A CRICKET MATCH J K SIVAN

ஒரு  கத்திரி வெயில் கிரிக்கெட் மேச்  பற்றி.  நங்கநல்லூர்  J K  SIVAN

72 வருஷங்களுக்கு முன்  நான் 12-13 வயது பையன், ஆறாங்கிளாஸ்.  1ஸ்ட்  பார்ம்.  1st  form  என்று அதற்கு பெயர் அப்போது. நுங்கம்பாக்கம்  கார்பொரேஷன் உயர்நிலைப் பள்ளிக்கு சூளை மேட்டிலிருந்து நடந்து தினமும் போய் வருவோம். என் அப்பா    ஜே . கிருஷ்ணய்யர்  அங்கே  உதவி ஹெட்மாஸ்டராக  இருந்தார்.  பெரிய க்ளாஸ்களுக்கு  ஆங்கிலம்  சரித்திரம் போதிப்பார்.   நாகேஸ்வரராவ் கட்டிடம் என்று அந்த பள்ளிக்கூடத்தின் பெயர்.  எந்த மஹான் கட்டிக்  கொடுத்ததோ.  இப்போது ஏரிக்கரை என்று வழங்கும் அந்த பகுதியில் பெரிய விளையாடுமிடம்.

கத்திரி வெய்யிலில்  கவர் பால் கிரிக்கெட் விளையாடுவோம். அதுவும்  விளையாட்டு பீரியட் போது . முக்கால்வாசி அது 11 மணிக்கு காலை ஒருமணி நேரம் இருக்கும்.   பட்டை கழட்டும் அக்னி நக்ஷத்திரம்   எங்களுக்கு துளியும் கவலை அளிக்கவில்லை.  கோடை விடுமுறை ரெண்டு மாதம்   பள்ளிக்கூடம் லீவ் விட்டால் ஒரு நிமிஷமாவது வேஸ்ட் பண்ணாமல்  வெயிலில் சுற்றுவோம்.  அவ்வப்போது  பானை தண்ணீர் ஜில்லென்று குடிப்போம்.  fridge  தெரியாது. கிடையாது.   நாங்கள் ஒரு கிரிக்கெட் டீம் வைத்திருந்தோம் என்று சொல்வது தப்பு.  பாச்சா சுந்தா  சேர்த்துக் கொண்டிருந் தார் கள் என்பதற்கு காரணம்  ஒரு ஆள் குறைவு.  நான் பாச்சா வின் எதிர் வீட்டுக்காரன். என் அம்மா பாச்சா வந்தால் மோர் குடிக்க கொடுப்பாள் என்பதால் எனக்கு  டீமில் மெம்பர்ஷிப்.

நண்பன்  சுந்தாவுக்கு, பாச்சா வீட்டில்  உடைந்து விரிசல் விட்டிருந்த கிரிக்கெட் மட்டைக்கு  பிளாஸ்திரி போட்டு ஓட்டும் வேலை நன்றாக தெரியும்.  ஏற்கனவே  பாச்சா பழைய சைக்கிள் ட்யூப் நிறைய வாங்கி வந்து அதன் கைப்பிடியில் சுற்றி இறுக்கி கட்டி வைத்திருப்பான். ஒரு  வழியாக இப்படி   ஒட்டவைத்த எலும்புகளோடு கிரிக்கெட் பேட்  தயாரா கியது.  வருஷாவருஷம் பள்ளிக்கூடத்தில் பழைய உடைந்த, உபயோகமற்ற சிதிலமான  cricket  பேட்கள் , footbaals  டென்னிஸ் பேட்கள்  ஏலம் விடுவார்கள். பாச்சா எனும் பார்த்தசாரதி,  பழனியப்ப  செட்டியார் மகன்  பாலு  ரெண்டுபேரும்  வாங்கி வைத்திருப்பார்கள். அது தான் எங்கள்  cricket டீம் kit.  ஒரு கிரிக்கெட்  மேச்  போட்டி  வைத்திருந்தோம்.  எட்டாவது  வகுப்பு மாணவர்களுடன் கிரிக்கெட்  மேட்ச்.

9A வகுப்பு படிக்கும்  கங்காதரன் வீட்டில் பழைய டென்னிஸ் பால்  ரெண்டு கிடைத்தது.  சுப்பராமய்யர் வீட்டு தோட்டத்தில்  மூங்கில் கொம்புகள் அவருக்குத் தெரியாமல் கொண்டு வந்து சரியான அளவில் ஜானகிராமன் வெட்டி ஸ்டம்ப்கள் ரெடி பண்ணி விட்டான்.  இது தெரியாத சுப்பராமய்யர்  தான் கிரிக்கெட் போட்டிக்கு  சிறப்பு விருந்தினர். ஒரு ஓரமாக மரத்தடியில் பிளாஸ்டிக் நாற்காலியை அவர் வீட்டிலிருந்தே தூக்கிக் கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்.
துலுக்காணம் வீட்டுக்கு பின்புறம் வெட்டவெளி.  அதற்கு வடபுறம் சற்று  தள்ளி தான்  ஓடை  வாய்க்கால்.தண்ணீர் இல்லை. அங்கு ஆள்  நடமாட்டம் கம்மி.  ஆகவே அது தான்  லார்ட்ஸ் கிரௌண்ட்.  அங்கு தான்  மேட்ச். இன்று காலை.
 பத்மநாபன் டீம் பசங்கள் எல்லோருமே  பௌலர்கள் பேட்ஸ்மன்கள் .  சுந்தாவின் டீமில்  ரெண்டு ஆள் கம்மி.  பாச்சாவின் பக்கத்து வீட்டு புருஷோத்தமன் ஊரிலிருந்து லீவுக்கு மனைவியை அழைத்து வந்தவன் தான் விக்கெட் கீப்பர்.  சத்தியமாக நான் ஆடமாட்டேன் என்றவனை வலுக்கட்டாயமாக  பாச்சா இழுத்துக்கொண்டு வந்து  ஸ்டம்ப்  பின்னால்  நிறுத்தினான்.

AGS  ஆபீஸ் ரெட்டையர்டு குமாஸ்தா  கோபு தான் அம்பயர். ரொம்ப ஸ்ட்ரிக்ட் ரூல் எல்லாம் சொன்னார். யாருக்கும் புரியவே இல்லை. புருஷோத்தமன் விக்கெட் கீப்பிங் செய்தபோது ஒரு பந்தையும் தொட மறுத்தான். அதன் வேகம் உடம்புக்கு  உகந்தது அல்ல என்று முடி வெடுத்து பின்னால்  இருந்த நெல்லி மரம் தான் ஒரிஜினல் விக்கெட் கீப்பர்.  ஒவ்வொருமுறையும்  அது தடுத்த பந்தை எடுத்து மெல்லிதாக  எறிந்தான் பௌலரிடம்.  ஒரு பந்து கூட விக்கெட் பக்கமே வரவில்லை என்பது அவனுக்கு தானாக கிடைத்த ஒரு போனஸ்.
ஒரு ஆள் டீமில்  இல்லாத  சுந்தாவின்  டீம் டாஸ் போட்டு பௌலிங் பண்ணியது.  சுனிதாவின் தங்கை  சாந்தி நானும் விளையாடறேன் என்று பலமுறை கெஞ்சியும்  அவளை டீமில் நிராகரித்தான்  பாச்சா.
மேலச்  சந்நிதி தெரு பத்மநாபன்  ரொம்ப நேரம் ஆடினான். அவன் தான் கேப்டன். சுந்தா, துலுக்காணம்  பேரன், பாச்சா எல்லோரும் எப்படியெல்லாமோ  பந்து வீசியும்  பத்மநாபன் அவுட் ஆகவில்லை.   இருபதில் 13 ஓவர் வரை ஆடின பத்மநாபன் ஒரு கல் தடுக்கி கீழே விழுந்து வலது முழங்கால் சில்லில் ரத்தம்.  இன்னும் ரெண்டு பேர் ஆடவேண்டும்  என்றாலும் அது போதும் என்று ஆட்டத்தை நிறுத்தினார்கள் பத்மநாபன் டீம் காரர்கள்..  49 ரன்கள்  எடுத்தால் வெற்றி.

சுந்தா டீமில்  எல்லோரும் ஒருவர் தோளில்  ஒருவர்  கை கோர்த்துக் கொண்டு வட்டமாக நின்று தலை கவிழ்து கொண்டு   மொணமொண வென்று பிரார்த்தனை செய்தார்கள் .

பத்மநாபன் காலில் ஒரு கிழிந்த வேஷ்டி  துண்டை முழங்காலில் சுற்றிக்கொண்டு  விக்கெட் கீப்பிங் செய்தான்.முதலில் சுந்தா பேட்  செய்தான்.   சத்தார் என்பவன் வேண்டுமென்றே  தலைக்குமேல் பிரம்மாஸ்திரம் மாதிரி பந்தை வீசினான்.  பயந்து கொண்டு  பேட்டை தூக்கிய  சுந்தாவின்  பேட்  முனையில் பந்து எங்கோ பட்டு  அது பின்னால்  கள்ளிப்புதரில்  தாவியது. எப்படியோ அதை பத்மநாபன்  எடுத்துவிட்டான் . அதற்குள்  ரெண்டு ரன்கள்  ஓடிவிட்டார்கள்.

அடுத்து கோபாலக்ரிஷ்ணன் சாமுண்டியின் பந்தை எதிர்கொண்டான்.  சாமுண்டி பால்  காரர் சந்தோஷத்தின் மகன். எப்படியோ கையை வளைத்து வளைத்து  பந்தை வீசி அது  மெதுவாக  கோபாலகிருஷ்ணன் காலை தொட்டு விட்டது. அம்பயர் அவுட் என்று  கத்த சுந்தா மறுக்க, கோபால க்ரிஷ்ணன்  ஆமாம் காலில் பட்டுவிட்டது என்று உண்மையை போட்டு உடைத்து அவுட் ஆனான்.  அடுத்து  பாச்சா.  சுந்தாவோடு சேர்ந்து  நாலு  ஐந்து ஓவர்கள் ஆடினான்.   ஒரு பந்து க்ரிஷ்ண மாச்சாரி என்பவன் போட்டபோது  அது பாச்சாவின் மூக்குக்கு நேராக வந்ததால் அதை தடுக்க பேட்டை வீசினான்.  பேட்  ரப்பர் ட்யூப்  பிடி நழுவி மேலே பறந்து அம்பயர் கோபு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவர்  மூக்கில் ”நொங்” என்று இடித்தது. கோபு திகைத்து  என்ன ரூல் சொல்லலாம் என்று யோசிக்க முடியாமல் மூக்கை தடவி விட்டுக் கொண்டார். அதற்குள் பேட்டின் மேல் உரசிக்  கொண்டு தப்பித்த அந்த பந்து பக்கவாட்டில் பறந்து வாய்க்கால் வரை சென்றது. அவர்கள் பௌண்டரி  எல்லை அது என்பதால் ககன மார்க்கத்தில் சென்ற கிரிக்கெட்   பந்து வாய்க்காலில் விழுந்து ஆறு ரன்கள் தானாகவே  சுந்தா டீமுக்கு.  பாச்சா மிக சாமர்த்தியமாக பேட்  செய்ததாக  சுந்தா பாராட்டினான்.

இன்னும்  எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி. சுந்தா அவுட் ஆகிவிட்டான்.  பாச்சா 27 ரன்கள் எப்படியோ எடுத்தான்.  அவன் பந்தை அடிக்காமலேயே   ஓடியதால் மட்டுமே அதில் 23 ரன்கள்.

ரெங்குடு அடுத்த பேட்ஸ்மன். அவன் பாச்சாவுக்கு  நண்பன் இல்லை. பேசவே மாட்டான். சண்டை.  பென்சில் ஒன்று காணாமல் போனதில் சண்டை.  எனவே  பாச்சா ஓடினால்  அவன் ஓடமாட்டான்.  ஒருவழியாக  ரெண்டு ஓவர்கள் சேர்ந்து ஆடினார்கள்.  சுப்பண்ணா  போட்ட பந்தில்  பேட்டுக்கு பதிலாக  பாச்சாவின் கையில் பட்டு அது மெதுவாக  பத்மநாபன்  மடியில் அடைக்கலமானது.   பாச்சா அவுட் இல்லை என்று கத்தியும் பயனில்லை அவுட்.
4 ரன்கள் இன்னும் பாக்கி.  உள்ளே  தண்டபாணியும்  கோதண்டமும் தான் இருக்கிறார்கள்.  கோதண்டம்  கில்லி ஆடுபவன்.  இருந்தும்  கிரிக்கெட் தெரியும் என்று பொய் சொல்லி டீமுக்குள் சேர்ந்து கொண்டவன்.

குள்ளமான தண்டபாணி பாச்சா அவுட் ஆனதும் உள்ளே  நுழைந்தான்.  அவனுக்கு  சத்தார் வேகமாக ஓடிவந்து பந்தை போட்டதும்  பாதி வழி போய்  பாம்பை அடிப்பது போல் அதை எகிறி அடித்தான் தண்டபாணி. அவனுக்கு அது தன்மேல்  படாமல் எங்காவது போகட்டும் என்பது தான் எண்ணம். ஆனால் அது அவன் மார்பில் தாக்கிவிட்டு கிழக்கே  பிள்ளையார் கோவில் பக்கம் ஓடியது. ஒரு ரன் கிடைத்தது.
இன்னும்  மூன்று ரன்கள் எப்படி எடுப்பது?. சுந்தாவும்  பாச்சாவும்  வெளியிலிருந்து கத்தினார்கள். அடித்து விட்டு ஓடு என்று. ரெங்குடு கையில் பேட்டை தயாராக வைத்துக்கொண்டு காத்திருக்க சத்தார் இன்னும் ரெண்டு பால் பாக்கி வைத்தி ருந்தான்.  நேராக  கர்ணன் அர்ஜுனன் மேல் பாணம் போடுவது போல்   கையை ஆட்டி  ஆட்டி கோபமாக  மாங்காய்  அடிப்பது போல் போட்டான்.  சீறிக்  கொண்டு வந்த பந்துக்கு வழிவிட்டு அதன் முதுகில் வேகமாக திரும்பி தாக்கினான் ரெங்குடு. அது பிடிவாதமாக  திரும்பி சத்தார்  பக்கமே  போனது. அதற்குள் ரெங்குடு ஓடி விட்டான். ஒரு ரன். அம்பயர் கோபு அந்த பால் செல்லாது என்று கத்தினார். பௌலிங் போட்டது தப்பு என்று சத்தாரை கண்டித்தார். ஒரு பால் அதிகமாக போட வேண்டும் என்று ரூல் சொன்னார். இந்த தீர்ப்பு சுந்தாவுக்கும் பாச்சாவுக்கும் ரொம்ப   பிடித்தது.
இன்னும் ஒரே ஒரு ரன்  எடுத்தால் சுந்தா டீம் வெற்றி வாகை சூடும்.  குள்ள தண்டபாணி தயாராக நின்றான். ”தண்டு,  தண்டு எப்படியாவது ஒரு ரன்  எடுத்துடுடா”  என்று பாச்சா கத்தினான்.  தண்டுவுக்கு வியர்த்தது. வலது கால் சுளுக்கிக் கொண்ட தால்  ஓட வேண்டாம் என்று தீர்மானித்திருந்தவனுக்கு இப்படி ஒரு சோதனையா?.
சத்தார் வெகு தூரத்திலிருந்து ஓடிவந்து பந்தை தண்டுவின் முழங்கால் பக்கமாக வீசினான்.  காலில் பட்டு விடக்கூடாது என்று தாண்டிய தண்டு பேட்டை தரையில் ஊன்றிக்கொண்டு தாண்டினபோது அந்த பொல்லாத பந்து பேட்டின் வலது முனையில் பட்டு அங்கு ஏற்கனவே உடைந்துபோயிருந்த ஒரு துண்டோடு பறந்து விடுதலையானது. நேராக கால்வாயில் சென்று விழுந்தது.  நாலு ரன் அந்த உடைந்த பேட்டால்  கிடைத்து சுந்தா பாச்சா  டீம் வென்றது.   ஹிமாலய வெற்றி.

சுப்பாராமய்யர்  பரிசு கொடுக்க   தோட்டத்திலிருந்து சில  மாம்பழங்களை கொண்டு வந்தவர்  ஜெயித்த சுந்தா பாச்சா கைகளில் மூங்கில் கொம்பு ஸ்டம்புகளை  பார்த்தது ரௌத்ராகாரமானார். அன்று காலை தோட்டத்தில் மூங்கில் கொம்புகளில் ரெண்டு ஒடிந்திருந்ததின்  ரஹஸ்யம்  அப்போது தான் அவருக்குபுரிந்தது.  ஆகவே  நிச்சயம்  ரொம்ப கோபம்.

 ”எதுடா இந்த கொம்பு?” என்று அவர் கேட்டதற்கு பதில் சொல்ல சுந்தாவோ பாச்சாவோ இல்லை. அவர்கள் அதற்குள் மாம்பழத்தை  பரிசாக வாங்கி  கொண்டு விட்டதால் ஓடிவிட்டார்களே .

 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *