HINDU BRAHMIN MARRIAGES. J K SIVAN

சில தவறுகள்  –   நங்கநல்லூர்  J K  SIVAN

காலம் மாறி விட்டது.  கல்யாணம் சில சுப மாதங்களில் தான் நிறைய நடக்கிறது. எங்காவது ஒரு பெரிய  கல்யாண மண்டபம் வாடகைக்கு எடுத்து, கார்கள் நிறுத்த முடியாமல்  எங்கோ  ஒரு  இடத்தில் விட்டுவிட்டு, நடந்து கும்பலில் எடுத்துக் கொண்டு  ஒன்றரை  நாளில்  திருமணங்கள்.  கல்யாணத்துக்கு முதல் நாள் மாலையில்  கல்யாணமான தம்பதிகள் போல்  மாலைகள்  போட்டுக்கொண்டு  எல்லோரையும் வரவேற்று கல்யாணம் ஆகும் முன் அட்வான்ஸாக பரிசுகள் பெற்று சாப்பிட ஓடுவதற்கு பெயர்  அழைப்பு,  ரிசப்ஷன்.
முன்பெல்லாம்  அப்படியல்ல. மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் அப்புறம்  கோவிலைச் சுற்றி நாலு தெருக்களில் மாப்பிள்ளை தனியாக சாரட் வண்டியில், விளக்கொளியில், வாத்ய கோஷ்டி ஒழிக்க மெதுவாக  ஊர்வலம் நடைபெறும்.

இப்பதெல்லாம் தற்போது  கல்யாணத்துக்கு  முதல் நாள் அன்றே மாப்பிள்ளை  கல்யாண சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது  நியாயத்துக்கு சத்தியத்திற்குப் புறம்பாக இருக்கிறது.  ஏற்கனவே வந்து  தங்கி இருப்பவரை  எப்படி  அழைப்பது !

காசியாத்திரை என்று ஒரு சடங்கு. பல  நூற்றாண்டுகளாக நடைபெறும்  சம்ப்ரதாயம். அப்போதெல்லாம்  கல்யாணமாகாத பிரம்மச்சாரிகள் காசிக்கு வேதம்  சாஸ்திரம் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார் ப்ரம்மச்சாரியை வழி நிறுத்தி, ”அப்பனே, எங்கள் பெண்ணை ஏற்றுக் கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தவேண்டும்” என்று வேண்டிக்கொள்வார்கள். ”ஆஹா  அப்படியே. ரொம்ப சரி ”என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான்  கன்யா தானம் பெறுவான்.  தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கொள்வான்.   இதுதான்  இப்போதும் ட்ராமாவாக நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து  கல்யாணம்  ஏற்பாடாகிறது.  அதற்கப்பறம்  மறுநாள் காலை கல்யாணம்.  அப்போதுபோய்  மாப்பிள்ளை காசிக்குப் போவதாக  சடங்கு நடத்துவது முரண்பாடாக இல்லையா?

ஊஞ்சலில் பாலும் பழமும் கொடுப்பது ஒரு  சடங்கு. சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்து நெருக்கமான உறவுகள் நட்பு வட்டாரம் எல்லாரும்  கொண்டாடுவார்கள்.

கோவில்களில்  ஸ்வாமி விக்ரஹங்களுக்கு  இப்போதும்  விமரிசையாக  கல்யாண உற்சவங்கள்  நடக்கிறது.  விவாஹம்  மாங்கல்ய தாரணம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்து வைப்பது நமது வாழ்க்கையில் மட்டும்  ஏன் என்று புரியவில்லை.  யார் இதெல்லாம் மாற்றியது? எதற்காக?  ஏதாவது குந்தகம்  ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும் அல்லவா?.

பாணிக்ரஹணம் என்று மாப்பிள்ளையை மணப்பெண் வலது கையை பிடித்துக் கொள்வது சுபமுகூர்த்தம் வைத்து நல்ல க்னத்தில்  மட்டும் நடக்கும் வழக்கம்.  மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை  (பிடிப்பது=க்ரஹணம்) தொட  வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் அப்புறம்!) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் கூட   இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும் என்பது தானே  வழக்கம். நம்பிக்கை.  வாத்தியார்கள் கவனமாக இருக்கவேண்டும். பெற்றோர்கள் கவலைப் படமாட்டார்கள் என்று தெரிகிறது.

”ஹல்லோ” சொல்லி  கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண்  ரெண்டு பேரும்  விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்து  கொண்டு  கைகள் புனிதமாகி,  இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன  செய்யத் தகுதி பெறுகிறார்கள்.  இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள்.   இதனால்  புனிதம்  கெட்டு  திருமண தம்பதிகளின் கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்ளலாம்.

கல்யாண  கூறை பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம்  எதற்கு சேரவேண்டும்? ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது.  மாயவரம்  பக்கம்  கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாட்டு புடவை என்பது பிரபலம். அது தான்  ”கூறைப்புடவை ” ஆகிவிட்டது.   நூலில் சிவப்புக் கட்டம் போட்டு ரொம்ப அழகாக நெய்த ஜோரான புடவை. உண்மையான கூறைப் புடவை என்றால்  அது  பருத்தி நூல் புடவை என்று புரிகிறதா? நாம்  பணத்தை  வாரி இறைத்து பெருமை தேடி, பலர் மெச்ச, தற்போது  கடன் வாங்கியாவது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகை பட்டு புடவையை  ஆயிரக்கணக்கில் செலவு செய்து  ஏன் பாவத்தைத் தேடி சுமக்கிறோம்?
தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான்  மஹா பெரியவா ரொம்ப கடுமையாக அடிக்கடி  ”இதைப்  பண்ணாதேங்கோ, பட்டுப்புடவையே  வேண்டாம், பருத்திப் புடவை போறும்”  என்று மஹா பெரியவா  இதைத் தவிர்க்க வேண்டும் என்று  எல்லோரிடமும் கேட்டுக்கொள்வார்.  1966-ல் பரமாச்சார்யாள் உத்தரவு: “என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போட வேண்டாம் ”

விவாஹப் பணம் (Dowry):  இது குறைந்திருக்கிறது என்று நம்புகிறோம். மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம் மட்டுமல்ல  சட்ட விரோதமும் கூட  இப்போது.   மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்து  கொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். இது அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்து களுக்கு தக்ஷிணை கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஏதாவதொரு ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

ரிசெப்ஷன்  பத்தி மேலே கொஞ்சம் சொன்னேன்.. கல்யாணத்துக்கு  முதல் நாள் சாயங்காலமே  வரவேற்பு கொடுப்பது  சாஸ்த்ர விரோதம்.  ரொம்ப தப்பு.  தம்பதிகளாகச் சேரும் முன் ரெண்டு பேரையும்  ஒன்றாக  உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.

தாலி கட்டுவது. திருமாங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமாங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம்
ஒரு முஹூர்த்தம்  காலை 9-  10:30க்கு என்று  குறிப்பிட்டால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்து விடுகிறார்கள். முகூர்த்தம் முடிந்தவுடன்  சாப்பிட  பாதி பேருக்கு மேல்  எழுந்து போய்விடுகிறார்கள்.  மற்றவர்கள்  நாற்காலிகளை வட்டமாகப் போட்டுக்கொண்டு   ஊர்வம்பு அடிக்கிறார்கள்.   உண்மையான விவாகச் சடங்குகள் முகூர்த்த நேரத்துக்கு அப்புறம் தானே ஒரு சில மணி நேரம்  நடக்கின்றன.   அதற்கு சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.  இதெல்லாம் மஹா பெரியவா, நம் பெரியோர்கள் சொன்னது தான். இருந்தும் செவிடன் காதில் சங்கு  சமாசாரமாக போய்விட்டது. இதில் அக்கறை கொண்டவர்கள்,  சாஸ்திரத்தை மதிப்பவர்கள்  குழந்தைகளின் நல்ல மணவாழ்க்கை எதிர்காலத்தில் விருப்பமுடையவர்களாவது மாற்றிக் கொள்ள  வாய்ப்பு இருக்கிறதே.
.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *