OLD CLASSMATE J K SIVAN

ஒன்றாகப் படித்த பழைய நண்பன் –
நங்கநல்லூர் J K SIVAN
நாம் சின்ன வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது நம்மோடு கூட படித்தவர்கள் பெயர் ஞாபகம் இருக்கிறதா? சிலர் மறப்பதில்லை.
துவாபர யுகத்தில் பள்ளிக்கூடங்கள் இல்லை. கல்வி ஆசிரியர் வீட்டில் அவருடைய குடும்பத்தோடு தங்கி அவருக்கு சேவை செயது அவர் கற்பித்தது தான் பாடம். அது தான் சிலபஸ் SYLLABUS.பரிக்ஷைகள் மார்க் எல்லாம் கிடையாது. பாஸ் என்றால் அவர் ”பையா, எனக்குத் தெரிந்ததை எல்லாம் உனக்குக் கற்று தந்துவிட்டேன், இனி நீ வேறு யாரிடமாவது சென்று மேற்கொண்டு வித்தைகளை கற்றுக்கொள். என் ஆசிகள் உனக்கு” என்று அனுப்பிவிடுவார்.
இத்தனை காலம் அவரோடு வீட்டில் தங்கி அவரிடம் கற்ற கல்விக்கு மாணவன் ஏதாவது தன்னாலான சம்பாவனை கொடுத்து நமஸ்கரிப்பான். FEES எதுவும் கிடையாது.
நமது குடும்பங்களில் நூறு வருஷங்களுக்கு முன்னால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது பத்து உருப்படிகளாக இருக்கும். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம்.
குழந்தைகள் ஆறு ஏழுக்கு குறைவில்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தது. பத்து பன்னிரண்டு குழந்தை கள் என்பதெல்லாம் சாதாரண விஷயம். மருத்துவ விஞ்ஞானம் வளராத காலத்தில் பாதிக்கு மேல் இளம் வயதிலேயே மரணம் நம்பரைக் குறைத்து ஆறு ஏழு என்று ஆக்கி விட்டது. சிசு மரணத்தைத் தடுக்க அவர்களுக்கு தெரிந்த ஒரு வழி குழந்தைகளுக்கு பிச்சை, வேம்பு, குப்பு, குப்பம்மா, பிச்சம்மா, மூக்காண்டி என்றெல்லாம் பெயரிட்டு அழைப்பது.
பேர் கொஞ்சம் இது போல் அட்ரேக்ஷன் ATTRACTION இல்லாமல் இருந்தால் எமன் அருவருப்புடன் கிட்டே வரமாட்டான். குழந்தை தப்பித்துக் கொள்ளும் என்று நம்பினார்கள். இதெல்லாம் மறைந்து போய் இப்போது ‘ஷ் ஷ்’ என்று முடியும் பல பேர்களில் குழந்தைகள் வளர்கிறார்கள். நாம் இருவர் நமக்கொருவர் என்று குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து போய்விட்டது.. சிலருக்கு குழந்தைகளே இல்லை.
துவாபர யுகத்தில் ஒருவர் இருந்தார். பெரிய குடும்பஸ் தன் அவர். குழந்தைகள் என்ன ஒண்ணா ரெண்டா!! பள்ளிக்கூடமே நடத்தலாம். இருபத்தேழு குழந்தைகள் அவருக்கு. இது அத்தனைக்கும் வயிறார தினமும் மூணு வேளை சாப்பாட்டுக்கே ஒரு மனிஷன் ஓவர்டைம் பண்ணி தான் சம்பாதிக்கணும். ஆனால் அவர் கொண்டு வந்த சொல்ப வருமானத்திலேயே டி.வி. சீரியல் பார்க்காமல் அவர் மனைவி ஏதோ குடும்பத்தை ஓட்டினாள் . அவள் கணவனிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தை:
“ உங்க பிரெண்ட், உங்களோடு படித்தவர் ரொம்ப பெரிய மனுஷர், ராஜாவாக இருக்கிறார் என்பீர்களே , நல்லவர் என்பீர்களே. கொஞ்சம் போய் அவரைப் பார்த்து ஏதாவது உதவி கேளுங்களேன் ”“
அதுக்கென்ன, ஆகட்டும் ஒருநாள் போகிறேன்.”
இது அடிக்கடி பேசப்பட்ட சம்பாஷணை. மீண்டும் மீண்டும் அவருக்கு ஞாபகப் படுத்தினாள் அவர் மனைவி சுசீலை.
அந்த ஒருநாள் வந்தது. வெறும் காலோடு கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று அந்த நண்பன் ஊரை அடைந்தார் அவர் . நண்பன் மாளிகை வாசலில் செக்யூரிட்டி ஆட்கள் அவரை உள்ளே விடவில்லை .
”யாரையா நீங்கள்?”
“நான் உங்கள் ராஜாவின் நெருங்கிய நண்பன். நாங்க ஒன்றாகவே ஒரு வாத்தியாரிடம் படித்தவர்கள்.”
“இந்த கிழிசல் வேஷ்டி ஆசாமி கொஞ்சம் ஸ்க்ரூ லூஸ் போல இருக்கிறதே. பார்த்தாலே பாவமாக இருக்கிறதே. ” — காவல்காரர்கள் அந்த மனிதரை உள்ளே விடலை
.”உங்க பேர் என்ன சொன்னீங்க?’
”சுதாமா”
”இங்கேயே இருங்கள்”
காவலாளி ஒருத்தன் மட்டும் உள்ளே சென்று ராஜாவிடம் விவரம் சொன்னான்.
”என்னது சுதாமாவா? எனது பழைய நண்பனா? அவனா வந்து வாயிலில் காத்துக் கொண்டிருக்கிறான்?” என்கிறார் ராஜா.ஆச்சரியத்தோடும் கட்டின துணியோ டும் காலில் செருப்பு கூட இல்லாமல் வாசலுக்கு ஓடி வந்தான் அந்த பிரெண்ட் FRIEND ராஜா . வாசலில் நின்ற பழைய நண்பனை அப்படியே இழுத்து பிடித்துக் கட்டிக் கொண்டான். செக்யூரிட்டி ஆட்களுக்கு ஹார்ட் அட்டாக்!!!!
“ நீ வருவதாக தகவல் சொல்லவில்லையே அப்பா”!
.எவ்வளவு காலம் ஆகி விட்டதடா உன்னைப் பார்த்து. என்னை வந்து பார்க்கவே இல்லையே நீ”
நண்பனை உள்ளே அழைத்துச் சென்ற ராஜா அவனைத் தனது கட்டிலில் அமர்த்தி அவன் புண் பட்ட பாதங்களை பிடித்து விட்டு கொண்டிருந்தான்..
“இல்லை, கிருஷ்ணா, என்னதான் நாம் சிறுவர்களாக இருந்தபோது சாந்தீப முனிவரிடம் ஒண்ணாக குருகுல வாசம் செய்தாலும், நீ இப்போது ஒரு தேசத்தின் ராஜா. எப்போதும் ராஜ்ய விவகாரங்களில் ஈடுபட்டு அலைந்து கொண்டு பிரயாணத்தில் இருப்பவன். உன்னை நான் ஒரு சாதாரண வைதிக பிராமணன் எப்படியப்பா பழைய ஸ்னேஹிதத்தை அடிப்படையாக வைத்து உறவு கொண்டாட முடியும்.?”
“அடடா சுதாமா, நீ என்ன பேசுகிறாய்? இப்போது நீ வேறே சுதாமாவாக மாறி விட்டாயா? . நான் உன்னை என் பால்ய நண்பனாக அல்லவோ இப்போதும் பார்க்கிறேன்!.
“கிருஷ்ணா, நானும் மாற வில்லையடா. நம் வாழ்க்கைத் தரம், அந்தஸ்து தான் நமக்குள் நடுவில் ரொம்ப தூரத்தை…..”
“நிறுத்து சுதாமா, வித்யாசம் மனதில் தான் உண்டாகி றது. இயற்கையில் இல்லை. உனக்கு தெரியாததையா நான் சொல்லப் போகிறேன். அது சரி, நீ எனக்கு அப்போதெல்லாம் ஏதாவது உன் வீட்டிலிருந்து தினமும் சாப்பிட கொண்டு வந்து தருவாயே. இன்று என்ன கொண்டுவந்தாய்?”
சுதாமா பதில் பேசாமல் கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்தார்.சுதாமாவுக்கு நன்றாக நினைவி ருந்தது. சுசீலா ஊருக்கு கிளம்பும் போது கட்டிக் கொடுத்த சிறு அவல் பொரி பொட்டலத்தை இதுவரை மறந்தோ அல்லது எப்படி இதை ஒரு ராஜாவுக்கு கொடுப்பது என்ற தயக்கத்தாலோ கொடுக்காமல் இடுப்பில் செருகி மறைத்து வைத்திருந்ததை கிருஷ்ணன் பார்த்து விட்டான்.
உரிமையோடு அந்த சிறு மூட்டையை சுதாமாவின் இடுப்பிலிருந்து பிடுங்கி அவிழ்த்து பிரித்து ஒரு வாய் உண்டான்.
“எனக்கில்லையா”
ருக்மணி உள்ளேயிருந்து வந்து அதைப் பிடுங்கி கொண்டு போய் விட்டாள்.
“ருக்மிணி, உனக்குத் தெரியுமா? நாங்கள் படிக்கும் காலத்தில் சுதாமா தான் எனக்கு ஏதாவது தினமும் தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த தின் பண்டங்க ளை எனக்கென்று கொண்டு வந்து கொடுப்பான். நான் தான் அவனுக்கு ஒன்றுமே தருவதில்லை”
சிரித்தான் கிருஷ்ணன்.
ஒரு சில நாட்கள் துவாரகையில் கிருஷ்ணனுடன் சந்தோஷமாகத் தங்கி இருந்து விட்டு சுதாமா புறப்பட் டார் கிருஷ்ணனின் தேர்ப் பாகன் அவரைப் போர் பந்தரில் கொண்டுவிட்டான்.
கிளம்பும்போது தான் சுரீர் என்று தேள் கொட்டியது சுதாமாவுக்கு.
“ஆஹா, சுசீலா கிருஷ்ணனிடம் உதவி கேட்க சொன்னாளே. அதற்காகத் தானே நான் கிருஷ்ண னைத் தேடி துவாரகை நகரத்துக்கு நடந்து வந்தேன்.. உதவியே கேட்காமல் வேறு எதெல்லாமோ இத்தனை நாளும் கிருஷ்ணனோடு பழங்கதைகளைப் பேசி விட்டு வெறும் கையோடு வீடு திரும்புகிறேனே ! என்ன செய்வது? என் தரித்திரம் என்னைவிட்டு போகாது போல் இருக்கிறதே “
வழியெல்லாம் இந்த எண்ணம் சுதாமாவைத் தின்றது.
”ஐயா உங்கள் வீடு எது? எந்த வீட்டின் முன் நிறுத்துவது?”
தேர்ப் பாகன் கேட்டபோது சுதாமாவும் அவனோடு சேர்ந்து தன் வீட்டைத் தேடினார் !!. அவருக்குத் தலைசுற்றியது.
குசேலர் இருந்த பழைய ஓட்டு வீடு இப்போது காணோமே. அது இருந்த இடத்தில் இப்போது வேறு ஒரு பெரிய மாளிகை. அவர் குழந்தைகளும் சுசீலாவும் புத்தாடை நகைகள் எல்லாம் அணிந்து வெளியே வந்து அவரை வரவேற்றனர்.
அப்போது தான் சுதாமாவுக்கு கிருஷ்ணன் ருக்மணியி டம் சொன்ன வார்த்தையின் அர்த்தம்புரிந்தது. ”நான் தான் ஒன்றுமே அவனுக்கு கொடுக்கவில்லை”
நல்லவேளை ருக்மிணி குசேலன் என்ற சுதாமா கொண்டு வந்த மொத்த அவலையும் கிருஷ்ணனைச் சாப்பிட விடாமல் தடுத்து மீதியை உள்ளே எடுத்து சென்றுவிட்டாள். ஒரு வாய் அவல் கிருஷ்ணன் உண்டதற்கே எனக்கு கிட்டிய இந்த செல்வமே எனக்குப் பெரிய பாரம். இனிமேலும் என்னால் சுமக்க முடியாது” என நினைத்தார் குசேலர்.
இறைவனுக்கு நாம் என்றும் அதே குழந்தைகள் தான். நாம் ஒரு அடி அவனை நோக்கி வைத்தால் அவன் பல அடிகள் நம்மை நோக்கி வருகிறான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *