KODUMUDI MAKUDESWARAR TEMPLE J K SIVAN

கொடுமுடி மகுடேஸ்வரர் – நங்கநல்லூர் J K SIVAN
பல வருஷங்களுக்கு முன் தரிசித்த கொடுமுடி மகுடேஸ்வரனை மனம் நினைக்கிறது. ஒரு தேவாரத் தீந்தமிழ் பாடல் அவனை இன்று நினைவூட்டியது.
”சிட்டனைச் சிவனைச் செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி
நட்டனைத் தொழ நம்வினை நாசமே!”
இந்த ஸ்தலத்தின் முழுப் பெயர் திருப்பாண்டிக் கொடு முடி. பாரத்வாஜ க்ஷேத்ரம். பிரம்மபுரி, அம்ருதபுரி ஹரிஹரபுரம் கறையூர், கறைசை என்றும் பெயர். ஒவ்வொரு பேர் பின்னாலும் ஒரு கதை இருந்தாலும் இங்கே சொல்ல இடமில்லை என்பதால் விட்டு விடு கிறேன். இது கே பி சுந்தராம்பாள் ஊர். ஈரோடு – திருச்சி ரயில் மார்க்கத்தில் கொடுமுடி ரயில் நிலையத்திலிருந்து நடக்கும் தூரத்தில் காவிரியின் மேலக் கரை ஸ்தலம். ஈரோட்டில் இருந்து 40 கி.மீ. சிவாலயத்துக்கு எதிரே காவிரி தென்கிழக்கில் ஓடு கிறாள் . மேரு மலையின் ஒரு பகுதி வைரமணி யாக விழுந்து பெரிய சிகரமாகவும் மூல லிங்கமாகவும் உள்ளதால் ”கொடுமுடி”, தக்ஷிண கைலாசம் என்றும் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். சோழர்கள் கால கல்வெட்டுகளில் ‘அதி ராஜராஜ மண்டலத்துக் காவிரி நாட்டுக் கறையூர்த் திருப்பாண்டிக் கொடுமுடி’ என்று செதுக்கி இருக்கிறார்கள்.
ஒரு தடவை வாயு வுக்கும் ஆதிசேஷ னுக்கும் கடும் போட்டி. யாருக்கு சக்தி ஜாஸ்தி ? ஆதிசேஷன் மேரு மலையின் சிகரங்களை நீளமான உடம்பால் அசையா மல் சுற்றிக் கொண் டான். வாயு விடுவானா? அதிக பலத்துடன் மேரு மலையைத் தாக்கினான். மலையின் ஐந்து சிறு பகுதிகள் ஐந்து மணிகளாகச் சிதறி விழுந்தன. அவை விழுந்த இடங்கள் ஐந்து சிவஸ்தலங் களாகியது. சிவப்பு மணி விழுந்த இடம் திருவண்ணா மலை. மரகதம் விழுந்த இடம் திருஈங்கோய்மலை. மாணிக்கம் விழுந்த இடம் ரத்தினகிரி (சிவாயமலை). நீலமணி தான் திருப்பொதிகை மலை. வைரம் விழுந்த இடம் தான் கொடுமுடி ”கொடுமுடி” ‘பெரிய சிகரம்’, அது தான் மகுட லிங்கம். மற்ற நான்கு தலங்களில் விழுந்த மேரு மலைச் சிதறல்கள் மலைகளாகவே இருக்கும்போது கொடு முடி மட்டும் லிங்க வடிவ மானது.
இங்கே தான் தான் பிள்ளையார் காக்கை ரூபத்தில் வந்து. காவேரி நதியை தனது கமண்டலத்தில் பிடித்து வைத்திருந் ததை அறிந்து கமண்டலத்தை கவிழ்த்து காவிரி வெளியே ஓடும்படி செய்தார் என்று புராண கதை. அந்த இடம் தான் கொடுமுடித் துறை .காவேரி கொடு முடிநாதரை தரிசிக்க தெற்கு நோக்கி ஓடி வந்து அப்புறம் இங்கிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறாள். பாரத்வாஜ ரிஷி இங்குள்ள வன்னி மரத்தின் அடியில் பொன்னம்பலத் தில் நடனமாடும் நடராஜப் பெருமா னின் திருவடிகளைச் தியானம் செய்து தவமிருந்தார். மகுடலிங்கத்தை வழிபட்டார். நடராஜன் சிவ கணங் கள், முனிவர்கள் சூழ, நந்தியும் திருமாலும் மத்தளம் கொட்ட, பிரம்மன் பொற்றாளம் இசைக்க… தும்புரு, நாரதர் ஆகியோர் யாழ் இசைக்க, யாவரும் கண்டு மகிழும்படி சித்திர நடனம் ஆடிய இடம். தரிசனம் பெற்ற பாரத்வாஜ ரிஷி பெயரால் கொடுமுடிக்கு பாரத்வாஜ க்ஷேத்திரம் எனப் பெயர் என்று மேலே சொன்னேனே.
மலையத்வஜ பாண்டிய ராஜாவின் பிள்ளைக்கு கை விரல்கள் வளரவே இல்லை. கொடுமுடிக்கு வந்தபோது ஆச்சர்யமாக விரல்கள் வளர்ந்தன. எவ்வளவு சந்தோ ஷமாக இருக்கும் பாண்டியனுக்கு? கோபுரம், மண்ட பம், அன்னசாலை, அடியார் மடம், அந்தணர்கள் வாழ இல்லங்கள், வீதிகள் ஆகியவற்றை எல்லாம் மடமட வென்று கட்டினான். கொடுமுடிநாதருக்குப் பெரிய தேர் ஒன்றையும் தயாரித்தான். அபிஷேக ஆராதனை களுக்காகப் பல கிராமங்களைத் தேவ தானமாக வழங்கினான். ஈஸ்வரனுக்கு பல ஆபரணங்களையும் அளித்து அர்ப்பணித்தான். மலையத்துவச பாண்டியன் கைங்கர்யம் பெற்ற இந்த ஸ்தலம் ‘திருப்பாண்டிக் கொடுமுடி’ என்றும். அவன் பிள்ளைக்கு விரல்கள் பெரிதாக வளர்ந்ததால் ‘அங்கவருந்தனபுரம்’ என்றும் பெயர்கள் ஏற்பட்டன.
வடக்கில் மகுடேஸ்வரன் சந்நிதி, தெற்கில் அம்மன் சந்நிதி, தென்மேற்கு மூலையில் அனுமன் சந்நிதி. அதற்கு எதிரில் வன்னி மரமும் பிரம்மன் சந்நிதியும் உள்ளன. மூலவர் சந்நிதியில் நுழையும் போது சூரியன், சந்திரன் ஆகியோர் பக்கவாட்டில் உள்ளனர். அருகில் நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள். உள் பிராகாரத்தில் தெற்கே அறுபத்துமூவர், தக்ஷி ணா மூர்த்தி ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். மேற்கில் விநாயகர், உமா மகேஸ்வரர், அகத்தீஸ்வரர், கஜ லக்ஷ்மி , தேவியருடன் ஆறுமுகப் பெருமான், வடக்கில் நடராஜர், நால்வர் ஆகியோரையும் தரிசிக்க லாம். இங்குள்ள விநாயகர் ‘காவிரி கண்ட விநாயகர்’.
கொடுமுடி மூலவர் சுயம்பு மூர்த்தி. இவருக்கு கொடு முடி நாதர், மலைக் கொழுந்தீசர், மகுடேசுவரர், மகுடலிங்கர், கொடு முடீஸ்வரர், கொடுமுடிலிங்கர் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. கல்வெட்டு கள் திருப்பாண்டிக் கொடுமுடி மகாதேவர், ஆளுடை நாயனார் என்கிறது. அம்பாள் சௌந்திராம்பிகை, வடிவுடை நாயகி, பண்மொழியம்மை ஆகிய நாமங்கள் கொண்டவள். ஆவணி, பங்குனி நான்கு நாட்கள் சூரியனின் கதிர்கள் ஸ்வாமி, அம்மன் திருவுரு வங்களில் விழுவது கண் கொள்ளாக் காட்சி!
பெருமாள் சந்நிதியின் இரு புறமும் பன்னிரு ஆழ்வார் கள், பரமபத நாதர், வேங்கடாசலபதி, கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். மூலவர் வீர நாராய ணப் பெரு மாள் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகி றார். இந்தக் கோயிலின் தலவிருட்சம் வன்னி மரம். இது பிரம்மனின் அடையாளமாகப் போற்றப்படுகிறது. இங்கு பிரம்மனுடைய விக்ரஹம் உள்ளது. இங்கே
வன்னி மரத்தில் முள், பூ, காய் கிடையாது. இதைச் சுற்றி வந்தால் பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம். இது தவிர பேய்த் தொல்லை, கிரகதோஷம், திருமணத் தடை ஆகியவையும் நீங்கும். ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டு தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கி றார்கள்.
இங்கு நான்கு தீர்த்தங்கள். காவிரி: கோயிலுக்கு எதிரே தென்கிழக்கில் ஓடுகிறது. தேவ தீர்த்தம்: வன்னி மரத் துக்கு அருகில் உள்ளது. காவிரியிலும் தேவ தீர்த்தத் திலும் மூழ்கி எழுந்து வன்னியையும், ஈசனையும், திருமாலையும் சுற்றி வந்து வழிபட்டால் பிரம்மஹத்தி உட்பட பல தோஷங்கள் நீங்கும். மூன்றாவது தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம், நவக்கிரகத்துக்கு அருகில் உள்ளது. நான்காவது தீர்த்தம்_பிரம்ம தீர்த்தம்.
சைவ-வைணவச் சமநோக்கு நிலையில் வழிபடப்படும் இந்தத் திருக்கோயிலில் மூர்த்திகள் புறப்பாட்டின்போது சிவனும் திருமாலும் சேர்ந்து காட்சி தருவர்.
வன்னி மரத்தடியில் இருக்கும் பிரம்மாவுக்கு மூன்று முகங்கள். வன்னிமரம் நான்காவது முகம். அகத்தியர், பரத்வாஜர் மற்றும் ரிஷிகளுக்கு மகுடேஸ்வரர் கல்யா ண கோலத்தில் காட்சி தந்தார். ஆதிசேஷனால் உரு வான கோயில் என்பதால், இங்கு நாகர் வழிபாடு விசேஷம்.ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார். சஞ்சீவி மலையை கொண்டு வருவதற்காக வடக்கு நோக்கி தாவ யத்தனம் பண்ணு கிறார். வாலில் மணி. .பெருமாள் சன்னதியின் உட்புறத் தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரை தரிசிக்க லாம். புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் ரொம்பவே அபூர்வமானவர்.இங்கே மகுடேஸ்வரருக்கு மலைக் கொளுந்தீஸ்வரர் என்றும் பெயர். அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்ய அநேகர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமம் இந்த ஆலயத்தில் நிறைய நடக்கிறது.
கிழக்குப் பார்த்த கொடுமுடி ஆலயம் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலம் கொண்டது. சிவன் , விஷ்ணு, பிரம்மா தனித்தனி கோபுரம் தனித்தனி சந்நிதி. மூன்று வாயில்கள். நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக் குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக அம்பாள் சந்நிதிக்குச் செல்லலாம்.
சுந்தரர் இங்கே வந்து பாண்டிக்கொடுமுடி நற்றவா என்று பாடிய பிரபல தேவாரம் இது:
“மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறை ஊரில் பாண்டிக்கொடுமுடி நற்றவா ! உன்னை நான மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே”
சம்பந்தர் தேவாரம்: பண்: காந்தாரம்.
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்
எண்ணம ருங்குணத் தாரு மிமையவ ரேத்தநின் றாரும்
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *