பாறையை உருட்டி அந்த குகையின் வாயில் மூடப்படுகிறது. சூரியன் அஸ்தம னமானான் (Matthew 27:60). (Luke 23:54–56). Matt. 28:1
ரெண்டு நாள் கழித்து விடியற்காலையில் மேரி மெகதலீன் வருகிறாள். வந்து அந்த குகையைப் பார்க்கிறாள். உள்ளே எட்டிப்பார்த்தவள் ”யேசுவைக் காணோமே. எழுந்து போய் விட்டார் ” என்கிறாள். .(Matt. 28:6) அந்த ஞாயிறு தான் ஈஸ்டர் ஞாயிறு Easter Sunday (or Pascha),
சில கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அன்றைய உபவாசமாக ஒருவேளை முழு சாப்பாடு அல்லது ரெண்டு குட்டி பலகாரம். ரெண்டு பலகாரமும் சேர்ந்து ஒரு முழு சாப்பாடுக்கு ஈடாகக் கூடாது. மாமிசம் சேர்க்க கூடாது.
ஆகவே சில இடங்களில் இதை ”மீன் வெள்ளி” (fish friday ) என்று மாமிசத்தை மட்டும் ஒதுக்கி ‘ஜல புஷ்ப”த்தை சாப்பிடும் வழக்கம் உள்ளது.
1662ம் வருஷத்திய பொது பிரார்த்தனை புஸ்தகம் நல் வெள்ளிக்கிழமை என்ன செய்யவேண்டும், எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்ல வில்லை. ஆகவே உள்ளூர் வழக்கம் என்ன வென்றால் அன்று சிலுவையிலிருந்து சொன்ன கடைசி 7 வார்த்தைகள் அப்புறம் மூன்று மணி நேர பிரார்த்தனை என பழக்கப்படுத்திவிட்டது.
மாண்டி வியாழன், நல் வெள்ளி, புனித சனிக் கிழமை என்று வரிசையாக கொண்டாடும் பழக்கமும் உண்டு. இதெல்லாம் ஈஸ்டர் பிரார்த் தனைக்குட்பட்டது. மெழுகுவர்த்திகள் நிறைய எரியும்.
சில கிறிஸ்துவர்களுக்கு அன்று உப வாசம். ஒரு தடவை மட்டும் சிம்பிளாக மாமிசம் இல்லாமல் சாப்பிடலாம் என்று சாஸ்திரம். சில ப்ரோட்டஸ்டண்ட்கள் அன்று விசேஷ பிரார்த் தனை ஜெபங்கள் செய்வார்கள்.நல் வெள்ளிக் கிழமை நமது தேசத்தில் ஒரு விடுமுறை நாள்.
ஒரு முறை என் நண்பன் கோபு ”
குட் ஃப்ரைடே என்னிக்கு வரது? சனி ஞாயிறோடு ஒட்டி வந்தா எங்கேயாவது ஊருக்கு போகலாமே’ என்றபோது அவனுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வில்லை.
மலேசியா முஸ்லீம் நாடு என்றாலும் நல்ல வெள்ளிக் கிழமை அன்று விடுமுறையை கூடுதல் சந்தோஷத் தோடு அனுபவிக்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் சில தீவிர ஏசு பக்தர்கள் தாங்களும் சிலுவையில் அறைந்து கொள்கிறார்கள். கை கால்களில் ஆணி. சவுக்கடிகள். . இதற்கு மேல் என்னால் எழுத கை நடுங்குகிறது. அங்கே மத்தியானம் மூணு மணிக்கு தான் ஹோட்டல்கள், கடைகள் திறக்கும். அப்போது தான் இயேசுவை சிலுவையில் அறைந்த நேரமாம். பாதிரிகள் மற்றும் பக்தர்கள் சிலுவை சுமந்து செல்வார்கள். சிலுவையை நல்லடக்கம் செய்வார்கள். பிரார்த்தனை நடக்கும். மௌன ஊர்வலம்.
பிரிட்டன் ஆஸ்திரேலியாவில் சுட சுட சிலுவை ரொட்டி (hot cross buns ) சுட்டு தின்பார்கள்.
உலகளவில் ஈடுபடும் பங்கு சந்தை , வங்கிகள், எல்லாமே நல் வெள்ளிக்கிழமை விடுமுறை அனுஷ்டிக்கும்.
ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை நல் வெள்ளிக்கிழமை என கொண்டாடுகிறார்கள். இதை ஒவ்வொரு நாடுகளில் என்னென்னமோ விதமாக கணக்கிடுவது வழக்கமாகிவிட்டது. நல் வெள்ளிக் கிழமை வெவ்வேறு தேதிகளில் வந்தாலும் வெள்ளிக்கிழமை தான் வரும். அதில் சந்தேகம் கோபுவைப் போல இருக்கவேண்டாம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *