THIRUMALA SWAMI – J K SIVAN

திருமலை சாமி –  நங்கநல்லூர் J K SIVAN

ஒவ்வொரு சனிக்கிழமையும்   வேங்கடேசனைப் பற்றி  ஒரு வரியாவது எழுதுவது என் வழக்கம்.   அவற்றில் சிலவற்றை வெளியிடமாட்டேன், சிலதை எல்லோருக் கும் அனுப்புவேன்.  எப்படி தோன்றுகிறதோ அப்படி.   ஸ்ரீனிவாசன்  எங்கள் குலதெய்வம்.

 ஆனால், சனிக்கிழமை மட்டுமல்ல  எல்லா நாளும், எப்போதுமே  என்  மனக்கண் முன் நிற்பது  கண்ணை மறைத்து  மூக்கு மேல் பாகம் வரை வெள்ளை பட்டையாக   நாமம்  முகவாய்கட்டையில்  கீழ் உதடுக்கு கீழே  மறுபடியும் வெள்ளையாய் காப்பு.    ஆஜானு பாஹுவாக  நிற்கும்  கருப்பு  நிற   அபய வரத  ஹஸ்த   வெங்கடேசன்.  நம்மைக்  காக்க  பல யுகங்களாக ஏழுமலை ஏறி  உயரத்தில்  கிழக்கே பார்த்து  நிற்கும்  கலியுக வரதன்.  பணக்கார பகவான் .  திருப்பதி திருமலை  வேங்கடேசன். அவர் இருக்கும் கர்ப்ப  க்ரஹத்தின் பெயரே  ஆனந்த நிலையம்.  எவ்வளவு பொருத்தமான பெயர்! 

அவனுக்கு  ரொம்ப ரொம்ப  கிட்ட   2-3 அடி   தூரத்தில் நின்று  யாரும் விரட்டாமல் அரைமணி நேரத்துக் கும் மேலே  கணீரென்று அவன் மேல்  அனந்தசயனம் ஐயங்கார்  சுப்ரபாதம் பாடும்போது அவரோடு பெருமாள் அருகே   விடிகாலை என் குடும்பத்தோடு நின்றேன் அது 1975ல்.அது இனிமேல் அப்படிப்பட்ட  பாக்யம்  எந்த ஜென்மத்திலும் எனக்கு கிடைக்கப் போவதில்லை.    

பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க ,  மராட்டிய , ராயர்   ராஜாக்கள் பராமரித்து போற்றிய  பெருமாளின் ஆலயம் ஏழு மலைகள் மேல் நிற்கிறது.  வெங்கடாசலபதி, திருப்பதி, திருமலை  மஹாத்மீயம் பற்றி எத்தனையோ  புராணங்கள் சொல்கிறது. முக்யமாக  வராஹ புராணம்,  பவிஷ்யோத்தர புராணம்,  பத்ம புராணம், கருட புராணம், ப்ரம்மாண்ட  புராணம், மார்க்கண்டேய புராணம்,  ஹரிவம்சம், வாமன புராணம், ப்ரம்ம புராணம், ப்ரஹ்மோத்தர புராணம்,  ஆதித்ய புராணம்,  ஸ்கந்த புராணம் என்று பல நூல்களை சொல்லலாம்.  தினமும் லக்ஷம் பக்தர்கள் கூடுகின்ற ஸ்தலம்.  விஷ்ணு ஸ்வயம்பு க்ஷேத்திரம். வைகானச முறை  வழிபாடு. 106வது திவ்ய தேசம். சென்னையிலிருந்து  138  கி.மீ.   ஒன்றரை ரெண்டு மணி நேரத்தில்  ஜாமென்று போய்விடலாம். ஆனால்  அங்கே போனதும், பல மணி நேரங்கள் கூண்டு  கூண்டாக  அடைத்து  கும்பலை கண்காணித்து  சேதமில்லாமல், பாதகமில்லாமல் தரிசனம் செய்விக்க  வசதிகள் செய்துள்ளார்கள்.    கோவிந்தன் ஆலயம் போல  சிறப்பு மிக்க  அநேக பக்தர்கள் மொய்க்கும்  ஆலயங்கள் உலகத்தில்  வேறில்லை. டிக்கெட் வாங்கி பார்த்தாலும்  சில மணி நேரமாவது நிற்காமல்  பாலாஜியைப் பார்க்க நினைப்பது பகல் கனவு.  

ஏழு மலைகளும் ஆதிசேஷனின் ஏழு  தலைகள் படம் பிடித்து நிற்பது போல் என்பார்கள்.  அந்த ஏழுமலை களுக்கும்  சேஷாத்ரி, நீலாத்ரி , கருடாத்ரி, அஞ்சனாத்ரி, ரிஷபாத்ரி, நாராயணாத்ரி,  வேங்கடாத்ரி  என்று பெயர்கள். வேங்கடாத்ரி  ஏழாவது  மலை.  அதனால் தான் அவன்  ஏழுமலையான், வேங்கடேசன் . வெங்கடாசலபதி. வெங்கடேசன்  கலியுகம் முடியும்  வரை நம்மைக்  காக்க  அங்கே  நிற்பார் என்கிறார்கள்.  அதனால் தான் கலியுகவரதன்.  திருமலைக்கு ஆதி வராஹ க்ஷேத்ரம் என்று பெயர்.

வெங்கடேசனைப்பற்றி நீளமாக  புராணம் நிறைய சொல்கிறது. நாம் ஒரு குட்டி  பாராவில் அதை அறிவோம்.

கலியுகத்தில் நாரதர் மற்ற ரிஷிகள்  யாகம் செய்யும்  இடத்துக்கு வந்து அவர்களிடம்  நீங்கள்  த்ரிமூர்த்தி களில் யாருக்கு உங்கள்  யாக பலனை அளிப்பீர்கள்? என்று கேட்கிறார்.  மூவரில் எவர் சிறந்தவர் என்று முடிவெடுக்க  ப்ருகு  மஹரிஷியை  மற்ற ரிஷிகள் விண்ணுலகம் அனுப்பினார்கள்.  சிவனும்  பிரம்மாவும் சரியாக அவரை வரவேற்கவில்லை என்று கோபித்து சபித்து, ப்ருகு  நேராக  விஷ்ணுவிடம் போகிறார்.  ப்ருகு முனிவர் காலில் ஒரு கண் உண்டு. அதனால் அவருக்கு அதிக சக்தி  யென்று கர்வம் இருந்தது.  இது விஷ்ணு வுக்கு தெரியும்.   ப்ருகுவை உபசரித்து வரவேற்காமல்  மஹாலக்ஷ்மி மடியில் தலை வைத்து விஷ்ணு  சயனக்கோலம் இருப்பதைக் கண்டு  கண்ணுள்ள காலால் விஷ்ணுவின் மார்பில் ”ணங்” என்று ஒரு உதை விட்டார்  மஹரிஷி.   விஷ்ணுவோ  ரிஷியைக்  கோபிக் காமல்  உதைத்த அவர் காலை தடவி  ”அடாடா  வலிக்குமே”என்று வருந்தி அந்த மூன்றாம் கண்ணை அழித்து விடுகிறார். 

நாராயணன் மார்பில் உறையும் தன்னை உதைத்த ரிஷியை கோபிக்காத  விஷ்ணு   மேல்  கோபம் கொண்டு மஹாலக்ஷ்மி பூலோகம் செல்கிறாள். அவளைத்தான் கோலாப்பூரில்  தவம் செய்யும்   மஹாலக்ஷ்மியாக  தரிசிக்கிறோம்.  திருமகளாக  வழி படுகிறோம்.  அவளைத் தேடி  நாராயணன்  திருப்பதிக்கு வந்து திருமலையில்  ஸ்ரீனிவாசனாக நிற்கிறார்.

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியில் 68 வது ஸ்லோகமாக  ஒரு அற்புத பாசுரம்  வெங்கடேசன் மேல் இயற்றியுள்ளார்  தெரியுமா?  

”உணர்வார்   ஆர்  உன் பெருமை ஊழி தோறு ஊழி
உணர்வார்  ஆர்  உன் உருவம் தன்னை உணர்வார் ஆர் விண்ணகத்தாய் மண்ணகத்தாய் வேங்கடத்தாய் நால்  வேதப்
பண்ணகத்தாய் நீ கிடந்த பால் –68 ”-

என்னப்பனே,  பரமபதத்திலெழுந்தருளி உள்ளவனே,  இந்த பூமியில் அவதரிப்பவனே!  திருமலையில் நின்றருள்பவனே!
ஸ்வர ப்ரதானமான நான்கு வேதங்களாலும் அறியப் படுபவனே!  இத்தகைய  உன்  பெருமையை கால முள்ளவரை  எவ்வளவு தான்  ஆராய்ச்சிகள் நடத்தினாலும்  யாரால் உணர முடியும்?  உனது திவ்ய   ஆத்ம  ஸ்வரூபத்தை எவரால் முழுமையாக உணரமுடியும்?   நீ பள்ளி கொண்டிருக்கும்  திருப்பாற்கடல் ஒரு 108ல் ஒரு திவ்ய தேசம்.  அதையே யாராலப்பா உணரமுடியும்.?    பொய்கையாரே  முதலாழ்வார்களில் ஒருவரே இப்படி சொல்லும்போது நாம் அவனை உணர ஒரே வழி இரு கரம் சிரம் மேல் கூப்பி ”கோவிந்தா கோவிந்தா  கோவிந்தா”  என்று ஆத்மார்த்தமாக சொல்வது ஒன்று தான்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *