SUNDARA MAHA LAKSHMI J K SIVAN

ஆறுவிரல்  மஹாலக்ஷ்மி –  நங்கநல்லூர் J K  SIVAN

இன்று  9.2.24   தை  வெள்ளிக்கிழமை.  அம்பாள், மஹாலக்ஷ்மியை நினைக்கவேண்டாமா?
ஒவ்வொருவர்  வாழ்விலும் அநேக  அற்புத நிகழ்ச்சிகள் உண்டு. அதை நினைத்துப் பார்க்காமல் அடியோடு மறந்து போனால் எப்படி அதை ரசிக்க முடியும்.  எத்தனை வருஷங்களுக்கு முன்னால்  ஒரு நாள்  சென்ற ஒரு கோவில் பற்றி இப்போது நினைத்துப் பார்த்தாலும் சந்தோஷமாக இருக்கிறது.
நாம் மிகவும் புண்ணியசாலிகள்.  நமது தேசம் ஒன்றில் தான் எண்ணற்ற ஆலயங்கள் இன்னும் இருக்கின் றன.  எவ்வளவோ இருந்து பல அழிந்தும் இன்னும் நிறைய  கோவில்கள் நமக்கு மிஞ்சி உள்ளன.  ஆலயம் என்பதன் பொருளே  ஆன்மாவோடு  லயம் ஆவது. ”கோ” : தெய்வம்  ”இல்” :  இல்லம்  இருக்கும் இடம். இப்போது புரிகிறதா நமது முன்னோர்கள் எதற்காக  ”ஆலயம்,  கோயில்” என்று பெயர் சூட்டினார்கள் என்று? கோயில்களுக்கும்  ஆலயங்களுக்கும் முக்யத்துவம் கொடுத்து  தமது  வாழ்க்கையை  இறைவனோடு பிணைத்துக் கொண்டார்கள் என்றாள்  அது  காரணம் இல்லாமல்  இல்லை.
சில வருஷங்களுக்கு  முன்பு நண்பர்களோடு  நான் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மார்கத்தில் சில கோவில்கள் சென்றதில் ஒரு ஆலயம் நினைவுக்கு வந்து  அதை பற்றி  தான் இப்போது சொல்கிறேன்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், படாளம் என்ற ஊர்  அருகே பாலாற்றங்கரையில் ஒரு அமைதியான கிராமம். அதன் பெயர்  வேடிக்கையானது.  ”அரசர் கோவில்” . சென்னையி லிருந்து தென்மேற்கே 67 கி.மீ,    செங்கல்பட்டிற்குத் தென்  மேற்கே 27 கி.மீ, ,  காஞ்சிபுரத்திற்கு கிழக்கே 60 கி.மீ. தொலைவிலும், படாளம் கூட்டுச் சாலையின் கிழக்கே 7 கி.மீ. தொலைவிலும், தாம்பரம் – திண்டிவனம் ரெயில் மார்க்கத்தில் படாளம் ரெயில் நிலையத்திற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலும்  இந்த அரசர் கோவில் இருக்கிறது.  நாங்கள்  ஒரு 15 பேர்  செல்லும் வாடகை வண்டியை அமர்த்தி  ட்ரைவரோடு சேர்ந்து வழி யெல்லாம் விசாரித்துக்  கொண்டு  செல்லவேண்டிய சில கோயில்களுக்கு சென்றோம்.  ஒரு பிளான் போட்டு தான் கோயில்கள் செல்வோம்.

இந்த கோவிலில் அதிசயம் என்னவென்றால்  இங்கே ஆறு விரல்கள் கொண்ட பெருந்தேவித் தாயார் அருள்பாலிக்கிறார்.  குச்சியை நான்காகப் பிளக்கும் அதிசய கல் துளை கொண்ட ஆலயம், சுக்ரன் ஐக்கியமான ஸ்தலம் பெருமாள்  கமல வரதராஜப் பெருமாள்.
இந்தக் கோயிலில் முதலில் தாயாரைத்தான் வணங்க வேண்டும்.  செல்வங்களை வேண்டியவர்க்கு வாரி வழங்குபவள்  மஹாலக்ஷ்மி. மொத்தமாக  64  லக்ஷ்மிகள் உண்டு.  அவர்கள் அனைவரிலும் பிரதான மானவள் தாயார் சுந்தர மகாலட்சுமி.  ஆதி மூல லட்சுமி . பெயருக்கேற்றபடி  சுந்தர  மஹாலக்ஷ்மி அதி சுந்தர ரூபவதி.   குபேர சம்பத் சக்தி. வாரி வழங்குபவள். சிறு குழந்தை போல ‘ புசு புசு’  கன்னம்.  சிரித்த முகம்.  பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்.   தாமரை பீடத்தில் பத்மாசன நிலையில் காட்சி தரும்  தாயார். மேல் இரு கரங்களில் தாமரை. கீழ் இரு கரங்கள் அபய, வரத முத்திரை.  பத்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலுக்கு அடுத்து ஆறாவது விரல்.  சுக்ரன் ஆறு எனும் எண் சம்பந்தப் பட்டவர். அவரை  தனது ஆணைக்குட்பட்டு செயல் பட வைக்கும் சக்தி கொண்டவள் இந்த   தாயார்.
 ஒருவன்  நன்றாக சுபிக்ஷமாக இருந்தால்   ”அவனுக்கு என்னப்பா சுக்ர தசை. கொழிக்கிறான்”  என்கிறோம்.  இங்கே  மஹாலக்ஷ்மி சுக்ரனையே  தனது வசம் கொண்டு தன ஆகர்ஷண லக்ஷ்மியாக அருள் பாலிக்கிறாள். பிரதி வெள்ளிக்கிழமை சுக்கிரன் இங்கே வந்து  தாயாரை வழிபடுகிறார்.   பெருமாள் ‘கமல’ வரதராஜ பெருமாள். இவரை காஞ்சி வரதருக்கும் மூத்தவர்,  அண்ணா, என்பார்கள் .
ஒரு  கதை.   பிரம்மா பாப விமோசனம் தேடும்போது நிறைய ரிஷிகளை, முனிவர்களை பரிகாரம் பற்றி  கேட்கிறார்.  ராஜாவும், விஷ்ணுவும் சேர்ந்து இருக்கும்  ஒரு க்ஷேத்திரத்துக்கு சென்று  தரிசித்தால் பாப  விமோசனம் நிச்சயம்”  என  அவர்கள் சொல்ல இங்கே வருகிறார்.   அரசன் என்றால் ராஜ   கோ  என்றால்  தெய்வம். இங்கே  நாராயணன் பாலாற்றங்கரையில்  வாசம் செயகிறார். ஜனக மகாராஜாவும் அப்போது அங்கே வருகிறார்.  இருவரும் இங்கே இருப்பதை அறிந்து  தரிசித்து ப்ரம்மா, பாப விமோசனம் பெறுகிறார். அரசர் கோவில் வரதராஜப் பெருமாளை, பிரம்மா தவமிருந்து வழிபட்டதால்  பூலோக வைகுண்டம் என்ற சிறப்புப் பெயர்.ஜனக மஹாராஜா முதலில்  கட்டிய கோவில்  எனவே   இதற்கு  அரசர் கோவில் என்று பெயர் வந்தது
என்கிறார்கள். தாயார்  சந்நிதி  கிழக்கு நோக்கி  உள்ளது. பாற்கடலில் உருவானவள் பாலாற்றை பார்த்தபடி  இருக் கிறாள். அழகிய கல் மண்டபம் .காதுகளில்  குண்டலங்கள், கைகளில் அணிகலன்கள், சங்குக் கழுத்தில் மூன்று துளசி மணி மாலைகள், துளசி மணி மாலையின் முடிவில் துளசிப் பத்திரம் போன்றவையும், நெற்றியில் சூரிய –சந்திர பிரபைகள் .
 மேற்கே பழமையான ஆஞ்சநேயர் கோவிலும் இருக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ‘சுந்தர’மாக ஆஞ்ச நேயர்  காட்சியளிக்கிறார்.

வெள்ளிக் கிழமையன்று சுக்கிர ஹோரையில் தரிசனம் செய்தால் எல்லா ஐஸ்வர்யங்க ளையும் கொடுப்பாள் மகாலக்ஷ்மி. தாயார் சன்னிதி சடாரியில் மேல் உள்ள பாதத்திலும் ஆறு விரல்கள்.
தாயாருக்கு பலாச் சுளை நைவேத்தியம் சிறப்பு. இப்படி பலாச்சுளைகளை கொடுத்த சித்தரின் சிற்பம் மண்டபத்தில் இருக்கிறது. தாயார் கருவறை முன் மண்டபம் முழுக்க சிற்பங்களின் அணிவகுப்பு.
அபிஷேக நீர் வெளிவரும் கோமுகம் குபேர கோமுகம் என்கிறார்கள்.
பெருமாள் கமல வரதராஜர் , ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம். வலது கரத்தில் தாமரை மொட்டு. தாயார் கொடுத்ததால்  ‘கமல’ வரதராஜர்.  பிள்ளையார் தும்பிக்கை ஆழ்வார் என்று வணங்கப்படுகிறார். பெருமாள் சன்னிதியில் விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் ஆகியோர் உற்சவர்கள்..  கருவறையில் அழகிய லட்சுமி நரசிம்மர் உற்சவர்.விஜயநகர பேரரசர்கள், மூன்றாம் ராஜராஜன், ஜடாவர்மன், சுந்தர பாண்டியன் ஆகியோர் திருப்பணி செய்ததை கல்வெட்டுக்கள் சொல்வதால்  மிக பழைய கால கோவில்.
கோயிலின் தல விருக்ஷம்  அரசமரம். இறைவன் திருப்பெயர் திருவரசு நாயனார், திருவரசூர் எம்பெருமாள் என கல்வெட்டு சொல்கிறது.
இங்கே  பாலாறு  மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி  வழக்கமாக ஓடாமல்  வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்வது அதிசயம். ஆகவே  இது தக்ஷிண பிரவாஹம்..
கருடாழ்வார் சன்னிதியின் எதிரே 24 தூண்கள் கொண்ட அழகிய கல் மண்டபம் உள்ளது.
பெருந்தேவி தாயார் சன்னிதியின் முன்மண்டபம் சிற்பக் கலைநயம் மிக்கதாகும். தாயார் சன்னிதி கருவறை முன் மண்டபத்து தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டினால் வித்தியாசமான சப்தத்தை எழுப்புகின்றன. அமர்ந்த நிலையில் உள்ள சிறிய யாழிகளின்  தலையில் இருந்து எண் பட்டையிலான கல்தூண்கள் ஐந்து அமைந்துள்ளன. இவற்றை பதினாறு பட்டைகள் கொண்ட தூண்  ஒன்று உள்ளே நின்று இணைக்கிறது. அனைத்து தூண்களையும் இணைத்து ஒரே கல்லில் செதுக்கியுள்ள கலைநயம் போற்றத் தக்கதாகும். தாமரை இதழ்களோடு ஒவ்வொரு தூணுமே அமைந்துள்ளன.
மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தூணின் உச்சியில் தாமரை இதழ்களில் குச்சி நுழையும் அளவிலான துளை ஒன்று காணப்படுகிறது. அதில் ஒரு சிறு  ஈர்க்குச்சியை நுழைத்தால் மறுபுறம் உள்ள துளை வழியே அது நான்காகப் பிளந்து வெளிவருகிறது. இந்த அதிசயம் சிற்பியின் கைவண்ணத்தைப் பறை சாற்று வதாகவே அமைந்துள்ளது.

சித்திரையில் வரும் பவுர்ணமி அன்று காலை வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியோடு, லட்சுமி நாராயணபுரம், பூதூர் வழியே ஈசூர் சென்று அங்குள்ள பாலாற்றங்கரைக்கு எழுந்தருள்வார். அங்கே பெருமாளுக்குத் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். (காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் சார்பாகவும், காஞ்சிக்கு அருகே ஓடும் பாலாற்றில் சித்திரா பவுர்ணமி அன்று திருஊரல்விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது)

கோவிலின் வடமேற்கே தென்புறச் சுவரில் காணப்படும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டு (கி.பி.1237), வடச்சுவரில் காணப்படும் கல்வெட்டு, தென்புறச் சுவரில் காணப்படும் முதலாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1259) கல்வெட்டு, வடமேற்குச் சுவரில் அமைந்துள்ள இரண்டாம் சுந்தர பாண்டியனின் (கி.பி. 1291) கல்வெட்டு, படைவீடைத் தலைநகராகக் கொண்ட ராஜ நாராயண சம்புவராயர் (கி.பி. 1352) கல்வெட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் அமைந்துள்ள விஜயநகர பேரரசர் கல்வெட்டு போன்றவை இத்தலத்தின் தொன்மையை பறைசாற்றுகின்றன.

இந்தக் கல்வெட்டுகளின் வாயிலாக நிலக்கொடை, பசுதானம், வரிவிலக்கு என பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இதன்மூலம் இந்தத் திருக்கோவில், மன்னர்கள் காலத்திலேயே முக்கியத்துவம் பெற்ற திருக் கோவிலாகத் திகழ்ந்ததையும் அறிய முடிகிறது. மூன்றாம் ராஜராஜன் காலத்தில் சிறப்புற்று இருந்த இந்த ஆலயம், பின்னர் பழுதடைந்து மூன்றாம் ராஜ நாராயண சம்புவராயனின் ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொண்டு புனரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
நான் போன போது கோவில் சிதிலமடைந்து  செடிகள் மரங்கள்  கோவில் கோபுரத்தில்  காணப்பட்டதுமனதை பிளந்தது.  இப்போது என்ன நிலையோ? அரசர் கோயில் அருகே உள்ளவர்கள், அடிக்கடி அங்கே போகிறவர்கள், சமீபத்தில் போனவர்கள்  உங்களில் யாராவது இருப்பீர்களே , எனக்கு  கோவில் போட்டோக்களை அனுப்புங்கள், நானும் மற்றவர்களோடு அவற்றை தரிசிக்கிறேன்.
ஒரு விஷயம்.  பட்டாச்சாரியார் எங்கோ இருப்பதை அறிந்து அவருக்கு டெலிபோன் பண்ணி அரைமணி நேரம் கழித்து வந்தார்.  வந்தவர் ஒரு அதிசயமாக ஒரு விஷயம் சொன்னார்.
”இந்த ஆலயத்துக்கு எல்லோராலேயும்  வர முடியாது. தாயார் அனுக்கிரஹம் இருந்து அழைத்தால் தான் வர முடியும்.  உங்களுக்கு இன்று  இங்கே வர எப்படி தோன்றியது. ஆனா  யாரோ ஒருத்தர்  உங்களில்  மஹம்  நக்ஷத்திரக் காரர் இருக்கிறார் போல இருக்கிறது. அவரால்  தான் வந்திருப்பீர்கள்””  என்றபோது எனக்கு  250 வோல்ட் ஷாக்.    நான்  மஹா நக்ஷத்ரக்காரன். நான் தான் இந்த  யாத்திரையை நண்பர்களோடு சேர்ந்து வர  திட்டம் போட்டவன். !!
 அடியேன் அந்த அந்த கோவிலையோ அந்த  அர்ச்சகரையோ முன் பின்  பார்த்ததில்லை நான் தான் மற்றவர்களை  அழைத்து வந்தவன். என் நக்ஷத்ரத்தை  பேப்பரில்  போடவில்லை. அதை தெரிந்துகொள்ள  எவருக்குமே விருப்பமு   மில்லை.பின் எதற்கு? …..இவர்…. எப்படி?…. ஏன்? ஏன் ? ஏன் ?  நமது புத்திக்கும்  அப்பாற்பட்ட  ஏதோ  ஒரு சக்தி இருக்கிறது. வாஸ்தவம் தான் என்று  எனக்குள் சொல்லிக்கொண்டேன்..”
நல்லதையே நினைத்து, நல்லதையே  செய்யவேண்டும். பகவானே,உன் கருணையை பெறவேண்டும்…என்று மீண்டும்  எனக்குள் சங்கல்பித்துக் கொண்டேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *