CAUSE AND EFFECT. J K SIVAN

காரண காரியமும்  விளைவும்.  —  நங்கநல்லூர்  J K  SIVAN

நாம்  செய்கிற  ஒவ்வொரு காரியத்துக்கும்  ஒரு காரணம் இருக்கிறது. அதற்கு ஏற்ற விளைவும் இருக்கிறது.  நாம் செய்வது, செய்ய நினைத்தது எப்படிப்பட்ட காரியம், அதை ஏன் செய்தோம் என்று  அலசிப்பார்ப்பதே இல்லை. நல்லது செய்தால்  நல்லது விளையும். தீய காரியம் பற்றி காரணமும் வேண்டாம் விளைவு பற்றியும் பேசவேண்டாம். தேவையில்லை.
 இங்கிலீஷில்  ஒரு  அருமையான  வாக்கியம்: There is  no  cause  without  an  effect .  ஒவ்வொரு காரணத்திற்கும் ஒரு விளைவு இருக்கிறது.  விஞ்ஞானம் எனும் சயின்ஸ்  cause & effect , காரணம்  /விளைவு, பற்றிய விதிகளைக்  கூறுகிறது.  மாற்ற முடியாத இந்த விதி உலக  வாழ்க்கையோடு  தொடர்பு கொண்டு, ஏதோ ஒரு விதமான ஒழுங்குடன் இணைந்து  இயங்குகிறது. ஏதோ ஒருபேரறிவு இருப்பதால்தான் இப்படிப்பட்ட விதிகள் உண்டாகி, அவை எல்லாம் ஒழுங்காக இணைந்து, நமது உலக வாழ்வு   அமைகிறது. நமது வாழ்க்கை  இந்த பௌதிக விதி,  அதாவது,   காரணம் – விளைவு இல்லாமல்  கிடையாது.  நாம் செய்கிற சகல காரியங்களுக்கும் விளைவு இருந்து  தான் ஆகவேண்டும். நல்ல காரியங்கள்  செய்தால் அதற்குச்  சமமான நல்ல விளைவுகள்  பெறலாம்.  கெட்டதைச் செய்தால் அதற்கு சமமான கெட்ட பலன்கள்  தானே கிடைக்கும்.  இப்படி பலன்களை தருகிற ‘பல தாதா” pala  dhathaa , தான் பிரபஞ்சத்தை நடத்தி வைக்கிற மகா சக்தி, ஈஸ்வரன், பகவான், ஸ்வாமி,கடவுள், பரமாத்மா எனப்பட்டவன்.

ஒவ்வொருவருக்கும்  மனசு  இருக்கிற வரையில்  அது விடாமல் அலைந்து கொண்டு, சஞ்சலித்துக் கொண்டேதான் இருக்கும். நல்லது கெட்டது, புண்யம் பாவம் சகலமும்  மாற்றி மாற்றி  நினைக்கும். செய்ய வைக்கும்.  இந்தப் போக்கு  நல்லதையே  நினைத்து நடக்க,  பாவ எண்ணங்கள் செயல்களால் வரும் கஷ்டங்களைப்   போக்கடிப்பதற்காகத் தான்  பிரார்த்தனை செய்கிறோம். இதைத்  தான்  தெய்வ பக்தி என்கிறோம்.   இது கர்ம பலன். ஈசுவரன் மனசு வைத்தால் நம்   பாபத்துக்குப் பிரதியான கஷ்டத்தை தராமலும் இருக்கலாம். ஆனால் அவன் நமது  கஷ்டத்தைப் போக்கத்தான் வேண்டும் என்று நிற்பந்தம்செய்ய நமக்கு யோக்கியதை இல்லை. ஏனென்றால் நம் கர்மாவுக்கு பலனாக இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருப்பவனே அவன்  தான்.   ஆகையால் கஷ்டம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிற மனோ பாவத்தைப் பிரார்த்திப்பதே  மிக  உத்தமம்.  எதையோ எதிர்ப்பார்த்து  வேண்டுகிற பிரார்த்தனை கூட  நிஜமான பக்தி அல்ல.  எந்த எதிர்பார்ப்பும் இன்றி  அன்பும் நன்றியும் கலந்த பிரார்த்தனை தான் உசத்தி.
நம் கஷ்டத்தை ஈசுவரனிடம் சொல்கிறபோதே அவனுக்கு அது தெரியாது என்று நாம் நினைப்பதாக ஆகிறது. அதாவது  ஈஸ்வரனுடைய எல்லாம் அறிந்த ஸர்வஞானத்தை  குறைத்து மதிப்பிடுகிறோம்.   குறை உண்டாக்குகிறோம். ‘இந்தக் கஷ்டத்தைப் போக்கு; அல்லதுகஷ்டத்தைப் பொருட்படுத்துகிற மனப்பான்மையை மாற்று’ என்கிறபோது நாம் கேட்டுத்  தான் அவன் ஒன்றைச் செய்கிறான் என்று தானே ஆகிறது. அதாவது தானாகப் பெருகும் அவனது காருண்யத்துக்குக் குறை உண்டாக்கி  விடுகிறோம். இப்படி ஞான சமுத்திரமாக,கிருபா சமுத்திரமாக இருக்கிற ஈஸ்வரனுடைய ஞானம், கிருபை இரண்டுக்கும் தோஷம் கற்பிக்கிற பிரார்த்தனை உண்மையான  பக்தி இல்லை. ஆனால் இப்படிப்பட்ட பிரார்த்தனையால் மனச்சுமை தற்காலிகமாகவாவது லேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கிறது.

நாமாகவே எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற அகங்காரத்தைவிட்டு ஈஸ்வரனிடம் யாசிக்கிற அளவுக்கு எளிமை பெறுகிறோமே,  அதுவும் நல்லதுதான். அவனும், நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்   கூடப்  பொருட் படுத்தாமல், நம் கர்மாவையும் மீறிப் பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம். ஆனாலும் ஒரு கஷ்டம்  போனாலும் இன்னொரு கஷ்டம் என்று லோக வாழ்க்கையில் வந்து கொண்டே தான் இருக்கும். சமுத்திர அலைக்கு ஓய்வேது?   உலக  வாழ்க்கையை அதனால் தானே  சம்சார  சாகரம் என்கிறோம்.  ஆகையால் லௌகிகமான கஷ்ட  நிவிருத்திக்காக பிரார்த்தனை பண்ணுவதற்கு முடிவே இராது.  பலன்  எதிர்ப்பார்த்தபடி கிடைக்கும் என்பதும்   நடக்காது.

‘நீ எப்படி விட்டாயோ அப்படியே  ஆகட்டும்’ என்று சரணாகதி செய்வதுதான் பக்தி. உனக்கு தெரியும் எனக்கு என்ன நடக்க வேண்டும் கூடாது, என்று. ஆகவே நீயே  தீர்மானித்து என்னை வழி நடத்து” என்று விட்டுவிட வேண்டும். அது தான் total  surrender  எனும் சரணாகதி. 

தனக்கு என்று எதுவுமே இல்லாவிட்டால் மனஸின்அழுக்குகள் நீங்கி, அது கண்ணாடி மாதிரி சுத்தமாக இருக்கும். அப்போது நாம்   ஆனந்தமாக இருக்கலாம். ‘எனக்கு என்று ஒன்றுமில்லை’ என்று யாரிடம் சரணாகதி செய்து  விட்டாலும் ஒரு பதியிடம் பத்தினி சரணாகதி செய்தாலும் (அவன் தூர்த்தனான  பதியாகக்  கூட இருக்கலாம்); ஒரு குருவிடம் சிஷ்யன் சரணாகதி செய்தாலும் (அந்த குரு போலியாக இருந்தாலும்  கூடச்  சரி) -அப்புறம் நிச்சிந்தைதான்; அதன் முடிவான பலனாக மோக்ஷம்தான்.

மேலே சொல்லப்பட்ட  விஷயங்கள் அடிக்கடி  நினைத்துப் பார்க்க வேண்டியவை. நமது  முன்னேற்றத்துக்கு வழிகோலுபவை. இதெல்லாம்  நானாக  வழங்கும் அறிவுரை என்று எண்ணவேண்டாம்.  மஹான்கள் சொன்னதை படித்து புரிந்து கொண்டு தெளிவாக புரியும் அளவுக்கு நான்  எடுத்துச் சொல்பவை. இதனால் நான் உங்களிடமிருந்து வேறுபட்டு பெரிய மஹானாகி விடமுடியாது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *