கடல் கடந்துவந்த தமிழ்

கடல் கடந்துவந்த தமிழ் – நங்கநல்லூர் J K SIVAN தமிழ்த்தாத்தா உ வே சா.
தமிழ் தாத்தா உ.வே.சா. சில அற்புத சம்பவங்களை மறக்காமல் பதிவு செய்தவை ”நினைவு மஞ்சரி” என்ற ஒரு புத்தகத்தில் படித்தேன்.
ஒரு சம்பவத்தை அப்படியே உங்களுக்கு அளிக்கிறேன். கொஞ்சம் நீளமாக இருந்தாலும் சுவை குறையாது. தமிழுக்கு எவ்வளவு பாடு பட்டு அவர் புரிந்த சேவை அதில் மணக்கிறதே.
++.
”சீவக சிந்தாமணியை நான் (உ.வே.சா) 1887-ஆம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அன்புடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலி ருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுலகத்தில் அந்த நூல் உண்டாக்கிய இன்பக்கிளர்ச்சிக்கு அடையாள மாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ் நூலாராய்ச் சயில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று.
அயல் நாட்டிலிருந்து 1891-ஆம் வருஷம் ஏப்ரல் மாதத் தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் நகர முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழி லும் இங்கிலீஷிலும் எழுதப்பட்டிருந்தது. பாரிஸி லிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக் குத்தான் வியப்பு உண்டாகாது? அந்தக் கடி தத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவுகடந் தது. அக் கடிதம் வருமாறு:-
SOCIETE HISTORIQUE. CERCLE St. SIMON Parris la April 3d 1891.
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசு மா நகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன: சிந்தா மணியாஞ் சிறப்புடைய காப்பியமே பொன்றாதின் மாலை பொருந்திவரக் – கண்டேனே சிலப்பதிகாரமுதற் சீர்நூல்கள் நான்கு மளித்தலா மென்மரறைந்து. நீர் 1887-ஆம் ஆண்டி லச்சிற் பதிப்பித்த சிந்தாமணி யைக்கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த வுலகோர்க் குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்க ளச்சிற் பதிப்பித்தற் குரியவா யுண்டென் றும் உமக்கு நா மெழுத வேண்டுமென் றெண்ணிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களிகூர்ந்து வாழ்வோ மெப்போ தென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையா பதியென்னும் வேறு நாற்பெருங் காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம்.
சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற் காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோ மானா லிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்த ரெல்லோருங் கேட்போர். மணி
மேகலையோ வென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத் துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழைய வெழுத்துக்களறியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளு மெழுதாமல் விட்டான். ஆதலினாலிந்தப் பிரதி படித்தற் குரிய தல்லது. சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலின்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசுமா நகரத்தில் printing type உண்டு. இதுவுமல்லாமல் French பாஷைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடு மென்று முமக்கு நாமெழுதுகின்றோம். எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக் கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம். சுவாமியுடைய கிருபையெல்லாமும் மேலே வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம்.-Prof. J. Vinson”
பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வ ளவு ஊறியுள்ளதென்பதை அக்கடிதம் நன்றாக வெளிக் காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந் தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார்.
அதனை எழுதிய ஜுலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந் நகரத்தில் என்ன என்ன ஏட்டுச்சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென் பதையும் எழுதும்படி வேண்டினேன்.
அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்தி லுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அனபர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சி யுற்றேன். ஜூலியன் வின்ஸோனுடைய தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக் காலத்தில் வின்ஸோன் தமிழ் படித்தாரென்றும் தெரியவந்தது. வின்ஸோன் பாரிஸ் ஸர்வகலாசாலை யில் கீழ்நாட்டுப் பாஷைகளுக்கு ஆசிரியராக இருந்து விளங்கினார்.
நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிடும்பொருட்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். அந் நூல்களின் உரைச் சுவடிகள் பாரிஸில் கிடைக்குமா வென்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு:
Paris la May 7th 1891
எனதன்பிற்குரிய மகா சாஸ்திரிகளே,
நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகித மடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித் தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறே னென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிற தென்றும், இங்கு பெரிய புத்தகசாலை யிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத் துப் பிரதியுண் டோ வென்றும் கேட்கிறீர். அதுக்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.
Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலை யிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க்கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த்தெரியும். அவைகளின் list or catalogue பண்ணினோ மானால் அவற்றுள் சிலப்பதி காரம் இல்லை.
பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திர் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்கத்தையு மெழு தாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலு மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப்பிரதியாகும். நாம் அதைக் கடுதாசியி லெழுதினோம், நங்கட சிறு புத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்.
நாமிங்குத் தமிழைப் படித்தோ மல்ல. நாம் பிள்ளையா யிருக்கும்போது எங்கட தகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவு மெழு தவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளு மக்கு அனுப்புகின்றோம்.
இங்ஙனம், Julien Vinson அன்புடையவன், உரை குறைய தா யினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்!!
அக்கடிதத்தைக் கண்டவுடன் மணிமேகலையிற் சில பகுதிகள் எழுதியனுப்ப வேண்டுமென்று அவருக்கு எழுதினேன். அவர் மிகுந்த ஊக்கத்தோடு அந்நூலிலுள்ள பதிகத்தை மாத்திரம் எழுதியனுப் பினார். முற்றும் எழுதி அனுப்ப அவர் சித்தமாக இருந்தார். பார்த்தவரையில் அந்தப் பிரதி என் ஆராய்ச்சிக்கு உதவி யாக இராதென்று தோற்றியதால் அவரை மேலும் சிரமப்படுத்த வேண்டா மென்று நிறுத்திக்கொண்டேன். அவர் அனுப்பிய பாட்டுக்கள் இலக்கணப் பிழையின்றி இருந்தன.
அப்பால் அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் பல. ஒவ் வொரு கடிதத்திலும் பழைய தமிழ் நூல்கள் வெளிவர வேண்டுமென் பதில் அவருக்கிருந்த ஆவலைப் புலப்ப டுத்துவார். பிரெஞ்சு பாஷையில் அவைகளை மொழி பெயர்க்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம்.
சிந்தாமணியின் சுருக்கமொன்றைப் பிரெஞ்சு பாஷையில் எழுதியிருந்தார். அப்புத்தகத்தை அவர் எனக்கு அனுப்பினார். அதை நான் ஆங்கிலப் புத்தகமென்றெண்ணிக் கும்பகோணம் காலேஜில் முதல் ஆசிரியராக இருந்த ஸ்ரீமான் ராவ் பகதூர் ஸாது சேஷையரிடம் காட்டினேன். அவர் அது பிரெஞ்சு பாஷையென்றும் பிரின்ஸிபாலுக்குக் காட்டினால் படித்துச் சொல்லுவாரென்றும் கூறினார்.
அப்போது பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே.பி. பில்டர்பெக் துரையவர்களிடம் அதை உடனே காட்டினேன். அவர் அதில் வின்ஸோன் துரை என்னை விசேஷமாகப் பாராட்டி யுள்ளாரென்று எடுத்துக் கூறி, “உங்களால் இந்தக் காலேஜுக்கு ஒரு கௌரவம்” என்றார். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்க் கல்வியு டையாரோடு பழகித் தமிழாராய்ச்சி செய்து வருவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் புலப் படவில்லை. அயல் நாட்டில் ஒரு துணையுமின்றித் தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியன் வின்ஸோனுடைய தமிழன்புதான் எனக்கு மிகவும் சிறந்ததாகத் தோற்றியது.
என்னுடைய நூற்பதிப்புக்களை மிக்க அன்போடு வின்ஸோன் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். அடிக்கடி என்ன வேலை நடந்து வருகிற தென்று விசாரித்து எழுதுவார். நான் அனுப்பும் புதிய புத்தக ங்களை உடனே ஆழ்ந்து படித்து மகிழ்ந்து என் முயற் சியைப் பாராட்டி வரைவார். இன்ன இன்ன விஷயங்க ளை நூதனமாக அறிந்து கொண்டேனென்று அறிவிப் பார்.
சிலப்பதிகாரப் புத்தகம் எப்பொழுது வெளிவரு மென்று அடிக்கடி கேட்டு வந்தார். அது வெளி வந்தவுடன் அவருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு அவர் அடைந்த இன்பத்துக்கு எல்லையில்லை. என்னைப் பாராட்டி அகவலாக ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு.–
குருவே துணை (ஆசிரியப்பா)
இளங்கதிர் ஞாயி றிருடொறு நீக்கியபின்
விளங்கிடைச் சங்கெறி வெண்டிரைக் கடல்சூழ்
மாநில மதனில்வாழ் மறைமிகு சோழப்
பூநிலத் தலர்ந்த புகார்நக ரத்துக்
கோவலன் கண்ணகிதங் கூறரு மன்பொடு
பாவல முடையாட்குப் பற்பொருட் பரத்தலு
மாங்கவன் றுயரமு மணிகிளர் சிலம்பு
வாங்குபு போயது மதுரை யிற்கொலைப்
படலு முதலிய பறைதருஞ் சரிதை
யடல்வினைப் பயனெறி யமைபொரு ளின்பம்
வீடெனயாந் தெளிவுற வின்மொழிக் காப்பியஞ்
சிலப்பதி காரஞ் சிறந்த பெயரா
லுலகெலா மறிய வொளிதரு சென்னைக்கண்
அச்சிட வளர்த்தீ ரடைந்த பெரும்புகழ்
மாசிலா நாமகண மதிதெரிந் திசைக்கு
மொருபே ரகத்திய னுருக்கொண்டு
மருளுடை மணமிசை வந்துதோன் றினானென.- Julien Vinson 52, Parris, 8 June 1893
புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார்.
கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளில் அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரெஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் எழுதியிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார். ஏட்டுச்சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக்கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ்நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது!
இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி வி்ட்டேன்.
வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்த தில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்க வில்லை. படித்துப்பார்த்தபோது வில்வ வனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப் பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ் நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பற்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன்.
அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மை யென்று தெரியவந்தது. அப்போது,
“பக்குவ மாகக் கவிநூறு செய்து பரிசுபெற
முக்கர ணம்மெதிர பல்காலும் போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி யலுத்துவந்த
குக்கலை யாண்டருள் வில்வவனத்துக் குயிலம்மையே “
என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்துக்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வ நல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரியவந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக் குமாவென்று தேடச்செய்தேன். நல்ல காலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற் றின் உதவியால், கடல்கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்துகொண்டேன்.
அந்தப் புராணம் வீரராகவரென்னும் பெய ருடைய ஒரு புலவரால் இயற்றப்பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்ற போது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலயதரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப்பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், “இது மிகப் பழைய தலம். தேவா ரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்புஸ்தலம் இதுதான்” என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சி யுற்றேன்.
வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சி யடைந்தார். அவர் தமிழ் இலக்கண மொன்று (Tamil Manual) எழுதினார். அதை எனக்கு அனுப்பினார்.
———-
வில்லைப்புராணம் 1940-ஆம் வருஷம் ஜனவரி மாதத்தில் ம-ள-ள-ஸ்ரீ ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை யவர்களுடைய பொருளுதவியைக்கொண்டு குறிப்புரை முதலியவற்றுடன் என்னால் பதிக்கப் பெற்றுள்ளது.
ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புப் புத்தகமொன் றை அனுப்பி, ‘இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்’ என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியாராகவும் அவர் இருப்ப தை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்க ரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும், என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ (Marquis De Barrique Fontanneu) என்பது.
1902-ஆம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழநாட்டுக் கலைஞர் மகாசபை (On- entalists’ Congress)யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக் கொண்டுவரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரெஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப்கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரை யென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதெனபதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார்.
அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது.
நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம் போகும் மகா சபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப்பற்றிய கட் டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அநுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப் படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:
தஞ்சாவூர் , 6 அக்டோபர், ’02
ம-ள-ள-ஸ்ரீ சாமிநாதைய்யரவர்களுக்கு அனேக வந்தனம்.
நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும் போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப்படுத்த எனக்கு மனதில்லை.
ம-ள-ள-ஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும் போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப்புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக் கொண் டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம்.
அதின் சாராம்சத்தை அறிந்து கீழநாட்டுப் பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு (Orientalists’ Congress) எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தீர் களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன்.
நான் தங்கள் சினேகிதரும் என உபாத்தியாயருமாகிய ம-ள-ள-ஸ்ரீ வின்சோன் துரை (M.Vinson) பேரைச் சொல்வித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன்.
சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப் பாஷையின் பெருமையையும் வெளிப்படுத்தவுமே இந்த உப காரத்தைத் தங்களிடம் கேட்கிறேன்.
தங்களுடைய அபிமானத்தை எதிர்பார்க்கும், Marquis De Barrique Fontainieu
நான் மதுரை இராமேசுவரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுதவேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும்.
அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தைப் பிரதி செய்ய இயலவில்லை-யாதலின் என்னிடமுள்ள காகிதப் பிரதியையே அனுப்பினேன். அவர் அதனை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.
அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதியிருந் தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தன் மாணாக்கரைப்பற்றி எழுதினார்.
ஸ்ரீ பொண்டேனூ தம் கடிதத்தில் ‘உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்’ என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ஆம் ௵ ஜனவரிமாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்துவருவதை நன்குமதித்து ஒரு நன்மதிப்புப்பத்திரம் ( Certificate of merit in recognition of researches and work in connection with the ancient Tamil manuscripts) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசிய தன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன் முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக் கொண்டேன்.
எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிட மிருந்து 1910-ஆம் வருஷத்திற்குப்பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும் போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசி ரியரையும் தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப்புராணம் இன்னும் வெளிப்படவில்லை.
ஜுலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்களாவது எழுதியி ருப்பார். அவர் இல்லை. ஆனல் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக் கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டி லும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *