THIRUMURUGAATRUPADAI J K SIVAN

திருமுருகாற்றுப்படை  –   நங்கநல்லூர்  J K  SIVAN
நக்கீரர்

பழமுதிர் சோலை  6வது படைவீடு
பாடல் வரிகள்   278-316

நக்கீரர் தமிழ் கல்வெட்டு தமிழ் எழுத்து மாதிரி. நமக்குத் புரியாத தமிழ். இதைத் தான் அப்போது பேசினார்கள் எல்லோரும் என்றால்  அவர்கள் நம்மைப் பொறுத்தவரை வேறு கிரஹத்தை சேர்ந்தவர்கள் போல் என்று தான் தோன்றும்.  புரியாத மொழி பேசினால் புரியுமா?  தெரியாத ஒன்றில் எழுதினால் படித்தறிந்து கொள்ள இயலுமா? சில தமிழறிஞர்கள் விளக்கம் அளித்தது அப்படி ஒன்றும் சுலபமாக  மனதில் பதியவில்லை. எப்படியோ   அதெல்லாம்  மேய்ந்து கொஞ்சம் புரிந்து கொண்டு ஒருவாறு எழுத அந்த தமிழ்க்கடவுள்  முருகன் தான் எனக்கு அருள் புரிந்தான்.

நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின் 278
நின்னடி உ ள்ளி வந்தனன் நின்னோடு 279
புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் 280
குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன் 281
வேறுபல் உ ருவிற் குறும்பல் கூளியர் 282
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி 283
அளியன் றானே முதுவாய் இரவலன் 284
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென 285
இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் 286
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின் 287
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி 288
அணங்குசால் உ யர்நிலை தழீஇப் பண்டைத்தன் 289
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி  290

அஞ்சல் ஓம்புமதி அறிவனின் வரவென 291
அன்புடை நன்மொழி அளைஇ விளிவின் 292
றிருள்நிற முந்நீர் வளைஇய உ லகத்  293
தொருநீ யாகத் தோன்ற விழுமிய 294
பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்  295

வேறுபஃ றுகிலின் நுடங்கி அகில்சுமந் 296
தார முழுமுதல் ஊருட்டி வேரற் 297
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு 298
விண்பொரு நெடுவரை பரிதியிற் றொடுத்த 299
தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல 300

அரசினி முதுசுளை கலாவ மீமிசை  301
நாக நறுமலர் உ திர யூகமொடு  302
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் 303
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று 304
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305

நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா 306
வாழை முழுதல் துமியத் தாழை 307
இளநீர் விழுக்குலை உ திரத் தாக்கிக் 308
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 309
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்  310

கோழி வயப்பெடை இரியக் கேழலோ 311
டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன 312
குரூ உ மயி ரியாக்கைக் குடாவடி உ ளியம் 313
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் 314
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் 315
றிழுமென இழிதரும் அருவிப் 316

 இப்போதைய அழகர் மலை,திருமாலிரும் சோலை, தான் அப்போதைய  பழமுதிர் சோலை. ஆறாவது படைவீடு. முருகன் அருளை வேண்டுபவன் இங்கே வரலாம், இங்கே என்னென்ன எப்படி இருக்கிறது என்பது தான் பாடல் கருப்பொருள்.
முருகன்  தெய்வீகன், அழகன்,இளமையானவன், காருண்ய சீலன் அவனைத்தேடி அடைந்து நன்மை பெற்றேன். நீங்களும் ஓடிவாருங்கள் அவனை தேடிவந்து அவனருள் பெறுங்கள்  என்கிறார். இப்படி வழிகாட்டுவது தான் ஆற்றுப்படை.
முருகனின் கொற்றவேல், வெற்றியை தருவதால் வெற்றிவேல்.  அஞ்ஞானத்தை போக்கும் ஞானவேல். அவன் செவ்வேள். பன்னிரு கரத்தான். ஆறுமுகன். அறிவு,  ஆற்றல், செல்வம் எல்லாம் அருள்பவன்.

பழமுதிர் சோலையில் மலை மேலிருந்து அருவி ஜோ என்று கீழே பாய்கிறது. வரும் வழியில் அருவி சந்தன, அகில் மரங்களை  வேரோடு சாய்த்து தூக்கிக்கொண்டு வாசனையாக ஓடுகிறது.  மேலே  மலை மேலிருந்து கீழே மூங்கில் காட்டில் விழுகிறது. மரங்களில்  தேனீ  நிறைய கூடு  கட்டி தேனடைகள் பெரிதாக  இருப்பதால்  நீரில் தேனும்  வாசனையோடு இனிப்பும் சேர்க்கிறது.  தேனடைகள்  சிவப்பான நிறம் கொண்டவை. ஆகவே  குட்டி குட்டி   வட்ட வடிவ சூர்யன் போல் கண்ணுக்கு தோன்றுகிறது. பலா மரங்கள் பழுத்த பலாபழங்களை தாங்கி நிற்கிறது. சரக்கொன்றை மலர்கள்,சுர புண்ணை மறக்க கிளைகள்  காற்றில் ஆடுகிறது.  தேனும் பழங்களும் நிறைந்த மரங்கள் அடர்ந்த இடத்தில் குரங்குகள் இருப்பதை சொல்லவேண்டுமா?   உடம்பு கருப்பாக உள்ள, முகம் மட்டும் கறுத்த , வானரங்கள் ஏராளம்.  கீழே  காட்டில் யானைகள் உற்சாகமாக  உலவுகின்றன. சாப்பிட   நிறைய இருக்கிறதே.  யானை தந்தங்கள் தரையில் எங்கும்  கிடக்கிறது.
அருவி  நீர் பொன் , மணி, முத்து பலவற்றையும்  அடித்து  .சுமந்து கொண்டு பாய்கிறது. தென்னை மரங்களில் நிறைய குலை குலையாக இளநீர் தேங்காய்கள்.  வாழைக்குலைகளும்  நீரில் மிதக்கிறது. மிளகு செடிக் கொடிகள்  பச்சை மிளகை மிதக்கச்  செய்கிறது.  .ஆறுமுகன் வாழும் பழமுதிர் சோலை ஒரு அற்புத க்ஷேத்ரம். மான், மயில், பறவைகள் சந்தோஷமாக  ஓடுவதை நக்கீரர் பார்த்து விட்டு எழுதுகிறார். கருப்பு மலைகளில் கருப்புநிற கரடி குடும்பங்கள்.

“முருகா  உன்னை முழுசாக  அறிந்தவர் யார்? எல்லையில்லாத ஒன்றை ஒரு  அளவுக்குள் கொண்டுவர முடியுமா.  என் சிற்றறிவுக்கு எட்ட  பேரறிவாளன் நீ.  உலகில் நிலைபெற்ற உயிர்களுக்கு உன்னை அளந்து அறிதல் அரியது ஆதலால், நின் திருவடிகளை எண்ணி நான் வந்தேன்,  உன்னை யாரோடு ஒப்பிடமுடியும்? எவரும்  உனக்கு இணையாக மாட்டார். முருகா என்றாலே நா மணக்கும். முருகா என்று ஒருதரம் சொன்னாலே போதும். ஓடிவந்துவிடுவான் வேலவன். நமது அஞ்சும் முகத்தைப்  பார்த்தாலே போதும் அஞ்சேல் என  ஆறுமுகன் தோன்றிவிடுவான்  என்கிறார்   நக்கீரர்.
இறைவனைப்  பற்றி எண்ணுவதற்கு தான் புராணம், கதைகள் இதிகாசம் எல்லாமே.  பகவான் மேல் நம்பிக்கை என்பது மெய்யென்று நம்பினால்  மெய், பொய்யென்று சொல்வோர்க்கு பொய்யாகவே போய்விடும். நம்பிக்கை அளிப்பவன் ஒரு கை (தும்பிக்கை) முகத்தோன், விநாயகனின்  தம்பி. பூத்திருக்கும் கடம்ப மாலை அணிபவன்.

உன் வேண்டுதலைக்  குறித்து அப்பொழுதே, வேறு பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர்கள், விழா எடுத்த களத்தில் பொலிவு பெறத் தோன்றி “அளிக்கத் தக்கவனாகிய இந்த அறிவு வாய்ந்த இரவலன் வந்துள்ளான் பெருமானே, நின்னுடைய வளவிய புகழை விரும்பி.  இனியனவும் நல்லவையுமாகிய மிகப் பலவற்றை வாழ்த்திக் கூறி வந்துள்ளான்” என்று கூற,   தெய்வத்தன்மை உடைய வலிமை விளங்கும் வடிவினையும், வானைத் தீண்டும் வளர்ச்சியையும் உடைய தான் நின் முன் எழுந்தருளி, அச்சம் தரவல்ல பெரும் நிலையை உள்ளடக்கி, பழமையான தன்னுடைய மணம் வீசுகின்ற தெய்வத் தன்மையுடைய இளமை அழகைக் காட்டி “அஞ்சுவதை நீக்குவாயாக!  உன் வருகையை யான் அறிவேன்” என அன்புடைய நல்ல சொற்களை அருளுடன் கூறி, கெடுதல் இல்லாமல், இருள் நிறமுடைய கடலினால் சூழ்ந்த உலகத்தில், உனக்கு ஒப்பார் யாரும் இல்லை எனக் கூறும்படி நீ மேம்பட, சீரிய பிறரால் பெறுதற்கரிய வீடு பேற்றினைத் தந்து அருளுவான்.  அவனைப் பணிந்தால் இடர்கள் நீங்கும்.
அப்பா முருகா  உன்னை அன்றி வேறொருவரை நான் வணங்கமாட்டேன். நம்பமாட்டேன். பன்னிரண்டுகை கொண்டு  ஆறுமுகம், பன்னிரு கண்கள் கொண்டு காக்கும் தெய்வமே.நீ யெப்போதும்  போதும் எனக்கு.

அறுமுகனின் திருமுருகாற்றுப்படை  எழுதி முடித்துவிட்டு  தான்  திருச்சி ஸ்ரீரங்கம் மூன்று நாள் சென்றேன். முருகனை வயலூரில்  ஏற்கனவே  இரு  தரிசித்தால் இந்த முறை  அவனைக் காண வழியில்லை.  இந்தா உனக்கு என் பிரசாதம் என்று என் நண்பர் ராதாகிருஷ்ணன் மகன்  சனத் குமாரன்  மூலம் ”மாமா  நான்  பழனிக்கு போனேன்,இந்தாருங்கள் பிரசாதம்”  என்று ஒரு பாட்டில் பழனி பஞ்சாமிர்தமாக கையில் அமர்ந்தான். நக்கீரனால் சிவன்பெற்ற  பரிசு.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *