ADVICE TO ELDERS – J K SIVAN

என் போன்ற பெரிசுகளுக்கு ஒரு யோசனை.— நங்கநல்லூர் J K  SIVAN
வயதானால் எத்தனையோ சிரமங்கள். அதில் ஒன்று  ஞாபக சக்தி குறைந்து போவது.
ஒருநாள்  காலை  பேங்க் சென்று சில  காசோலைகளை போட்டுட்டுவிட்டு கொஞ்சம் பணம் எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் திரும்பிவந்தேன்.  என் வீட்டு வாசலில் ரெண்டு காகிதப்பூ மரங்கள்.. வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திய என்னை உள்ளே வரக்கூடாதுஎன்று ஒரு கருப்பு குண்டு நாய் பலமாக மண்டை வெடிக்க கத்தியது.
காலை  ஒன்பதரை மணிக்கு  நான் பேங்க் போக புறப்பட்டு திரும்பி  ஒருமணி நேரத்திற்குள் வருவதற்குள் எப்படி ஒரு குண்டு நாய் என் வீட்டுக்குள் வந்து என்னை வராதே  என்று தடுக்கிறது.?  வாசலில் எப்படி பெரிய  ரெண்டு மரங்கள்? அப்புறம் ஒரு க்ஷணத்தில் காரணம் புரிந்தது. நான் என் வீடு என நினைத்துக்கொண்டு அடுத்த வோல்டாஸ் காலனி தெருவுக்குள் நுழைந்து ஏதோ ஒரு வீட்டுக்கு முன் அல்லவோ நிற்கிறேன். ஏன் இது என் வீடு என்று எனக்கு  தோன்றியது. எப்படி  சரியாக  அந்த வீட்டுக்கு முன்னால்  என் ஸ்கூட்டர் நின்றது?.நாயும் மரங்களும் அல்லவோ  என்னை திரும்ப என் வீட்டுக்கே  போக வைத்தன.
அப்படித்தான்  ஒரு நாள் யாருடனோ பேசிக்கொண்டிருக்கும்போது  என் மனைவி பெயர் மறந்து போய் விட்டது.. ரொம்ப நேரம் கழித்து அவர் போன பின் அவள் பேர் நினைவுக்கு வந்தது.  அந்த மனிதர்  என்னடா இவன்  மனைவி  பெயர் கூட மறந்து போகும் அளவுக்கு  பொல்லாதவனா அல்லது தைர்யமானவனா  என்று என்னை ஏற  இறங்க பார்த்தது ஞாபகம் வருகிறது.
ஒரு அமெரிக்க  நரம்பியல் டாக்டர்  Consultant Neurologist Dr. J.B. Peiris  சில  வழிகளைச்  சொல்கிறார். அது நமக்கே தெரிந்தது தான். அவர் நீளமாக  ஆங்கிலத்தில் ,  கோட்டுப் போட்டுக்கொண்டு  வீடியோவில் சொன்னால் அதற்கு மதிப்பு.
நமக்கு அடிக்கடி  ஊர்,  பேர்கள், எல்லாம் சட்டென்று மறந்து போகிறது. பர்ஸ் எங்கே வைத்தோம்?, மூக்கு கண்ணாடி, மொபைல் எங்கே காணோம்?  என்றுஅடிக்கடி  தேட வேண்டி இருக்கிறது.
வயோதிக பருவத்தில்  ஞாபக சக்தி அளிக்கும் மூளைப்பகுதியில் சில  செல்கள் மரத்துப் போகிறது. மெதுவாக செயல் படுகிறது.ஹிப்போ  கேம்பஸ்  hippo campus  என்று அந்த பகுதிக்கு பெயர்.  மூளை செயல்பாட்டின் வேகம் குறைகிறது. இளைஞர்கள் போல் நம்மால் அப்போது செயல்பட முடியவில்லை. நன்றாக  கவனம் வையுங்கள். வயதானால் நமது வார்த்தையில்  பதவிசு, மரியாதை, எல்லாம் தானாகவே வரும். யோசித்து பதில் சொல்லுவோம். யாரையும் தூக்கி எறிந்து  பேசமாட்டோம். குறை ரொம்ப கூறமாட்டோம். அட்ஜஸ்ட் பண்ணிக்  கொள்பவர்கள். அவசரப்படாதவர்கள்.
 நமது தேகத்தில் மூளை என்பது  விடாமல் கடைசி வரை செயல்படும் ஒரு  உபகரணம். வயதானவர்கள்  விடாமல் எதையாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ, பேசி, பாடிக்கொண்டோ,   மூளைக்கு வேலை  கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.   எனக்கு  கம்ப்யூட்டர்  இந்த வகையில் பெரும் துணையாக இருக்கிறது. குறுக்கெழுத்து போட்டி, SUDOKU  இதெல்லாம்  ரொம்ப  அவசியம். உபயோகமானது.நிறைய புதிர்கள்  போடுவேன். பழைய  ஞாபகங்கள், படித்த விஷயங்கள் எல்லாம் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கலாம். நினைவுகள்  சம்பந்தப்பட்ட  மூளை செல்கள் அதனால்  பலம்  பெறும் .
ஓரே காரியத்தை திரும்ப திரும்ப செய்யும்போது மூளை  களைத்துப் போகிறது.  வெவ்வேறு விதமான செயல்களில் ஈடுபடும்போது அது புத்துணர்ச்சி பெறுகிறது. வேலையும் நன்றாக செயல்படுகிறது. பலன் தருகிறது.
மூளைக்கு மிகச் சிறந்த பயிற்சி தியானம்.  தினமும் குறைந்தது ஒரு  அரைமணி, முக்கால்  மணி நேரமாவது  தியானத்தில்  ஈடுபட வேண்டும். மனமும் பண்படும் , மூளைக்கும்  வேலை.  நேராக உட்கார்ந்து மூச்சை  இழுத்து விடும்போது உடலுக்கும்  நல்லது.   டெலிவிஷன் வேண்டாம். மொபைல்  வேண்டாம்.
தோட்டத்தில்  செடி நடலாம். மொட்டை மாடி  தோட்டம் நிறைய  புறாக்கூண்டுகளில் இப்போது பழக்கமாகி விட்டது. குழந்தைகளோடு  விளையாடலாம், கதை சொல்லலாம். என்னை  கதை சொல்லச்சொல்லி நிறைய குழந்தைகள் மொய்த்துக் கொள்ளும்போது ரொம்ப  .சந்தோஷமாக, உற்சாகமாக இருக்கும்.
ஒரு ரஹஸ்யம் சொல்லட்டுமா?.  சமையல் கட்டில்  புகுந்து கொஞ்சம்  உதவி செய்யலாம், நாமும் சமைக்கலாம். அதில் நிறைய பேருக்கும் உபயோகம்.  நல்லபடியாக  உடலுக்கும்  மூளைக்கும் வேலை மட்டுமல்ல  நாக்குக்கும்  வயிற்றுக்கும்  சந்தோஷம். எனக்கு பிடித்த  ஒரு  பொழுது போக்கு இது. மொத்தத்தில்  மூளை  மனிதனுக்கு கடவுள்  கொடுத்த வரப்பிரசாதம்.  அதை ஓயாமல் ஒழியாமல் உபயோகிக்கும் விதத்தில் நமது வாழ்க்கை சுகம் பெறும் .

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *