RAMAKRISHNA PARAMA HAMSA – J K SIVAN

பார் புகழும் பரமஹம்சர்  – நங்கநல்லூர்  J K  SIVAN
ராமனும்  கிருஷ்ணனும்  ராமக்ரிஷ்ணரும்
ராமக்ரிஷ்ணரைப் பற்றி எழுதும்போது துப்பறியும் கதை, சமூக  நாவல் மாதிரி ஒன்றோடொன்று தொடர்பு கொண்டதாக  வரிசையாக  தொடர் நாவல் மாதிரி எழுத வேண்டிய அவசியமில்லை. அவர் எதிலும் எவரோடும் ஒட்டாதவர். ஆகவே அவர் சரித்திரமும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு தொடரவேண்டாம். ஒவ்வொரு சம்பவமும்  அனுபவிக்க அற்புதமானது என்பதால் வெவ்வேறு சம்பவங்களை ஒன்றன் பின் ஒன்றாக  வெளியிடுவது தான் சரி  என்று எனக்கும் பட்டது. இதோ ஒரு காட்சி .
தக்ஷிணேஸ்வரத்தில்  காளி  கோவிலில் யாருமே இல்லை.காலை  பத்து மணி ஆகிவிட்டது. நிசப்தமான அமைதி. கோயில் அருகே கங்கை ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறாள்.  மரங்களில் காற்றசைவால் இலைகள் கிளைகள் உரசி ஏற்படுத்தும் சப்தத்தின் பின்னணியில்  சில  பறவைகளின் ஆனந்த  சங்கீதம். காலையில் எழுந்து பாராது இரை  தேடி தானும்  உண்டு,  தன்  குஞ்சுகளுக்கும் கொடுத்து  பசி தீர உண்டு ஆனந்தமாக  பாடுகின்றன.   சிலு சிலுவென்று  குளிர்ந்த காற்று எங்கும்  வீசி காற்றில்  நறுமண மலர்களின் வாசனை மனதை கிளுகிளுக்க வைத்தது.
கண்மூடி ஆழ்ந்த த்யானத்தில் ராமக்ரிஷ்ணருக்கு   உள்ளே   ஆலய மணியின்  ஓசைபோன்ற  ஓம்  என்ற  அனாஹத சப்தம் நெஞ்சில் கேட்டது. உலகம் உருளும் சப்தம் எதிரொலித்தது.  உள்ளே  ஒரு பூகம்பமே  நடந்து கொண்டிருந்தது. ஆஹா  அஷ்டாங்க சித்த யோகம் பலித்தது.  தெய்வீக  அன்னை  பாவதாரிணியின் யின் உருவமொன்றே அவர் மனதில் பதிந்தது அவர்  இந்த உலகத்திலேயே இல்லை.
சிலை  போன்று அமர்ந்திருந்த ராமகிருஷ்ணரின்  மனதில் ஒரு காட்சி.  ராமகிருஷ்ணர்  விடிகாலையில்  கங்கைக்கரையில் தனியாக நிற்கிறார். கங்கையையே  வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்.  ‘ஓ’ வென்ற பேரிரைச்சலுடன் கங்கை கொப்புளிக்க அதிலிருந்து திவ்ய சுந்தரியாக ஒரு பெண் பூரண கர்ப்பவதியாக வெளியேறிஅவர் இருந்த பஞ்சவடியை நோக்கி நடந்து வந்தாள் .  அழகிய முகத்தில் புன்சிரிப்பு.    அங்கே பிரசவித்தாள்.  சிசுவை அரவணைத்தாள் . ஐயோ இதென்ன? என்ன காரியம் செய்கிறாள் அவள்? திடீரென்று சிவந்த கண்களோடு தொங்கிய நாக்கோடு கூறிய பற்களை நறநறவென்று கடித்தாள் . அந்த சிசுவை வாயருகே  கொண்டு சென்றாள் . ஒரே கடி.   சிசுவின் ரத்தத்தை உறிஞ்சினாள். அந்த சிசுவை ஒரே வாயில் விழுங்கினாள். நடந்தாள் . கங்கையில் இறங்கினாள் .மறைந்தாள்.”  ராமகிருஷ்ணர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.    அவர் உடலிலிருந்து குண்டலினி சக்தி உயிர் பெற்றது.   தூங்கி கொண்டிருந்த  சர்ப்பம் வளைந்து நகர்ந்தது. மேலே எழும்பியது.  சுழுமுனை  கீழிருந்து மேல் நோக்கி குண்டலினி பாதையில்  ஊர்ந்து மேலே சென்றது. ஆறு ஸ்தானங்களில் நின்றது.  சஹஸ்ராரத்தில், ஆயிரம்  தாமரை  இதழ்களில் சென்று  குண்டலினி ஐக்யமானது.  ராமகிருஷ்ணர் சமாதி நிலையில் ஆழ்ந்தார்.
”இனி உன்னைத்  தேடி நிறைய சீடர்கள் வருவார்கள். அவர்களுக்கு வழி காட்டு” என்று ஏதோ அவர் உள்ளே  சொல்லியது.

பக்தியில் மூன்று வகை.  தமோ, ரஜோ, சாத்விக பகுதிகள். பக்திமானாக இருந்தும் அவனிடம் அதிகாரம், கர்வம், கோபம், முதலானவை தென்பட்டால் அவன் தமோ குண பக்தன்.  செல்வம் பெற, உலக சுகங்கள் பெற கடவுளை வேண்டும் பக்தன் ரஜோ குண பக்தன்.  உலக விருப்பு வெறுப்பு அற்று பகவானை திருப்தி பண்ண நினைத்து, பூரண  விஸ்வாசம், எல்லோரி டமும் அன்புடன்  வேண்டுபவன் சத்வகுண பக்தன்.
இந்த   எதுவும் இன்றி, மனம் முழுவதுமாக  இறைவனை மட்டுமே நினைந்து தன்னை இழப்பவன் பூர்ண பக்தன்.  அவன் தான் ‘ இந்திரலோக மாளும்  அச்சுவை பெறினும் வேண்டாதவன்’  . எந்த நிலையிலும் கடவுள் ஒருவரையே மூச்சாக கொள்பவன். வைதிக பக்தி  சாஸ்த்ர விதிகளுக்குட்பட்டது.  இப்படி உபாசிப்பவன், ஸ்தோத்ரம், பிரார்த்தனை, விரதம் உபவாசம் பஜனைகளில் ஈடுபடுபவன்.   அதி தீவிர கடவுள் சிந்தனை ஒன்றே எங்கும் எதிலும் என்றும்  கடவுளே  என  அவனை எண்ணவைத்து மாற்றும். உலக  சம்பந்தமில்லாத தெய்வீகன் ஆகிவிடுவான்.  அவனுக்கு தந்தை, தாய், மனைவி, மக்கள், சுற்றம் எஜமானன், வேலைக்காரன், நண்பன் எல்லாமே கடவுள் தான்.  ராமகிருஷ்ணர்  இந்த உறவு முறையில்  தான்  பவதாரிணியைத்   தன் தாயாக கண்டார்.
கோகுலம் பிருந்தாவனத்தில் கண்ணன் வாழ்ந்த காலத்தில்   கோபியர்     ஐந்து ஆறு வயது கண்ணனை தமது வாழ்வின் ஜோதியாக கண்டனர். அவர்களது தூய அன்பு அவனை கட்டுண்ட மாயனாக பண்ணியது. தீராத அந்த விளையாட்டுப் பிள்ளை அவர்கள் மனதில்  ஆரா அமுதென இடம் பெற்றான்.

நாட்கள் நகர்ந்தன.  தக்ஷிணேஸ்வரம் என்ற பெயர் பலர் நாவில் இடம் பெற்றது. 1864ல் ஒரு வைணவ சந்நியாசி, ஜடாதாரி, என்று அழைக்கப்பட்டவர் ஒருவர்  அங்கே வந்தார். அவர் சிறந்த ராம பக்தர். ராம்லாலா என்ற சிறிய விக்ரஹம் அவருடைய உயிர் மூச்சாக அவருடன் எப்போதும் இருக்கும். அதற்கு பூஜை செயது உபசரித்து விட்டு தான் நீர் கூட பருகுவார். தாய் கௌசல்யா எப்படி ராமனிடம் வாத்சல்யம் வைத்திருந்தாளோ  அதில் இம்மியளவும் ஜடாதாரியின் பாசமும் நேசமும் ராம்லாலாவிடம் குறையவில்லை.”வாடா  ராம்லாலா  குளிக்கலாம். இதோ பார் அருமையான குளம், வா  இதைப் பார் எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த மண்டபம். இங்கே அமர்ந்து சாப்பிடுவோமா…. போதும் பேசினது. நேரம் ஆகிவிட்டது. குழந்தே நீ தூங்கவேண்டும், வா உன்னை தோளில் சாத்தி முதுகில் தட்டி பாடி தூங்க பண்ணுகிறேன்.” இந்த வகை நேருக்கு நேர்  பக்தி ராம் லாலாவோடு.

இப்படி இணை பிரியாத ராம்லாலாவை ஜடாதாரி என்ன பண்ணினார் தெரியுமா? ஒருநாள் ராமக்ரிஷ்ணரிடம் வந்தார்.
”சுவாமி இந்தாருங்கள். என் வாழ்வின் லக்ஷிய சொத்து. ராம்லாலா. இவன் இனி உங்களிடம்.”  

கண்களில் நீர்ப்  பெருக்கு.  வாய் பேசமுடியாமல் மூச்சு த்  திணற ராம்லாலாவை ராமகிருஷ்ணர் கைகளில் திணித்துவிட்டு விடுவிடுவென்று புறப்பட்டார் ஜடாதாரி.

ஒன்றும் பேசாமல் கையில்  ராம் லாலாவை  வாங்கி கொண்ட ராமகிருஷ்ணர் கனவில் ஒருநாள் ராமர் தரிசனம் தந்தார். ராமன் தான் கிருஷ்ணன், அவனே ப்ரம்மா, சிவன், முத்தொழிலின் காரணம், அகண்ட பெருவெளி, எதுவும் எங்கும், எதிலும் அவனே என்ற ரகஸ்யம் மனதில் பளிச்சிட்டது.  ராம்லாலாவை தனது செல்லக் குழந்தையாகவும், தன்னை அவன்  தாயாகவும்  பாவித்தார்  ராமகிருஷ்ணர். தன்னை பவதாரிணியின் சேவகியாகவும்  கிருஷ்ணனின் கோபியரில் ஒருவளாகவும் மாற்றிக் கொண்டார்.   அவரது நடை உடை பாவனை பேச்சு எல்லாவற்றிலும் பெண்மை  தாய்மை கலந்து இருந்தது.  மாதுர்  பாபு  பெண்கள் உடை, நகை எல்லாம்  ராமகிருஷ்ணருக்கு அளித்தார்.   ராமகிருஷ்ணர்  அவற்றை அணிந்து கொண்டார்.  இரவு பகலாக கிருஷ்ணனும் அவரோடு கலந்து பேசி உறவாடி  பிருந்தாவன வாழ்வு தந்தான்.  ராதாவை அடையாமல் கிருஷ்ணனை அடைய  முடியாதே . ராமகிருஷ்ணர் ராதையை நாடினார் அடைந்தார். அவர் உடலில் ராதை குடிபுகுந்தாள்.

பிற்காலத்தில் ஒரு நாள் இது பற்றி பேசும்போது ”ஆஹா, ராதையின் அழகு வர்ணிக்க முடியாதது.  அவளுடைய  இனிமையான குரல்,நளினம்,   பாசம், நேசம், பிரேமை எல்லையற்றது. இளம் மஞ்சள் அவள் நிறம். அவள் தன்னை மறந்தவள். கண்ணனாகவே தன்னைக்  கருதியவள்.  கண்ணனாகவே ஆனவள்.   பரமஹம்ஸர்    உணர்வை, பாவத்தை (bhavam ) பெற்றார்.

”மஹா பாவம் (bhavam ) என்பது பக்தியின் உச்சி. 19 வித உணர்ச்சிகளை, உணர்வுகளை கொண்டு இறைவனை தன்னிலையாக்கிக் கொள்வது. ராதையிடம் அது இருந்தது. என் இந்த உடலிலும் அது எல்லாமே வெளிப்பட்டது ”  என்று  பின்னர் ஒருமுறை பரமஹம்ஸர்  சொல்லியிருக்கிறார்.  ராதை பெற்ற க்ரிஷ்ணானுபவத்தை ராமக்ரிஷ்ணரும் பெற்றவர்.  ராமனும் க்ரிஷ்ணனும் அவருள் கலந்ததாலேயே அவர் இயற்பெயர் கதாதர் மறைந்து அவர்  ”’ராமகிருஷ்ணர்” ஆகியிருக்கவேண்டும்.

ராதாகாந்த்  ஆலயத்தில் ஒருநாள் பாகவதம் உபன்யாசம். கேட்டுக்கொண்டே இருந்த ராமகிருஷ்ணர் அப்படியே இன்ப  சாகரத்தில் மூழ்கி சமாதி நிலை அடைந்தார். கிருஷ்ணனை நேரில் கண்டார்.  கண்ணனின் தாமரைப் பாதங்களிலிருந்து ஒரு ஒளி கீற்று கயிறாக மாறி அவரை அடைந்து அவரை  கண்ணனோடு பிணைத்தது.   அப்புறம் எல்லோரிடமும் அவர் சொன்ன வார்த்தை ”புரிந்து விட்டது.   பகவான், பக்தன், பாகவதம்” வெவ்வேறு அல்ல   எல்லாம் ஒன்றே தான்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *