pesum deivam J K SIVAN

பேசும் தெய்வம் –  நங்கநல்லூர்  J K  SIVAN 

” இந்தாங்கோ  குடிக்க ஜலம்”    

ஸ்ரீ வித்யா ராஜ ராஜேஸ்வரி  ஆலயம்  நங்கநல்லூர் ஒரு   சிறிய அருமையான அமைதியான  ஆலயம்.   ஸ்ரீ லலிதாம்பிகை சிவந்தவள்.  உதய சூரியனுடனும்  குங்குமம் எனும் சிந்தூரத்தின் வண்ணத் துடனும் ஒப்பிடப்படுகிறாள். மாணிக்க சிவப்பு கற்களை  ஆபரணமாக அணிந்தவள். பிறைச் சந்திரனை  சிகையில்  சூடியவள்.   பிரசன்ன வதனம் கொண்டவள்.

ஐம்பது  அறுபது வருஷங்களுக்கு முன்பு,  மஹா பெரியவா  இப்படிப்பட்ட  ஒரு  பாலா த்ரிபுரசுந்தரியை எங்கள் நங்கநல்லூரில் தரிசித்ததை மீண்டும் ஒருமுறை சொல்லட்டுமா?  ஆனந்தமான விஷயங்களை அடிக்கடி சொல்வதோ கேட்பதோ மகிழ்ச்சி தானே.  

நங்கநல்லூரில் இருப்பவர்களுக்கே  இங்கே   ஒரு புராதன 500  வருஷ  ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில் இருப்பது  தெரியாது போல இருக்கிறது. தெரிந்தால் சந்தோஷம்.  தெரியாவிட்டால் இதோ கொஞ்சம் விஷயம். உடனே சென்று தரிசியுங்கள்.  இந்த கோவிலுக்கு ஒரு தனி விசேஷம் உண்டே  அதைச் சொல்கிறேன்.

மஹா பெரியவா  நடந்தே  எல்லா  சிவ  ஸ்தலங்களுக்கும்  செல்பவர்.  ஒருதடவை ஒரு பெரிய  சுற்றுலா மாதிரி  ஒரு ஆலய தர்சனம்   மேற்கொண்டார். திரிசூலம் மலைகள் அடியில்  உள்ள  அருமையான,  அமைதியான  திரிசூலநாதர் கோவிலை  விஜயம் செய்துவிட்டு  திருசூலநாதர்  திரிபுர சுந்தரி  தரிசனத்துக்குப் பிறகு  மெதுவாக வடக்கு நோக்கி நடந்து வந்தார்.  ஐம்பது வருஷங்களுக்கு முன்பு  மீனம்பாக்கத்துக்கும்  பரங்கிமலைக்கும் இடையே  இப்போது இருக்கும்  பழவந்தாங்கல் ரயில் நிலையம் கிடையாது.   பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ஒரு அற்புதமான தொன்று தொட்ட  சிவாலயம்  இருக்கிறது.  நந்தீஸ்வரர்  பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த இடம். பிருங்கி மலை தான் பறங்கி மலை ஆகிவிட்டது.  அம்பாள் ரொம்பவே அழகாக இருப்பாள். ஆவுடை நாயகி என்று பெயர்.  அவர்களை தரிசிக்க  மஹா பெரியவா நங்கநல்லூர்  வழியாக  நடந்து வந்தார்.
நங்கநல்லூர் அப்போது உருவாக வில்லை. பழவந்தாங்கல் என்கிற கிராம பெயர்.  நாங்கள் இருக்கும் பகுதிக்கு  தலக்கணான் சேரி  என்று பெயர். இன்றும் அது தான் சார்பதிவாளர் ஆவணங்களில் உள்ள பழைய கிராமப்பெயர்.  புதுப்பெயர் தான் நங்கநல்லூர். மஹா பெரியவா  பல்லாவரம் திரிசூலத்திலிருந்து இப்படியே  கிராமங்கள் வழியாக  நடந்து வந்தார். வெயில் நேரம்.  இப்போது நங்கநல்லூர்  உயர்நிலைப்பள்ளி இருக்கிறதே  நேரு காலனி,  அந்த பக்கமாக வந்தார்.  பள்ளி மைதானத்துக்கு பின் புறம் ஒரு அரசமரம்.  அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என்று அமர்ந்தார்.
கூட வந்தவர்கள்  சற்று தள்ளி வெவ்வேறு  இடங்களில் அமர்ந்து சிரம பரிகாரம் செய்தார்கள்.  மஹா
பெரியவாளுக்கு தாகம்,  தொண்டை வறண்டது.  மெல்லிய குரலில்  சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவரைக் கூப்பிட்டு   ”கொஞ்சம்  குடிக்க ஜலம்  கொண்டு  வாடா ”  என்றபோது  அந்த தொண்டர்  எழுந்து எங்கோ சென்றார்.   உண்மையில் பெரியவா ஜலம்  கேட்டது தொண்டர் காதில் விழவில்லை. அவர் வேறு எங்கோ எதற்கோ எழுந்து போய் இருக்கிறார்.

”சரி,   அவன்  ஜளம்  கொண்டுவரும் வரை  காத்திருப்போம்” என்று மஹா பெரியவா  தாகத்தை லக்ஷியம் பண்ணாமல்  கண்ணை மூடி  ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார்.   அடுத்த  ஒரு சில  நிமிஷங்களில்  ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது.  கண்ணைத் திறந்து பார்த்த மஹா பெரியவா தனக்கு முன்னால்   லக்ஷணமாக  ஒரு சிறு பெண் கையில்  ஒரு சுத்தமான  தாமிர  சொம்பு  நிறைய ஜலத்தோடு பெரியவர்  எதிரில் நின்றாள் .

‘இந்தாருங்கள்  குடிக்க  நீர்  கேட்டீர்களே” என்று சொம்பை நீட்டினாள்.
மிக சந்தோஷத்தோடு  சொம்பு ஜலத்தைப்   பருகி விட்டு  அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார். முகத்தில் புன்னகையோடு அந்த பெண்  சொம்பை வாங்கிக் கொண்டு, அவரைப்  பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள். அப்போது தான் தொண்டரும் அருகே வந்து நின்றார்.  

‘யாரடா அந்த குழந்தை, அது கிட்டே   ஜலத்தோடு சொம்பை கொடுத்து அனுப்பினே?”

”பெரியவா  க்ஷமிக்கணும். நீங்க  ஜலம் கேட்டதே எனக்கு தெரியாது. நான் எந்த குழந்தையும்  இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும்  தீர்த்த  சொம்பு  கொடுத்து அனுப்பலையே ”

சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம்.  மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.

அந்த குழந்தையின் முகம், அவள் உடை  ஆபரணம் எல்லாமே  அவர் மனதில்  அந்த குழந்தை ஸ்ரீ பாலா ம்பிகை திரிபுர ராஜராஜேஸ்வரி என்று புரிந்துவிட்டது.  அடடா  அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம் கொடுத்திருக்கிறாள்” என்று  வியந்தார். 

ஊர்  கிராம பெரியவர்களை எல்லாம் அழைத்துவரச் சொன்னார்.  பெரியவா வந்திருக்கும் செய்தி
அதற்குள் பரவிவிட்டதால்  ஊர்  மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள்.

“இந்த இடத்தில்  ஸ்ரீ  வித்யா  ராஜராஜேஸ்வரி எங்கோ  பூமிக்கடியில் இருக்கிறாள்.  உடனே நீங்கள் எல்லாம்,   ஊர்க்காரர்கள் ஒன்று  கூடிப்பேசி   தோண்டி  அவளைக் கண்டுபிடியுங்கள். அவளுக்கு  ஒரு  ஆலயம் இங்கே  அமைத்து வழிபடுங்கள்” என்று சொன்னார் மஹா பெரியவா.”

மஹா பெரியவா  சிரம பரிகாரம் முடிந்து தனது பயணத்தில் பரங்கிமலை நோக்கி நந்தீஸ்வரர்  ஆலயத்துக்கு  நடக்கத் தொடங்கிவிட்டார்.  ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா?.   மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப் பார்த்தார்கள்.   குழந்தை வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ்வரி  விக்ரஹமும்  கிடைத்தது.    காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள்.
”அம்பாள் பெயர்  ” ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி ” ஒரு ஆலயம் எழுப்பி  அம்பாளை பிரதிஷ்டை பண்ணி   நித்ய பூஜை விடாமல் செய்ய  ஏற்பாடு பண்ணுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.  அந்த நங்கை இருக்கும் நல்ல ஊர்  எங்கள் நங்கநல்லூர்  ஆகிவிட்டது என்று தோன்றுகிறது.
இந்த  விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.  நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம்.   பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து  நேரு காலனி   2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு  நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.
நங்கநல்லூரில்  ராஜ  ராஜேஸ்வரி கோவில்  போனதுண்டா?  எங்கே இருக்கிறது? அது எங்கே  என்று கேட்பவர்களுக்கு உடனே கிடைக்கும் பதில்:
 ”ஆஹா    16 படி மேலே   16படி கீழே இறங்கி   மேலே  அம்பாளை தரிசித்து இருக்கிறேனே . அது தில்லைகங்கா  நகர்  என்கிற  பகுதியில்  16வது தெருவில் இருக்கிறது.  கட்டாயம் போய் பாருங்கள் . ராஜகோபாலஸ்வாமி என்கிற  சக்தி உபாசகர் முயற்சியால்  தோன்றிய இன்னொரு அற்புத ஆலயம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *