THREE DAYS VISIT TO TRICHY J K SIVAN

மூன்று நாள் திருச்சி  பயண நினைவுகள்   –     நங்கநல்லூர்   J K  SIVAN

எத்தனையோ பெரிய  ஹனுமார்  வால் கூட்டம்  இருந்தாலும் எப்படியோ எனக்கு  துளியும்  உடல் பாதை இன்றி சுலபமாக அரங்கன் இருமுறை தரிசனம் கொடுத்தான்.   கண்ணன் கருப்பொருளாக உலகமெலாம் வியாபித்து இருக்கிறான். பூவிலும், காயிலும், மானிலும், மருவிலும், தேனிலும், தேன் சிட்டிலும், மண்ணிலும், மனிதருள்ளும் அகப்பொருளாய் (அந்தர் யாமியாக) அவன் இருக்கிறான்.  அவன் முன்னே  அவன் கண்களைப் பார்த்துக் கொண்டு நிற்கும்  போது என் மனதில் திருப்பாணாழ்வாரும் ஆண்டாளும் தான் தெரிந்தார்கள். அவர்களது இணையற்ற  பக்தி என்னை பிரமிக்க வைத்தது.

கூர்ந்து கவனித்தால்  ஒரு அசாதாரண  மனோதிடம்   அவர்களிடம் ஒளிந்து இருப்பதைக் காணலாம்.  திருப்பாணாழ்வாரை இழிசனம் என்று சாதீயம் ஒதுக்கியது. அதற்காக அவர் மனம் தளரவில்லை. மாசு நிறைந்த மானிடர் மேல் காதல் செய்வதற்குப் பதில் அவர் தன் காதலை மானிடர்க்கும் முதலான கண்ணனிடம் திருப்பினார். ஒன்றில்லாவிடில் மற்றொன்று!    குறை ஒன்றும் இல்லை. மனம் தளர்ந்து விடுவதில்லை. இது முக்கியம்.

அதேபோல் ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, “அடே, பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்”
இது  ஆண்டாள் என்ற சிறு பெண்ணின் மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப் பட்டிருக்கும் இந்திய  ஹிந்து சனாதன தர்ம  பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண்ணாக நம் முன்னே வந்து நிற்பாள்.

இந்த இரண்டு  பக்தர்களுக்கும் அரங்கனின் ஆசி கிடைத்தது  தான்  இதில் விசேஷம்! அத்தனை ஆழ்வார்களிலும் இந்த இரண்டு புரட்சிவாதிகளும்  தான்,அதாவது  திருப்பாணாழ்வார், ஆண்டாள்  இருவர் மட்டுமே , அரங்கனுடன் சங்கமித்தவர்கள். இதில் உள்ள நயம் புரிகிறதா?

திருப்பாணாழ்வார் பத்தே பாசுரங்கள்தான்  இயற்றியவர்.  வழக்கமாக பாசுரங்கள்  ஸ்தோத்திரங்கள்  பாடிவிட்டு, பல ஸ்துதி என்று கடைசியாக ஒரு பாசுரம் இருக்கும். அதில் பாடியவர் பெயர்,  பாசுரம் ஸ்தோத்ரம் சொல்வதால்  வரும்  நன்மை எல்லாம் சொல்லப்படும். திருப்பாணாழ்வார் இம் மரபைக்  கை விடுகிறார். முத்துப் போல்  பத்துப் பாசுரங்களில்  கண்ணன் மேல்  கொண்ட காதலை  அடி முதல் முடி வரை பாடி விட்டு, மெய் மறந்து, தனது அடையாளம்  அதில் இல்லாமல் செய்து விடுகிறார். இது காதலின் உயர் நிலை! காதல் “புரிபவர்” என்பது கூட இல்லாமல் வெறும் காதலே காட்சியாக நிற்பது!!

”அமலனாதி பிரானடியார்க் கென்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள ரங்கத்தம்மான் திருக்
கமல பாதம், வந்தென் கண்ணினுள்ளன வொக்கின்றதே(1)

கண்ணனை விளிக்க எத்தனை சொற்கள்!: அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர் கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், ..இப்படி. கண்ணதாசன் சொல்லுவானே,” ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே” என்று. அது போன்ற ஒரு நிலை. ‘நீதி வானவன்’ என்ற  பெயர் மூலம்   ஆழ்வாருக்கு  இழைக்கப் பட்ட பிழைக்கு அரங்கன்  நீதி வழங்கியது தெரிகிறது.

ஆல மாமரத்தின் இலை மேல் ஓர் பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மாமணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்ல தோர் எழில்
நீல மேனி! ஐயோ! நிறை கொண்டதென் நெஞ்சினையே (9)

ஆலை இலைக் கண்ணன் உருவகம்   ஆஹா  பிரமாதம்.! உலகங்கள் அனைத்தையும் உண்டு விழுங்கி விட்டு (ஞாலம் ஏழும் உண்டான்) பாலகனாய் சிறு இலையின் மேல் தவழ்ந்து வருகிறான் கண்ணன் ஊழிக் கூத்தின்  கடைசியில், ப்ரளய முடிவில்!
 பாலகன் என்ற உருவகம் வளர்ச்சியின்  மறு மலர்ச்சிக்கு திரும்பும் நிலையைக் குறிக்கிறது. கள்ளமற்ற குழந்தையாக காண்பிப்பது, உலகின் தோற்றமும் முடிவும் அவனுக்கு சிறு குழந்தையின் விளையாட்டுப் போல என சுட்டிக் காட்ட. இதையே கவி கம்பன்,

”உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலை நிறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.”    என்பார்.

இப்படி சக்தி வாய்ந்த அரங்கன் அழகிற்கு ஓர்  எல்லை உண்டா? “முடிவில்லதோர் எழில் நீலமேனி” என்கிறார். முர்ச்சையாகும் நிலை. வார்த்தை வரவில்லை.  தடுமாறுகிறார். ஐயோ!என் நெஞ்சு நிறை கொண்டதே என மேலே சொன்ன பாசுரத்தில் ஆழ்வார்  முடிக்கிறார். அவருக்கு அப்போதிருந்த அருள் அனுபவத்தை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!

அழகான திருவரங்கம்.    பாயும் நீர்  பொன்னி நதி.   ஆழ்வார்களும் , பின் வந்த ஆச்சார்யர்களும் புகலிடமாக வந்த  ஊர் திருவரங்கம் என்கிறார்.
ராமர் உறங்கும் அழகே அத்தனை அற்புதம் அவர் பூஜித்த அரங்கன் கண் வளரும் அழகு அதி அற்புதம். அந்த அழகுடன் அவர் உலக சிருஷ்டி முதல் அத்தனை ஆச்சர்யமிக்க செயல்களையும் செய்கிறார்.
அதிலும்..ஸ்ரீரங்கம்  பெருமாளின் பார்வை   அவன் முன்னே  நின்ற  என்னைப்  பார்பது போலவே தோன்றியது.  தென்னிலங்கையில் உள்ள விபீஷணனுக்கு   அப்படி அருள் செய்தது  நினைவுக்கு வந்தது. கண்களை மூடியும்..திறந்துமான அருட்பார்வை.! யோக நித்ரை.
தன் அழகை ஆபரணங்களால் சற்றே மறைத்தப்படியே அருள் பாலித்தாலும் அதனையும் மீறி அரங்கனின்  அழகால்
ஆழ்வார்கள்..அடியவர்கள், நம் போன்ற  பக்தர்கள்  அனைவரும் மயங்கிக்  கிறங்கி  அகலாமல் நிற்பதால் தான்  ஜருகண்டி அவசியமாகிறது..
தான்..தனது என்ற எண்ணங்களுடன் சராசரி வாழ்க்கையில் வாழும் நாம் அரங்கனின் அழகைக்கண்டு பிரிந்து வர முடிகிறதா? .என்னால் இயல வில்லையே என்றே இப்பாசுரத்தின் மூலம்  திருப்பாணாழ்வார்  சொல்கிறார்.

  “கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய்
உண்ட வாயன்என் னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாவே”
“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே”  

 கண்ணழகா , அரங்கா, கண்ணா,  உன்னை   தரிசித்துவிட்டேன்.உன்கண்கள் என்னைப் பார்த்துவிட்டன . நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலை  எதுவும் இல்லை. அவை இனி  எனக்குத் தேவையில்லை என்று தீர்மானமாக   ஆழ்வார்  மாதிரி என்னால் சொல்ல முடியவில்லையே.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

One comment

  1. மிக்க நன்றி… தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இந்த பொங்கல் இனிய பொங்கலாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *