BHARATHI REMEMBERED – J K SIVAN

மஹா கவி பாரதி  தினம்  –   நங்கநல்லூர்   J.K. SIVAN

”காலா.  வா,  உன்னைக் காலால்  உதைக்கிறேன்”
குழந்தை சாப்பிடும்.  ஆனால்  ரொம்ப  அம்மாவை  கஷ்டப்படுத்தி தான் சாப்பிடும்.  அம்மா  டான்ஸ் ஆடுவாள், பாடுவாள், ஓடுவாள், இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு வெளியே வானத்தில் காக்கா குருவி காட்டுவாள், இரவானால்  சந்திரனை காட்டுவாள். நிலா நிலா வா வா  என்று கை அசைத்து  கூப்பிட்டு சாதம் ஊட்டுவாள்.
எனக்கு கிருஷ்ணனை பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அப்படி எனக்கு கிருஷ்ணனை காட்டி பிணைத்தது  மஹா கவி அமர கவி, தேசிய கவி சுப்ரமணிய பாரதியார். ஒவ்வொரு வருஷம்   செப்டம்பர் 11 வந்தால் மனம் வெடிக்கிறது. கண்களில் என்னை அறியாமல் நீர் கோர்த்துக்கொண்டு எதிரே  எழுத்தை மறைக்கிறது. அந்த அமரன்  ஏழ்மையில் வாடி, பாதி நாள் பசியோடு வாழ்ந்து  மறைந்த நாள்.
வெள்ளைக்கார அரசாங்கம் ஆஸ்பத்திரியில் இருந்த  பாரதியாரின் மறைவு நாள் செப்டம்பர் 12, 1921  என்று அவரது இறப்பு சான்றிதழில்  சொன்னாலும்  நிறைய  பேர்  நேரில் பார்த்தவர்கள்  செப்டம்பர் 11 என்கிறார் கள்.   செப்டம்பர்  நள்ளிரவில் இறந்த பாரதியின் தேதி 12.9.1921 என்று காட்டப்பட்டாலும் அது தப்பு,  ”பாரதி தான் சாகவில்லையே”.அவனை யார் சாகடிக்க முடியும்? அமரனுக்கு மரணம் ஏது? என்றும், தமிழ் இருக்கிற வரை,  பாரதியும் சிரஞ்சீவியாக   வாழ்பவர்.  11 என்று  எழுதினால் என்ன, 12 என்று  எழுதினால் என்ன. பாரதி என்றும் தமிழனின் நெஞ்சை விட்டு நீங்காதவராயிற்றே.

நானும்  ஒரு தமிழன் தான். ஆரம்ப கல்வியே கூரைக்கட்டு ,  மண் தரை,  பள்ளிக்கூடத்தில் தான்.  எனக்குத் தெரிந்த பேசும் எழுதும் தமிழ் வேறு,  நான் புத்தகத்தில் கற்ற தமிழ் வேறு. மெட்ராஸ் பாஷை எனும் தமிழ் கம்பனுக்கோ, வள்ளுவனுக்கோ, இளங்கோவுக்கோ பாரதிக்கோ  தெரியாது.   ஆகவே  தான்  என்னைப் போல பலரால்  தமிழ் மூலம்  அவர்களை அணுக முடியவில்லை.  எத்தனையோ  பேருக்கு   நல்ல விஷயங்கள் தெரியாமலேயே வாழ்க்கை பெரும்பாலும் முற்றுப்  புள்ளியோடு நிற்கிறது.   இதில் ஒரு ஆறுதல் என்ன தெரியுமா?    பாரதி தமிழ்  அவ்வளவு கடினம் இல்லை. எளியது. என் போன்றவர்களுக்கு  படிக்கும்போதே பாரதியின் எண்ணம்  தெளிவாக புரிகிறது.  பாரதியின் தமிழ் என்னை ஈர்த்தது. அதனால் தானோ என்னவோ  அவரது  இறுதி நாள் பற்றி நினைக்கும்போது என்னையறியாமலே கண்களில் பனிப்படலம்.

ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் 11  அன்று   காலண்டர் சீட்டைக்  கிழிக்கும்போது  ”பாரதி நினைவு நாள் ”அந்த  சிறு காகித துண்டாக மறந்து, மறைந்து போகிறது.   செப்டம்பர் 11  1921  என்ற அந்த  மஹா கவியின் கடைசி நாள் சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு யாருக்குமே  கனக்கும். இவரைப்  பாதுகாக்காமல்  விட்டு விட்டார்களே  என்ற குற்ற உணர்வு  நெஞ்சைப் பிழியும். சோகம் கண்ணீராக வரும்.

”அடாடா. இவ்வளவு  அற்புதமான ஒரு மஹானை வறுமையில் வாட விட்டு அவர் மஹிமையை உணராத  நாம் தமிழர்கள்  என்று எந்த தைரியத்தில் சொல்லிக்கொள்ளலாம்?  இறந்தபின் அவன் அருமை தெரிந்து அதனால் அவருக்கென்ன? ஒரு வேளை சந்தோஷமாக அவர்  குடும்பம் சாப்பிட , வாழ, அனுமதித்தோமா?  செல்லம்மா வோடு வறுமையையும் சேர்த்தல்லவோ  மணந்தவர் அவர்.   39 வருஷமே வாழ்ந்த  குறுகிய   கால அவகாசத் தில்  அவர் சாதித்தது முன்னூறு வருஷமானாலும் எவனாலும் முடியாதது.

திருவல்லிக்கேணியில் பாரதியை   அறியாதவர்கள், மதிக்காதவர்கள் நிறைய பேர் இருந்தார்களோ? இன்று உலகமே அறிகிறதே அவர்  வாழ்ந்த வீடு என்ற அந்த திருவல்லிக்கேணி வீட்டுக்கு நான் சென்று அமைதியாக அமர்ந்து தியானிப்பேனே.  அந்த வீட்டின் சுவர்களில் எத்தனை பாரதி திருவுருவங்கள். எத்தனை எழுத்துக் கள். தமிழிலும், சமஸ்க்ரிதத்திலும், ஆங்கிலத்திலும் நிபுணன் அந்த காவிய  நாயகன். சரஸ்வதிக்கு பிடித்த அவனை ஏன் லக்ஷ்மிக்கு பிடிக்கவில்லை?

வாய் திறவாமல் அவனை வளைய வந்த ஒன்பது கஜ ஒல்லிப்  பெண்மணி செல்லம்மா. பாரதி மனைவி என்ற புகழால் தமிழ் நெஞ்சங்களின் மனதில் செல்லம்மாவின் பெயர் என்றும் கவிதையாக நிலைத்து விட்டதே. அவளுக்கு நீ கொடுத்த அந்தஸ்து ஆபரணம் இது தானா பாரதி? நீ ஒருவேளை தங்கம் மட்டும் கொடுத்திருந் தால் அது மறைந்திருக்கும்.    அதனால்  இல்லாத தங்கத்தில் பெண்ணுக்கு பெயராக வைத்து  தங்கம்மா  என்ற பெண் மூலம் உன் பாரதி வம்சம் வளர்ந்துவிட்டது.
பிராமண சமூகமே  உன்னை  அவமதித்த காரணம் அவன் ”காக்கை குருவி எங்கள் ஜாதி” என்றதாலா? நீங்கள் இல்லாவிட்டால் எனக்கென்ன?   ”கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றதாலா? அவன் ராஜாவாகவே வாழ்ந்தான், மைசூர் மஹாராஜாவுக்கு மட்டுமா முண்டாசு? அவனுக்கும் தான் அற்புதமாக இருந்து எத்தனை படத்தில் முறுக்கு மீசையோடு பார்க்கிறேன். அவன் படத்தை நானே  போட்டிருக்கிறேன்.

முண்டாசு கவிஞன் என்று பெயர் பெற்றவன் பாரதி. இலை முன்னால் சாப்பிடும் விதம் ஒரு ராஜா மாதிரி கம்பீரமாக இருந்து என்ன பயன்?. இலையில் அவனுக்கு மாதம் பத்து நாள் மட்டும் தான் ஏதாவது காய்கறி  விழும். வசதி இல்லை  அவனுக்கு . மற்ற  நாள் வெறும் சீரக  ரசமும் சுட்டப்பளமும் தான் அந்த அமர கவிக்கு சாப்பிட முடிந்ததோ?   ”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தையே அழித்துவிடுவேன்” என்ற அந்த பொது நல தியாகிக்கு அவ்வளவு தான் கொடுப்பினையோ?.

பாரதிக்கு மனதில் தான் உறுதி. உடலில்  தளர்ச்சி. பாதி நாள் வெள்ளையன் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பவே நேரம் சரியாக இருந்தது. சிறை வாசம்.
1921 ஜூலை மாதம் பார்த்தசாரதி கோவில் யானைக்கு ஏன் பாரதியை பிடிக்கவில்லை? வாழைப் பழம் தேங்காய் கொடுத்த பாரதியை, ”போ உனக்கே உணவில்லை எனக்கு  ஏன் கொண்டு வந்தாய்”? என்று அன்பாக தள்ளி விட்டதோ?  அதுவே ஆபத்தாகி விட்டதா? கஜேந்திரன் பலம் எங்கே பட்டினிக் கவிஞன் உடலின் சக்தி எங்கே? அந்த அதிர்ச்சி, எலும்பு முறிவு, தொடர்ந்து காய்ச்சல், வயிற்றுப் போக்கு… தக்க மருத்துவ வசதிக்கு வழி இல்லை. அதோடு ஜீவனத்துக்கு உழைப்பு வேறு. ரெண்டு மூன்று மாதம் வாட்டி எடுத்தது.
பாரதி வாழைப்பழம் தேங்காய் எடுத்துக் கொண்டு பார்த்தசாரதி கோவில் யானையை நெருங்கிய  போது அருகில்  யாரோ  ”யானை கிட்டே போகாதேங்கோ” என  எச்சரித்தும் பிடிவாதக்கார பாரதியின்  காதில் அந்த எச்சரிக்கை  விழவில்லை.   யானை அமைதியாக நின்றுகொண்டிருந்ததால்  எச்சரிக்கையை லக்ஷியம் பண்ணவில்லையோ?. ஆனால் திடீரெண்டு அன்று  யானை தனது  துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே அவரை தூக்கி வீசியது . நல்லவேளை  காலால் மிதிக்க வில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்  கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதனான  ஓரு புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட் படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து குனிந்து பாரதியை அகற்றி தன் தோளில் போட்டுக் கொண்டார். இருவரும்  உயிர் தப்பினார்கள்.  யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும். கஜேந்திரன் உணர்ந்துகொண்டார். தான் தாக்கியது  ஒரு சாதாரணன் இல்லை கிருஷ்ணனின் பக்தன் என்று புரிந்ததோ என்னவோ!. அதற்குப்  பிறகு அவரையும் குவளைக் கண்ணனையும் தாக்க வில்லை. யானையிடம் எந்த சலனமும் இல்லை.    கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது ஆனால் கட்டாந் தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக் காயத்தோடு பாரதி மயங்கினார்.
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில்  நண்பர் சீனுவாசாச்சாரியார்  கொண்டு போய்ச் சேர்த்தார். பகைவனுக்கும் அருளச் சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையைப் பழித்தாரா? இல்லவே இல்லை. கொஞ்சம் நினைவு வந்ததும் ” ஹா ஹா ” என்று வழக்கமான அட்டகாசமான சிரிப்பு. இது தான் பாரதி:  typical  பாரதி:
”யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது.என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான் இல்லை யென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?”

பாரதிக்கு உடல் காயம்  ஆறத்தொடங்கியது. அன்றாட உணவுக்கு உத்யோகம் அவசியமாகியது. உடலுக்கு ஒய்வு போதவில்லை. எழுத்துப்  பசி சுதேசமித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு செல்ல வைத்தது. காயம் ஆறினாலும் யானை தந்த அதிர்ச்சி சில அவசர வியாதிகளை கிளப்பி விட்டது. சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. மீண்டும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில். செப்டம்பர் 12  1921. அதிகாலை இரண்டு மணி. மஹா கவி பாரதியாரின் உடலைவிட்டு உயிர் பிரிய முடிவெடுத்து விட்டது.

”போதும் பாரதி,   நான் உன்னோடு இந்த உலகத்தில், இந்த நன்றிகெட்ட சமூகத்தில் இருந்தது” என்று அதற்கு மேலும் அவரோடு இருக்க  அவர் உயிருக்குப்  பிடிக்க வில்லை. வெளியேறத் துடித்து   பாரதியின்  உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது. வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.  சில நிமிடங்களில் துடிப்பு அடங்கியது.     39 வருஷ   உடல் – உயிர் தாம்பத்யம் முடிவு பெற்றது. எழுத்துக்கு உயிர் அளித்த அந்த கவிஞனின் உடல் உயிரை இழந்தாலும்  தனது அற்புத  தமிழை உலகுக்கு விட்டு சென்றது.

ஒரு எரிமலை குளிர்ந்து போனது. இனி எங்கே பொங்கும்? அக்னிக் குஞ்சொன்று வெந்து தணிந்தது. அந்த ஞானக்கடல்  வங்காள விரிகுடா  உப்புக்  கடல் அருகே வாழ்ந்து கரைந்து மறைந்து போனது.

குவளைக்  கண்ணன், லக்ஷ்மண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா பரசு நெல்லையப்பர் — இந்த ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தை மாற்றி மாற்றி  சுமந்து கிருஷ்ணாம் பேட்டை மயானம் நோக்கி நடந்தன. இன்று பாரதி என்றால் அகில உலகமும் போற்றும் அந்த கலைஞன், கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் அவன் பூத உடலைத் தூக்கிய நால்வரையும் சேர்த்து மொத்தமே பத்தோ பதினொன்றோ ஆசாமிகள் தான். அவர் உடலில் மொய்த்த ஈக்கள் கூட எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தது. இது தான் நமது சமுதாயம் ஒரு மாபெரும் தமிழ் கவிஞனுக்கு நாம் அளித்த கடைசி மரியாதை. சே என்ன வெட்கக்கேடு!.

கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா மஹாகவி பாரதியின் பெருமையைச்  சொல்லி முடித்ததும் ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.

”தமிழ் உலகமே நீங்கள் கொடுக்காத வரவேற்பை அமர கவி பாரதிக்கு நான் கொடுக்கிறேன்” என்று அக்னி பகவான் அன்போடு அவர் உடலை ஆரத்தழுவினான் அந்த கவிஞனின் உடலை. நம் எண்ணத்தில் சாகா வரம் பெற்ற சுப்ரமணிய பாரதியாரின்  பூத  உடம்பு மண்ணில் பிடி சாம்பலானது.  புகழுடம்பு எழுத்தாக  என்றும்  ஒளி வீசுகிறது. ஒளி படைத்த கண்ணா  என்று பாடுகிறது. 

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *