UNCERTAINTYY OF LIFE. – J K SIVAN

நிலையாமை  –   நங்கநல்லூர்  J K   SIVAN 

இன்று காலை  பேப்பரை பிரித்துப் பார்த்தால்  சேதிகள்  சந்தோஷம் துக்கம்  கோபம், வெறுப்பு,  பொறாமை, போன்ற சகல  உணர்ச்சிகளும்  தரும்படியாக தான் இருக்கிறது.  எல்லாம் கலந்தது தான் செயதித்தாள்.   ஒரு மூலையில் சின்னதாக  OBITUARY என்று  தலைப்பில்  அரைப்பக்கம்  எத்தனையோ பேர்  விண்ணுலகு அடைந்த செயதிகள், சிலர் படங்கள் பெரிதும் சிறிதுமாக  சுந்தரவரதாச்சாரியார்  87வயது,  AGஸ்  ஆபிசில் அக்கௌன்டன்ட் , போட்டோவில் தாடி மீசை முள்ளு முள்ளாக  நெற்றியில் வடகலை  நாமத்தோடு அரைக்கை சட்டையில் ….கடந்த சில மாதங்களாக உடல் நலம்குன்றியவராம்… முந்தாநாள் இரவு 11மணிக்கு  பூலோகம் வேண்டாம் என்று போய்விட்டதாக  அவரது  4 பிள்ளைகள் 2  பெண்கள்  வருத்தத்தோடு தெரிவித்து என்று 10ம் நாள் காரியம் என்று விலாசம் தந்திருக் கிறார்கள். அவர் பக்கத்தில் சின்னதாக ஒரு பெட்டி செயதியாக  கட்டம் கட்டி  கோபாலசாமி படம்.  என் நண்பன். மேற்கு  மாம்பலம் தான் வைகுண்டம் என்று அடிக்கடி சொல்பவன். அவனுக்கு சீட்டாட்டத்தில், சினிமாவில் உயிர், முன்பெல்லாம்  வாராவாரம் கிண்டியில் குதிரைகள் ஓடுவதை தேடி ஓடுவான்…  அவனுக்கும் முந்தாநாள் சாயந்திரம் திடீரென்று மாரடைப்பு என்று போட்டிருந்தது.  கோபால சாமி யை போனவாரம்  சிட்டி யூனியன்  பேங்க்லே பார்த்து பேசினேனே . நாட்டை ஆள்பவர்களை எல்லாம்  கண்டபடி கெட்டவார்த்தையிலே  திட்டினான்.  எல்லாம் லஞ்சம் ஊழல் என்றான்.   

”ஏண்டா  கோபாலா,    நீ  ஒருவேளை  ஆண்டால் உன் மாப்பிள்ளை,பெண், பிள்ளைக்கு ஒன்றுமே செய்ய மாட்டாயா? எல்லாம் சீராயிடுமா என்று கேட்டபோது  நெளிந்தான்.  சட்டென்று  ராயர்  மெஸ்   மெது வடையை பற்றி பேச்சு மாத்தினான்.அதுக்குள்ளே என்ன அவசரமோ. போய் சேர்ந்துவிட்டான்.  சே சே , என்ன வாழ்க்கைடா இது?

யோசித்து பார்த்தால்  இதில் ஆச்சர்யப்  படவோ அதிசயிப்பதற்கோ  வருந்தவோ  ஒன்றுமில்லை. பிறப்பின் போதே இறப்பு நிச்சயம். என்று எப்போது எப்படி?  என்பது தான் தேவ ரஹஸ்யம்.  அதை கண்டுபிடிக்க மனிதனின்  விடா முயற்சிகள் எல்லாமே  தோல்வியைதான் தழுவும்.

சித்தர்கள் இதை அடிக்கடி  எளிய பாடல்களில் நமக்கு சொல்கிறார்கள். இதோ ஒன்று.   ” நினைமின் மனமே! நினைமின் மனமே!”

 ஐயடிகள் காடவர்கோன் நாயனார்  என்ற சிவபக்தர், அறுபத்து மூவரில் ஒருவர்  ரொம்ப அழகாக ஒரு பாடலில் சொல்கிறார்:

”உடல்  7   மாதிரி  கூன் விழுந்து குறுகி, கோலை ஊன்றி நடக்கும் நாள்  வரும்போது,  தொண்டையில் கோழை வந்து  திணறும்போது,  வாய் பேச முடியாமல்  சத்தம் வெளியே வரமுடியாமல்  தவிக்கும்போது  வேண்டாம், அதற்கெல்லாம் முன்பே, இப்போதே,  திருவையாறு சிவன் ஐயாறப்பனை  நினை.   இது தான் அந்த பாடல் :

”குந்தி நடந்து குனிந்து ஒரு கை கோல் ஊன்றி
 நொந்து இருமி ஏந்தி நுரைத்து ஏறி வந்து உந்தி
 ஐயாறு வாயாறு பாயா முன் நெஞ்சமே
  ஐயாறு வாயால் அழை”

பட்டினத்தாரை  பற்றி சொல்லவே வேண்டாம்:
எருமை வாகனம் ஏறி  கையில் பாசக் கயிறோடு காலன்  நெருங்குவதற்கு முன்னால்  எதிரே பஸ்  வருவது தெரியாமல் கண் பஞ்சடைத்து போகும் முன்பே,  வாயில் ஊற்றிய பால் தொண்டைக்குள் இறங்காமல் கடைவாய் வழியே வழிவதற்கு முன்பே,  எல்லோரும் ” ஐயோ போயிட்டியா கோவிந்தசாமி என்று மேலே விழுந்து புரண்டு அழுவதற்கு முன்பே,  ”எடுத்துக்கொண்டு”  போய்  நெருப்பில் சுடும் முன்பே,  குற்றால நாதா  உன்னை ஒருதரமாவது, ஒருவேளை யாவது , ஒரு நாளைக்காவது நினைக்க வேண்டாமா?  என்று  குற்றாலநாதர் சந்நிதியில் அப்பர் பாடியது: 

”காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !”

மரணத்தருவாயில் இந்திரியங்கள் கலங்கி விடும், நினைவு தப்பும்,  அங்கங்கள், அவயவங்கள் வேலை செய்யாது.  மனம் எங்கோ நிலையில்லாமல் பறந்து தவிக்கும். அறிவு தெளிவிழக்கும் .  அதற்கு முன்னே  பகவானே  என்னை  மன்னித்தருள் என்று வேண்டிக் கொள்ளவேண்டாமா  

”நினைமின் மனமே! நினைமின் மனமே!  சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனைநினைமின் மனமே ! நினைமின் மனமே !! ….என்கிறார்.
நினைமின் மனனே, நினைமின் மனனே    சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே, நினைமின் மனனே  அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க.
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; ”

ஒரு ஆழ்வார்  அப்போதைக்கு இப்போதே சொல் நாராயாணா எனும் நாமத்தை என்று ஞாபகப்  படுத்துகிறார்.

”ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13 APPAR.

சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது என்று பொருள் .  எனக்கு சொந்த ஊரு  மானா மதுரை, மந்தைவெளி  என்று என்னென்னமோ பேர் சொல்லி அந்த ஊரையே  காசு கொடுத்து வாங்கி   வேலி  போட்டு வைச்சமாரி பேசுகிறோம். அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு, மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வாடகை  ஓட்டு  வீடு இருக்கும். கேட்டா அந்த ஊரே “சொந்த ஊரு” அப்படின்னு சொல்லறோம் .   அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு  அலைஞ்சு கிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம்  நிரந்தரம் கிடை யாது.  பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும் புகழும் ஒரே நாளில் போய் விடலாம். “அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே”என்று சொல்லும்படி பேப்பரில்  யூட்யூபில்  எவனெவனோ  நிறைய  எழுதறான். பொண்டாட்டி பிள்ளை எல்லாம் மாருல அடிச்சிண்டு அழும், அப்புறம்  ரசம் சாதம் சாப்பிட போயிடும். 

பிள்ளை ”எப்போடா  இந்த வாத்தியாரு உடுவாரு” என்று  மொட்டைத்தலையோடு,  ,நெருப்பு சட்டியை தூக்கிக் கிட்டு ஈர வேஷ்டியோடு நடப்பான். கச்சி யேகம்பனை  நினையுங்கடா இப்பவே  என்கிறார்  பட்டினத்தார்.  ஆமாம்  அம்புட்டு தான். படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை பார்க்க அமெரிக்கா போய் விடுவார்களே . கிழம் கட்டை எல்லாம் அனாதை விடுதிலே  தான்.  சொத்து பத்து எல்லாம் நிரந்தரம் அல்ல. எவனோ பேர் மாத்தி எடுத்துக்கிறான். செல்வம் என்றாலே “செல்வோம்” என்று தானே அர்த்தம். நேற்றுஇருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை.  நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை அயல் , யாரும் சதம் அல்ல  பின்னே  எது சாஸ்வதம்?  பரமேஸ்வரன்,  ஏகாம்பரநாதன் திருவடிகள்  தான்.  கச்சி ஏகம்பனே நீ தாண்டா நிரந்தரம்.  இப்போது மறுபடியும்  இரண்டு தபா , மேலே சொன்ன பாடலை படித்துப் பாருங்கள். அர்த்தம் நல்லா புரியும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *