THIRUVEMBVAI 13 J K SIVAN

திருவெம்பாவை               நங்கநல்லூர்  J K  SIVAN மணிவாசகர்
மார்கழி 13ம் நாள்.

13.  அர்த்தநாரியும்  அண்ணாமலை ஆலயமும்

13. ”பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.”

அர்த்தநாரி என்ற பெயர் கொண்ட ஆதி சிவனுக்கு ‘ பாதி பரமசிவன்’ என்ற பெயர் அவனது வாம பாகத்தில் உமை இருக்கும் உண்மையால் தான் இந்த பெயர்.
 நான்  தூத்துக்குடியில்  சில  வருஷங்கள் இருந்தபோது அங்கே அற்புதமான ஒரு பழைய சிவன் கோவிலுக்கு  அடிக்கடி செல்வேன் . சிவன்  சங்கரராமேஸ்வரர்,  அம்பாளுக்கு பெயர் பாகம்பிரியாள் .  அர்த்தநாரி என்பதன் அழகிய தமிழ் உருவம்.

திருவண்ணாமலையில்  தூங்குபவளை துயிலெழுப்ப  செல்லும்  பெண்களுக்குள்  ஒருத்தி மற்றவர்களிடம் என்ன சொல்கிறாள்?  

இனிய தமிழ்ப்  பெண்களே, இதோ வந்து விட்டோமே நமது ஊரிலேயே மிகவும் பெரிய ஆழமான குளத்துக்கு. அங்கே பாருங்கள் ஒரு அதிசயத்தை. அழகிய நீலோத்பல புஷ்பம் மலர்ந்திருக்கிறது.அதன் அருகிலேயே தெரிகிறதல்லவா செந்தாமரை மலர். இது இரண்டும் யாரா? இது கூடவா தெரியாது? நீலோத்பலம் தான் மஹேஸ்வரி. சிவப்பாக இருப்ப தாலேயே அது சிவன் என்று செந்தாமரை உணர்த்திவிட்டதே. சிவனா இல்லையா என்று சந்தேகப் படுகி றாயா? உற்றுப்பார் சிவந்த அந்த செந்தாமரை மலர்க் கொடியில் அழகிய வழுவழுப்பான அரவம், பாம்பு அதை பின்னிக் கொண்டிருக்கிறதே. அப்படியென்றால் செந்தாமரை வேறு யாராக இருக்க முடியும்.?

படித்துறையில் இறங்குங்கள். உடல் அமிழ்ந்து குளிப்போம். களிப்போம் . உடல், உள்ள, அழுக்கு எல்லாமே நம்மை விட்டு  நீங்கட்டும். கலகலவென்ற உங்கள் வளையல்கள் ஒலிக்க, கால் தண்டை கொலுசு சப்தங்கள் கலீர் கலீர் என்று ஒலிக்க நீரில் பாய்ந்து விளையாடி அவனைப் பாடுவோம். மார்கழி நீராடி மகேஸ்வரனை தொழுது மகிழ எண்ணம் கொண்ட இளம் பெண்களை எப்படி போற்றுவது?

மணி வாசகரின் கற்பனைத்திறன்  இளம் பெண்  ஆண்டாளின் கற்பனைக்கு கொஞ்சம் சளைக்காமல் இணையாகவே அல்லவோ உள்ளம் மகிழ வைக்கிறது!  

திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர்  ஆலயத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் இன்று சொல்ல மனம் விழைகிறது.  இது மாதிரி ஆலயங்களை நமது தேசத்திலன்றி உலகில் வேறெங்கும் கண்டு மகிழ வாய்ப்பில்லை.  அதைப்  போற்றி பராமரிக்கும் பண்பு தான் அவசியம் தேவை.

அருணாசலேஸ்வரர்  கருவறை பல்லவர் காலத்தில் ஒருமுறை  புதுப்பிக்கப்பட்டது.  சுற்றுச் சுவர்களில்  ராஜேந்திரசோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜ கோப்பெருஞ் சிங்கன் காலத்தில்  கட்டப்பட்டவை என்று  சாசனங்கள் கல்வெட்டுகள் சொல்கிறது.  பிரஹார  சுவர்கள்  10-ஆம் நூற்றாண்டில் கட்டியவை .

நங்கை அழவீஸ்வரி என்ற பல்லவ ராணி  1269-ல் அண்ணாமலைநாதர் கோயிலுக்கும், உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கும் நடுவில் ‘நங்கை அழவீச்வரம்’ என்ற ஒரு சிறிய  சந்நிதியைக்  கட்டினாள். இதற்காக அவள் 10,000 பொற் காசுகளும் பதின்மூன்றரைக் குழி நிலமும் அளித்ததாக கல்வெட்டில்  செதுக்கியிருக்கிறாள்.  கற்பகிரஹம்  கூரைக்கு ஒரு  பாணர் தலைவன் பொன்முலாம் பூசினான் .   பிற்காலத்தில்   தர்மிஷ்டர்களாகிய  நாட்டுக்கோட்டை நகரத்தார் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில்  கும்பாபிஷேக திருப்பணி செய்தவர்கள்.

 உள்ளே  5 பிரஹாரம்,  வெளியே  மாட வீதி 6-வது,  நாம் செல்லும்   கிரி வலப் பாதை 7-வது பிராஹாரம்..  மொத்தம்   25 ஏக்கர் பரப்பளவு,  ஒன்பது கோபுரங்கள்  கொண்ட பிரம்மாண்ட ஆலயம்.   கோபுரங்கள் பெயர்  பெரிய கோபுரம், கிளி  கோபுரம், அம்மணி அம்மாள் கோபுரம் (அம்மணி அம்மாள் கட்டியது), வடக்கு கட்டை கோபுரம், மேலக் கோபுரம் (பேய்க் கோபுரம்), மேற்குக் கட்டை கோபுரம், திருமஞ்சன கோபுரம் (தெற்கு கோபுரம்), வல்லாள கோபுரம் (போசள மன்னன் மூன்றாம் வீர வல்லாளனால் 1340-ல் கட்டப்பட்டது. இதற்கு வீர வல்லாளன் திருவாசல் என்று பெயர்.), கிழக்குக் கோபுரம் (11 நிலைகள், 216 அடி உயரம்.).

இங்குள்ள மண்டபங்கள்: ஞானப்பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், திருவருள் விலாச மண்டபம், மாதப்பிறப்பு மண்டபம், உத்ராட்ச மண்டபம், அமாவாசை மண்டபம், பன்னீர் மண்டபம், காட்சி மண்டபம், திருக்கல்யாண மண்டபம்.

திருக்கல்யாண மண்டபத்தின் மர விதானத்தின் மீது செப்பு ஓடு வேயப்பட்டுள்ளது. இது அழகிய தூண்களும் ஓவிய வேலைப்பாடுகளும் கொண்டது.

இங்குள்ள பிராகார மதில்கள்- வீரக்காரன் திருமதில், வசந்தராயன் திருமதில், திருவேகம்ப முடையன் திருமதில் என்று வழங்கப்படுகின்றன. இந்த மதில்கள் சுமார் 30 அடி உயரம், 1,500 அடி நீளம், 900 அடி அகலத்துடன் திகழ்கின்றன.

மூலவர் திருச் சுற்றின் மேற்குப் புற மதில்- ஆதித்திய சோழனாலும், அவன் மைந்தன் பராந்தக  சோழனாலும், கிழக்குச் சுவர்- உத்தமச் சோழனாலும் கட்டப்பட்டவை. கருவறையுள் நுழையும் வாயிலுக்கு உத்தம சோழன் வாசல் (கருவறையில் உத்தம சோழனின் சிற்பம் உள்ளது.) என்றும் பெயர்.  கிழக்கு வாயில் வழி நுழைந்தால் வலப் பக்கம் காணப்படுவது ஆயிரங்கால் மண்டபம். இதில் சரியாக 1,000 தூண்கள் உள்ளன.

ஒரேயடியாக  நிறைய  விஷயங்களைப்  பரிமாறினால்  ஜீரணிப்பது  சிரமம் என்பதால் மற்றைய விவரங்களை பிறகு சொல்கிறேனே!

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *