GIRIGUJAMBIKA – J K SIVAN

அம்மா எப்போதும் அழகி தான். – நங்கநல்லூர் J K SIVAN

கும்பகோணம் சென்றால் திரு நாகேஸ்வரம் நாகநாத ஸ்வாமி ஆலயம் செல்லாமல் திரும்புபவர்கள் கிடையாது. உலகப்புகழ் பெற்ற சோழநாட்டு ராகு ஸ்தலம். அங்கே விசேஷமானது அம்பாள் கிரிகுஜாம்பிகை சந்நிதி.
பல முறை அம்பாளை தரிசித்திருக்கிறேன். கிரிகுஜாம்பிகை வயதான தீர்க்க சுமங்கலி. அழகான பாட்டி. எத்தனையோ ஆயிரம் வருஷமாக நிற்கிறாள். ஸ்வயம்புவாக தானே தோன்றியவள். நெருப்பு மாதிரி ஜ்வாலை வீசுபவள். அத்தனை தபோசக்தி. பரமேஸ்வரனை அடைய இங்கே தவிமிருந்தவள். தவக்கோலத்தில் இன்றும் தனித்து நிற்பவள். இங்கே ஒரு விசேஷம். அம்பாளின் அருகே நிற்பவர்கள் மஹாலக்ஷ்மியும் ஸரஸ்வதியும் . அலைமகள், மலைமகள், கலைமகள் மூவரும் ஒருசேர நமக்கு அருள் பாலிக்கும் சந்நிதி. அவள் முன் நின்றபோது ஏதோ ஒரு கரெண்ட் என்னுள்ளே ஓடுவதை உணர்ந்திருக்கிறேன். சில வருஷங்களாக செல்ல இயலவில்லை. ஆனால் மனதில் நிற்கிறாள். அம்பாளை பல ரூபங்களில் பல வித நாமங்களோடு பல ஆலயங்களில் தரிசித்திருக்கிறேன். ஆனால் இவள் தனி. என் மனத்தில் கிடந்த விருப்பத்தை அறியாதவளா அவள்? தன்னை வணங்குவோர், வணங்காதவர், போற்றுபவர் தூற்றுபவர் எல்லோரையும் பேதமின்றி கருணையோடு,தாயன்போடு அணைத்து அருள்பவள் அல்லவா.

எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தாள் அம்பாள். ஞாயிற்றுக்கிழமை 3.9.23 அன்று என் உறவினன் திரிசக்தி சுந்தரராமன் வீட்டுக்குச் சென்றபோது அங்கே அவளைச் சந்திப்பேன் என்று கனவிலும் எண்ணவில்லை.

”வாங்கோ வீட்டை சுத்திபாருங்கோ” . பால்கனி, மொட்டை மாடி, மூன்று படுக்கையறைகள் , ஹால், சமையல் கட்டு என்று வசதியான ஒரு அடுக்கு கட்டிடத்தில் நான்காம் மாடியில் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருந்தவனை ”இங்கே என்னைப் பார்டா ” என்று அழைத்தது என்னுள்ளே ஒரு காந்த குரல்.

அந்த ஹாலின் ஒரு வளைவில் சுவரை அடைத்தவாறு பெரிய உருவில் தஞ்ஜாவூர் பெய்ன்ட்டிங்காக தத்ரூபமாக ஐந்து ஆறு அடி உயர சித்திரமாக நின்றாள் கிரிகுஜாம்பிகை. ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டேன். அவள் முகத்தில் ஒரு ஏளன சிரிப்பு. ”பார்த்தாயா உன் ஆசையை பூர்த்தி செய்து விட்டேன்” என்றாள் அம்பாள். எந்த சித்திரக்காரனோ அவளை, அப்படியே திருநாகேஸ்வரத்தில் இருப்பவளாகவே ,வண்ணப்படமாக்கிய மஹாநுபாவன் . அவளை உற்றுப்பார்த்தேன். மனதில் ஆதி சங்கரர் எனும் சந்நியாசி சொல்வது மீண்டும் காதில் ஒலித்தது. ஆமாம் அவளுடைய சௌந்தர்யம் எனும் அழகின் அலைகளை என் போன்ற சாதாரணர்கள் எப்படி விவரிக்கமுடியும். அதற்கு அந்த சந்யாசிதானே வேண்டும். பரமேஸ்வரனுக்கே சக்தி தருபவள் அல்லவா நீ?

शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुं न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि । अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥ १॥

śivaḥ śaktyā yukto yadi bhavati śaktaḥ prabhavituṃ na cedevaṃ devo na khalu kuśalaḥ spanditumapi . atastvāmārādhyāṃ hariharaviriñcādibhirapi praṇantuṃ stotuṃ vā kathamakṛtapuṇyaḥ prabhavati .. 1..

ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரபவிதும் ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல ஸ்பந்திதுமபி அதஸ்த்வா மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி: 1

பரமேஸ்வரனுக்கு இவ்வளவு அற்புத சக்தி எப்படி வந்தது? என்று தெரியவேண்டுமானால் அதற்கு ஒரே மூலகாரணம் அம்பாள் சக்தி தேவி அவன் இடப்பாகத்தில் வாமரூபியாக அர்த்த நாரீஸ்வரியாக இருப்பது தான். உமையொருபாகனாக பரம சக்தி கொண்டு இந்த ப்ரபஞ்சமே தோன்றி இயங்க காரணமாகிறார் மஹாதேவன். த்ரிமூர்த்திகளான விஷ்ணு, ருத்ரன், பிரம்மா ஆகியோரால் பூஜிக்கப்படும் அம்பா, உன்னை எவனாவது புண்யம் செய்யாதவன் வணங்குவதற்கோ துதிப்பதற்கோ எவ்வாறு, எப்படி தகுதி பெறமுடியும்? எங்ஙனம் தகுதியுடையவனாவான் ? தேவி பாகவதம் சொல்வது ஞாபகம் இருக்கிறதா? குண்டலினி சக்தியினின்று பிரிந்தால் சிவமும் சவம் தான். ஓஹோ அதற்கு தான் உன்னருகே மகாலட்சுமியும் ஸரஸ்வதி தேவியுமா?

சிந்தாமணி கிரகத்தில் இருப்பவள் எனக்காக சுந்தரராமன் கிரகத்தில் வந்து காட்சி தந்ததற்கு நான் எப்படி நன்றி சொல்வேன். தாயே, நீ ஒருத்தி மட்டும் தான் அபயத்திற்கு பதிலாக அபிநயத்தால் வரத்தையும் அ-பயத்தையும் அதாவது எம்மை பயத்தினின்று காப்பாற்றவும், வேண்டியதற்கு அதிகமாகவே பலனை அளிப்பதற்கும்கூட உன்னுடைய திருவடிகளின் பாத தூளி ஒன்றே போதும் என்று உணர்த்துகிறாய். உன் அபய ஹஸ்தம் அபிநய ஹஸ்தமாக அருள் பாலிக்கும் வித்தையை என்ன சொல்வேன்?உன் வரத ஹஸ்தம் உன் சகோதரன் திருப்பதி ஏழுமலையானின் வரத ஹஸ்தத்தை நினைவூட்டுகிறது.

மூடிய இதழ்களின் வழியாக கொப்புளிக்கும் அன்பு, பக்தர்கள் மேல் பாசம், கன்னத்தில் பிரதிபலிக்கிறதே. எத்தனை தலைமுறை உன்னை கண்ணால் கண்டு களித்து கைமேல் பலன்பெற்று. ஆனந்தம் அடைந்திருக்கிறதோ.கணக்கா இருக்கிறது? அம்மா நேர்த்தியான உன் திவ்ய முகத்தைக்கண்டு மயங்காத பக்தர்கள் உண்டோ என்று பக்திரசம் மேலிட பாட தோன்றுகிறது.

பச்சைப் பெண் பார்வதியே, பர்வத ராஜகுமாரி, பனிமலை ராஜாவின் பெண் என்பதால் தான் உன் கண்களில் அத்தனை குளிர்ச்சியா? இவ்வளவு ஆயிரம் வருஷங்கள் வயதானாலும், காலில் சலங்கைகள் கிலு கிலுவென்று ஒலிக்க, மெல்லிய இடுப்பில் பளபளவென்று தங்க ஒட்டியாணம் மினு மினுக்க, அழகிய ஈடற்ற அங்க லாவண்ய தேஹ காந்திகொண்டவளும் பெண்மைக்கே உரித்தான சற்று வணங்கிய முதுகு வடிவுடையவளும், சரத் காலத்துப் பூர்ணசந்திரன் போன்ற காந்த சக்தி கொண்ட முகம் படைத்தவளும், கைகளில் கரும்புவில் கொண்டவளாய், புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தியவளாக, த்ரிபுரத்தை நெற்றிக் கண் தீயினால் எரித்த பரமசிவனுடைய ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தியே , பரமேஸ்வரியே, நீ ஓடிவருவாய் என்று சங்கரர் சொல்கிறாரே.

உன் கையில் இருக்கும் கிளி பாவம், உன் எதிரே தன் அழகிழந்து நிற்கிறது. சூரியன் முன்னாலே தீபம் ஒளிவீசுமா? கிளி உன் முகத்தை பார்த்து அந்த அழகில் திகைப்பதை ஓவியன் அதன் வட்ட வடிவ கண்களில் காட்டுவது அற்புதம். நான் உன்னை நேரில் பார்க்க முடியாதவன், சிவந்த அஷ்ட புஜத்தோடு இருதயத்தில் வீற்றிருப்பவள். பாசம், ஈட்டி, கரும்புவில், புஷ்பபாணங்கள், புஸ்தகம், ஸ்படிகமாலை ஆகியவற்றை ஏந்தியவள் , அபயம், வரம் என்ற முத்திரைகளையும் தரித்து, மொத்தம் எட்டுக்கைகளோடும் மூன்று கண்களுடனும் திகழ்பவளை கருங்கல் சிலையாக ஆலயத்தில் கண்டேன். இதோ அதன் பிரதிபலிப்பாக படத்தில் கண்டு களிக்கிறேன். உன் முழு வடிவத்தை பார்க்க, அந்த ஒளியை என்னால் சமாளிக்க முடியாது என்று தெரிந்து தான் சிம்பிளாக கருப்பு சிலையாக நிற்கிறாய் என்று புரிகிறது. உன் திருவடியை வணங்கினால் ‘தேவி பராசக்தி, ப்ரம்மா விஷ்ணு ருத்ரன் என்று தனித்தனியே அந்த தெய்வங்களை வணங்கவேண்டியதே இல்லை, என்கிறார் ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில். இப்போதிருக்கும் விஞ்ஞான வசதியில் உன்னை படம் பிடித்து என் வீட்டிலும் நீ எப்போதும் என் எதிரே இருப்பதற்கு நான் திருமதி நளினி சுந்தர ராமனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
திருமதி சுந்தரராமன் கிரிகுஜாம்பிகையிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். இதோ அவர் சொல்வதைக் கேளுங்கள்:

”ஆஹா… சந்தோஷத்தில் புளகாங்கிதம் அடையச் செய்கிறது… அவளைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் கேட்டாலும் சலிப்பு என்பது வரவே வராது அல்லவா.. ஒவ்வொருவர் சொல்வது, நினைப்பது ஒவ்வொரு மாதிரி என்பதாலும் இருக்கலாம்.. மொத்தத்தில் உங்கள் வர்ணனை அருமை… அவளுடன் என் அனுபவங்கள் ஏராளம்.. நிச்சயம் கொடுத்து வைத்திருக் கிறேன்… ரொம்ப புண்ணியம் செய்திருக்கிறேன்…. எங்கள் குடும்பத்தில் அவளை “lady of the house giri ” என்று தான் செல்லமாக அழைப்போம்.. எங்கள் பேத்திகள் வரை இது தான் வழக்கம்.. எங்கள் இல்லத்தில் அவள் விக்ரஹ ரூபத்திலும் அமந்திருக்கிறாள். நித்ய அலங்காரம், பூஜை உண்டு.. வகை வகையான ஆடைகள் ஆபரணங்கள் என்று அழகாய் பரிமளிக்கிறாள்.. சில நாட்களில் மட்டும் நான் அணிவிக்கும் வஸ்திரமோ மலர்களோ அவள் மனதுக்கு பிடிக்கவில்லை என்றால் அதைத் தள்ளி விடுவாள்.. நாலு ஐந்து முறை முயற்சி செய்து பார்த்து விட்டு வேறு உடையையோ வேறு விதமாக மலர்கள் சாற்றினாலோ அதை அவள் ஏற்றுக்கொண்டு முதல் தடவையே ஒரு புன்சிரிப்பை பார்க்க முடியும் என்பது சத்தியமாக நான் நேரில் கண்டிருக்கிறேன்.. இதை எங்கள் குடும்பத்தினரும் பல முறை கண்டிருக்கிறார்கள்… லோகநாயகி, ஆனந்தரூபிணியான அவள் அலங்காரப் பிரியையும் அல்லவா ? அதை மீறி அதே ஆடையை அணிவித்தால் முகம் சுளிப்பைக் காட்டும்.. மொத்தத்தில் நேரில் நின்று பேசும் / கேட்கும் எங்கள் இல்லத்தின் அழகி அவள்.. நேரம் மட்டும் இருந்தால் இன்னும் நிறைய நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே போவேன்… ஒரே ஒரு அலங்காரம் இத்துடன் இணைத்துள்ளேன்.”

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *