THE LOST CHILD – J K SIVAN

அப்பா அம்மா தான் வேணும். –   நங்கநல்லூர்  J K  SIVAN

அநேக பெற்றோர்கள்  இந்த அனுபவத்தை  உணர்ந்தவர்கள்.  ஆமாம்,  கூட்டங்களில்  கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தை காணாமல் போவது  ஒரு கஷ்டமான  அனுபவம்.   சில  நான்கு ஐந்து வயது குழந்தைகள் துறுதுறுவென்று  இருப்பவை  தானாக எங்காவது நழுவி விடும்.  அவர்களுக்கு  அட்ரஸ்  சொல்ல தெரியாது. அந்தக்காலத்தில் மொபைல் கிடையாது.  குழந்தை பிடிக்கும்  ஆசாமிகள் எங்கும் இந்தமாதிரி கும்பல்களில் வேட்டையாட வருவார்கள்.  ஒரு குழந்தை காணாமல் போய் அதை மீண்டும்  கண்டுபிடித்து  சேர்த்துக்கொள்ளும்  வரை ஒருவன் கஷ்டப்படும் அனுபவம் சொல்லில் அடங்காது.  எனக்கு  ரெண்டு முறை இந்த அனுபவம் என் ரெண்டாவது பெண் குழந்தை மூலம்  ஏற்பட்டதை என்றும் மறக்க மாட்டேன். அப்புறம் சொல்கிறேன் அந்த கதையை.
முல்க் ராஜ் ஆனந்த் ஒரு அற்புத  வடமொழி எழுத்தாளர்.  அவர் எழுதிய  ஒரு கதையின் சாராம்சம் இது.
கல்கத்தாவில் வசந்த கால பெருவிழா  எக்சிபிஷன் எனும் கண்காட்சி  மரங்கள் வயல்கள் சூழ்ந்த  ஒரு  கிராமத்தில் நடந்தது.    கிராமமே காலி.  எல்லோரும்   ஜே ஜே என்று கூட்டமாய் கண்காட்சிக்கு வந்துவிட்டார்கள்.  நெரிசல். நிறைய கடைகள் போட்டிருந்தார்கள்.இடைவெளி குறைவு.  ஆங்காங்கே   சின்ன சின்ன சந்துகள் அமைத்து  எல்லா இடத்தையும்  பூரா வளைத்து போட்டு  கடைகள். வியாபாரிகளின் கூட்டங்கள்.  சின்ன வளைந்த தெருக்களில்  சிலர் குதிரைகள்  மீது, சிலர் நடந்து, கட்டை வண்டி, மாட்டு வண்டி, கை  ரிக்ஷாக்கள் என்று தனியாகவும் குடும்பத்தோடும் நிறைய பேர் கூடிவிட்டார்கள்.

ஒரு ஐந்து வயது பயல் அப்பாவின் கால்களுக்கியிடையே  கையைப் பிடித்தவாறு பரம சந்தோஷத்தோடு இந்த உலகையே மறந்து  கண்காட்சி பொருள்களை  பார்த்துக்கொண்டு  எங்கோ உலகத்தில் இருக்கிறான்.  அங்கங்கே வாயைப் பிளந்து ரசித்துக்கொண்டு நின்று விடுகிறான் மேலே நகர மறுக்கும் அவனை ”வா  வா ”  என கையைப் பிடித்து தர தர வென்று இழுக்கும் அப்பா அம்மா.  அவன் மனதைக்  கொள்ளை கொள்ளும்  டமாரம் அடிக்கும் குரங்கு, தாவும் கன்றுக்குட்டி பொம்மைகள். ரயில் தண்டவாளத்தில் ஓடுகிறது.   கண்ணை கவரும் நாய்,   யானை,  குரங்கு,  அணில் பொம்மைகள். எல்லாமே  காந்தம் போல் அவன் கண்களை கவர்கிறது.   ஒவ்வொரு  கடை, ஸ்டால்  ஐ விட்டு கால்  மேலே நகர  மறுக்கிறது. . கடை நிறைய எண்ணற்ற தின்பண்டங்கள். கலர் கலராக பச்சை சிகப்பு, நீலம், மஞ்சள் எத்தனையோ வண்ண உருவத்தில் பலூன்கள். சின்னதும் பெரிதுமாக. கோலாகலமாக இருந்தது அவனுக்கு.

 ”எனக்கு அது வேணும் ” அவன்  கை  ஒரு பொம்மையை காட்டினான் .  அப்பா பொம்மை  வாங்கித் தரும்  ஜாதி இல்லை.    அவனுக்கும்  தெரியும். இருந்தாலும் நப்பாசை.சிவந்த கண்களோடு ”ஹூஹூம் ..வா இங்கே. கண்டதெல்லாம் வாங்க கூடாது.”அம்மாவுக்கு குழந்தையின் ஆசை புரிந்தாலும்  ராக்ஷஸ அப்பாவிடம் எப்படி ரெகமெண்ட்  RECOMMEND பண்ணுவாள்? காசு அவன் தானே கொடுக்கவேண்டும். குழந்தையின்  கவனத்தை வேறுபக்கம்  ஈர்த்தாள் .
”கண்ணா  அதோ பார் அங்கே என்னன்னு?”    எதிரே  பச்சை பசேல் என்று தோட்டம். கடுகுச் செடிகள்  கொள்ளையாக பூத்திருந்தன. தங்க நிறம் கண்ணுக்கெட்டியவரை. அப்பப்பா  எவ்வளவு பட்டாம்பூச்சி, வண்ணாத்தி, தட்டான் பூச்சிகள், பொன் வண்டுகள். தும்பிகள். குட்டி குட்டியாக  அழகிய இறக்கைகளுடன் ரீங்காரம் செயது கொண்டு நிறைய பறந்ததை பார்த்தன்.  பையன் ஆகாயத்தில்  பறந்தான். அவற்றை துரத்திக் கொண்டு ஓடினான். கையில் பிடி படுவது போல் பாவலா காட்டி ஒரு வண்ணாத்தி பூச்சி அவனை ஏமாற்றியது.  குட்டியான வண்ண வண்ண ரெக்கை யை அடித்துக்கொண்டு அங்கும் இங்கும் பறந்தது.

”கோகுல், அங்கும் இங்கும் வயலுக்குள்  ஓடாதே  வா. போகலாம். ” அம்மா  அழைத்தாள் .பெரிய வயலில்  அவற்றை துரத்திக்  கொண்டு ஓடினான்.  வயல் நடுவே ஒரு பெரிய  திறந்த  கிணறு . கைப்பிடி இல்லை.  கிணற்றில் பூச்சிகள் ஓடி ஒளிந்தன . கிணற்றை சுற்றி சுற்றி வந்தான்.
”கோகுல்  வா  வா வா’தூரத்தில் வரப்பில் இருந்து  அம்மா கூப்பிட்டாள்.  அப்பா ஒரு மர நிழலில் .
கிணற்றுக்கு அப்பால் ஒரு பெரிய பூந்தோட்டம். உயர உயர சாமந்திப்பூ  செடிகள்., .சூரியகாந்தி பூ, ரோஜா  மல்லிகை செடிகள். பையன் கவனம் இப்போது  சூரியகாந்தி பூவின்  மேல்.   அவன் மேல் நிறைய மலர்கள் அபிஷேகம் செய்தன. பூவின் நறுமணம் அவனுக்கு பிடித்தது.  எங்கிருந்தோ ஒரு மரத்திலிருந்து வெள்ளையாக புறாக்கூட்டம்   பறந்து அவனருகே அவன் தலையை தொடுவது போல் பறந்தபோது  அவற்றை துரத்தினான்.
”அம்மா  அதோ பார் புறா”  .
‘வாடா  கோகுல்  வா போகலாம் ” அம்மாவின் குரல் கேட்டபோது எதிரே  பார்த்த  பெரிய  ஆலமரத்தை நோக்கி ஓடினான்.
அவனை ஓடிப் பிடித்து அம்மா கையால் அணைத்தாள்.   கடுகுச் செடி வயல் கடந்து கண்காட்சி கடைத்த தெருக்களில்  சென்றார்கள்.  நிறைய வளைந்து வளைந்து செல்லும் சந்துகள் எல்லாம் அந்த பொருட்காட்சி சாலையை சுற்றி இருந்தன. அம்மாவின் கையை உதறிவிட்டு ஒரு சந்தில் ஓடினான்.  அங்கே ஒரு பக்ஷணம் விற்பவன் நிறைய குலாப் ஜாமூன் ரசகுல்லா, பர்பி, ஜிலேபி எல்லாம் பரப்பி நடுவில் அமர்ந்திருந்தான். கூட்டம் நெரிசல்.கோகுல்  சந்தோஷமாக  அந்த கடைக்குள்  ஓடினான். வாயில் எச்சில் ஊறியது  ‘ எனக்கு அந்த பர்பி வேண்டும்” வாய் முணுமுணுத்தது. அப்பா வாங்கி தரமாட்டான் என்றும் புரிந்தது. எனவே மேலே வளைந்து நகர்ந்தான். மற்றும் ஒரு குறுகிய சந்து வந்தது அதில்  நிறைய அழகான கூடை கூடையாக மலர்கள் ஒரு இடத்தில், ” குல்மோஹர் வேண்டுமா”  என்று பூக்காரன் கத்தி விற்றுக் கொண்டிருந்தான்.
கோகுல் கூடைகள் அருகே சென்றான். பூக்காரன் அவனிடம் ஒன்றை கொடுத்தான்.  ஆசையாக வாங்கி கொண்டு மேலே வேறு ஒரு வளைவில் சென்றான். ஒரு கிழவி நிறைய  ரோஜா  திண்டு மாலைகள் தொடுத்து எங்கும் தோரணமாக தொங்க விட்டிருந்தாள்.  எனக்கு ஒரு மாலை?   அவன் சின்ன குரல் அந்த கிழவிக்கு கேட்டது. சிரித்து கொண்டே  அங்கு  நுழைந்த கோகுல் கழுத்தில் ஒரு சின்ன மாலையை  போட்டாள் . மெத்த மகிழ்ச்சி அவனுக்கு. மாலையை  தரித்துக் கொண்டு ஆடினான்.
ஒரு கும்பல் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அவன் அவர்களை முண்டியடித்து உள்ளே சென்று பார்த்தால்.. அங்கே  ஒருவன் ஒரு பெரிய கொம்பின் மேல்  நிறைய  பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம் , ஊதா, வெள்ளை, பழுப்பு நிற பலூன்களை ஊதி கட்டி பறக்க வீட்டுக் கொண்டிருந்தான்.  கோகுல் எதிரே நின்றதும் ஒரு பலூனை கையில் எடுத்து அதை தேய்த்ததும்  அதில் இருந்து சப்தம் வந்தது.  சிரித்தான்.  வானவில் கலரில் அந்த பலூன்கள் அவன் மனதை கொள்ளை கொண்டன.
அப்பா வாங்கி தர மாட்டார்.. ஏக்கம் மனதில் வழக்கம் போல் சூழ்ந்தது. அவனை அறியாமல் கால்கள் மேலே  நகர்ந்தன. இன்னும் ரெண்டு வளைவுகள் தாண்டினான்.
ஒரு  மரத்தடியில்  வட்டமாக எல்லோரும் நின்று பார்த்துக் கொண்டிருக்க, நடுவே  ஒரு பாம்பாட்டி.
எதிரே ஒரு திறந்து வைத்திருந்த கூடையில்  ஒரு பாம்பு ஆடிக்கொண்டிருந்தது.  ”ஆ  ஆ   எவ்வளவு பெரிய பாம்பு”  பாம்பாட்டி  குழல் போல் ஒன்றை வாயில் வைத்து ஊதிக் கொண்டிருந்தான்.  கூடையை இன்னொரு கையால் ஆட்ட அதன் உள்ளே இருந்து இன்னொரு பெரிய கருப்பும் மஞ்சளுமாக ஒரு பாம்பு மெதுவாக தலையை தூக்கி  வெளியே வந்தது.
வெகுநேரம் அதை பார்த்துக் கொண்டிருந்த கோகுல் இன்னொரு இடத்தில் ஒரு கூட்டம் நிற்பதை பார்த்துவிட்டு அங்கே ஓடினான்.
அதில் நடுவே  ஒரு பெரிய ஒரு மெஷின் அதை நான்குபேர்  பக்கத்துக்கு ரெண்டு பேராக  ஒரு இரும்பு கைப்பிடியை  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.  மரத்தின் அடிப்பாகம் போல் இருந்த அதின் கிளைகள் போல் நிறைய  இரும்பு தூண்கள் அதிலிருந்து அநேக  ஆசனங்கள், தொட்டில், குதிரை,  யானை  என்று ஒவ்வொரு கம்பியிலும்  இணைத்திருந்த இந்த குதிரை யானை, நாற்காலி தொட்டில்களில் குழந்தைகள் அமர்ந்து வட்டம் வட்டமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஊஞ்சல்.  ரங்க ராட்டினம்.
இது தான் கைலாசம், வைகுண்டம்.  நான்  நீ என்று போட்டி போட்டுக்கொண்டு குழந்தைகள் உட்கார ஆசைப்பட   பெற்றோர்கள் பணம் கொடுத்து  அவர்களை அமர்த்தின போது குழந்தைகள்  உற்சாகமாக  சிரித்து, சப்தம் போட்டனர்.
ரங்க ராட்டினத்தில் வேகமாக  சுழன்றார்கள்.
”நான் இந்த குதிரை ஊஞ்சலில் உட்காரணும் ”    கோகுல் பிடிவாதம் பிடித்து  கத்தினான்.
அப்பாவின் பதில் காணோம்.
கோகுல் நினைவுலகத்துக்கு வந்தான். ” அப்பா  அப்பா”   அவன் குரல் உயர்ந்தது. திரும்பி அங்கும் இங்கும் பார்த்த போது எங்கே அம்மாவையும் அப்பாவையும்  காணோம்.”அப்பா எங்கே,  அம்மா எங்கே?
கோகுலுக்கு தொண்டையை அடைத்தது.  கும்பலில் எத்தனையோ முகங்கள்,  ஆனால்   அவனைச்சுற்றி இருந்த கூட்டத்தில் அப்பாவையோ அம்மாவையோ காணோமே.   கோகுல் கண்களில் அழுகை  கண்ணீர்  கொப்புளித்து.  உடம்பு குலுங்கியது. அங்கும் இங்கும்  ஓடினான் எதிரே பிறகு திரும்பி இன்னொரு வளைவில் சந்தில்  ஓடினான் ”அப்பா  அம்மா”   அவன் குரல் பெரிதாக அழுகையுடன் கலந்து  கண்ணீர் வெள்ளத்தோடு  எதிரே இன்னொரு சந்தில்  ஒலித்தது.
கோகுலை  பயம்  முழுமையாக  விழுங்க,  தலை சுற்றியது. வெந்நீராக  கண்ணீர் அவன் மார்பில் சிந்தியது.
கண்ணில் பட்ட  சந்துகளில் எல்லாம் ஓடினான்  தேடினான் ”அப்பா   அம்மா”  கதறினான். .  அவன் தலையில் அணிந்திருந்த தொப்பி கீழே விழுந்ததை பற்றி கவலை இல்லை.  ”அப்பா  அம்மா” .  அவன் குரலுக்கு பதிலே இல்லையே. ஓவென்று அழுதான்.தேம்பி தேம்பி அழுது களைத்தான். எதிரே நீண்ட வயல், தங்க நிற கடுகு செடி இப்போது அவனைக் கவரவில்லை.  பலூனோ பாம்போ, குரங்கு பொம்மையோ,  பர்பி  குலாப் ஜாமூனோ,  புறாக்கள் கூட்டமோ,  அவனைக் கவரவில்லை.  ரங்கராட்டின குதிரை பிடிக்கவில்லை. . அம்மா அப்பாவை போல்  அவன்  ஆசைகளும்  காணாமல் போனது.  ஓடினான். கண்ணில்  அழுகை திரையிட்டது. ஆண்களும்  பெண்களுமாக அநேகர் அவன் ஓடுவதை பார்த்தார்கள். தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.  மஞ்சள் புடைவை அம்மாவை தேடினான்.  சிகப்பு சட்டை அப்பாவையும் காணோமே.   இடது பக்கம் ஓடினான்.  அங்கே தான் மிட்டாய் பக்ஷணக்காரன் இருந்தான். அந்த கும்பலில் தேடியதும் அம்மா  அப்பா என்று குரல் கொடுத்தும்  அவர்கள் இல்லையே .  மிட்டாய், பர்பி லட்டு எல்லாம் ஏதோ கசப்பு பக்ஷணங்களாக வே தோன்றின. பிடிக்கவே இல்லை.  அம்மா  அப்பா  எங்கே  ?
ஒரு கோவில் வந்தது அதன் வாசலில் நின்று தேடினான்.  கும்பலில் காணோம்.ஒருவரை ஒருவர் இடித்து க்கொண்டு உள்ளே போக முயன்று கொண்டிருந்தார்கள். அவர்கள் காலுக்கு இடையே புகுந்து உள்ளே சென்று பார்த்தான்.எங்கும் அப்பா அம்மாவைக் காணோம். நிறைய பேரின் உதைகள் தான் மிஞ்சின.  கீழே தடுமாறி விழுந்தவனை அநேகர் மிதித்தார்கள். மெதுவாக சமாளித்து எழுந்தான். ”அம்மா  அப்பா ”
யாரோ அவனை தூக்கினார்கள்.
”யாரடா குழந்தை நீ.  எப்படி இங்கே வந்தாய்?
”அப்பா வேணும். அம்மா வேணும்.”  அந்த ஆள் தூக்கிக் கொண்டபோது அவன் தோளிலிருந்து  கத்தினான்.
”அதோ அந்த குதிரை மீது உட்காருகிறாயா,  உனக்கு  மிட்டாய் வாங்கி கொடுக்கட்டுமா,  பூக்கள் தரட்டுமா
வண்ணாத்தி  பூச்சிகள் காட்டட்டுமா, பாம்பு பார்க்கிறாயா? ஒரு பெண் குட்டி பாடுகிறதே ஆடுகிறதே பார்.’ அவன் வாங்கி கொடுத்த பலூனை வீசி எறிந்தான் ”
அவனை தூக்கிக் கொண்டிருந்த ஆள்  அழுகையை நிறுத்த  எவ்வளவோ வழிகளை தேடினான்.
தலையை வேகமாக ஆட்டினான்  கோகுல்  ”ஹூஹூம்  எனக்கு அம்மா தான் வேணும். அப்பா கிட்டே போகணும்”
கோகுலைப் பொறுத்தவரை   எதெல்லாம் வாழ்க்கையின் லக்ஷியமாக இருந்ததோ அவை வெறுத்துவிட்டன.  ”அம்மா  அப்பா” மட்டும் தான் வேணும்.
அவனுக்கு  இப்போது அத்தியாவசியமாக  ஒண்ணுமே வாங்கித்தராத அப்பா இப்போதே வேணும்.முல்க் ராஜ் ஆனந்த  கதையை சுபம் சுபம் சுபம் என்று முடிக்கவில்லை… கோகுலின்  கதறலோடு நிறுத்திவிட்டார். கோகுல் அப்பா அம்மாவை  அடைந்தானா? அப்பா அம்மா  அவனைத் தேடி வந்து மீட்டார்களா  இல்லையா?   ”THE  LOST CHILD ”  என்கிற  இந்த கதையின்  முடிவை  வாசகர் கற்பனைக்கு விட்டு விடுகிறார் முல்க்  ராஜ்  ஆனந்த்

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *