THIRUMURUGAATRUPAADAI J K SIVAN

திருமுருகாற்றுப் படை  –  நங்கநல்லூர்  J K  SIVAN
நக்கீரர்  

பழமுதிர்சோலை  6வது படைவீடு 

பாடல் வரிகள்  251-277

முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக் 251
கைதொழு உ ப் பரவிக் காலுற வணங்கி 252
நெடும்பெருஞ் சிமயத்து நீலப்பைஞ்சுனை 253
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 254
அறுவர் பயந்த ஆறமர் செல்வ 255

ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை 256
மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே 257
வெற்றி வேல்போர்க் கொற்றவை சிறுவ 258
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி 259
வானோர் வணங்குவில் தானைத் தலைவ 260

மாலை மார்ப நூலறி புலவ  261
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள 262
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை 263
மங்கையர் கணவ மைந்தர் ஏறே 264
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ 265

குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து 266
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ 267
பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே 268
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக 269
நசையினர்க் காத்தும் இசைபே ராள 270

அலாந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் 271
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் 272
பரிசிலர்த் தாங்கும் உ ருகெழு நெடுவே எள் 273
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் 274
சூர்மருங் கருத்த மொய்ம்பின் மதவலி 275

போர்மிகு பொருந குரிசில் எனப்பல  276
யான்அறி அளவையின் ஏத்தி ஆனது 277

முருகன்  அங்கிங்கெனாதபடி  எங்கும் நிறைந்தவன்.  நம்  ஒரு முகத்தால் அவனைப் பாராவிட்டாலும் அன்போடு கருணையோடு நம்மை வாழ்விக்க  ஆறுமுகங்களாலும் நம்மை கண்காணித்து  ரக்ஷிப்பவன்.  அவன் திருவடி  ஒன்றையே கெட்டியாக பிடித்துக்கொண்டால் போதும்.   குன்று தோராடும்   குமரன் அவன்  தேவ சேனாபதி. அவனை முழுதும் நாம் உணரமுடியாதவன்.  யாமிருக்க பயமேன் என்று நம்மைத் துயரங்கள் துன்பங்களிலிருந்து காப்பவன்.

நெடிய பெரிய மலை உச்சியில் தருப்பைப்புல் வளர்ந்த   சுனைகள். காற்று, நெருப்பு, ஜலம் , நிலம் என்ற நான்கு இயற்கை பூதங்களை இது குறிக்கிறது. தீச்சட்டி உள்ளங்கைகளில்  ஏந்தி இருப்பவர்களும் இந்த வெறியாட்டத்தில்   உண்டு.  ஆறுமுகனே  உன்னை பக்தியோடு வரவேற்பவர்கள் இவர்கள்.  ஐந்து பூத  வரவேற்பு…கல் ஆல மரத்தின் கீழ் த்யானம் செய்யும்  தக்ஷிணாமுர்த்தி மகனே, ஆறுமுகா, !  பெரிய  உயர்ந்த மலையாகிய  ஹிமாசல ராஜா  ஹிமவான் மகள் ஹைமவதியின் மகனே,   எதிரிகளை உன் பெயர் சொன்னாலே குலை நடுங்குபவர்கள் அல்லவா.?  பகைவர்க்குக்  காலன்  நீ குமரா.  யுத்தகளத்தில் வெற்றி தரும் கொற்றவை புதல்வா,   சிவப்பு ஆடை அணிந்த   பழையோளின் மகனே!  தேவர்கள் வணங்கும் வில் படையின் தலைவா.  கடம்ப மாலையை மார்பில் அணிந்தவனே!  சகல கலா நூல்களைக் கற்று அறிந்த புலவனே!  தமிழக்  கடவுளே, யுத்தம் புரிவதில் ஈடு இணையற்றவனே.   போரில்  வெற்றி அடையும் மறவனே!  அந்தணரின் செல்வமே!  சான்றோரின் சொற்களின் கூட்டமாக இருப்பவனே!  மகளிர்க்குக் கணவனே! மறவர்களில்  நீ தானேயப்பா மா பெரும்  சிங்கம் போன்றவன்.  சக்தி வேலாயுதம் சுமக்கும்  பெரிய கைகளை உடைய   வேலாயுதா.  கிரௌஞ்சம் எனப்  பெயர் பெற்ற மலையைப் பிளந்தவனே  வானை, விண்ணைத்தொடும் அளவு வளர்ந்த உயர்ந்த  மலைகளையுடைய குறிஞ்சி நிலக்  கடவுளே. பலர் புகழும் நல்ல மொழியினை உடைய புலவர்களுக்கு   ஆண்  சிங்கம் போல்  ஆதரவளிப் பவனே.  செல்வா,   விரும்பி வருவோர்க்கு அவர்கள் வேண்டியதைக் கொடுக்கும் பெரும் புகழை உடைய  ஞான வள்ளலே.  துன்பம் அடைந்து வருவோர்க்கு அருள் செய்யும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தவனே  தங்கவேலா.   போர்களை முடித்து  வெற்றி அடைந்த நின் மார்பில்   உன்னை வேண்டி வரும் பக்தர்களை  ஆரத்  தழுவி அவர்கள்  மனதில் விரும்பியதை   எல்லாம் தாரளமாக அளித்துக் காக்கும்  கந்த வேளே.    வேத சாஸ்த்ர வல்லுநர்கள்   போற்றும் ஞான தேசிகா.  சிவகுருவே.  சூரனின் குலத்தை அழித்த பெரும் வலிமையால் மதவலி என்னும் பெயரை உடையவனே.  சூரர்  குலத்தை  அழித்தவனே. என்னால் உன் பெருமை அனைத்தும் கூற  இயலவில்லையே  என் செய்வேன்?,   என்கிறார்  நக்கீரர்.

அடுத்த  பதிவுடன்  திருமுருகாற்றுப்படை  நிறைவு பெறுகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *