MELA KADAMBUR SIVA TEMPLE – J K SIVAN

மேல கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் –
நங்கநல்லூர்   J K  SIVAN 

அரும்பாக்கம்  ஸ்ரீனிவாசனுடன் நான் பயணித்த  எத்தனையோ க்ஷேத்ரங்களில்  ஒன்று இது.  6ஆவது  நூற்றாண்டிலிருந்து  19ம் நூற்றாண்டு வரை அதன் பெயர் திருக்கடம்பூர். கடம்பூர் ஞாபகம் இருக்கிறதா? கடம்பூர் சம்புவரையர், அவர் மகன் கந்தமாறன், மகள் மணிமேகலை, ஒரு இரவு அந்த கடம்பூர் மாளிகையில் வல்லவரையன் வந்தியத்தேவன் நள்ளிரவில் திருட்டுத் தனமாக பார்த்த தேவராளன் தேவராட்டி வெறி நடனம், குரவைக் கூத்து , மதுராந்தகன் பங்கேற்பு, இருளில் சுவற்றின் மேல் மங்கிய நிலவொளியில் தோன்றி மறைந்த முன்குடுமி ஆழ்வார்க்கடியான் தலை ,.. அதே கடம்பூர்  கிராமம் தான். ஆனால் நான் பார்த்தது மேல கடம்பூர். கண்ட காட்சிகள் கதையில் வந்தவை அல்ல, கந்தர்வ லோகத்தில் என்னை கொண்டு சென்றவை…

மேலக் கடம்பூர் செல்ல சிதம்பரம் – காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலையிலும் செல்லலாம். சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே 32 கி.மி சென்றாலும் கடம்பூர் வரும். காட்டுமன்னார்குடி- எய்யலூர் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூர் உள்ளது. கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம். மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம்.

இங்கிருந்து  தென்கிழக்காக சென்றால்  6.5 கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.அங்கே போக நேரமில்லை.  இன்னும்  பொய்க்கவில்லை என்ற வருத்தம்  அதிகம் தான்.

மேலக் கடம்பூர் ஆலயத்தில் சிவனின் பெயர் அமிர்த கடேஸ்வரர். திருக்கடையூரில் உள்ளது போல. அம்பாள் பெயர்  அழகாக இருக்கிறது. ஜோதிமின்னம்மை,    ஸம்ஸ்க்ரிதத்தில்  வித்யுத் ஜோதி நாயகி. காலையில் கலைமகள், மாலையில் அலைமகள், இரவில் மலைமகள் என  முத்தோற்றம் .

நமக்கு முன்பே இங்கே திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும்  ஸ்ரீனிவாசனின்  காருக்காக காத்திருக்காமல் காலின் உதவியோடு நடந்தே வந்து பாடல்களும் பாடி இருக்கிறார்கள். காரில்  வந்தும் எனக்கு பாட தெரியவில்லை.

திருப்பாற்கடலில் இருந்து தேவர்கள் அம்ருதத்தை எடுத்துச் சென்றார்கள்.  போகும் முன்பு  பிள்ளையாரை வணங்க வில்லை.  ஆகவே  விநாயகர் இந்திரன் எடுத்துச் சென்ற அமிர்த கலசத்தை பறித்துச் சென்று விட்டார். கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் மேல கடம்பூரில் விழ , அதிலிருந்து சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.   அதனால் தான் இங்கே சிவன் பெயர்  அமிர்த கடேஸ்வரர்.  இந்திரனின் அம்மா  இந்த க்ஷேத்ரத்தில் சிவனை வழிபட்டவள். அவள் முதுமை கருதி, எளிதாக வழிபட இந்திரன் குதிரைகளைப்  பூட்டி, இக்  கருவறையை இழுத்துச்  செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான். விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்துக் கொண்டார். இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.
தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும்     ”கணேசா என் தவறை மன்னித்து மீண்டும் எனக்கு அமுதத்தை தந்தருள வேண்டும் ” என்று வேண்டினான் இந்திரன் தனது தேவர்களுடன்.

”அதோ இருக்கிறாரே முழுமுதற்கடவுள் சிவன். நேராக அவரிடம் செல்லுங்கள்” என்கிறார் விநாயகர்.
இந்திரன் சிவனை வேண்டினான். இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் அருள் புரிந்தார்.
இந்த விநாயகர் சிலையும் வாதாபியில் இருந்து (சாளுக்கியர் தேசம்) நரசிம்ம வர்மன் காலத்தில் அவனது சேனாபதி பரஞ்சோதியால் (பின்னால் சிறுத்தொண்டர் ) கொண்டுவரப்பட்டது.

மேல கடம்பூர் ஆலயம் சிற்ப  வேலைப்பாடுகள்   அமோகமாக நிறைந்த ஒரு அற்புத க்ஷேத்ரம். தேர் சக்ரங்கள் மண்ணில் புதைந்தது போல் ஆச்சர்யமாக கண்ணைக் கவரும் வண்ணம் சோழ சிற்பிகள் நிர்மாணித்திருப்பதை இத்துடன் இணைத்திருக்கும் படங்களில் காணலாம். அவசியம் சென்று பார்க்கவும்.

கிழக்கு பார்த்த வாயிலில் மூன்று நிலை இராஜகோபுரம். உள்ளே நுழைந்தால் நேரே தெரியும் முன் மண்டபத்தில் நந்தியும், பலிபீடமும். கொடி   மரமில்லை. முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே அமிர்த கடேஸ்வரர் சந்நிதி. வலப்புறம் தெற்கு நோக்கி அம்பாள் ஜோதி மின்னம்மை சந்நிதி. கருவறை தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அற்புதமாக காணப்படுகிறது. கருவறை வெளிப்புறம் பூரா  அதி விநோதமான  சிற்பங்கள். இந்திரன் கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறது. கருவறை பின்பக்க சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.  கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது  இன்னும்  விசேஷம்.

மற்றும் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் சந்நிதிகள். எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். அருண கிரியார் இங்கே வந்து முருகனைப்  பாடி இருப்பதை  இதோ இந்த  திருப்புகழில் அனுபவிக்கலாம்.

71. வாருமிங் கேவீடி தோபணம் பாஷாண
மால்கடந் தேபோமெ னியலூடே
வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார
வாசகம் போல்கூறி யணைமீதே
சேருமுன் காசாடை வாவியும் போதாமை
தீமைகொண் டேபோமெ னடமாதர்
சேரிடம் போகாம லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார மருள்வாயே
நாரணன் சீராம கேசவன் கூராழி
நாயகன் பூவாயன் மருகோனே
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
நாடகஞ் சேய்தாள ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
சூரியன் தேரோட அயிலேவி
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
சூழ்கடம் பூர்தேவர் பெருமாளே

”ஆண்களே,  எல்லோரும் இங்கே  ஓடி வாருங்களேன்.  என் வீடு அருகில் தான்  இருக்கின்றது, எனக்குப் பணம் விஷம் மாதிரி.  உங்கள் விருப்பத்தை   எனது   அன்போடு   அனுபவியுங்கள். . பெண்களே வாருங்கள், பாயைப் போடுங்கள்”   என்று மரியாதைப் பேச்சுக்கள்
போன்றவைகளைப் பேசி, படுக்கையில் சேர்வதற்கு முன்பாக பொருளையும், ஆடைகளையும் வேண்டிய
அளவுக்குப் பறித்தும், அவை போதாது என்று குற்றம் கூறி   ஓடு இங்கிருந்து  என்று அடம் பிடிக்கும் விலை மாதர்கள்  உள்ள இடத்தில் நான் போகாமல், குற்றங்கள் வந்து  என்னைச் சேர்ந்து  அதிகமாகாமல்   உனது குளிர்ந்த திருவடித் தாமரைகளைத் தந்து அருள் வாயாக.  நாராயணன், ஸ்ரீராமன், கேசவன், கூரான  சுதர்சன சக்ரம் உடையவனும்  பூலோகத்தில் இடையர் குலத்தைச் சேர்ந்த கண்ணபிரானும்  ஆனவன்  மரு மகனே,  நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய  சிவபெருமான் அருளிய குழந் தையே,  சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய  முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே,  பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன்  சேர்ந்த அழகிய  மேல  கடம்பூரில் வீற்றிருக்கும், தேவர்கள் பெருமாளே.”
 என்ன அற்புதமான  பக்தி அருணகிரிக்கு ..!

கோவிலில் கோஷ்ட சுவரிலேயே கங்காதரர், ஆலிங்கன மூர்த்தி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது.  மூல கருவறை விமானத்தில் தக்ஷிணா மூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் அபூர்வ காட்சி  ரொம்ப  ரொம்ப  வியப்பாக  கண்ணில் நிற்கிறது. இந்த ஆலய தக்ஷிணாமுர்த்தியின் இடது காது துளை வலது காது துளையுடன் சேர்ந்திருக்கிறது அபூர்வம்.  எப்படித்தான் சிற்பிகளுக்கு இப்படி  சிலை வடிக்க முடிந்ததோ!  தக்ஷிணாமூர்த்திக்கு  இங்கே  ரிஷப வாகனம். வழக்கம்போல்  மேலே கல் ஆலமரம்.
கோஷ்ட சுவரில் பிரம்மா சிவனை பூஜை செயகிறார். ரெண்டு பக்கமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர். சற்று  தள்ளி பதஞ்சலி முனிவர். அவருடைய தலை மீது நடராஜரின் நடனக்கோலம் உள்ளது. வலப்பக்க சுவரில் அர்த்த நாரீஸ்வரர் நந்தியுடன் இருக்க, அவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில். ஒரு அற்புத சிற்பம் அம்பாளைத் தன்  தொடை மீது இருத்தியவாறு ஆலிங்கனம் செய்யும் சிவன் ஆலிங்கனமூர்த்தியாக. பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. நிறைய நேரம் தான் தேவை.

இன்னொரு அதிசய சிற்ப பொக்கிஷம் தச புஜ ரிஷப தாண்டவமூர்த்தி: நந்தி மீது நடனமாடிய கோலத்தில் 10 கைகளுடன் உற்சவராக பிரதோஷத்தின்போது வெளி யே வந்து சிறப்பு பூஜைகள் பெறுகிறார். அவரை படத்தில் தான் பார்க்க முடிந்தது. பிரதோஷம் அன்று தான் காட்சி தருவார். ராஜேந்திர சோழன் வகாலத்தில் பாலர்களை போரில் வென்று, இந்த பால வம்ச அபூர்வ சிலையை கொண்டு வந்திருக்கிறான். 

கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் .

மேலே சொன்னேனே பிள்ளையார் பற்றி அவருக்கு இந்த ஆலயத்தில் ஒரு விசேஷ இதுவரை கேட்டிராத அதிசய பெயர் ”ஆரவார விநாயகர்”. இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகருக்கு தனிச் சன்னதி.அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம். இவர் தலையை இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார். அற்புதமான சிற்பி இதை செதுக்கியவன்.
இன்னும் இங்கே கண்டு மகிழ்ந்து வணங்க வேண்டியவர்கள்:

கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான் ஒரு புதுமையான சிலாரூபம். இராமாயண காலத்திற்கு அப்புறம் தான் சனி பகவான் காகத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்கு முன் அவரது வாஹ னம் கழுகு.
அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் என்பதால் அங்காரகன்.
சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருளதரும் துர்க்கை
அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர்.
ஸ்ரீ முருகப் பெருமான் – சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்றார் .
பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி கி.பி. 1110-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோயில் (தேர் மாதிரி உருவ ஆலயம்). காவிரி வடகரையில் அமைந்த அறுபத்து மூன்று சிவ ஆலயங்களில்  இந்த மேல்கடம்பூர்  சிவாலயம் ஒன்று. அஸ்திவாரம் அதிஷ்டானம் என்று பெயர் கொண்டது. பதினெட்டு வரிசைகள் கொண்டது. பத்மக பந்தம், மஞ்ச பத்ரம் என்று பேர்கள் கொண்ட அதிஷ்டானம் என்கிறார்கள்.
குறிப்பிட்ட நாளில் பங்குனியில் சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் சிவன் மேல் விழும்படியாக கட்டப் பட்டது. இது போன்று சில கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.

காட்டு மன்னார்குடி பக்கம் போகிறவர்கள் கட்டாயம் மேல கடம்பூர் செல்லவேண்டும் என்பது என்னுடைய எழுதப்படாத விதி மட்டுமல்ல வேண்டுகோளும் கூட.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *