PESUM DEIVAM J K SIVAN

பேசும்  தெய்வம் –                நங்கநல்லூர்   J  K SIVAN
அதிசய  ஞாபக  சக்தி
மஹா பெரியவாளுடைய  ஞானம்  சமுத்திரம்  மாதிரி.  ஆழம் காண முடியாதது.  எல்லையற்றது.  ஞானம் மாதிரியே  அவருடைய  ஞாபக சக்தியும் அப்படி.  எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால்  நடந்தது  எல்லாம் இதோ  அரைமணி நேரத்துக்கு முன்னால்  நடந்தது போல் நினைவில் இருக்கும்.   ஊர் பேர்  எல்லாம்  துளியும் சந்தேகமில்லாமல் அருவி போல் உடனே வந்துகொண்டே  இருக்கும்.
ஒருமுறை  அவர் எதிரில்  என் தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியாரைப் பற்றி  சொன்னேன்.   ”புரசவாக்கம்  கம்பராமாயணம்  பிரசங்கம் பண்றவர் ஆச்சே.  அவர் பேரனா நீ?. ”ஆமாம் பெரியவா? ”அவர் தமிழ்  ஞானம்  அசாத்தியம். கண் தெரியாட்டா கூட  அத்தனை பாடல்களும் ராமாயணத்தில் மனப்பாடம் அவருக்கு”எனக்கு  பிரசாதம் கொடுத்து அனுப்பும் போது நான் இந்த உலகத்திலேயே  இல்லை. அந்த கருணைக்கடலின்  ஆச்சர்யமான  ஞாபகசக்தியை  அதிர்ந்து போயிருந்தேன். இதோ ஒரு  சம்பவம்.
ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி , தாத்தா  பாட்டி, வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர். அவர்கள்   யார் என்று குடும்ப சரித்திரம் கேட்டு தெரிந்து கொண்டார். பிறகு தான்  சம்பாஷணை தொடர்ந்தது.
“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்ததே!……இன்னும் இருக்கோ?….”
“ஆமா…இன்னும் இருக்கு!”நான் பார்த்திருக்கேன்”” பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காய்க்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”
“அகத்திலே  உள்ளே  கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..போல ஆயிருந்துதே!..”
“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுல  தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”
“நான்  பாக்கும்போது  ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”
“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”
“உங்க ஆத்துக்கு பக்கத்திலே   ஒரு ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எண்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”
“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”
“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”
“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம்  உங்க  ஆத்து  அலமாரி நெறைய இருந்துதே!  இன்னும்  இருக்கா? யாராவது படிக்கறாளா?….”
“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”
“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”
“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”
மஹா பெரியவாளோடு  பேசிக்கொண்டிருந்த  பாட்டிக்கு  ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”
பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…
” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!
குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி ஞான சூன்யங்கள்  தான் குறை என்றால் அடுத்தவர்களை முன்னிறுத்திச் சொல்லுபவர்கள்.
நான் மேலே  சொன்னது  சர்வ சாதாரணமான  ஒரு சம்பவம். இது போல்   கணக்கற்ற   ஆச்சர்யங்கள் மஹா பெரியவா ளுடன் நேரடியாக பழகியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சமீபத்தில்  மதுரை  நாராயணய்யர்  என்று மஹா பெரியவாளோடு  நெருங்கி சேவை செய்த ஒருவரின் புத்திரர் ஸ்ரீ  ஜெயேந்திரனுடன்  பேசிக்கொண்டிருந்தேன்.  அவர்   சொன்ன சில  விஷயங்கள்  என்னை மயிர் கூச்செரிய செய்தது.  அவர் எனக்கு சில சம்பவங்கள் சொல்கிறேன் என்று சொன்னார். காத்திருக்கிறேன்.  சரியாக தெரிந்து கொண்டு சொல்கிறேன்.

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *