KUDHAMBAI CHITHTHAR – J K SIVAN

குதம்பை சித்தர்  –   நங்கநல்லூர்   J K  SIVAN

மரணமும்  ஒப்பாரியும் 

”போராட்டஞ் செய்து புழுத்த வுடம்பிற்கு      நீராட்டம் ஏதுக்கடி குதம்பாய் ..  நீராட்டம் ஏதுக்கடி.

இப்போதெல்லாம்  போராட்டங்களை  நிறைய  நடக்கிறதே  எதற்கு?   எவரையோ  எதையோ  எதிர்த்து?  அதனால் மக்களுக்கு என்ன  லாபம்? நன்மை?  தெருவில் கூட்டம்  கோஷம்,கொடி , கூச்சல்.  தெருவை மடக்கி  போ க்கு வரத்து  பாதிக்கப்படுகிறது.   ஏதோ கேள்விப்பட்டவரை  கூட்டத்தில் பங்கேற்று கத்துபவருக்கு  இத்தனை காசு என்று ஏதோ ஒரு திட்டம் உண்டு என்கிறார்கள். தெரியாது.

”காகம் கழுகு களித்துண்ணும் மேனிக்கு      வாகனம் ஏதுக்கடி குதம்பாய் ..   வாகனம் ஏதுக்கடி.69

கோபாலசாமி  15  லக்ஷம் ரூபாய் கார் வாங்கி  பெருமையாக சவாரி செய்வான்.  எல்லோரிடமும் நான் யார்  தெரியுமா? என் கால்  இந்த மாட்டு வண்டி, குதிரை வண்டி, பஸ், ரயில் இதில் எல்லாம் ஏறாது. நான் சவாரி செய்ய இது மாதிரி வாகனம் இருந்தால் தான் பயணம்”  என்பான்.   இப்போது என்னாச்சு?  பச்சை மூங்கில் சவாரி.   பச்சை மூங்கில்   வாகனத்துக்கு   15 லக்ஷமா விலை?  அடேயப்பா?  இல்லையென்றால் கோபாலசாமி பயணம் செய்ய மாட்டானே.
”கோவணத் தோடே கொளுத்தும் உடலுக்குப்   பூவணை ஏதுக்கடி குதம்பாய்    பூவணை ஏதுக்கடி ”

”அற்புதம். அந்த காலத்தில் பிணத்தை  ஐஸ் பெட்டியில் வைக்கும் பழக்கம் இல்லை. விசிறியால் விசிறிக்கொண்டு வீட்டிலே  ரெண்டு நாள் போட்டு வைத்தால் ஊரே நாறும். மல்லிகை  ரோஜா மலர்கள் அணிவித்து,  பன்னீர், சந்தன ஜலம் தெளிப்பார்கள்.   ஊதுவத்தி சாம்பிராணி புகை,  இந்த வாசனை எல்லாமே,  பிண  நாற்றத்தோடு கலந்து நமக்கு  மூச்சு விட திணறும். வயிற்றைக் கலக்கி  குமட்டும்.    மானம் காக்க கோவணத்தோடு எரியப்  போகிறவனுக்கு  பூமாலைகள் எதற்கு? என்று கேட்கிறார் குதம்பைச்  சித்தர்.

மரணம்  என்றாலே  ஒரு  அருவருப்பான  வேடிக்கையான  பழைய   ஞாபகம் வருகிறது.  75 வருஷத்துக்கு முன்பு  எனக்குத் தெரிந்து   ஒரு வீட்டில் யாருக்காவது  மரணம் என்றால்   பொன்னம்மாள் என்று  ஒரு நாட்டுப்புற  பெண்மணியின்  குரூப் வரவழைப்பார்கள்.  அவர்களுக்கு  ஒரு வீட்டில் ஒப்பாரி  வைப்பதற்கு இத்தனை  ரூபாய் கூலி   என்று கணக்கு உண்டு.  செத்தவன்  ஆணா  பெண்ணா, என்ன வயசு,  என்று அவர்கள் குடும்ப விஷயம் மட்டும் பொன்னம்மாள்  கேட்டுக்கொள்வாள். மற்றதெல்லாம் அவள் கைச்சரக்கு.  ஒரு மணி நேரம்  ரெண்டு மணிநேரம்  கூட்டமாக இட்டுக்கட்டி  பாடி அழுவார்கள்.  போகும்போது காசு வாங்கிக்  கொண்டு  அடுத்த  வீட்டு  அழுகைக்கு  தயாராகி விடுவார்கள் பொன்னம்மா  பார்ட்டியினர். ஒப்பாரிக்கு  பிலாக்கணம் என்று ஒரு பெயரும் உண்டு.  நவரத்ன ஒப்பாரி  என்று  ஒரு புத்தகமே  பார்த்திருக்கிறேன். அதில் பல  வாக்கியங்கள் வேடிக்கையாக  இருக்கும். கூத்து, சாமியாடல், அருள்வாக்கு  மாதிரி  கிராம சம்பிரதாயங்களில் ஒன்று.ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல் வகையை சேர்ந்தது எனலாம். கிராமத்து மக்கள்   இன்ப  துன்ப வாழ்க்கையில் இசையானது  இயற்கையாக வாழ்க்கையோடு   பின்னிப் பிணைந்திருந்த காலம்.   தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடும்  வழக்கம்  உண்டு. ” பாடும்”  என்பதை விட  ”அழும்”  என்பது தான் பொருத்தம்.  செத்த வீட்டிலிருந்து வரும் சத்தம் தெரு பூரா ஒலிக்கும். 

 இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் ஒப்பாரி அழுகை  மூலம் வரலாற்றினை அறிய முடியும்.  சாவுக்கு வந்தவர்களும் சேர்ந்து அழுவார்கள்.  பார்த்திருக்கிறேன். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான ராகச் சாயலுடன் விளங்குகிறதோ என்று  தோன்றுகிறது.

நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். ”இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன ”  எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி எனும்  உடுக்கு  போன்ற  வாத்யம் சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்பட்டிருக்கிறது.  சில வீடுகளில் இப்போதும்  சங்கு ஓதுகிறார்கள். சேமக்கலம் எனும் ரவுண்டு  உலோகத்தில் மரக்கட்டையால்  அடித்து  பாடிக்கொண்டே  ஓசை எழுப்புவார்கள். கேட்கவே  மனதைக்  கலக்கும். என்னவோ போலிருக்கும். ஒப்பாரி  இந்த அளவுக்கு குறைந்து விட்டிருக்கிறது.  ஒப்பாரி காசுக்கு அழுகிறவர்கள் இன்னமும்  இருக்கலாம். எனக்கு தெரியாது.
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம்புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் பாடுகின்றனர். ஒப்பாரிக்கு  என்ன அர்த்தம்?  ஓப்பு + ஆரி :  அழுகைப் பாட்டு.  சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி  சொல்வதைப் பார்த்தால் . இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி என   அறியலாம்.
 “இளிவே இழவே அசைவே வறுமையென விளியில் கொள்கை அழுகை நான்கே”  என்று  தொல்காப்பியர்  பிலாக்கணத்துக்கு இலக்கணம் கூறுகிறார். ஒப்பாரி என்பது  “கையறு நிலை “ என்று சங்க இலக்கியங்கள்  சொல்கிறது..“ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்  கற்றோர் உரைப்பது கையறு நிலையே “
” அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்…..என்தையுமிலமே”என வரும் புறநானுற்றுப் பாடலும்,அதியமான் இறந்த பிறகு
‘சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே பெரியகள் பெறினே யாம்பாடத் தான் மகில்துண்ணும்”–  இதெல்லாம் கையறு நிலைப்  பாடல்கள்.
பிள்ளை போனதற்கு தாய் அழும் ஒப்பாரிக்கு  ஒரு  சாம்பிள்:”மகனே நீ இருந்த இடத்தைப் பார்த்தாலும் இரு தணலாய் மூளுதுடா
நீ படுத்த இடத்தை பார்த்தாலும் பயம் பயமாய் தோன்றுதடா
மகனே  உன்னைப் பெற்ற கறுமி நான் இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம நாள்தோறும் உக்கிறனே..
 இதற்கு   பின்னணி  BACKGROUND  கூட்டமாய்  பொன்னம்மாவோடு கத்தும் கைக்கூலிகளின்   அழுகை சத்தம்.  எப்படித்தான் அவர்களால்  இப்படி  அழமுடிகிறதோ. தலையை  உடம்பை,கையை ஆட்டி  உண்மையாகவே  தனது  நெருங்கிய சொந்தம் போய்விட்டது போல் அழுவார்கள்.  நடுவே எழுந்து போய்  புகையிலை போட்டுக்கொள்வாள் பொன்னம்மா.  காப்பி கேட்டு  வாங்கி குடிப்பாள் .ரொம்ப  எழுதினால்  என்னை  அடிக்க வருவீர்கள்  என்று  ஒரு பக்ஷி உள்ளே கூவுகிறது  என்பதால்  ஒரு  மனைவியின் ஒப்பாரியோடு நிறுத்துகிறேன்:

”ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே
இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க.
பட்டு இல்லை தங்கம் இல்லை  பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.”

உலகத்தில் காசு கொடுத்தால்  எதுவேண்டுமானாலும் நடக்கும் என்று புரிகிறது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *