12.2.23 VAZHOOR SIVAN TEMPLE J K SIVAN

12.2.2023  வழூர்  தரிசனம்-  நங்கநல்லூர்  J K  SIVAN  ப்ரம்ம புரீஸ்வரர் ஆலயம்.

தமிழகத்தின்  ஒவ்வொரு  கிராமத்திலும் ஏதாவதொரு ஒரு அற்புத  ஆலயம் உள்ளது.  ஒவ்வொரு கோவிலுக்குள்ளும் ஏதேனும் ஒரு  விசித்திரம், அதிசயம், அற்புதமான  சிற்ப வேலைப்பாடோ , தாத்பர்யமோ இருக்கிறது. அதை அறிந்து சொல்ல  எவரும் இல்லை என்பது மனதுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஏதோ கோவிலுக்கு போகிறோம், கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம், சுற்றுகிறோம், பிரசாதம் தேடுகிறோம், வெளியே வந்துவிடுகிறோம் என்று செல்பவர்கள் அதிகமாகி விட்டார்கள்.  கோவிலில் உள்ள  விசேஷங்களை கேட்பதும் இல்லை. கேட்டால் சொல்பவர்களும் இல்லை.
வழூர் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஜென்ம ஸ்தலம். அவர் பிறந்த காலத்தில் சில குடிசைகள், சாதாரண சில ஒட்டு வீடுகள் மட்டுமே இருந்தது. அவற்றில் எது காமகோடி சாஸ்திரிகள் வாழ்ந்த வீடு என்று அறிந்து அந்த இடத்தில் இருந்து கொண்டு வந்தவர்களிடமிருந்து நிலம்  பெற்று, அந்த இடத்தையே  பெரிதாக்கி ஒரு  மணி மண்டபமாக மாற்றி இருக்கிறார்கள்.  எல்லாம்  பக்தர்களின்  கைங்கர்யம்.
வழூரில் சேஷாத்ரி ஸ்வாமிகள் வாழ்ந்தது சில  வருஷங்கள் தான். குழந்தைப் பருவம். அப்புறம் காஞ்சிபுரத்துக்கு சென்று  தாய் தந்தையோடு வாழ்ந்து தந்தையை இழந்து, மீண்டும் தாயோடு  வழூருக்கு  தாத்தா  காமகோடி சாஸ்திரிகள் இல்லத்துக்கு வந்து  அங்கே  சில காலத்தில்  தாயும் மறைந்துவிட்டபின்  வழூரை விட்டு திருவண்ணாமலைக்கு  நடந்து விட்டார்.  வழூரில்  ஸ்வாமிகள்  வாழ்ந்த வீட்டுக்கு அருகே ஒரு குளம் இருக்கிறது. என்றும் வற்றாத நீர் கொண்டது. அதில் படித்துறைக்கு காமகோடி படித்துறை என்று பெயர் இன்றும் உள்ளது. தாமரைக்குளம்.  அதன் கரையில் பெருமாள் கோவில். பெயருக்கேற்ற சுந்தரவதனர். அந்த கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சற்று அருகே  ரெண்டு மூன்று தெரு தள்ளி பிரம்மபுரீஸ் வரர் ஆலயம் அமைதியாக காட்சி அளிக்கிறது.  

காஞ்சிபுரத்துக்கு  தெற்கே,  சுகநதி என்று  ஒரு சிறு ஆறு. அதன்  வடகரையில் உள்ள  வழூருக்கு முற்காலத்தில் அயனீஸ்வரம் எனப் பெயர்.  அயன் என்றால் ப்ரம்மா. சோழர் காலத்தில் வழூரின் பெயர் வழுதாவூர்.“புலியூர்க் கோட்டத்து, இரும்பேடு கூற்றத்து வழுதாவூர்” என  கல்வெட்டு சொல்கிறது. சிவபெருமான் ஸ்தாணுவாக நிற்கும்போது ”நான்  சிவனுடைய  முடியை பார்த்துவிட்டேன், இதோ இந்த தாழம்பூ அதற்கு சாக்ஷி” என்று  பொய் சொன்ன  ப்ரம்மா சாபம் பெற்று தவம் செயது சாபம் நீங்கியதாக  சில ஊர்களை  சொல்வார்கள். அதில் ஒன்று வழூர் . அதனால் தான் ப்ரம்மா பெயரில் ”அயனீஸ்வரம்’’ என்ற பெயர்.

இங்கே  சிவன் கோவில் எங்கே இருக்கிறது என்று வழக்கம் போல் கேட்டதற்கு  அந்தப்பக்கம் தான் ஈஸ்பரன் கோயில் என்று ஒரு பெண் கைகாட்ட, அந்த  சென்றபோது  பெரிய கோவில் ஒன்று கண்ணில் பட்டது. கதவு திறந்திருந்தது ஆச்சர்யம்.  காரணம்,    நான் சென்றபோது மாலை மூன்றரை மணி. ஆச்சர்யமாக  சந்தோஷமாக  திறந்திருந்த கோவிலுள்  நுழைந்தேன்.  சில நாட்களுக்கு முன் நடந்த  உற்சவத்தின் போது  ஊர்வலம் வந்த  மூர்த்திகளை  மீண்டும்  சப்பரத்தில் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துக்கொண்டு  விக்ரஹங்களை ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருந்த சிலர்  என்னை உள்ளே அனுமதித்தனர்.  உள்ளே  பெரிய லிங்கமாக  ப்ரம்ம புரீஸ்வரர். இந்த  ஆலயம்  மூன்றாம் குலோத்துங்கன் ஆணைக்கிணங்க செம்பியத்தரையன் என்ற சம்புவராய ராஜாவால்  புனருத்தாரணம் பட்டது.  ராஜாக்கள் இந்த கோவிலுக்கு  தானமாக கோவில்குப்பம்,  சாத்தனூர்  எனும் கிராமங்கள்  மானியமாக  தந்திருக்கிறார்கள். அந்த  கிராம  வருமானம், தான் கோவில் பராமரிப்புக்கு.  மாகறல் நாட்டு  ஆர்ப்பாக்கம் கிராமத்தின் வருவாயையும், புரவாநல்லூர் என்கிற கிராமத்தின்  வருவாயையும் இந்த அயனீஸ்வரர் ஆலயத்திற்கு தந்திருக்கிறார்கள்.  இருபத்திமூன்று பசு மற்றும் காளைகளையும் தானமாகத் தந்ததாக  கல்வெட்டு சொல்கிறது.    நதிக்கரையில் சுகப்பிரம்ம ரிஷி தவம் செய்ததால் நதிக்கு சுகநதி என்று பெயர். நெடுங்குன்றம் என்ற ஊரில் உள்ள  கிளி மலை என்ற சுகப்பிரம்ம ரிஷி பர்வதத்திலிருந்து இந்த  நதி உற்பத்தி யாகி,  படாளம் வழியாக பாலாற்றில் கலக்கிறது.  600  வருஷங்களுக்கு முன்பு பசுமலை  சுவாமிகள் எனும் துறவி இங்கே வந்து பிரம்ம புரீஸ்வரர்  ஆலயத்தில்  திருப்பணிகள் செய்து  வழிபட்டார் என்று அறிகிறோம்.

அம்பாள் பெயர்  காமரசவல்லி.  கோவிலைச் சுற்றி  உயர்ந்த  மதில் சுவர்கள். ஸ்ரீ காம ரசவல்லி அழகாக நிற்கிறாள். சேஷாத்ரி ஸ்வாமிகள் இங்கே வந்து த்யானத்தில் பல நாட்கள் ஈடுபட்டிருக்கிறார்.   ஆலயத்தில் பிரவேசித்தவுடன் முதலில்  அழகிய ஐராவத கணபதி . அப்புறம் தெற்கு பார்த்த ப்ரம்ம புரீஸ்வரர். நிறைய தூண்கள். தென்கிழக்கு திசையான அக்னி மூலையில், பிரம்ம தீர்த்தம் நான்கு  புறமும் படித்துறையோடு  அழகாக இருக்கிறது. பராமரிப்பு போதாது.  கிழக்கே கொடிமரம். சின்ன மண்டபத்தில் அழகான நந்தி. ப்ரம்ம புரீஸ்வரர் சந்நிதியில் கல்பூர ஆரத்தி காட்டி ஒரு  அர்ச்சகர்  விபூதி பிரசாதம் அளித்தார். சேஷாத்ரி ஸ்வாமிகள் எதிரே அமர்ந்து தியானம் செய்வது போல் மனத்திரையில் காட்சி தோன்றியது.  மண்டபத் தூண்களில் பதினாறு கணபதி  உருவங்கள் செதுக்கி இருக்கிறது.  அம்பிகைக்கு  தனிச் சந்நிதி.  ஸ்ரீ காமரசவல்லி தாமரை மற்றும் நீலோத்பல மலர்களை கரங்களில்  ஏந்தி கருணை வெள்ளமாக அருள் பாலிக்கிறாள்  ஆவுடை மீது நிற்கும் அழகான அம்பாள். பக்தர்கள் வேண்டுவதை, இச்சிப்பதை,(காமம்: இச்சை, விருப்பம்) நிறைவேற்றி அருளும் காமரசவல்லி. ஆகம முறைப்படி சிவ கோஷ்ட மூர்த்தங்களோடு  கம்பீரமான துவாரபாலகர்கள்.  வாயு மூலையில் வள்ளி தேவசேனாபதியாக சுப்ரமண்யன்.   பக்தர்கள்  இன்னும் வந்து கொண்டே  இருக்கிறார்கள்.  வருஷா வருஷம்  ஆடி கிருத்திகையில்  சுப்ரமண்யனுக்கு கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடக்கிறது. சித்ரா பௌர்ணமியில் ஏகதின உற்சவமும்,  பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் உண்டு. விநாயகர் சதுர்த்தி வெகு விசேஷமாக  அனுசரிக்கப்படுகிறது. திருவீதி உலாவும் நடக்கின்றது. ஏனைய சிவாலய  விசேஷங்களும் இங்கு சிறப்புற  நடைபெறுகிறது தமிழக அரசுக்குச்  சொந்தமானது  இந்த ஆலயம்.பக்தர்கள் உதவியோடு   2014ல்  கும்பாபிஷேகம் நடந்தது. சரக்கொன்றை  ஸ்தல விருக்ஷம்.நிறைய  சோழர்கள்  கால கல்வெட்டுகள்.வழூரை விட்டு வெளிய  செல்ல மனமில்லாமல்  அரைமனதோடு காரை நோக்கி நடந்தேன்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *