SRIMAD BHAGAVATHAM 10TH CANTO. J K SIVAN

ஸ்ரீமத்  பாகவதம்  – 10வது காண்டம்.  –   நங்கநல்லூர்  J K  SIVAN
யோகமாயா எச்சரிக்கை 

”குருதேவா, என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லையே. ஆஹா,   ஸாக்ஷாத்  ஸ்ரீமந் நாராயணன் சதுர்புஜங்களோடு ஆயுதங்களோடு சர்வாலங்கார பூஷணனாக,ஒளிமயமாக,  வசுதேவர் தேவகிக்கு  மகனாக பிறந்து, அடுத்த கணமே  தேவகியின்  வேண்டுகோளுக்கிணங்கி ஒரு சாதாரண குழந்தையாக மாறி, அங்கிருந்து யோகமாயாவின் உதவியோடு தானே வசுதேவர் மூலமாக கோகுலம் சென்று  அங்கிருந்து யோகமாயாவை தேவகியின் மகளாக மாற்றி இது அத்தனையும் எவரும் அறியாமல் எல்லோரையும் மாயையில் மயங்க செய்து எவ்வாறு தனது அவதாரத்தை நிறைவேற்றிக்கொண்டான் என்று அறியும்போது நான் நேரில் அந்த காட்சிகளை கண்ட ஆனந்தம் பெற்றேன்,  பிரபு. மேலே சொல்லுங்கள். ரொம்ப ஆவலாக இருக்கிறது”  என்றான் பரீக்ஷித் மஹாராஜா.
”பரீக்ஷித்,  நீ  புண்யம் செய்தவன் என்பதால் இந்த சரித்திரத்தை காதால் கேட்பதோடு மனக்கண்ணால் காட்சிகளையும் கண்டவன் ஆகிவிட்டாய். யோகமாயா பெண் குழந்தையாக தேவகி அருகில் படுத்திருக்கிறாள்.  கதவுகள் பூட்டப்பட்டிருப்பதால் அவள் அழுகை சத்தம் வெளியே காவலாளிகளை  எழுப்புகிறது.  ஏதோ ஒரு புது குழந்தையின் அழுகுரல் கேட்கிறதே. ‘ ஓஹோ  தேவகி ராணி மீண்டும் தாயாகி ஒரு குழந்தை பிறந்திருக்கிறதோ.உடனே ராஜா கம்சன் கட்டளைப்படி அவருக்கு இதை அறிவிக்கவேண்டும்” என்று ஓடினான் ஒரு காவலாளி.
எந்த  சேதிக்காக போஜ  ராஜன்  கம்சன் காத்திருந்தானோ அந்த செய்தி அவன் காதில் விழுந்ததும் உடனே  வாளுடன் சிறைச்சாலைக்கு வந்து விட்டான்.
”அண்ணா, தயவு செயது இந்த பெண்குழந்தையைக்  கொல்லாமல் விட்டுவிடு. அவளால் உன்னை என்ன செய்ய முடியும்? தயவு கூர்வாய். உன் மகனுக்கு அவளை மனைவியாக ஏற்றுக்கொள். குழந்தையை, சிறிய பெண் சிசுவைக் கொல்லாதே . விதி வசத்தால் இதுவரை பிறந்த அத்தனை குழந்தைகளையும்  என் கண் முன்னாலேயே இழந்துவிட்டேன். நீ கொன்று விட்டாய்.இந்த ஒரு குழந்தைக்காகவாவது உயிர்ப்பிச்சை கொடு. உனது பரிசாக இவளை எனக்குக்  கொடு.” கண்ணீரோடு  அந்த சிறிய பெண் குழந்தையை மார்போடு அணைத்துக்கொண்டு கதறினாள் தேவகி.
ஈவு இரக்கமில்லாத  கம்சன் துளியும்  நெஞ்சில் ஈரமின்றி  அவளிடமிருந்து அந்த சிறு பெண்குழந்தையை பலத்தோடு பிடுங்கினான். கடுங்கோபத்தோடு அந்த பெண் சிசுவை தேவகியிடமிருந்து விடுவித்து  அதன் சிறு கால்களை பிடித்துக்கொண்டு கையை ஓங்கி அந்த குழந்தையை அருகே இருந்த கருங்கல் பாறை மீது   வீசி மண்டையை சிதறடித்து மோதி கொல்ல முற்பட்டான்.
இந்த சந்தர்ப்பத்தை நன்றாக எதிர்பார்த்த யோகமாயா  கம்சனின் கரங்களிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு அவன் அவளை மேலே தூக்கி வீசும்போது அவன் கையிலிருந்து லாகவமாக நழுவி  வானில் அவன் தலைக்கு மேலே  தோன்றினாள் .  அஷ்ட புஜங்களோடு துர்கையை கம்சன்  மேலே கண்டான். அவளது கரங்களில் ஆயுதங்கள்.  நறுமண மலர் மாலைகளோடு,  சந்தனக்குழம்பு பூசியவளாக,  ஆபரணங்கள் பூண்டவளாக  பட்டாடை உடுத்தி  கையில், வில், சூலம், அம்புகள், கேடயஹம், வாழ், சங்கம், சக்ரம் கதாயுதம் தரித்தவளாக   காட்சி அளித்தாள். வானில் அப்சரஸ்கள், கின்னரர்கள், உரகர்கள் , சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள் சூழ்ந்து விட்டார்கள். எல்லோரும் துர்கையை சூழ்ந்து வணங்கியவாறு பணிந்தார்கள்.
யோகமாயா  பேசினாள் :”ஹே , முட்டாள்  கம்சனே , என்னை உன்னால் கொல்லமுடியுமா , முடிந்தால் தான் என்ன பயன்?  பரமாத்மன் உன்  யமன்,  உன்னைக்  கொல்ல  ஆயத்தமாகிவிட்டான். இனி உன் முடிவுகாலம்  நெருங்கிவிட்டது. எங்கோ அவன் பிறந்து வளர்கிறான். இனியாவது முட்டாள்தனமாக எந்த குழந்தையையும் கொல்லாதே , வீண் வேலை அது.”.
துர்கை இவ்வாறு கம்சனை எச்சரித்துவிட்டு, வாரணாசி போன்ற  க்ஷேத்ரங்களுக்கு  புறப்பட்டுவிட்டாள். அவளை பல வித  நாமங்களோடு, ரூபங்களோடு  பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.அவளே அன்னபூரணி  துர்கா, காளி,  பத்ரை.
கம்சன் யோகமாயாவின் வார்த்தைகளைக் கேட்டு  திகைத்தான். அவனால் நடந்ததை  நம்பவே முடியவில்லை. துர்கையின் தரிசனம் அவனைக்   கலங்கச்  செய்தது.  அவள் வார்த்தைகள் காதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.  பயம், திகைப்பு, ஆச்சர்யம் கோபம் எல்லாம் ஒரே நேரத்தில் அவனை ஆட்கொண்டது.  வசுதேவர் தேவகி இருவரும் நிரபராதிகள், அவன் எதிரி நாராயணன், என்று புரிந்து கொண்டான்.அவர்கள் இருவரின் சங்கிலி கட்டுகளை நீக்கச்  செய்தான்.  சிறையிலிருந்து விடுவித்தான். 

”தேவகி, என் பிரிய சகோதரி,  அன்பு  சகோதரர் வசுதேவரே, நான் உங்களுக்கு நிறைய  துன்பம், விளைவித்துவிட்டேன். நிரபராதிகள் நீங்கள். ராக்ஷசனாக நான் மாறி உங்களை வதைத்து விட்டேன். உங்கள் குழந்தைகள் அனைவரையும் கொன்று தீர்த்து விட்டேன்.  உறவை மதிக்காமல், எதிரியாக நடந்துகொண்டேன்.  நான் செய்த பாபங்களுக்கு எந்த கதிக்கு ஆளாவேனோ தெரியவில்லை. எல்லாம்  நான் கேட்ட  அசரீரியால் விளைந்த செயல். இதெல்லாம் நடக்கவேண்டும் என்று  விதி. அதன் செயல் எல்லாமே.
களிமண்ணில் தோன்றும் பல வித உருவங்கள் களிமண்ணிலேயே கலந்து மறைவது போல் உயிர்கள்  பஞ்சபூதத்தில் தோன்றி அதோடு கலக்கின்றன. நான் இந்த  பாபத்துக்கு ஒரு காரணமாகி விட்டேன் . அவ்வளவு தான். என் பிரிய சகோதரி தேவகி, மறைந்த உன் குழந்தைகளுக்கு வருந்தாதே, அவர்கள் விதி,  பிறந்தவுடன் மரணம் என்று இருக்கிறது,  அது  என் மூலம் நிகழ்ந்த ஒரு செயல். இருவரும் என்னை மன்னித்து விடுங்கள்.”
கண்களில் கண்ணீரோடு கம்சன்  தேவகி வசுதேவர் கால்களில் விழுந்தான்.
அவன் மீது கோபம் நீங்கிய  வசுதேவர் கம்சனை நோக்கி:”ஆத்ம ஞானம் இன்றி உடல் மீதுள்ள பற்றினால் தவறுகள் நேர்கிறது. அறியாமை ஒன்றேஇதற்கெல்லாம்  காரணம். இறைவனின்றி  ஒரு அணுவும் அசையாது”
”பரீக்ஷித் நடந்ததைக்  கேட்டாயா?” என்று  கதையை நிறுத்தி  கேட்கிறார் சுகப்ரம்மம். ”சுவாமி  மேற்கொண்டு சொல்லுங்கள்”’தேவகியும் வசுதேவரும் தமது வீட்டுக்கு சென்றார்கள். கம்சனும் அரண்மனைக்குத்  திரும்பினான். அன்றிரவு முழுதும் கம்சன் தூங்கவே இல்லை.  பொழுது விடிந்தது.  அரசவையைக்  கூட்டினான்.மந்திரி பிரதானிகள் அனைவருடனும் யோகமாயா சொன்ன வார்த்தைகளின் பொருளை விவாதித்தான். ”துர்கையின் வாக்கை ஒரு எச்சரிக்கையாக நான் ஏற்றுக்கொண்டால் என் எதிரி என் உயிரைக் கொல்பவன் எங்கோ  பிறந்து  விட்டான். யார் அவன், எங்கே இருக்கிறான் என்று தெரியவேண்டும்” என்று கேட்டான். பல வித யோசனைகளை ராக்ஷஸ மந்திரிகள் சொன்னார்கள். கடைசியில்  ”இன்றுமுதல்  மதுரா ராஜ்யத்தில்  எல்லா கிராமங்களிலும் சமீபத்தில் பத்து நாட்களுக்குள்  பிறந்த அத்தனை குழந்தைகளையும் தேடித் பிடித்து கொன்றுவிடுவது ஒன்று தான் வழி” என்று முடிவெடுத்தார்கள்.
விஷ்ணு ஒருவனே சக்தி வாய்ந்தவன். அவன் வேதங்கள், பசுக்கள், பிராமணர்கள், அவர்களின் யாகங்கள் ஆகியவற்றில் மகிழ்பவன். மஹாராஜா,  வேதமோதும் ப்ராம்மணர்களை கொன்றுவிடுவோம்.”  ”பரீக்ஷித்,  ராக்ஷசனான  கம்சன் தலையசைத்து அவர்கள் யோசனையை ஏற்றான்.
தொடரும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *