THE FOUR TEMPLES I VISITED ON 13.2.24 J K SIVAN

13.2. 2024  அன்று  சென்ற  நான்கு  ஆலயங்கள்:
நங்கநல்லூர்   J K  SIVAN
என் மூத்த மகன்  கிருஷ்ணஸ்வாமி எனும் கண்ணன்   சில கோவில்களுக்கு  செல்ல விருப்பத்தோடு புறப்படும்போது  நீயும்  வாயேன் என்று என்னை நேற்று  காரில் அழைத்துச் சென்றான். கரும்பு தின்ன கசக்குமா?
 தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்துக்கு நான் கடைசியாக  சென்றது  சில  வருஷங்களுக்கு முன்பு சென்றேன்..  மீண்டும்  நேற்று  மாசி  மாதம் முதல் நாள்  செவ்வாய் அன்று அற்புதமாக  கந்தகோட்டம் செல்ல   ஒரு சந்தர்ப்பம்
 கிடைத்தது. காளிகாம்பாள்,  கச்சாலீஸ்வரர்,  கந்தசாமி,  ஏகாம்பரேஸ்வரர்   நால்வரையும்  தரிசித்தேன்.முதலில்  காளிகாம்பாள் கோவில்  பற்றி சொல்கிறேன்.

முதலில்  நேராக  தம்பு செட்டி தெரு சென்றோம்.  நான் உத்யோகம் புரிந்த காலங்களில்  அதாவது  நாற்பது ஐம்பது வருஷம்  முன்னால்  சென்னை  உயர்நீதி மன்றம்  அருகே  ராஜா அண்ணாமலை மன்றம்,  LIC  ஆபீஸ் ரெண்டுக்கும் இடையே  சென்னை ஹவுஸ் என்ற  கட்டிடத்தில் கப்பல் கம்பெனியில்  எனக்கு உத்யோகம்.  அந்த கட்டிடம் முன்னால் ஒரு சில நிமிஷங்கள் நின்று மனதால்  எனக்கு மேலதிகாரிகளாக இருந்து என்னை  கப்பல் உலகத்த்துக்கு  அறிமுகப்படுத்தியவர் களுக்கு  மானசீகமாக ஒரு  நன்றி வணக்கம் செலுத்தினேன்.
ஆகவே  அக்காலத்தில்  அந்த பகுதியில் நடந்தே பல கோவில்களுக்கு சென்ற ஞாபகம் வந்தது.

ஆர்மேனியன் தெருவுக்கும் தம்புச்செட்டி தெருவுக்கும் இடையே தெருவை அடைத்து பெரிதாக  உள்ளது  காளிகாம்பாள் கோவில். செவ்வாய்க்  கிழமை நல்ல கூட்டம். இருந்தும் அம்பாளை அற்புதமாக  தரிசிக்க  முடிந்தது.  அந்த கோவில் வளாகத்தில் கால் வைத்த உடனேயே  ஒரு அதிர்வு உடலில்  ஆனந்தமாக  ஏற்பட்டது.   காளிகாம்பாள் கோவிலுக்கு முன்பு பலமுறை சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறை  செல்லும்போதும்  ஏதோ ஒரு சொல்லொணாத  புத்துணர்ச்சி மனதில் உண்டாகிறது.
எவ்வளவு மஹான்கள்  தரிசித்திருக்கிறார்கள்.  எவ்வளவோ மஹோன்னதமானவர்களின் காலடி பட்டிருக்கிறது. அவர்களின் மூச்சுக் காற்று  அங்கு கலந்திருக்கிறது.

அம்பாள் இந்த சிவன் மனதில் சக்தி ‘என்னைப் பற்றி எழுதடா’  என்று உத்தரவிட்டிருக்கிறாள் போல் தோன்றுகிறது. எத்தனையோ உருவங்களில் சக்தி ஸ்வரூபம் இருந்தாலும் என்னவோ எனக்கு   எப்போதும் மனதில் முதலில் தம்புச்செட்டி ஸ்ரீ காளிகாம்பாள் தான் தோன்றுபவள்.
கொஞ்சம் பின்னோக்கி செல்வோம். சென்னை ஒரு காலத்தில் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. சரித்திர புராண புகழ் வாய்ந்த பட்டணம் இது. இங்கே எத்தனை சரித்திர நினைவுச் சின்னங்கள் இருந்தாலும் ஆலயங்கள் பல அற்புதமானவை. சிறப்பும் பெருமையும் ஒருங்கே சேர்ந்தவை. இன்னும் இருப்பவை. அதில் ஒன்று தான் ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயம். 

சென்னையின் பிரதான வீதிகளில் ஒன்று தம்பு செட்டி தெரு.  உயர்  நீதி மன்றத்தின் எதிரே அமைந்த ஆரவாரம் நிறைந்த  தெரு.  கருப்பு கோட்டுகள்  தங்களது  வாடிக்கையாளர்கள்   க்ளையண்டுகள்  முகத்தில் கவலையோடு  பின் தொடர ளுடன் வக்கீல் ஆபிஸ்   போகிறவர்கள்,வருகிறவர்கள்.  பத்திரங்கள் விற்பவர்கள்,   அப்போதெல்லாம்  தட்டச்சு இயந்திரங்கள் ஒலிக்கும். இப்போது  கம்பியூட்டர்களில்  பெண்களின்  விரல்கள் நர்த்தனமாடுகிறது.  இதைத்தவிர  தலையில்  பூப்போட்ட தொப்பி  அணிந்த முஸ்லிம்கள் அதிகம்  நடமாடும்  இடம்.  எல்லோரும்  வியாபாரிகள்.  இரும்பு  சமாச்சாரங்கள்,  மோட்டார்கள்,  மெஷின்கள், குழாய் வகைகள், என்று  என்னென்னவோ  வியாபாரம்.   இண்டு  இடுக்குகளில்  கூட ஏதோ ஒரு வியாபாரம் செய்யும் கடை.கைகளில் பையும், பாக்கெட்டில் பணமும், முகத்தில் கவலையாக வாதி பிரதிவாதிகளாக   ஆண்களும் பெண்களும்  நீதி மன்றத்தை தேடி வழக்காடுபவர்கள் அலைகின்ற இடம்.  வழக்கு பதிவுக்கான பத்திரங்கள், புத்தகங்கள், டைப் அடித்து கொடுப்பவர்கள் கம்ப்யூட்டர் XEROX வசதிகள்  அவசர அவசரமாக  இயங்க எங்கும் கூட்டமாக காணப்படும் இடம்.
  நடுநடுவே  சில ஹோட்டல்கள், டீக்கடைகள். வண்டிகள் நிறைய  மூட்டைகள் சாமான்கள், ஆட்டோக்கள், என்று  ஒவ்வொரு  நாளும் வாகனங்கள் போக்குவரத்து அதிகமாகி வளரும் நெரிசலான  தம்பு செட்டி  தெருவில் இப்படி ஒரு அமைதியான  அம்பாள்  கோயிலைக் காண்பது அரிது.
மராத்திய சிங்கம், சத்ரபதி சிவாஜி சென்னைக்கு வந்து வணங்கிய கோயில் மேலே சொன்ன தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் ஆலயம். ஆதிசக்தி அம்சமான ஸௌம்ய ஸ்வரூபமாக இங்கே காட்சி தருகிறாள். ஸ்ரீ சக்ரம் ப்ரதிஷ்டையான இந்த ஆலயம் மூவாயிரம் வருஷம் வயசானது.

அம்பாள் பாசம் அங்குசத்தோடு அமர்ந்த கோலம். சதுர்புஜத்தில் மற்ற ரெண்டு கரங்களில் நீலோத்பல புஷ்பம், வரத ஹஸ்தம் ஒன்று. மேற்கு பார்த்த கர்ப க்ரஹம். க்ஷிப்ர ப்ரஸாதிநீ. அதாவது வரங்களை சூட்டோடு சூடாக கொடுப்பவள்.

கோவில் உள் சுவற்றில் ”1677 அக்டோபர் 3ம் தேதி சிவாஜி மஹாராஜா இங்கே வந்து தரிசித்தார்” என்று அறிவிப்பு காணப்படுகிறது. அம்பாள் பவானி பக்தர் அல்லவா. காளிகாம்பாளை விடுவாரா? சிவாஜி குதிரைமேல் வீற்றிருக்கும் படம் கோவிலில் மாட்டி இருக்கிறார்கள். சிவாஜி விஜயம் பற்றிய கல்வெட்டும் கோவில் சுவற்றில் பதித்திருக்கிறார்கள். அம்பாள் பக்தர் சக்தி உபாசகர் திருவல்லிக்கேணியில் வசித்த மஹாகவி பாரதியார் தினமும் காளிகாம்பாள் தரிசனம் செய்வார்.   ”யாதுமாகி நின்றாய் காளி ‘ பாடல் நினைவுக்கு வருகிறதா?

ஆரம்பத்தில் சென்னை அம்மன் என்றும், கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைக்காரர்கள் கோவிலை கோட்டைக்குள் நகர்த்திய போது கோட்டை அம்மன் என்றும் இந்த ஆலயத்துக்கு பெயர்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் கட்டிய விஸ்வ கர்மா சிற்பிகள் திருவண்ணாமலையிலிருந்து கல் கொண்டு வந்து கட்டி இந்த காளிகாம்பாள் கோவில் உருவாகியது.
காளிகாம்பாள் ஆலய குங்குமப்பிரசாதம் வாழ்வில் உயர்வும், மோட்சமும் தரும் சக்தி படைத்தது.காளிகாம்பாள் மஹா  லக்ஷ்மியையும், ஸரஸ்வதியையும் ரெண்டு கரங்களாகப் பெற்றவள்.
ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னி.
காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்தில் காமாக்ஷி என்பது விசேஷம். ஆலயத்தில் ரெண்டு ப்ரஹாரங்கள். உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரஹங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபத்ரன், ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டி மகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராஜர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்”.
அர்மீனியன் தெரு என்ற தமிழில் சம்பந்தமே இல்லாமல் ஆகிவிட்ட அரமனைக்காரன் தெருவில் மேற்கு கோபுர வாசல் “குட வாயில்”
“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வட கதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.
ஸ்தல விருக்ஷம் மாமரம்.
முன்பெல்லாம்  தரையில் உட்கார முடிந்தபோது SMART   என்ற ஸ்ரீ மஹாருத்ரம் டிரஸ்ட்  குழுவினரோடு   கோவில்வளை  சென்று  மஹா ருத்ரம் அதி ருத்ரம் பாராயணங்களுக்கு  ஜபம் செய்ய சென்றிருக்கிறேன். அப்படி சென்ற  ஒரு கோவில்களில் காளிகாம்பாள் கோவிலும் ஒன்று.  நேற்று  சுடச்சுட  ஒரு   பெரிய தொன்னை நிறைய அருமையாக  யாரோ ஒரு செட்டியாரம்மா கைங்கர்யத்தில்  சாம்பார்சாதம்  கோவிலில்  பிரசாதமாக  விநியோகம் செய்தார்கள்.  நல்லவேளை  அருகிலேயே ஒரு கைகழுவ தொட்டியும்  குழாய் நீரும் இருந்தது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *