RATHA SAPTHAMI J K SIVAN

ரத சப்தமி  -நங்கநல்லூர் J K SIVAN  

இன்று  ரத சப்தமி.   இது சம்மந்தமாக  ஒரு கதை இருக்கிறது. கேளுங்கள்.   ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி. பூரண கர்ப்பவதியாக இருந்த ஒரு நாள்  கணவர் காஷ்யப ரிஷிக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ”பசிக்கிறது தாயே, ஏதாவது சாப்பிட கொடு” என்று கேட்டான்.
” இரு கொண்டு  வருகிறேன்” என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து உள்ளே வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்  கொண்டு  வாசலுக்கு வந்து அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .
”ஏன் லேட்?  எதற்கு  என்னைக்  காக்கவைத்து, உணவைக் கொடுத்தாய். என்னை அவமதித்து உதாசீனமா பண்ணினாய். நீ செய்த காரியத்துக்காக உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்” என கோபித்து சாபமிட்டான் வந்த பிராமணன்.
பிராமணனின் சாபத்தை கேட்ட அதிதி அதிர்ச்சியடைந்து, கணவர் காஸ்யபரிடம் விஷயத்தைச் சொல்லி அழுதாள்.
 ‘அதிதி, அசடே, நீ இதற்கெல்லாம் வருந்தாதே , அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று ரிஷி காஷ்யபர் வாழ்த்துகிறார். ஒளி பிரகாசமான சூரியன் அதிதியின் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை எடுத்து தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். காலை ஸ்நானம் பண்ணும் போது தலையில் வைக்கும் எருக்க இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரதசப்தமி அன்று தர்மம் செய்தால் பலமடங்கு புண்ணியம். இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி! த்வாம் ஸப்த லோகைக மாதரம் ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !

ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.

இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

சூரியனாருக்கு உகந்த தானியம் கோதுமை. எனவே நைவேத்தியத்தில் கோதுமை உணவு இருப்பது உத்தமம். அவருக்குப் பிடித்த செந்தாமரை மற்றும் செந்நிற மலர்களால் அர்ச்சித்து அவரை வழிபடுவது விசேஷம். ஆலயங்களுக்குச் சென்று சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் வழங்கி தரிசித்தால், பாவமெல்லாம் பறந்தோடிவிடும்.

ரத சப்தமி அன்று  சூரியன்  ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை வடக்கு நோக்கி, குறிப்பாக வடகிழக்கு திசையில் திருப்பி பயணிக்கும் நாளாகும்.   இனிமேல்  வெயிலுக்கு பஞ்சமில்லை,  இளநீர்,  நுங்கு, ஐஸ்  தேடப்போகிறோம்.  கிராமங்களில் ஒவ்வொருவர் கையிலும் பனை ஓலை விசிறி இருக்கும்.
சூரிய தேவனின் தேரோட்டியாக அருணன் உள்ளார். சூரியனின் தேரில் உள்ள ஏழு குதிரைகள் தான்  ஏழு வண்ணங்களைக் கொண்ட வானவில். ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிப்பது என்றும் சொல்கிறோம்.  ரதத்தில் உள்ள 12 சக்கரங்கள் பன்னிரெண்டு ராசிகள். சூரியனின்  வீடு சிம்ம ராசி.  சூரியன் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் பயணித்து திரும்பி வருவதற்கு ஒரு வருடம் ஆகிறது. ரத சப்தமி திருவிழா சூரிய கடவுளிடமிருந்து ஆற்றலையும் ஒளியையும் பெறும் விழா.
ரத சப்தமி இப்போது யாருக்கும் தெரியாத காலமாகி விட்டது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *