THE TWO BOONS ASKED BY KAIKEYI J K SIVAN

நினைத்ததும்  நடந்ததும்  –   நங்கநல்லூர்  J K  SIVAN

அயோத்யா அரண்மனையில்  தசரதன் மனதில் ஆயிரம்  என்ன  அலைகள் அலைமோதின .  நான்  எதற்காக  தள்ளிப்போட்டுக்கொண்டு போகவேண்டும். எதை நான் விரும்புகிறேனோ அதை நிறைவேற்றி  என் கண்குளிர பார்க்க  வேண்டாமா? இதை விடவா  ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்..

தசரதன்  அரண்மனை தோட்டத்தில்  ஒரு சிறிய தடாகம்.  தெளிந்த நீர் பளிங்குபோல் அதில் இருக்கும்.  வழக்கமாக  தசரதன்  அந்த  தடாகத்தின் அருகில் தான்  உட்கார்ந்து தனிமையில் சிந்திப்பான். 

 அன்று எதிரே  குனிந்து பார்த்தவனின்  பிம்பம்  நீரில்  போட்டோ மாதிரி தெரிந்தது.  அவன் முகம்  ஆனந்த மாக இருப்பதை கவனித்தான். அதைவிட  அவன் தலையை அலங்கரித்த  பாரம்பரிய  வைரக்கற்கள்  பதித்த நவரத்ன  கிரீடம்  கண்ணைப் பறித்தது.  பளிச் சென்று நீரில் பிரதிபலித்தது… 

”ஆஹா  தெளிந்த நீரில்  தனது  தலையில் சூடிய   நவரத்ன கிரீடத்தை   மீண்டும்  மீண்டும்  பெருமையுடன் பார்த்தான். இது  தான் இப்போது  முக்கிய விஷயம்.

 சில நாட்களாகவே ஒரு எண்ணம் மனதில் ஓடியது.  என் மகன், என் ஆசை புத்ரன், ராமன் தலையில் இதை சூடி நான் அழகு பார்க்க வேண்டும். அவன் போதிய வேத சாஸ்திரம்,  போர்முறை பயிற்சி,  யானை யேற்றம், குதிரை யேற்றம் வாள்  ஈட்டி  வேல்  வில்வித்தை ஆகிய வற்றை  சிறந்த  குருமார் களிடம் கற்றுக் கொண்டு விட்டான். அரசனாக சகல தகுதியும்  உள்ளவன். அவனது வில் வித்தை திறமையை  வசிஷ்டரே என்னிடம் புகழ்ச்சி யாக அடிக்கடி என்னிடம் சொல்கிறார்.

 ”தசரதா  உன் மகன்  இறைவனின் அவதாரம் என்று தோன்றுகிறது”  

என்று சொல்லும்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர்  திரையிடுகிறது.  அவனை மகுடம் ஏந்திய  அயோத்யா  ராஜாவாக நான் கண் குளிர  பார்க்க வேண்டும். இந்த  வம்சத்திலேயே  அவனைப் போல  சிறந்த ராஜா எவனும் இதுவரை தோன்றியதில்லை, இனிமேலும் தோன்றப் போவதில்லை.  நாளைக்கே  என் எண்ணத்தை செயலாக்குகிறேன்”. 

பொழுது விடிந்தது.ராமனை அழைத்தான் தசரதன்.

”அப்பா கூப்பிட்டீர்களா”.
வந்து நின்ற மகனை தலையிலிருந்து கால் வரை  ரசித்து மகிழ்ந்தான் சக்ரவர்த்தி தசரதன்.

”என் மகனே என் மனதில் உள்ள ஆசையைச்  சொல் கிறேன் கேள்.  இனிமேல் இந்த அயோத்தி சாம்ராஜ் யத்துக்கு, இக்ஷ்வாகு குல   திலக வீர தீரன்  நீ தான் பட்டத்து இளவரசன். வெகு சீக்கிரம், நாளையே,  உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் போகி றேன். இதற்கான  முயற்சிகளை துவங்கி விட்டேன்.  எனக்கு  இது தெய்வ சங்கல்பம் என்று தான் மனதில் படுகிறது. நேரம் வந்துவிட்டது  என்று ஏதோ இந்த மனதில் என்னை ஊக்குவிக்கிறது.”

அடுத்த சில  மணித்துகள்கள்  தசரதன் ராமனுக்கு  எப்படி ஆட்சி புரியவேண்டும் என்ற ராஜதந்திரங்களை விளக்குவதில் கழிந்தது.  

அன்றிரவு  ராமனும் சீதையும்  தெய்வங்களை வேண்டிக் கொண்டனர்.

 ”பகவானே, இந்த புகழ் பெற்ற  இக்ஷ்வாகு குலத்தில்  இதற்கு முன் பல  மிகச்சிறந்த அரசர்கள் நீதியும் நேர்மையும்  இரு கண்களாக கொண்டு சிறந்த வீரர்க ளாக  ஆண்டிருக்கிறார்கள். அவர்களைப்  போல இல்லாவிட்டாலும்,  தசரதன்,   அவனுக்கு முன் ஆண்ட  அரசர்களின்  பெருமைக்கு  இழுக்கு, களங்கம் விளை யாமல்  நான்  அரசனாக பணி புரிய  அருள வேண்டும். இதற்கு  தேவையான  சக்தியும்,  புத்தியும்,  திறமையும் எனக்கருளவேண்டும்”
தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள் அழகி  கைகேயி. கேகய நாட்டு ராஜகுமாரி.  பரதனின் தாய். அவளுக்கு  எதகனையோ தாதிகள்  இருப்பினும்  மிகவும் நெருக்கமானவள்,  ஒருவள் முதுகு கோணலாக, கூன் விழுந்த மந்தரை. எல்லோரும் கூனி என்று தான் அவளை அழைப்பார்கள்.

அன்று  காலையில்  தனது வீட்டிலிருந்து   வெளியே எதற்கோ சென்ற மந்தரை  எங்கும்  கோலாகலமாக, தோரணங்கள், மலரலங்காரம், எல்லோரும் மிக்க மகிழ்ச்சியாக  கூட்டமாக சிரித்து சந்தோஷமாக  பேசுவது கண்டு ஆச்சர்யம் அடைந்தாள்.  என்ன  ஆயிற்று, இன்று  என்ன விசேஷம்.?  கூட்டத்தில் அலங்காரம்  செய்து  கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து கேட்டாள்
 ”இன்று என்ன விசேஷம்? எதற்கு இந்த தோரணம் அலங்காரங்கள் எல்லாம்?”” ஏம்மா நீ  தூங்கிட்டியா? நாளைக்கு  நம்ம  இளவரசர்  ராமச்சந்திரமூர்த்திக்கு  மஹாராஜா பட்டாபிஷேகம் பண்ணப்போறாரென்று ஊர்  பூரா தெரியுமே’ மந்தரைக்கு   ராமனையும்  அவன் தாய்  பட்டத்து ராணி  கௌசல்யாவையும்  அவ்வளவு பிடிக்காதோ ?  இந்த பட்டாபி ஷேகம் விஷயம் அவளுக்கு ரசிக்கவில்லையோ?  என்னென்னவோ  யோசனை அவள் மனதில்.
நேராக தனது எஜமானி கைகேயியின் மாளிகைக்கு சென்றாள். இயற்கையாகவே  மந்தரை குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவள். எவரையும் வெறுப்பவள். தீய எண்ணம் என்கிறோமே அது நெஞ்சில் நிறைந்தவள்.  நம்மை ஆண்ட வெள்ளைக்காரனைப் போல  பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்தவள். சினிமாவில் வரும் வில்லியாக செயல்பட்டாள்.

கைகேயி அரசனின் தாயாகிவிட்டால், பரதன்  ராமனுக்கு பதிலாக அரசனானால் , தனக்கு  நிறைய பதவி, வசதி, சன்மானங்கள்  அதிகாரம்,  மதிப்பு   கிடைக்குமே . அதற்கு  முயற்சிக்கவேண்டாமா?

முதலில்  ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று   கூனி மூலம் அறிந்து கைகேயி மகிழ்ந்து முதல் முதலாக அந்த இனிய செயதியைச்  சொன்ன மந்தரைக்கு ஒரு முத்துமாலை பரிசளிக்கிறாள். அவ்வளவு நல்லவள் கைகேயி.  ஆனால்  கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் மெதுவாக, அவள் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக த்வேஷம் எனும்  விஷத்தைப்  பாய்ச்சி, ராமன் அரசனா னால் அவளும் பரதனும் சிறைப் படுவார்கள், உயிருக்கே ஆபத்து என்று எல்லாம் சொல்லி ராமனின் பட்டாபிஷேகத்தை நிறுத்தும் அளவுக்கு    கைகேயியின்  மனதை  மந்தரை சாமர்த்தியமாக  முழுதும் மாற்றி  விட்டாள் . இதற்கு  வழியும்  யோசித்து வைத்திருந்தாள்  மந்தரை.  

 முன்பு ஒரு யுத்தத்தில்  கைகேயி தசரதனுக்கு தேரோட்டி உதவினாள். தசரதன் உயிரைக் காப்பாற்றினாள் . அதனால் மகிழ்ந்த தசரதன்

 ”கைகேயி  உனக்கு என்ன வேண்டுமோ கேள்  வரம் தருகிறேன் என்று வாக்களித்தான்.  அவன் கொடுத்த இரு வரங்களை பின்னர் ஒரு சமயம் பெற்றுக் கொள்வ தாக  கைகேயி அதை ரிசர்வில்  reserve ல்  வைத்திருந் தாள் . அதை இப்போது கையிலெடுக்க வைத்தாள்  மந்தரை. அவளுக்கு  அரச குடும்ப ரகசியங்கள் அனைத்தும் அத்துபடி.

வேலைக்காரர்கள், வண்டி ஓட்டிகள், சிப்பந்திகளை வைத்துக்கொண்டு குடும்ப விஷயங்கள், ரஹஸ்யங்கள் வெளிப்படை யாக பேசுவதால் எத்தனையோ ஆபத்து கள், விளைவுகள் உண்டு. அதில் இது ஒன்று என்று அக்காலத்திலேயே  நிரூபணம் ஆகி இருக்கிறது.

சமயம் வந்துவிட்டது இப்போது  கைகேயி முன்பே பெற்ற அந்த இரு வரங்களை தசரதனிடமிருந்து  பெறு வதற்கு.   அன்று மாலை அவளைத் தேடி  ஆசையாக தனது  மகன்  ராமனின்  ராம பட்டாபிஷேக ஏற்பாடு களை, முடிவைச் சொல்ல வந்த தசரதன் பிடிபட்டான்.  அதிர்ச்சியும்  ஆச்சரியுமுமாக  கைகேயின் கோலம், ஆத்திரம், அலங்கோலம் , அவள் தீர்மானமாக  வரங் களை உரிமையோடு கேட்டது அனைத்தும் அவனைத்  திக்கு முக்காட வைத்தது.  கொடுத்த வாக்கை காப் பாற்றும் மனிதன், அரசன் அவன்.

 ”கைகேயி  அவ்வளவு பிடிவாதமாக  உறுதியாக  என்னிடம்  நான் வாக்களித்த  வரத்தை கேட்கிறாயே, என்ன வேண்டும் உனக்கு கேள்,  தவறாமல் அளிக்கி றேன் பெற்றுக் கொள்  என்றான் தசரதன். அப்போ தும் அவளை அவன் வெறுக்கவில்லை சந்தேகிக்க வில்லை.

 இரு பேரதிர்ச்சிகளை வரமாக வெளியிட்டாள்  கைகேயி:  

வரம்: 1  :   ராமனுக்கு பதிலாக  பரதன் பட்டத்து இளவரசன் முடிசூட வேண்டும்.

வரம் 2:   உடனே ஒரு வினாடியும்  வீணாகாமல்  ராமன்   மரவுரி தரித்து, பதினான்கு வருஷம்  அயோத்தியை விட்டு வெளியேறி,  கானகம், வனவாசம் செல்ல வேண்டும்”

 துளியும் இதில்  மாற்றம் இல்லை. அதிர்ந்து விழுந்தான் அரசன்.   மறுநாள்  காலை கைகேயி  பட்டாபிஷேகம்  தீர்மானியக்கப்பட்ட  அடுத்தநாள் காலையிலேயே  ஆளைவிட்டு  ராமனை அழைத்து  வரச் சொன்னாள் கைகேயி. 

தன்னை வந்து வணங்கிய  ராமனிடம் துளியும் சங்கோஜம் இல்லாமல் சொன்னாள்: 

”ராமா, இது உன் தந்தையின் கட்டளை.  அவருக்காக நான் இதை  இடுகிறேன்: எனக்கு  அவர் கொடுத்த வரம் பற்றி உன்னிடம் நேரே சொல்ல அவருக்குத்  தயக்கம்.  மேற் சொன்ன வரங்களை தெளிவாக உணர்த்தினாள் .
ராமன்  அதிர்ச்சியோ  கோபமோ, வெறுப்போ,  ஆச்சர்ய மோ எதுவுமில்லாமல் சந்தோஷத்தோடு, வழக்கம் போல்  அவளை நோக்கினான்.

”அம்மா,  அரசன் சொல், வாக்கு, தவறக்கூடாது.  நீங்கள் பெற்ற  இரு வரங்களும்  மதிக்கப்பட வேண்டும், செயல் பட வேண்டும்.    பரதன் உடனே  முடி சூடி  அயோத்தி மன்னனாக வேண்டும்.  அம்மா  நீங்கள் சொல்வது சரி யானது. பரதன் மன்னனாவதில் எனக்கு தான் முதலில் மகிழ்ச்சி. அடுத்து நான் உடனே 14 வருஷம்  கானகம் செல்ல  இந்தக் கணமே தயாராகிறேன்’  

கைகேயியை வணங்கி விடைபெற்று  தனது தாய்  கௌசல்யாவிடம் சென்று  முடிவைக் கூறுகிறான்.   வேறு வழியின்றி  கணவனின் வாக்கை காக்க, நிலை குலைந்து, கௌசல்யா,  மகனைப்  பிரிய மனமில்லாமல்  தவிக்கிறாள்.  சீதையும்  கணவனை பிரிந்து வாழ இயலாது என்று முடிவாக கானகம் செல்ல தயாரா கிறாள்.

 உடலை விட்டு நிழல் எப்படி பிரிந்திருக்க முடியும் என்று லக்ஷ்மணனும் கூடவே   தன்னை  யாரும் போகச் சொல் லா மலேயே  அவனாகவே,  ராமனோடு  14 வருஷம்  மரவுரி தரித்து கானகம் செல்ல கிளம்பிவிட்டான்.  

முதல் நாள் விழாக்கோலம் பூண்டிருந்த  அயோத்தி மா நகரம்  மறுநாள் காலை   சோக உருவெடுத்தது.  மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்  காணப்பட்டனர்.  அரண்மனை முடிவுகள் அவர்கள் உள்ளத்தை உடைத்திருந்தது.

 ராமன்,  லக்ஷ்மணன்  சீதை  மூவரையும் தேரோட்டி  சுமந்திரன் கங்கைக்கரை வரை கொண்டு விட்டு வந் தான்.  அயோத்தியின் தென் கரை கங்கை.  அக்கரை  சென்றால்  தான்  அயோத்தியை விட்டு வெளியேறியது ஆகும்.

வெறும்  தேர்  காலியாக   ராம லக்ஷ்மணர்கள் சீதை  இல்லாமல்  திரும்பியதைக்  கண்ட தசரதன் மீண்டும் மயங்கி வீழ்ந்தான். மாண்டான்.

மேலே சொன்னது ராமாயண சுருக்கம். எத்தனை தடவை படித்தாலும் மனதைத் தொடும்  இதிகாசம் அல்லவா? ஹிந்துக்களின் இரு கண்கள்  மஹா பாரத மும்  ராமாயணமும். 

மேலே சொன்ன காட்சியை  கேட்டோ,கண்டோ, படித்தோ  பார்த்தோ  கண்ணீர் விடாதவர்கள்  மந்தரையை விட   கல் நெஞ்சம் கொண்டவர்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அதென்னவோ,  ராமாயணத்தையும்  மஹா பாரதத் தையும்  வாழ்  நாள் பூரா இரவும் பகலும் எழுத வேண் டும் என்கிற  ஆசை  தீரவில்லை,  தாகம் தணிய வில்லை

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *