RECALLING THE PAST….. J K SIVAN

2.பழங்கதை  –  நங்கநல்லூர்  J K  SIVAN

என்  அம்மா வழி தாத்தா பிரம்மஸ்ரீ  புராணசாகரம்  வசிஷ்ட பாரதிகள் இளவயதில் கண் பார்வை இழந்தாலும்  அவரது புலமை, ஞாபக சக்தி அவரை கடைசி வரை  சிறந்த  கம்ப  ராமாயண, இதிகாச, தமிழ் இலக்கிய  உபன்யாசகராக சேவை புரிய வைத்தது ஈஸ்வர அனுக்ரஹம்.

எனது மாமாக்களில் ஒருவர்  வெங்கட்ராமய்யர்  தாத்தாவை ஜாக்கிரதையாக எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்றவர்.  மஹா பெரியவாளுக்கு தாத்தாவின்  புராண உபன்யாசங்கள் பிடிக்கும். மடத்தில் வந்து உபன்யாசம் பண்ண சொல்வார்.  புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் இன்றும் இருக்கும்  என் மாமாவின் இல்லத்தில், அந்த காலத்தில் தாத்தா வசித்தபோது மஹா பெரியவா  விஜயம் செய்திருக் கிறார்.

சங்கீத திரி மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்தவர்  என் தாத்தாவின் தாத்தா, தோடி  சீதாராமய்யர்.   அவர் அற்புதமாக பாடும் தோடி ராகத்தை வீட்டுச் செலவுக்கு பணம் இன்றி உடையார் பாளையம்  ஜமீன்தாரிடம்  13 ரூபாய்க்கு ( ஒரு வராகன்) அடகு வைத்து தஞ்சாவூர்  மராத்திய ராஜாவால் மீட்கப்பட்டு மீண்டும் தோடி ராகம் பாடிய  தோடி சீதாராமய்யரின் பெயரை தாத்தாவின் மூத்த சகோதரருக்கு வைத்திருந்தது.  அடுத்தது ரெண்டு பெண்  குழந்தைகள், ஒன்று  பிறந்து சில நாட்களில் இறந்தது. அடுத்த பெண் குழந்தைக்கு சாரதா என்று பெயர்  வைத்தார்கள். அப்புறம்  நான்காவது குழந்தையாக பிறந்தவர் தாத்தா. ஆங்கிரஸ  வருஷம் வைகாசி 17, திங்கட்கிழமை.  மூல நக்ஷத்திரத்தில் ராத்திரி   தாத்தா  பிறந்தார்.  

அவர் பிறந்த சமயம்    வாசலில் தஞ்சாவூர் ஸப்தஸ்தான  உத்சவர்   வசிஷ்டேஸ்வர  சுவாமி பல்லக்கில்  தெருவில் வந்த போது  ஜனனம்  என்பதால்  வசிஷ்டேஸன்  என்று நாமகரணம். பாரதிகள் என்பது குடும்ப பட்டப்பெயர். அவரை உலகம் வசிஷ்ட பாரதிகள் என்றே அறியும்.  இது நடந்தது  கிட்டத்தட்ட   இருநூறு  வருஷங்களுக்கு மேல். 

தாத்தாவின் மூத்த அண்ணா  சீதாராம பாரதி 16வயது வரை ஆங்கிலம் பயின்றார். பிறகு தமிழ் தெலுங்கு முதலிய மொழிகளில் பாண்டித்யம் பெற்றார். சங்கீதம் அவசியமாக அக்காலத்தில் அநேகர் கற்று  தேர்ந்தார்கள் . ஹைதராபாத்  ராஜா  சர்  கந்தசாமி மந்திர்  என்ற பாடசாலையில் சங்கீத ஆசிரியராக இருந்து   ஊர் திரும்பி 20 வயதில்  குடுமியா மலையைச்  சேர்ந்த   ஜானகி அம்மாளை  கல்யாணம் பண்ணிக் கொண்டார்.  அவருடைய  சந்ததிகள் யாரென்று எனக்கு இன்னும் தெரியவில்லை.

தாத்தா  வசிஷ்டரின்  ஜாதகத்தில் வாக் ஸ்தானத்தில்  புதனும்  சுக்ரனும் இருப்பதால் சிறந்த  வாக் சாதுர்யம் இருக்கும், பெருமைகள் சேரும் என்று ஜோசியர் சொன்னது ரொம்ப சரியானது.. அங்கத்தில் ஊனம்  இருக்கும்  என்று சொன்னதும் சரியே.   அவர் பின்னர் கண் பார்வை இழந்ததை  ஜோசியம்   சரியாக சொல்லி இருக்கிறது.  சீதாராம பாகவதர்  தாத்தாவோடு அநேக  பிரசங்க, உபந்யாஸங்களில் கலந்து கொண்டு  ஊர் ஊராக தாத்தாவுக்கு துணையாக அழைத்துச் சென்றவர்.

எனது முதல் மாமாவிற்கு சீதாராமய்யர் என்று பெயரை  தனது தாத்தா ஞாபகமாக வைத்தார் வசிஷ்ட பாரதிகள்.  அடுத்தவர்  சுப்ரமணிய ஐயர். அட்டிசன்  ADDISONS  கம்பனியில்  உத்யோகமாக இருந்தவர். 

அவர் அலுவலக கட்டிடமும்  நான்  பணி  புரிந்த   மின்சார இலாகா MES  கட்டிடடும் அடுத்தடுத்து  என்பதால்  எனது  18 வயதில் அவரை தினமும்  சாப்பாட்டு  நேரத்தில்  என் ஆபிஸ்  காண்டீனில்  சந்திப்பது வழக்கமாயிற்று.   MES   CANTEEN  அந்த பக்கத்திலேயே  ரொம்ப  பிரபலம்.  சூடான  உயர்ந்த ரக  சிற்றுண்டிகள்  உணவு பொருள்கள்  ரொம்ப  குறைவா ன விலையில்  வழங்கியது.  மவுண்ட்ரோடு  கம்பெனி களில்  ஆபீஸ்களில் வேலை பார்ப்பவர்கள்  கூட  மத்தியானம்  எங்கள் ஆஃபிஸ்  கேன்டீனில் குழுமி கூட்டம்  ஏராளமாக இருக்கும்.  அத்தனை  தின் பண்டங் களும்  ஒரு மணி நேரத்தில்  காலி யாகிவிடும்.  ஆகவே  நாங்கள்  1230 மணிக்கே  கான்டீன்  சென்று வரிசையில் நிற்போம்.   மணி மாமா  ஏதாவது ஒரு அயிட்டம் மட்டும்  சாப்பிடுவார் சூடான காப்பி அவருக்கு  ரொம்ப முக்கியம்.   நான் வீட்டிலிருந்து கொண்டுவந்ததை  ஆர்வத்தோடு  கொஞ்சம் ருசி பார்ப்பார்.  ரொம்ப  நேர்த்தியாக  சமைப்பவர்.  இளம் வயதில் புரசைவாக் கத்தில்  அவர்  இல்லத்தில்  அற்புதமான ருசிகளோடு  பலநாட்கள்  சாப்பிட்டிருக்கிறேன். 

இன்னொரு  மாமா  க்ரிஷ்ணமுர்த்தி அய்யர்.  கிட்டு மாமா  என்று தான் அழைப்போம்.  வருமான வரி இலாகாவில் அதிகாரி.  அதிகம் பேசமாட்டார்.  அவரது உள்ளன்பு  முகத்தில் கொப்புளிக்கும்.   அதற்கு அடுத்த மாமா  வெங்கட்ராமன். உருவத்தில்  சிறியவர்  என்றாலும்  சிரித்த முகமாக காட்சி அளிப்பவர். அரசாங்க அச்சகம் என்று அழைக்கப்பட்ட  GOVT  PRESS ல் உத்யோகமாக இருந்தவர்.  அதிகம் பழக எனக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.  கடைக்குட்டி மாமா  மஹாலிங்கம் எனும் சதாசிவம்.  எனக்கு  மூன்று நான்கு வயது மூத்தவர்  என்பதால் இன்னும்  தொடர்பில் இருப்பவர்.  அற்புதமான  மனிதர். பழைய நினைவு களை சொல்ல இன்னும் எனக்கு இருக்கும் கருவூலம். அவர். 

சித்திகள் : காயத்ரி குடும்பத்தினர்  தி.நகரில் நீலகண்ட மேத்தா  தெருவில் இருந்தபோது அடிக்கடி செல்லும் வாய்ப்பு எனக்கு இருந்ததற்கு ஒரே காரணம் நான் சற்றே தூரத்தில்  வேங்கட நாராயணா  தெருவில்  தியாகராய நகர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வரை படித்ததால்.  குண்டூர் சுப்பையா ஸ்கூல் என்று அதை சொல்வார்கள்.  எங்கள் பள்ளி ஹெட்மாஸ்டர்  T N  சுந்தரம் தான்  ஆங்கில  SSLC பாடங்களுக்கு  லியோ’ஸ்  LEO’S  நோட்ஸ்  வருஷா வருஷம் போடுவார்.  ஒவ்வொரு மாணவனுக்கும்  எங்கள் காலத்தில்  ஆங்கில லியோஸ் நோட்ஸ் புத்தகமும்,  தமிழில்  கோனார் நோட்ஸ் புத்தகமும்  ரொம்ப  அவசியமாக இருந்தது. 

இன்னொரு சித்தி  செல்லம்மா குடும்பத்தினர் அயனாவரத்தில் வெகுகாலம் வாழ்ந்தவர்கள்.  சித்தப்பா  ரயில்வே வெங்கட்ராமய்யர்  என் அப்பாவின்  மாணவராக  நாகப்பட்டினத்தில்  ஹை ஸ்கூலில் படித்தவர்.  கடைசி வரை அப்பாவை பார்க்கும் போதெல்லாம் எழுந்து நின்றுவிட்டு உட்கார்வார்.  அவர்கள் மறைவிற்கு பின் இன்னமும்  தொடர்பில் இருப்பவர்  அவர்கள் மகன்   ராதாகிருஷ்ணன் மட்டுமே. நேற்று கூட பேசினான்.   

என் ஒரே பெரியம்மா  மைனாவதி குடும்பத்தினர்  திருச்சியில் மலைக்கோட்டை  ROKFORT   பகுதியில் பல வருஷங்கள்  வாழ்ந்தவர்கள்.  பெரியப்பா  மாத்ருபூதம் அய்யரை அதிகம் பார்த்ததில்லை.

என் நினைவில் அவர் தோற்றம் இப்படித்தான்: .  கனமான கண்ணாடி போட்டிருப்பவர்களை  சோடா பாட்டில்  கண்ணாடி என்று திக்கான கண்ணாடி போட்டிருப்பவர்களை கேலி செய்யும் வழக்கம் எங்கள் காலத்தில் உண்டு. கருப்பு குடைக்கு  வெள்ளைத் துணி உரை. குடை  மழை  வெயில் காலம்  எதுவானாலும்  இணைபிரியாது  அவருடன் எப்போதும் இருக்கும். அவர் சட்டையில் பித்தனை சுற்றி ஒரு சங்கிலி அதன் ஒரு முனையில் பாக்கெட் கடிகாரம் அது பாக்கெட்டில் இருக்கும்.   அந்த காலத்தில் பாக்கெட்  கடிகாரம்  ஒரு அந்தஸ்து. மோஸ்தர்.  பற்கள் நிறைய காணாமல் போனாலும்  வாய் திறந்து சிரிப்பார். தலையில் சிகை குறைந்தாலும்  அவற்றை ஒன்று சேர்த்து முடிந்து ஒரு சின்ன குடுமி அவரை அலங்கரிக்கும். நெற்றியில் விபூதி எப்போதும் கீற்றாக  இருக்கும். இடையில்  பஞ்ச கச்ச வேஷ்டி தான். தோளில்  நீளமான அங்கவஸ்திரம். என் அப்பா  ஜே கிருஷ்ணய்யரை  உறவினர்கள் எல்லோருக் கும் ரொம்ப பிடிக்கும். 

பழசை நினைத்து எழுதினால்  நேரமும்  போகும். கட்டுரையும் நீண்டு கொண்டே  போகும்.  இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் எல்லோருக்குமே  பழங்கதைகள் ரொம்ப பிடிக்கும்.  என் வாழ்க்கையில் நடந்தது  மட்டும் தான் ஸ்வாரஸ்ய நிகழ்ச்சி என்று நினைக்கவேண்டாம்.  ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் அவர்களது மூத்தோர்கள், முன்னோர்கள் பற்றி நினைத்துப்   பார்க்கும்போது ஒரு வித இனம்புரியாத சந்தோஷம்  கிட்டும். நீங்களும்  முடிந்த நேரத்தில் நினைத்துப் பாருங்கள். அப்புறம் எனக்கு சொல்லுங் கள்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *