THIRUMALA VENKATESWARN – J K SIVAN

வேங்கடவன்   –   நங்கநல்லூர்  J K SIVAN
ஒவ்வொரு சனிக்கிழமையும்   வெங்கடேஸ்வரனுக்கு உகந்தநாள்.   என்றுமில்லாத கூட்டம்  திருமலை மேல் அன்று கூடும். எங்கிருந்தெல்லாமோ ‘ கோவிந்தா’  சப்தம் காதைத்  துளைக்கும்.  அது நாராசமல்ல. நாத ஸ்வரம். மனதில் பக்தியை ஊட்டி மெய் செலிர்க்க வைக்கும் பரவசம்.
திருப்பதி வெங்கடேசனுக்கும்  நமக்கும்  என்ன வித்யாசம்?  நாம்  ஒரு சின்ன விஷயம் நடந்தாலும்  அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டு பொறுமையாக நிதானமாக நடப்பவர்கள் இல்லை.   திருப்பதி வெங்கடேசனின் சரித்திரத்தை படித்தேன்.  பெரிய புத்தகம். அதில் அவன் எத்தனை மாறுதல்கள் தன்னைச்சுற்றி நடப்பதை சிரித்த முகத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறான், துளியும்  லக்ஷியம் பண்ணாமல் பக்தர்களுக்கு  தனது கருணையை வாரி வழங்கி வருகிறான் என்று புரிந்து அவனை சாஷ்டாங்கமாக மானசீகமாக வணங்கினேன்.

பல்லவ ராஜ்ய  சிற்றரசர்கள், மேலை கங்க வம்ச ராஜாக்கள் 4ம்  நூற்றாண்டில் திருப்பதியை தமது ஆட்சிக்குள் வைத்திருந்தார்கள். கங்க மன்னன்  ஹரிவர்மனுக்கு  பல்லவன்  முதலாம்  சிம்மவர்மன்  முடிசூட்டி   திருப்பதி பகுதியில் தொந்தரவு கொடுத்த  பாணர்களை நொறுக்க கட்டளையிட்டான். அதற்குள்  சிம்மவர்மன் வம்சத்தில் பிளவு. ரெண்டாம் சிம்மவர்மன் மகன், மாரசிம்மன், சகோதரன் விஜயாதித்யன் ஆகியோர்  பல்லவராஜ்யத்தை துண்டாக்கினார்கள். புங்கனூர்  செப்பேடுகளில்  உத்தமச்சோழன் (வேறு பெயர் செண்பகாச்சிபதி  நாயனார்) , கங்கன் அல்லது வீர கங்கன்    வேட்டும் அமராபரணம் . செல்வ கங்கன், உத்தம சோழ கங்கை பத்மதேவன்  என்றெல்லாம் பெயர்கள்  இந்த ஆலயத்துக்கு  காணிக்கை செலுத்தியவர்கள் என்று காண்கிறது.  இது தவிர  நொளம்பர்கள், பல்லவர்கள், ராஷ்டிரகூடர்கள், வைதும்பர்கள், ஹோய்சாலர்கள் , சாளுக்கியர்கள், பாண்டியர்கள், விஜயநகர ராயர்கள்,  என்று எத்தனையோ  வம்சங்கள் ஆண்டபோதெல்லாம் திருமலை வெங்கடேசனுக்கு காணிக்கை வந்து கொண்டே இருந்தது.  தொண்டைமண்டலம்  சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலம்.  எத்தனையோ சரித்திர சம்பந்த கல்வெட்டுகள் செப்பேடுகள் திருப்பதி ஆலயத்தில் வைத்திருக்கிறார்கள். கோவிலுக்கு தீங்கு நினைத்தவர்கள்  நல்லது செய்தவர்கள் அனைவரையும் வாழ வைத்த, என்றும் வாழவைக்கும் வள்ளல்  வேங்கடேசன்.
அநேக  ஆழ்வார்கள்  திருமலை ஏறி வந்து  வெங்கடேசனை பாசுரங்களால் திரு மஞ்சனம் செய்திருக்கிறார்கள். முக்கியமாக அங்கேயே வாழ்ந்தவர்  திருமலை நம்பி எனும் ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்யர் .  ஸ்ரீ ராமானுஜரின் மாமா.  ராமானுஜர் மூன்று முறை இங்கே நடந்து வந்திருக்கிறார். மாமாவிடம்  ராமாயணம் கற்றுக்கொண்டார்.   102 வயதில் கோவிந்தராஜரை  பிரதிஷ்டை செய்து திருப்பதியை   சீர் மிருந்த நகரமாக  மாற  காரண புருஷர் ராமானுஜர்.
முஸ்லிம்களின்  ஆட்சி வந்த போது தான் ஹிந்து கோவில்கள் நாசமடைய துவங்கின.  கொள்ளைக்கார  முஸ்லிம்களை தொடர்ந்து வெள்ளைக்கார ஆக்கிரமிப்பு.
கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு பின்பு அவர் சகோதரன் அச்சுத்தராயன்  சந்திரகிரி அரண்மனைக்கு  அதிபதியானான். திருமலைக்கு வந்து வெங்கடேசன் சந்நிதியில் மனைவி  வரதாஜி,  மகன் குமார வெங்கடாத்ரி  புடைசூழ  முடி சூட்டிக் கொண்டான்.  சிறந்த  வெங்கடேச பக்தன்.  மகன் பேரே  வெங்கடாத்ரி.  வேறென்ன சொல்லவேண்டும்!  வெங்கடேசனுக்கு  ஆபரணங்கள் நிறைய கொடுத்தவன். 26.12.1535 அன்று  ஒரு வெங்கடேஸ்வர சுவாமி – அலமேலு மங்கா தாயாருக்கு  ஒரு புது விழாவை அங்கே பழக்கத்துக்கு கொண்டு வந்தவன் . அதன் பெயர்  ஸ்ரீ லக்ஷ்மி தேவி  பண்டிகை.  இன்னும் கொண்டாடு கிறார்களா???
அப்புறம்  சுல்தான்கள் தலை எடுத்தனர். அவர்களை  திருமலைராயன் வென்றான். அவன் பெயரே சொல்கிறது அவன் பாலாஜி பக்தனென்று. அவன் பெயரால்   திருமலை ராயன் மண்டபம்  எனும்  ஊஞ்சல் மண்டபம் இன்றும்  வேங்கடேசன் ஆலயத்தில் இருக்கிறது.  வரதராஜன் (காவேரி வல்லபன் என்றும் பெயர்) எனும்  க்ரிஷ்ணதேவராயர் மாப்பிள்ளை வெங்கடேசனுக்கு 312  பொற்காசுகள் அளித்திருக்கிறானென்று பட்டயம் சொல்கிறது.   தொல்காப்பியம்  திருமலையை வேங்கடம் என்று பாடுகிறது.  முதல் ஆழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர்  திருமலை வேங்கடேசனை  தரிசித்து பாசுரங்கள் இயற்றியவர்கள். பலகோடி  நூறாயிரம் பக்தர்கள்  ஏழுமலையானை நம்பி வாழ்கிறார்கள். எங்கள் குலதெய்வம் அவன். 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *