MAASI MAHAM J K SIVAN

நாளை 24.2.2024 மாசி மகமாமே? – நங்கநல்லூர் J K SIVAN
மாசி மகம், மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாள் விசேஷமாக கொண்டாடப்படுவது. சமுத்ர ஸ்னானம் ரொம்ப விசேஷம். கும்பகோணத்தில் மஹா மஹா குளம் ரொம்ப பிரசித்தி.
நாம் எல்லோருமே சமுத்திரத்தில் இருப்பவர்கள் தான். ‘பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்துபவர்கள்” நம் ஆத்மா பகவானின் அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்க மாசி மகம் அன்று சமுத்திர ஸ்னானம் செய் றோம்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகாமகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். அடுத்த மஹா மஹ கோலாகல வைபவம் 2028ல். நாலு வருஷம் காத்திருப்போம்.
ஒரு சமயம் வருணனை பிரம்மஹத்தி பிடித்து அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவ பெருமானை வேண்ட, அவர் காப்பாற்றினது இந்த மாசிமகத்தில் தான். ஆகவே தான் சமுத்திர ஸ்னானம் சகல பீடைகளை போக்கும் என்று நம்பிக்கை. வருணன் ”பகவானே என்னை மாதிரி இந்த மாசி மகத்தில் யார் யாரெல்லாம் சமுத்திர ஸ்னானம் பண்ணுகிறார்களோ அவருக்கும் சகல பாபங்களையும் நீக்கி மோக்ஷம் அருளவேண்டும் ” என்று வேண்டினதால் அவனுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லுவோம்.
ஒரு மாசி மக நாளில் தட்ச பிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் வந்து நீராடினான். அப்பொழுது அங்கு தாமரை மலரில் இருந்த வலம்புரிச் சங்கினைக் கண்டெடுத்தான். எடுத்த மாத்திரத்திலே அது பெண்ணுருவாயிற்று. இது சிவனாரின் வரப்படி பார்வதிதேவியாரே வந்தார் என உணர்ந்து வேதவல்லியுடன் அக்குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றான். அம்பிகைக்கு தாட்சாயிணி என்று நாமகரணம் சூட்டி அன்புடன் வளர்த்தான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்தவள் .
மாசி மாதம் சூரியன் கும்பராசியில் சஞ்சாரம் செய்வார், அன்று சந்திரன் மக நட்சத்திரத்தில் சிம்மராசியில் சஞ்சரிப்பார். இந்நாளே மாசிமகம் எனப்படும். தெற்கே கும்பகோணத்தில் மஹாமஹம் போல் வடக்கே கும்பமேளா. லக்ஷக்கணக்காக பக்தர்கள் கூடுவார்கள். என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடுகின்றார்கள். எத்தனையோ பேர் காணாமல் போவதும், மிதி படுவதும் மாமூல். கும்ப மேளாவுக்காக காபாலிகர்கள், பிணம் தின்னும் அகோரிகள் வருவார்கள். நிர்வாணமாக நிறையபேர் சர்வ சகஜமாக சாதாரணமாக அலைவதை பார்க்கலாம். ஜாக்கிரதை.
திருஞானசம்பந்தா் மயிலாப்பூா் பதிகத்தில் கபாலீசுவரரின் மாசிமகக் கடலாடு விழாவைப் பற்றி பாடி இருக்கிறார்..
திருச்செந்தூரில் 2ம் வரகுணபாண்டியனின் (கி.பி.862) மூன்று அதிகாரிகள் 1400 காசினை மூலதனமாகக் கொண்டு பல விழாக்கள் நடத்தியதில் ஒரு விழா மாசிமகம் என்று செப்பேடோ கல்வெட்டோ ஏதோ ஒன்று சொல்கிறது.
முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.1009) திருச்சியில், திருப்பராய்த்துறை மகாதேவா்க்கு மாசிமகத்தன்று பெருந்திருவமது படைக்க ஒன்றரை மா அளவு நிலம் தந்து இரண்டு கல அரிசி கிடைக்க வழி செய்ததை கல்வெட்டு இன்றும் சொல்கிறது. இராசேந்திர சோழன் 4-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி.1016) நாகப்பட்டினக் கூற்றத்து ஊராா்கள் மாசிமக விழாவின் ஆறாம் நாள் செலவுக்காக நிலமளித்த செய்தியும் கல்வெட்டில் உள்ளது.நம்மால் அதையெல்லாம் படிக்க முடியாது.
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070-1126) தளபதி நரலோக வீரன் சிதம்பரம் கோயிலில் செய்த திருப்பணிகளை அழகான தமிழ்ப்பாடல்களாகவும், சமஸ்கிருதச் சுலோகங்களாகவும் சிதம்பரம் நூற்றுக்கால் மண்டபத்து தூண்களில் கல்வெட்டாக பொறித்துள்ளார். அவற்றில் ஒரு பாடலில் மாசிக் கடலாடலைப் பற்றியும், அதற்காக அம்மன்னன் அமைத்த மண்டபம், பெருவழி ஆகியவற்றையும் பற்றிக் கூறுகிறது. வேதாரண்யத்தில் சில கல்வெட்டுகள் மாசி மக நில தானம் பற்றி சொல்கின்றன. ஸ்ரீ ரங்கத்தில் கி.பி.1531-ஐ சாா்ந்த விஜயநகா் காலக் கல்வெட்டும் உறையூரில் நடந்த மாசிமக விழா பற்றிய செய்தியை சொல்கிறது. குடுமியான் மலையில் உள்ள குலோத்துங்கன் மற்றும் பரகேசரி சோழன் ஒருவனின் மாசி மக அன்ன தானத்துக்கு 15 கழஞ்சு பொன் வழங்கியதை கூறுகிறது.
ஒரு வரி கதை : ஒவ்வொரு முறை பிரம்மதேவன் தூங்கும் பொழுது பிரளயம் ஏற்படும் ஒரு முறை பிரளயத்திற்கு பின்பு கலியுகத்திற்கு முன்பு உயிர்களை உருவாக்கும் விதைகளையும் அமிர்தமும் கொண்ட பானை ஒன்று இங்கே இந்த குளத்தில் இருப்பதற்காக இங்கு வந்து சேர்ந்தது. சிவபெருமான் ஒரு வேடன் வேடமிட்டு அம்பெய்து இந்த பானையை உடைத்து உயிர்கள் ஜனிப்பதற்கு ஏது செய்தார். “கும்பம்” என்றால் பானை “கோணம்” என்றால் உருக்குலைந்து என்பதால் கும்பகோணம் என்ற பெயர்.
சரி நாளை 24.2.24 அன்று சமுத்திர ஸ்னானமோ, குளத்தில் ஸ்னானமோ செய்யமுடியாதவர்கள், காலையிலேயே எழுந்து குழாய் நீரில் குளித்து அதையே சமுத்திர ஸ்னானமாக நினைத்துக் கொள்வோம். நமக்காக இதை முன்கூட்டியே அறிந்த பெரியோர்கள் ஒரு குட்டி மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்கள் .
‘கங்கேச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ ”பகவானே நான் குளிக்கும் இந்த குழாய் ஜலத்தில் கங்கை, யமுனை, கோதாவரி சரஸ்வதி நர்மதை, சிந்து காவேரி எல்லா புண்ய நதிகளின் நீரும் கலந்ததாக இருக்க அருள் புரி ஆண்டவா”. மன திருப்தி தான் முக்கியம். கங்கையில் குளிக்கும்போதும், காசி மக ஸ்னானம் கும்பகோணத்தில் குளிக்கும்போதும், கூட்டத்தை, அடுத்த தேர்தல் ஓட்டுக்கு எவ்வளவு ரூபாய் கிடைக்கும் என்று எண்ணினால் மாசிமக புண்ய ஸ்னானத்தால் என்ன பலன்? ஆகவே மேலே சொன்ன குட்டி ஸ்தோத்ரத்தை சொல்லி விட்டு பிளாஸ்டிக் குடுவையால் பக்கெட்டில் இருக்கும் நீரை எடுத்து தலையில் பக்தியோடு ஊற்றிக் கொள்வோம். கண்ணில் பட்ட ஒரு பசுவுக்கு கொஞ்சம் கீரை அளிப்போம். மாசிமக புண்ய ஸ்னான பலன் நிச்சயம் கிடைக்கும். நான் அப்படித்தான் பண்ணப்போகிறேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *