PESUM DEIVAM – J K SIVAN

பேசும் தெய்வம்  –   நங்கநல்லூர்   J K  SIVAN
நீ என்னோட வரியா?
மஹா பெரியவாளைப்  பற்றி தெரியாதவர்களைப்  பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.  பெயர் தெரிந்தவர்கள், நேரில் பார்க்காதவர்கள்  கொடுத்து வைக்காதவர்கள்.   நேரில் சந்தித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று அடிக்கடி சொல்வேன்.  எப்போதும் அவர் படத்தையாவது பார்த்துக்  கொண்டிருப்பவர்கள் புண்யவான்கள். அப்படி இருக்கும்போது அவருடனேயே இருந்து, அவருக்கு சேவை சிஷ்ருஷை செய்துகொண்டு  அவருடனேயே  வாழ்ந்தவர்களை என்ன சொல்வது? அவர்களுக்கு கிடைத்தஅதிர்ஷ்டத்தை எதனோடு ஒப்பிடுவது? .  அப்படி சில பெயர்கள் நமக்கு தெரியும்,  வேதபுரி, ராயவரம் பாலு,கண்ணன், ஸ்ரீ கண்டன்  என்று  அவர்கள் தான் அநேக  அதிசயங்களை மஹா பெரியவா சத்தம் போடாமல் நிகழ்த்தியதை நிதர்சனமாக கண்டவர்கள். அவர்கள் மூலமும், அனுபவித்த  மற்ற பக்தர்கள் மூலமும்   தான்  நாம் மஹா பெரியவா மஹிமையை அறிந்து கொள்ள முடிகிறது.  மஹா  பெரியவா போன்ற  கலியுக மனித தெய்வங்கள் தமது பெருமையை தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் இல்லை.  காசுக்காக வேஷம் போடுபவர்கள் இல்லை.  இப்படி  மஹா பெரியவாளின் அணுக்க தொண்டர்களாக இருந்தவர்களில் முக்யமான ஒருவர்   ப்ரம்ம ஸ்ரீ   வேதபுரி மாமா.  அவர்  தானாக  பெரியவாளை தேடி வந்தவர் இல்லை என்பது தான் அதிசயம்.  அவரைப் பற்றி  என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தாலும்  கொஞ்சம்  மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். அற்புதமாக நான் இதைப்   படித்து ஆனந்தித்ததை உங்களுக்கு பரிமாறுகிறேன்.

மஹா பெரியவாளின் அணுக்க தொண்டனாக  என்ன qualification   தகுதி வேணும்?  காலேஜ் படிப்போ, பணமோ, பெரிய குடும்ப  சிபார்சோ எதுவும் இல்லை…. பூர்வ ஜென்ம புண்யம் அமோகமாக  இருப்பது ஒன்றே. வேதபுரிக்கு அந்த பாக்யம் இருந்தது.  

எசையனூர் ராணிப்பேட்டை வட்டத்தில் ஆற்காடு ஜில்லாவில்  ஒரு சின்ன  க்ராமம்.  அதில் வாழ்ந்தவள்  கோகிலா பாட்டி எனும் கோகிலாம்பாள்.  ரொம்ப வசதியான  குடும்பம். துர்பாக்யசாலியாக இளம் வயதிலேயே   கணவனையும்  குழந்தைகளையும் இழந்து  அனாதையானவள். அவள் கொடுப்பினை என்னவென்றால்   ஞானம், குரு பக்தி,திட சித்தம்,  வைராக்யம் .அந்த இளம் வயதிலேயே  காஞ்சி  பரமாச்சார்யாளிடம் பக்தி . மஹா  பெரியவாளே கதி என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள். மடத்தில்  அவளுக்கு செல்வாக்கு அதிகம். பெரியவாளுக்கு அம்மா மாதிரி என்று வைத்துக் கொள்ளலாம்.    மற்றவர்களை அவள் எந்த அளவுக்கு அதிகாரமாக  பேசி வேலை வாங்குவாள் என்பதற்கு ஒரு சில  வாக்கியங்கள்:
“ஏண்டா, ராமமூர்த்தி! பெரியவா இன்னிக்கிச் சரியாக பிக்ஷை பண்ணினாளோடா? ஏன் தான் இந்த ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் சேர்ந்தாப்போல வரதோ? தசமி ஆரம்பிச்சு நாலு நாளைக்குப் பட்டினியா? இப்படிக் காய்ஞ்சா அந்த உடம்பு என்னத்துக்குடா ஆகும்?”
“மேலூர் மாமா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ. நீங்க சொன்னாத்தான் பெரியவா கேட்பா! இப்படி ஒரே திரியாகக் கபம் கட்டிண்டிருக்கே! இருமக்கூட முடியாமல் தவிக்கிறாரே! வென்னீர் போட்டுக் கொடுத்து  அதிலே  ஸ்நானம் பண்ணச் சொல்லுங்கோ .”

“ஏண்டா, விஸ்வநாதா! பெரியவா கொஞ்ச நேரம் தூங்கட்டுமேடா! எதுக்குடா அவர்கிட்டே பேச்சுக் கொடுத்திண் டிருக்கேள்?”
 “இல்லே பாட்டி! பெரியவா தான் பேசறா. நாங்க கேட்டிண்டிருக்கோம்.”
“ஏண்டாப்பா! நெய்வேத்யக் கட்டிலே இத்தனை பேர் இருக்கேளே? பெரியவாளை ஸ்நானத்துக்குக் கூப்பிடுங்களேன். காலா காலத்திலே பூஜை  பண்ணிட்டு பிக்ஷை பண்ணட்டுமே? நேரமாறுதே  உடம்பு வாடுமே.”
பெரியவாளை மேனாவில் வைத்து தூக்கிச் செல்லும் சவாரிகாரர்களிடம் பாட்டி விறுவிறுவென்று
 போவாள்.
“நீங்கள் எல்லோரும் புண்யாத்மாக்கள். நன்னா இருங்கோ! இந்தாங்கோ! கொஞ்சம் பட்சணம் கொண்டு வந்திருக்கேன். எல்லாருமாச் சாப்பிடுங்கோ! (டின் நிறைய பட்சணம்) பாவம் உங்களுக்கு நேரம் காலமே கிடையாது. பெரியவா எப்ப கிளம்பராளோ? தயாரா இருக்கணும். வழியிலே ஜாக்ரதையாப் பார்த்துக் கோங்கோ ! இருட்டிலே கண்ட இடத்திலே மரத்தடியிலே படுத்துக்கிறேன்னு ஆரம்பிச்சுடுவா பெரியவா. தீவட்டியை எடுத்துண்டு சுத்திவரப் பாருங்கோ. பாம்பு, பல்லி இருக்கப்போறது. கவனமா இருங்கோடாப்பா! உங்களுக்கு ரொம்பப் புண்ணியம் உண்டு.” என்பாள்.

மற்றவர்களிடம் மஹா  பெரியவா:    “எசையனூர்ப் பாட்டி எதாவது சொல்லப் போறா. ஜாக்ரதையாக இருங்கோ!”    என்பார். அந்த அளவுக்கு மடத்தில் அவளுக்கு செல்வாக்கு.
அந்த எசையனூருக்கு  மஹா பெரியவா ஒரு தடவை  சாதுர்  மாஸ்ய விரத  விஜயம் செய்தார். அங்கே தான் மஹா பெரியவாளுக்கு  தனக்கு  யார் அணுக்க தொண்டனாக இருக்கவேண்டும் என்று ஒரு  இன்டர்வ்யூ  நடத்திய ருசிகர சம்பவம்.
தாயற்ற சிறுவன். பெயர்  வேதபுரி.  எட்டு வயசு.  எசையனூர்  கோகிலா பாட்டியின் வளர்ப்பு. அவனை கூப்பிட்டு பாட்டி சொன்னாள் :
“வேதபுரி. பெரியவா வந்திருக்கா  நம்ம ஊருக்கு.  நீ  தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டுவா.  வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்…என்ன?”
கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி  follow  பண்ணினான். ஒருநாள், ஶ்ரீமடத்தில்,  ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார்.  கூட்டத்தில் நின்ற  சிறுவன் வேதபுரி தானும்   தீர்த்தம் வாங்க கையை நீட்டினான் .வேதபுரியின் குட்டிக் கைகளில் மஹா பெரியவா  அளித்த தீர்த்தம். விழுந்தது. அவரிடம் இருந்து ஒரு குட்டி கட்டளையும் கூட  வெளி வந்தது.
“நீ இங்கியே…சத்தே ஓரமா நில்லுடா ….”
வேதபுரிக்கு பயம். திரு  திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக  போய் நின்றான். “பயப்படாதடா! ஒங்கிட்ட  நா பேசணும்!..அதுக்காக தான் உன்னை நில்லுன்னு சொன்னேன்..”
பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம்  கொடுத்தாகி விட்டது.  ”உன் பேர் என்ன?”வேதபுரி””ஆமா….தெனோமும் பூ கொண்டு வரியே?…… நீயா கொண்டு வரியா? இல்லேன்னா… யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?…”   எட்டு வயது குழந்தைக்கு இட்டு கட்டி பொய்  பேசு ம்  கபடம் தெரியுமா?
“கோகிலா பாட்டிதான் எங்கிட்ட, ‘ நீ  தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு’-ன்னு சொன்னா!
“ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?…….”
“எனக்கு என்ன தெரியும். ஆத்துல யாராவது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே  தெரியும்? செய்வேன்.”   பேசும் தெய்வம் புன்சிரிப்போடு மகிழ்ந்தது. “எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு….. நீ…. எங்கூட வரியா?.என்ன ஸம்பளம் வேணும்  உனக்கு ? சொல்லு……”
“உம்மாச்சி… என்ன குடுக்கறேளோ, அத… வாங்கிக்கறேன்”
யோசிக்காமல்  பையன் வேதபுரி சொன்னதில் பெருமகிழ்ச்சி  பெரியவாளுக்கு ”ஆத்திலே யார் யார் இருக்கா?”
“உங்கள உம்மாச்சின்னு கூப்பிடணும் னு பாட்டி சொன்னா. எனக்கு அம்மா இல்லை… சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டாளாம் ! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா கிட்ட சொல்றேன். அப்பா சரின்னு  சொன்னா நா  ஒங்களோட வரேன்”
“உன்னோடு கூட பிறந்தவா இருக்காளா?….”
“நா….. ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி அவாத்துக்கு போய்ட்டா ..”
“அப்போ சரி டா,  வேதபுரி . ஒன்னோட தம்பி  இருக்கானோல்லியோ, அவன்  ஒங்கப்பாவை பாத்துக் கட்டும்..! நீ  என்னை பார்த்துக்கோ, நீ  என்னோட வா!…..”
வீட்டிற்கு போனதும் கோகிலா பாட்டி கேட்டாள் .  “ஏண்டா வேதபுரி…! பெரியவா என்னடா பேசினா உன்கிட்ட ? சொல்லு….”
“என்னை பாத்து, ‘எங்கூட வரயா?’ன்னு கேட்டா…. என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா…..”
“நீ என்னடா சொன்ன?…”
“நா…..பெரியவா… என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்…..”
“அட  அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!”
“சரி  பாட்டி……”மீண்டும்  ஒருநாள்  பெரியவாளுக்கு வழக்கம் போல் பூ கொண்டு போனபோது  அவர் கேட்டார் “ஏண்டா என் கூட வரதுக்கு உனக்கு என்ன சம்பளம் வேணும் னு கேட்டேனே… சொல்லு?பாட்டி சொல்லிக்கொடுத்தபடி வேதபுரி பட்டென்று பதில் சொன்னான்: ”எனக்கு… பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்…”
“ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி இப்படி சொல்ல  சொன்னாளாக்கும்?…”
“ஆமா…….”
சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பும் சமயம். சிறுவன் வேதபுரியின் வீட்டுவாசலில்,  மஹா பெரியவாளின்  மேனா  நின்றது. வீட்டில்  அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் உள்ளவர்கள் எல்லாரும் பெரியவா  தரிசனம் பெற்று  நமஸ்கரித்தார்கள். வேதபுரி வாசலில் வந்து நின்றான். “அன்னிக்கி என்னோட வரேன்னியே?….இப்போ ..வரியா?….”
“ஓ ! வரேனே!…”கோகிலா பாட்டியிடம்  பெரியவா கேட்டார்.  ”நான் இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?……..”
“ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்…. தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்… பாத்துக்கணும்”
“.நீ…..நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே…..இந்தக் கொழந்தைய… நா….. பாத்துக்கறேன்! ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே,  நா இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்.. அவனும் வரேன்னுட்டான் …”
“வேதபுரி  போடா,   ஒங்கப்பாக்கு அபிவாதயே சொல்லி, நமஸ்காரம் பண்ணிட்டு, அவர் கிட்ட,
‘பெரியவா என்னை கூப்பட்றா…… நா… அவரோட போறேன்-ன்னு சொல்லிட்டு வா . .ஒங்கப்பா, ‘மடத்ல.. ஒன்னை யாரு பாத்துப்பா?-ன்னு கேப்பார்.  அதுக்கு நீ……”என்னை பெரியவா பாத்துப்பா! ஒன்ன…. தம்பி பாத்துப்பான்னு சொல்லு!..”அப்படியே  வேதபுரியின் அப்பா சீதாராமய்யர் கேட்டார். வேதபுரி , பெரியவா சொன்னபடி, அக்ஷரம் மாறாமல் அப்பாவுக்கு பதிலளித்தான்.  ஆனந்தமாக அப்பா வேதபுரியை பெரியவளோடு அனுப்பி வைத்தார். பெரியவா குரல்  மேனாவிலிருந்து கேட்டது. ..”வேதபுரி  வரும்போது ஒரு வேஷ்டி, துண்டு, சொம்பு…… எடுத்துண்டு வா!….”அவ்வளவுதான்!
அந்தக்ஷணத்திலிருந்து  வேதபுரி  என்ற சிறுவன் மகா பெரியவா எனும்  உம்மாச்சியிடம்  அடைக்கலமானான் .”வேதபுரி  நீ….கொழந்த.!… ஒன்னால நடக்க முடியாது! அதுனால, பின்னால சின்ன மாட்டுவண்டி வருது பாரு! அதுல ஏறிக்கோ!…”  பின்னால் வந்த மாட்டுவண்டிக்கு ஓடினான்.  வண்டியில் இருந்தவர்களோ…..
“நீ சின்னக் கொழந்தடா! ஆத்துல ஒன்ன….. தேடுவா! நீ போ!..”என்று விஷயம் தெரியாமல்  அவனை திருப்பி அனுப்பினார்கள்.  மறுபடியும்  பெரியவாளிடம் ஓடினான் ”உம்மாச்சி…! என்னை வண்டில ஏத்திக்க மாட்டேங்கறா!…”
“ஸெரி….அதோ….. அங்க மண்ணாதி [ஸவாரி] குதிரை மேல  ஒருத்தன்  போறான் பாரு! அவனைக் கூப்டு!…”மண்ணாதி என்ற குதிரை ஸவாரி, டக்கா என்ற வாத்யம் வாஸிக்கும் கோஷ்டி, தபால் என்று அந்தந்த ஊர்களில் ஸ்ரீமடத்துக்கு வரும் லெட்டர்களை ஸேகரிப்பது, மஹா பெரியவா திக் விஜய  பரிவாரங்களும் கூடவே போகும்.
வேதபுரி போய்க் கூப்பிட்டதும், குதிரை ஸவாரிக்காரன், பெரியவாளின் பல்லக்கு அருகில் வந்தான்.
“இந்தக் கொழந்தைய… ஒன்னோட குதிரைவண்டில ஏத்திக்கோ!….”
“ஸரிங்க எஜமான்..”அடுத்து  எங்கோ  ஒரு  ஊரில் மேனா  நின்றதும், பெரியவா ரொம்ப ஞாபகமாக வேதபுரியை  கூப்பிட்டார். .”சரி  இப்போ சொல்லு…. எந்த மாமா ஒன்னை மாட்டு வண்டில ஏத்திக்க மாட்டேன்னு சொன்னா?……”
“…………………………..”   வேதபுரி பதில் சொல்லலை. ”ஏண்டா பயப்படற? அவா… ஒன்ன… ஆத்துக்கு அனுப்பிடுவான்னு பயமா?….”
“இல்ல.. ஒங்களுக்கு கைங்கர்யம் செய்ய முடியாம போயிடுமே ன்னு, பயமா இருக்கு பெரியவா”
“நா….. இருக்கேன்! பயப்படாம காட்டு”    மாட்டு வண்டியில் இருந்த  வெங்கட்ராமய்யரை கை  காட்டினான் வேதபுரி.
“வெங்கட்ராமா! நாந்தான்… கொழந்தைய அழைச்சுண்டு வந்தேன்…..! ஜாக்ரதையா பாத்துக்கோ…!”
“உத்தரவு பெரியவா……”
மஹா பெரியவா  பார்த்து தேர்ந்தெடுத்த  அணுக்க தொண்டர்   ப்ரம்ம ஸ்ரீ  வேதபுரி கைலாச பதவி அடையும் வரை நமக்கு மஹா பெரியவாளுக்கு இடையே பாலமாக இருந்தவர். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *