THE UNDERWATER DWARKA J K SIVN

நீருக்கடியே  நகரம்   —     நங்கநல்லூர்   J K  SIVAN
ஒரு சமீபத்திய  சேதி.    குஜராத்   அரசு சுற்றுலா நிறுவனம்  மாசாகான்  டாக் லிமிடெட்  MAZAGAON DOCK  LTD  ஒத்துழைப்போடு நாட்டில் முதன் முதலாக நீருக்கடியில்   நீர் மூழ்கிக் கப்பல் மூலம்   கடலில் மூழ்கிய  கிருஷ்ணன் ஆண்ட, வாழ்ந்த  துவாரகை கட்டிடங்களை,  பிரயாணிகள்  காண  ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  இந்த வருஷம் தீபாவளிக்குள்  நாம் நீருக்கடியில் 100 மீட்டர் கீழே  அமிழ்ந்து கப்பல் கண்ணாடி மூலம்,   பேட் துவாரகையில் கிருஷ்ணன்  நிர்மாணித்த நகரத்தை   தரிசிக்கலாம் போல் இருக்கிறது.   நீர்மூழ்கி கப்பல்  35 டன்  எடைகொண்டது.   30  பிரயாணிகள் வரை கொள்ளும். இரு வரிசையாக  கண்ணாடி ஜன்னல் வழியாக  24 பேர் அமரலாம்.  2 பைலட்கள்  நீர்மூழ்கி கப்பலை இயங்குவார்கள். அதிக விபரங்கள் போகப்போக தெரியும்.   இந்த சமயம் என் மனம் பின்னோக்கி  போகிறது.
+++
ஏன் கிருஷ்ணன் வமிசம் அழிந்தது?  ஏன்  அவன் வாழ்ந்த துவாரகை நீரில் மூழ்கி மறைந்தது? இதற்கெல்லாம் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது. ரிஷிகள் சாபம், காந்தாரி சாபம்…..கலியுகம் தோன்றிவிட்டது.  துவாபர யுகம் முடிந்தாகிவிட்டது. கிருஷ்ணனின்  அவதார காரியம் நிறைவேறி விட்டது.  நாராயணன் வைகுண்டம் திரும்ப வேண்டிய கட்டாயம்…..
ஹஸ்தினாபுரத்தில்  எல்லாமே  மாறிவிட்டது. முன் போல் இல்லை.  பாண்டவர்கள் அரசர்களாக  ஹஸ்தினாபுரத்தில் ஆண்டு  கொண்டி ருக்கிறார்கள். தர்மபுத்ரன், யுதிஷ்டிரனின்  ராஜ்யம் நடக்கிறது.  வெகுநாட்களாகி விட்டது கிருஷ்ணன் துவாரகைக்கு சென்று.   செய்திகள்  இப்போது போல் உடனுக்குடன் அப்போது பரவாது. வெகுநாட்களாகி விட்டது அர்ஜுனனுக்கு  கிருஷ்ணனை பார்த்து.  துவாரகையில் கிளர்ச்சி.  ஒருவருக்கொருவர் முட்டி மோதி அழிந்து போனதும்  கிருஷ்ணன் முடிவும்  கடைசியாக கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு  அனுப்பிய  செய்தியும்  ஒருநாள் ஒரு தூதுவன் மூலம்  ஹஸ்தினாபுரம் வந்தது.”அனுப்பு என்னிடம் அந்த தூதுவனை உடனே’ என்ற அர்ஜுனன் முன் வந்து வணங்கி  நின்றான் தூதன்.
” என்ன விஷயம் சொல்?
”துவாரகையில்  விபரீதமாக செயல்கள் நடந்து விட்டது.
”ஓ அப்படியா, என்ன நடந்தது அங்கே?கிருஷ்ணன் ஊரில் தானே இருக்கிறார்? ”
”எப்படிச்  சொல்வேன்,  பலராமன் வனத்திற்கு சென்று மறைந்து போனதும்  கிருஷ்ணனும் தொடர்ந்து அங்கே சென்றார்….அங்கே .. அங்கே…
தூதன் அழுதான்.
அர்ஜுனன் பதற்றம் அடைந்தான். சீக்கிரம் சொல்  என்ன ஆயிற்று  துவாரகையில். ”
‘அங்கே  கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்பினால் முடிவு  எய்திவிட்டார்.  வனத்திற்கு செல்லுமுன்  உங்களை சந்தித்து நீங்கள் உடனே துவாரகை சென்று அங்கேயுள்ள பெண்களை ஜாக்கிரதையாக ஹஸ்தினாபுரம்  கூட்டிச் செல்ல கட்டளை இட்டு விட்டு சென்றார். வனம் செல்லும் முன்பு உங்களைப்   பற்றித்தான்  எல்லோரிடமும் பேசிக்கொண்டிருந்தார். துவாரகை அரண்மனை அந்தப்புரத்து  பெண்களிடம் நீங்கள் வந்து அவர்களை அழைத்துப் போவீர்கள் என்றும் சொன்னதாக அறிகிறேன் மஹாராஜா.”
அர்ஜுனன் இடிந்து போனான். கண்களிலிருந்து  அவனை யறியாமலேயே  கங்கா பிரவாகம். சிலையாக அமர்ந்தாலும் சிந்தனையில் கண்ணனோடு  வாழ்ந்த நாட்கள் அவசர அவசரமாக ஒன்றன் பின் ஒன்றாக திரையிட்டது. எவ்வளவு துன்பங்களிலிருந்து எங்களை காத்தவன். என்ன ஒரு மஹா புருஷன்!  .கண்ணன் இல்லை என்றே நம்பமுடியவில்லையே!.

அர்ஜுனன் தேர் வேகமாக துவாரகைக்கு பறந்தது.  யாரோ ஒட்டின தேர்.  இந்த தேர் தட்டில் அமர்ந்து தானே  கிருஷ்ணன் பதினெட்டு நாள் அர்ஜுனனுக்கு   யுத்தம் செய்ய உதவினான்.  

துவாரகை அரண்மனையில் அர்ஜுனன் நுழைந்தபோது அங்கிருந்த பெண்கள் ஓவென்று கதறினார்கள்.  ஒருவாறு அவர்களை சமாதானப்படுத்தி  பாதுகாப்போடு எல்லா  பெண்களையும் குழந்தைகளையும்  ஹஸ்தினாபுரம் நோக்கி அழைத்து சென்றபோது தான்  அது நடந்தது.

ஒரு  வழிப்பறி திருடர் கூட்டம்  அவர்களை தடுத்து  நிறுத்தியது.  அவர்களோடு போரிட அர்ஜுனன் தன் காண்டீபத்தை எடுத்து வளைத்தான் . காண்டீபமும்  சக்தியற்று  போய்விட்டதே  ஏன்?   நிறைய பெண்களை  திருடர்கள் கொண்டுசென்று விட்டார்கள்.  ஒருவாறு  மீட்ட  சிலரோடு   அர்ஜுனன் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தான்.  அவன் இதுவரை அறியாத தோல்வி!
மிகவும் விசனத்தோடு  திரும்பிய அர்ஜுனன்  வியாசரை வழியில் சந்திக்கிறான்.  கண்கள் பனிக்க  அவரை வணங்கி நடந்ததை எல்லாம் சொல்ல   அமைதியாக வியாசர்  துவாரகையில்  , விருஷ்ணிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு மாண்டு போனதையும், பலராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் இவ்வுலக வாழ்வை நீத்து வைகுந்தம் சென்று விட்டதையும் துவாரகையின் அழிவையும்  அர்ஜுனனின் காண்டீபம், அஸ்திரங்கள்  எல்லாம் பயனற்று போனதையும்  கேட்கிறார்.

அர்ஜுனனை  அன்போடு  அணைத்து  ”அர்ஜுனா,  பாண்டவர்களாக  நீங்கள் ஐவரும் இந்த பூமியில்  பிறவி எடுத்த நோக்கம் முடிந்துவிட்டது.   கிருஷ்ணன் எதற்காக இங்கே அவதரித்தாரோ அதுவும்  நிறைவேறிவிட் டது .  இனி உனது வில்லுக்கும் அம்புக்கும் எந்த வேலையுமில்லை.
‘ அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்”.
பாண்டவர்கள்  திரெளபதியுடன் தங்கள்  ஹஸ்தினாபுரத்தை விட்டு  செல்கிறார்கள்.  பாரத பூமியை வலம் வந்து வடக்கு நோக்கிச் சென்று பனிபடர்ந்த ஹிமாசலத்தை  நோக்கி  நடக்கிறார்கள்.

பெரியவர்கள்   சாபங்கள் நிச்சயம்   பலிக்கும்.  எல்லாமே  வினைப்பயன் தான். அதை ஒருவரும் மீறி  நடக்க முடியாது.  விதியின் படியே தான் கர்மவினைக்கேற்ப  விளைவுகள் அமையும். பெரியவர்கள் வாழ்த்தோ அல்லது சாபமோ நம்மை எந்தெந்த விதங்களில் பாதுகாக்கும் அல்லது  தவிக்க விடும்  என்பதை  மஹாபாரத நிகழ்ச்சிகள்  தெள்ளத்தெளிவாக கடைசி பாடாய்படுத்தும் என்பதற்கு மகாபாரதத்தில்  கடைசி மெளஸர பர்வம்  ஒரு சான்று .

மீண்டும் நடந்ததை  இங்கே   நினைவு கூர்வது  அவசியமாகிறது.
 பாரத  தேசம் கண்ட மிகப் பெரிய  பாரத  யுத்தம்  பதினெட்டு நாட்கள் நடந்து   முடிந்தபோது   திருதராஷ்ட்ரனும் காந்தாரியும் சோகக் கடலில் ஆழ்ந்தனர்.   ஒன்றா இரண்டா.   நூறு பிள்ளைகளை இழந்த பெற்றோர். தாங்க முடியாத சோகம்.  காந்தாரி  குருக்ஷேத்ரம்  போர்க்களத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறாள். பூண்டோடு தனது வம்சம் அழிந்துவிட்டதே.. அலறுகிறாள்.  பழைய நினைவுகள் வாட்டுகிறது.   அரச போகத்தில் திளைத்த அத்தனைபேரும் இங்கே  பிணங்கள். மனக்கண்ணினால் பார்க்கிறாள்.
ஏன்? எப்படி?  எதனால்? முக்கியமாக  யாரால் இது நேர்ந்தது?
எப்படி் யோசித்தாலும்  எல்லாம்  ‘அவனாலே’  தான்.  தனது எண்ணத்தில்  நினைத்தபடி  காரியங்களை நடத்திக்கொண்டான்.  நம் எல்லோர் அருகிலேயு மிருந்து கொண்டே  தனது வழியில் அனைத்தையும் நடத்திச் செல்பவன்.  பாண்டவர் பக்கம் சேர்ந்து எனது வம்சத்தின்  ஒட்டுமொத்த அழிவுக்கும்  அந்த  கிருஷ்ணனே காரணம்.  கபட நாடக சூத்ரதாரி. ”
நான் சக்தியற்றவளா? என்னை இங்கே அழைத்து வந்து  என் வம்சத்தை எப்படி அழித்தான்  என்று எனக்கே காட்டுகிறானா?
காந்தாரி அனல் மூச்சு விட்டாள் .  மனதில் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
இவன் மட்டும் நினைத்திருந்தால் இந்த பேரழிவைத் தடுத்திருக்கலாமே?  அவனால் முடியாததா?  ஏன்  அ ப்படி செய்யவில்லை?  ஆம்.  என்  பிள்ளைகள் அழியவேண்டும் என்பதே  அவன் நோக்கம்.”
”கிருஷ்ணா. நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?”
”கேளுங்கள் தாயே”
”ஏன் இப்படி செய்தாய். ஏன் என் மக்கள் இறந்தார்கள்?
”ஒருநாளா ரெண்டு நாளா, எத்தனையோ முறை, எவ்வளவோ எடுத்துச் சொன்னேன். சமாதானமாகப்  போங்கள். சகோதர்களை வெறுக்காமல்  ஒற்றுமையாக சேர்ந்து நன்மை அடையுங்கள். யுத்தம் வேண்டாம்.அது அழிவில் தான் முடியும் என்று இந்த  போர் வராமல் செய்ய அரும்பாடு பட்டேன் .  நான் சொல்லும்போதெல்லாம்  பிடிவாதமாகவே உங்கள் மகன்  துரியோதனன் மறுத்தான்.  என்னையே  விரோதியாகத்தான் பார்த்தான். என்னையே முதலில்  அழிக்க நினைத்தான்.. விதி அவனை அவ்வாறு  நடத்திச் செல்ல நான் என்ன செய்வேன்.சொல்லுங்கள் ”  என்றான் கிருஷ்ணன்.  

“கிருஷ்ணா! நீ சொல்வதை  நான் நம்பவேண்டுமா? உன்னால் முடியாதது என்று ஒன்று உண்டா?  நீ  மனதில் கொண்ட எண்ணம் பலித்தது.  ஆனால் ஒன்று புரிந்து கொள்.என் வயிறு நெருப்பால் வேகிறது.  துடிக்கிறேன்.  என் வயிறு பற்றி யெரிய  நான் சொல்வதைக்  கேள்
”இதோ  இங்கே எங்கள்  வம்சம் எப்படி  நசித்துப் போனதோ, அது போலவே நீயும்  உன்னை  சேர்ந்த  அனைத்த்து  விருஷ்ணி குலமும்  நாசமடையட்டும்.  அழிந்து போகட்டும்! அந்த அழிவை  உன் கண்ணால் கண்டு அதோடு  நீயும் அழிந்து போ!” காந்தாரியின்  சாபம் இது.

கிருஷ்ணன் வெறித்து அவளைப்  பார்த்தான். உதட்டில் புன்னகை. ஆஹா  என்  எண்ணம் நிறைவேற  இப்படியும்  ஒரு வசதியா? என்று தான் கிருஷ்ணனுக்குத்  தோன்றியது.  இது அவன் ஏற்கனவே  எடுத்த முடிவே தான். அந்தத் தாயின் கரங்களை அன்போடு  பிடித்து அவளை  அணைத்தான்  கிருஷ்ணன்.  ”அப்படியே  நடக்கட்டும் தாயே ” என்று சொல்லும் போது கூட  கிருஷ்ணன்  முகத்தில் சாந்தம்.  

சாபம் பலித்தது.  கிருஷ்ணனை  சேர்ந்த, விருஷ்ணிகள்  கர்வத்தால், அகந்தையால், மமதையால்,  தலைகீழாக நடந்து கொண்டார்கள்.  அப்படியே நடந்துவிட்டது. அழிவுற்ற கடலில் மூழ்கிய துவாரகை இன்றும் காண்கிறது இத்துடன் இணைத்த லிங்க் கிளிக் செய்யவும்https://youtu.be/aaSqhzTzros  இதைத்தான்  நீர்மூழ்கிக கப்பலில் சென்று காணப்போகிறோம். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *