SEETHA’S TEARS J K SIVAN

சீதையின் துயரம்  நங்கநல்லூர்  J K  SIVAN 

பனிமலையில்  பரமேஸ்வரன்  பார்வதிக்கு  மஹாலக்ஷ்மி  சீதையாக  அவதாரம் எடுத்ததைப் பற்றி  அவள் பெருமைகளை  சொல்லிக்கொண்டிருந்தார்.  சீதை யை  ராவணேஸ்வரன்  கடத்திக் கொண்டு போய்விட்டான் என்று  சொல்லும்போது  பார்வதிக்கு  கண்கள் குளமாகின.   அந்த புனிதவதி ராக்ஷஸன்  ராவணன் அரண்மனையில் என்ன பாடு பாடுகிறாளோ?  என்று பரிதவித்தாள் . என்ன ஆயிற்று அவளுக்கு அங்கே?  நல்லவேளை  ஹனுமான்  அவளைத்  தேடி அங்கே  வந்துவிட்டான் என்ற  வார்த்தை பார்வதிக்கு  கொஞ்சம் தெம்பு கொடுத்தது. அவளுக்கு  சிரிப்பு வந்ததது.  ஹனுமான் யார்.  என் நாதன்  சிவனின் அம்சம் தானே. அவனுக்கு தெரியாதா எது எங்கே எப்படி எவரால் இவருக்கு எப்போது நடக்கிறது என்று. அதுவும் அவரே சம்பந்தப்பட்ட விஷயம்  இல்லையா இது?
” நாதா, இலங்கையில் நுழைந்த ஹனுமனைப்பற்றி மேலும் கேட்க ஆவலாக இருக்கிறேன்” என்று உமையாம்பிகை நம்முடைய ஆவலையும் சேர்த்து  பரமேஸ்வரனிடம் வெளிப்படுத்துகிறாள்.
”கேள்,  பார்வதி  சொல்கிறேன்”: இலங்கை  ராக்ஷஸர்கள்  வாழ்ந்த  ஸ்தலமாக  இருந்தாலும்  அந்த இரவு நிசப்தமாக இருந்தது.  ஹனுமான்  அந்த  இருளில் எங்கும்  உற்று நோக்கினான்.  ஒருவித ”உஷார்” உணர்ச்சியை அனுமனிடம் எழுப்பியிருந்தது.  ராவணனைப் பற்றி  அவன் சாகசங்களை பற்றி ஹநுமானுக்கு தெரியும்.  எதிரியின், அதுவும் மிக சக்தி வாய்ந்த, மந்திர தந்திர அசகாய மாயாவிகள் வாழும் வல்லமை மிக்க ராக்ஷசர்கள் அனைவருமே இருக்கின்ற இடமாயிற்றே. சர்வ ஜாக்ரதையாக அல்லவோ வந்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். ஸ்ரீ ராமா  ராமா  ராமா  என்று அவன் மனம்  விடாமல் ராமனின் நாமத்தை  ஜபித்துக்கொண்டே அவன்  கண்கள் சீதையைத் தேடின.  அவளை அவன் பார்த்ததே இல்லையே.
 எனவே ஆஞ்சநேயர்  அடக்கத்தோடு, மிகச் சிறிய உருவம்  எடுத்துக் கொண்டு  இருளில் எல்லா இடத்திலும்  ஒரு அங்குலம் விடாமல் ஒன்று ஒன்றாக அலசி சீதையை தேட ஆரம்பித்தார்.

இது வரை நுழைந்து தேடிய மாளிகைகளில் சீதை  மாதிரி யாரும் தெரியவில்லையே. யோசித்தார். லங்கிணி சொன்னது நினைவுக்கு வந்தது. நந்தவனங்களை ஆராய்ந்தார். ஒரு சில நந்தவனங்களில் ஏராளமாக தேவதாரு மரங்கள், ரத்தினம் வைரம் இழைத்த படிகளைக் கொண்ட குளங்கள், பொன்னிற சுவர்களையும் வாசல்களையும் கொண்ட மாளிகைகள். பழங்களின் கனத்தை தாங்க  முடியாமல்  வளைந்த கிளைகளைக் கொண்ட மரங்கள், வாசனை வீசும் புஷ்பங்களை ஏந்திய மரங்கள், செடிகள்,கொடிகள், இவற்றில் எதுவுமே அனுமன்  மனத்தைக்  கவரவில்லை. அவர் கண்கள் ஒரு பெண்ணை மட்டுமே தேடின.  அவள்  தெய்வீகமாக  இருப்பவள்  என்று மட்டும் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் எங்காவது ஒரு பெண் இருக்கிறாளா என்றே தேடினார்.

ஒரு பெரிய மாளிகையை ஒட்டி காணப்பட்ட ஒரு பெரிய நந்தவனத்தில்….” ஆஹா இது என்ன ஆச்சர்யம். இலைகளினால் குடை போல் சேர்ந்து காணப்பட்ட சிம்சுபா மரம் ஒன்று தென்படுகிறதே. கூரை போல் கவிந்த இலைகளை ஊடுருவி கீழே தேடினார். சூரிய கிரணமே நுழைய முடியாத இலைகள் கொண்ட  அடர்ந்த கிளைகள். அதன் கிளைகளில் பொன்னிறப் பறவைகள் உறங்கிக்  கொண்டிருந்தன. அந்த மரத்தின் அடியில் —

ஒற்றைப் பின்னலும், தளர்ந்த உடலும், அழுக்கடைந்த ஆடையும் அணிந்து, தரையில் மண்ணில் படுத்துக்கொண்டு, சோகமே ஒரு பெண்ணாக உருவெடுத்து ”ராமா, ராமா” என்று விடாது மெல்லிய குரலில்  உச்சரித்துக் கொண்டு, அதுவே ஆகாரமாக ”ராம விரத உபவாச’  ‘மாக   உடல் மெலிந்து, சுற்றியிருந்த அரக்கிகள் நடுவில் காரிருள் மேகங்களிடையே சூரியனாக தஹித்துக்கொண்டு இருந்த ஒரு பெண்ணைப் பார்த்தார்.  ஆஹா,  நிச்சயம் இவள் தான் என் தாய் சீதை என்று  நிச்சயமாக என்  மனது சொல்கிறது.   அவளை பார்த்தவுடனேயே  என்  உடலில்  பக்தி மேலிட்ட  ஒரு  ஆனந்த  புத்துணர்ச்சி  உண்டாகிறதே.  அந்த மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த அனுமன்  அடுத்ததாக  தான் என்ன செய்யவேண்டும்  என்று தீர்மானித்தார்.

”சீதையைக் கண்ட நான் பாக்யசாலி” என்று அனுமன் சந்தோஷித்த அந்த நேரம் மாளிகையின் அந்தப்புரத்திலிருந்து சில பேச்சுக் குரல் நெருங்கி வர ஹனுமான்  சத்தம் போடாமல்  ஜாக்கிரதையாக   அடர்ந்த இலை சூழ்ந்த மரக் கிளையில் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்தார்.

‘கல கல’  என்ற பெண்களின் பேரொலியைத் தொடர்ந்து பல மாதர்கள் புடை சூழ 10 தலைகள் 20 கரங்களோடு ஒரு பெரிய மலையென ஒரு அரக்கன் வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.
”ஒ இவன் தான் ராவணனா, ராம பாணத்துக்கு ஆகாரமாகப் போகிறவனா?” இவனைப் பற்றி கேள்விப்பட்டதுண்டு  ஆனால் இன்று தான்  கண்ணில் படுகிறான்.
ஆனால் அதே நேரத்தில் ராவணன் மனதில் ஓர் எண்ண ஓட்டம்.
”ஏன் அந்த ராமன் இன்னும் வரவில்லை, அவனால் எனக்கு எப்படி மரணம் சம்பவிக்கும்? அவன் சீதையைக்கூட இன்னும் தேடி வரவில்லையே? என்ன காரணமாக இருக்கும்?”
அன்று இரவு ராவணன் ஒரு கனவு கண்டான். ராமனால் ஏவப்பட்ட ஒரு வானரம் சிறிய வடிவம் கொண்டு அசோக வனத்தில் ஒரு கிளையில் மறைந்து கண்காணிப்பதாக வந்த கனவு உண்மையா? அப்படியென்றால் நான் உடனே அசோக வனம் சென்று சீதையை சொற்களால் துன்புறுத்தி வேதனைப்  படுத்துவேன். அதைப் பார்த்துவிட்டு அந்த வானரம் அப்படியே ராமனிடம் அதைப் போய் சொல்லட்டுமே.”

ராவணன் வருவதை சீதை அறிந்து கொண்டு ஒடுங்கினாள். கண்களில் எவ்வளவு அளவிடமுடியாத ப்ரவாஹமோ அவ்வளவு பக்தியோடு அவளது இதயத்தில் ராமன் நிரம்பியிருந்தார்.

ராவணன் சீதையை நோக்கி ” ஹே அழகிய பெண்ணே, ஏன் என்னைக் கண்டதும் உன் உடம்பை குறுக்கிக் கொள்கிறாய் . எவனை நினைத்து அழுகிறாயோ, அந்த ராமன் காட்டில் தம்பியோடு விலங்குகளோடு விலங்காக சுற்றிக்கொண்டு அலைகிறான். நான் பலரை அனுப்பியும் அவன் கண்களில் படுவதில்லை. உன்னைப்பற்றி சிறிதும் அக்கறையோ, கவலையோ, உன்மேல் ஆசையோ இல்லாத ராமனை நினைத்து உனக்கு இனி  என்ன பயன்? நீயிருக்கும்போது அன்பாக ஆசையாக இருப்பவன் போல் உன்னை அனுபவித்தவனுக்கு இப்போது ஏன் உன் நினைப்பே இல்லாமல் சுற்றுகிறான்?. செயலற்றவன். நான் உன்னைக் கொண்டு வந்தேனே . உண்மையிலேயே உன் மேல் அக்கறை கொண்டவனாயிருந்தால் இங்கு  வந்து என்னை வென்று, கொன்று உன்னை அழைத்துச் சென்றிருக்க  வேண்டாமா? உன் மீது அன்பே இல்லாத அவன் இனி எப்போது வரப்  போகிறான்? அசுரர் தலைவனான என்னைப்பார். உன்னிடம் நேசம் கொண்ட என்னை ஏற்றுக்கொள். என் அந்தப்புர எஜமானியாகிவிடு.  நீயாக  ஏன்  கஷ்டத்தை  வரவழைத்துக் கொள்கிறாய். வா  என் அந்தப்புரத்துக்கு. என் ராணியாகிவிடு”

ராவணனின் சொற்கள் சீதையைச் சித்ரவதை செய்தன. அவனைப் பாராமலேயே ஒரு புல்லை அவர்களுக்கு இடையே போட்டுவிட்டுப்  பேசினாள் :

”நீ ஒரு பேடி. ராமனிடம் பயம் கொண்டவன். ராம லக்ஷ்மணர்கள் இல்லாத போது ஒரு நாய் தேவர்களுக்கு அர்ப்பணிக்க வைக்கப்பட்டிருக்கும் ஹோம ஹவிசை கவ்விச் செல்வது போல் என்னை கவர்ந்தவன். கயவனே, வெகு விரைவில் அதன் பலனை  நீ அனுபவிப்பாய். ராம பாணங்கள் உன்னைத் துளைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ராக்ஷசப் பதரே, ராமன் மனிதனல்ல. உன்னையும் உன்னைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் யமலோகம் அனுப்பிவிட்டு ராமன் என்னை மீட்டுச் செல்வார். உன் விதியை யார் மாற்ற முடியும்?. வருவதை  எதிர்கொள்”

சீதையின் சொற்களால் கோபமடைந்த ராவணன் வாளை உருவினான். அவன் மீது அக்கறையுள்ள அவன் மனைவி மண்டோதரி தடுத்தாள் .

”இவள் ஒரு மானுடப்பெண்.   நிர்க்கதியாக இருக்கும் அபலை. இவளையா நீங்கள் ஒரு மாவீரர் கொல்வது?. கோபத்தை விட்டு மாளிகை திரும்புங்கள். உங்களை மகிழ்விக்க எத்தனையோ கந்தர்வ, தேவகுல பெண்கள் காத்திருக்கிறார்களே.” என அவன் கவனத்தை திசை திருப்பினாள் .

ராவணன் சீதையைச் சுற்றி அருகே இருந்த அரக்கிகளிடம் ” இந்த சீதை என்னை மனமார விரும்பவேண்டும். அவளை நீங்கள் பயத்தாலோ, நயத்தாலோ, பேசியோ, துன்புறுத்தியோ, எந்த வழியிலாவது மாற்ற முயற்சி செய்யுங்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இவள் மனம் மாறி என் அரச போகங்களை  அனுபவிக்கட்டும், இல்லாவிட்டால் அவளைக் கொன்று எனக்கு உணவாக்கி விடுங்கள்.”

ராவணன் சென்றதும் அரக்கிகள் சீதையை மிரட்ட ஆரம்பித்தார்கள். ஒரு அரக்கி சீதைக்கு ”நல்ல புத்தி” சொல்லி ராவணனோடு இன்பமாக இருக்க ”அறிவுரை” சொன்னாள். மற்றுமொருவள் , ”எதற்கு ரெண்டு மாத காலம்  நேரத்தை வீணடிக்க வேண்டும். இப்போதே  இவளை வெட்டிக் கொன்றுவிடலாமே” என யோசனை கூறினாள் . ஒருத்தி தனது கோரமான வாயால் சீதையை விழுங்க நெருங்கினாள் . ஒருத்தி ஒரு கூரான வாளை உருவி சீதையை வெட்ட முயற்சித்தாள் 

அவர்களில் ஒருவள் திரிசடை என்ற வயது முதிர்ந்த ராக்ஷசி. அவள் மற்றவர்களை அடக்கி ”நிறுத்துங்கள். நிர்க்கதியான இந்த பெண்ணை நெருங்காதீர்கள். வணங்குங்கள். நேற்று இரவு  ஒரு கனவு கண்டேன். அதில்  இவள் கணவன் ஸ்ரீ ராமன் லக்ஷ்மணனோடு இங்கு வந்து ராவணனை யுத்தத்தில் கொன்று, இலங்கை தீப்பற்றி எரிய, திரிகூட மலையுச்சியில் அவன் சீதையை அணைத்து நிற்பதுபோல் ஒரு கனவு கண்டேன். ராவணன் உயிரற்று கவனிப்பாரற்று வீழ்ந்து கிடப்பதையும் அவன் சகோதரன் என் தந்தை   விபீஷணன் ராமனின் திருவடிகளில் பக்தியோடு வணங்குவதையும் கண்டேன். இந்த நாட்டை ராவணனிடமிருந்து மீட்டு விபீஷண னிடம் ஒப்படைத்துவிட்டு ராமன் சீதையோடு திரும்புவது போல கனவில் தோன்றியது மறக்கமுடியாத காட்சி. இவளை நெருங்காமல் இனியாவது புண்ணியம் தேடிக்கொண்டு நல்ல புத்தியோடு இருங்கள் ” என்றாள் .
அரக்கிகள் திரிசடையின் பேச்சில் பயந்து நடுங்கினார்கள். சீதையை பயத்தோடும் இனம் புரியாத ஒரு மரியாதையோடும் பார்த்தார்கள்.

சீதையோ எதையும் கவனியாதவளாக, ராமனின் நினைவில் வாடினாள். அவளுக்கு   வேண்டியது  ஒன்று  ராமனோ அல்லது மரணமோ இரண்டில் ஒன்று விடுதலை தர பிரார்த்தித்தாள் . கடைசியில் இரண்டாவது வழியே, அதாவது உயிரைத் தானாகவே மாய்த்துக்கொள்வது ஒன்று தான் எளிய வழி என்று தீர்மானித்தாள் . எழுந்து அந்த மரத்தின் மேல் சாய்ந்து நொந்து போய் நின்றாள்”

பரமேஸ்வரன் இவ்வாறு சொல்லியபோது சீதையை விட உமாதேவியின் கண்களில் அதிக அளவில் கண்ணீர் ஆறாக ஓடியது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *