மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN

மறக்க முடியாத நாள்  –  நங்கநல்லூர்  J.K. SIVAN
இன்று ஜனவரி 30.    நினைவு  75 வருஷங்களுக்கு  முன் சென்று  நடந்த  ஒரு சம்பவத்தை மீண்டும் காட்டுகிறது. ஒரு கிழவரின் உடலில்  மூன்று குண்டுகள் செலுத்தினேன் என்றான். ஆனால்  நாலு துளைகள்.  நாலாவது குண்டு  யார் சுட்டது என்று இப்பவும் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அதை, அந்த மனிதரை  நினைக்காமல்  இருக்க முடியலியே. காரணம்.  நடந்தது யாரும் மறக்கக் கூடாத விஷயம்.  அந்த கிழவரும் மறக்கமுடியாத மனிதர்.
அப்போது எனக்கு 9 வயசு. நன்றாக நினைவிருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோவில் வயலின் வீணை  எல்லாம்  அழுதது. ஏன் எதற்கு என்று தெரியவில்லை.  கேட்டால்  யாரும் என்னை மதித்து பதில் சொல்லலை.  எனக்கும் அதற்கு மேல் புரியவில்லை. தெருவெல்லாம் கூடிக் கூடி மொட்டு மொட்டாக கும்பல். என்ன பேசினார்கள் என்று தெரியாத வயது. கோடம்பாக்கத்தில் இருந்தேன். அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.
+++
ஜனவரி 30, 1948 வெளிக்கிழமை.காலை 3.30 மணி — வழக்கமாக அவர் தூங்கி எழும் நேரம். பிரிவினையால் இந்தியா  துண்டாடப்பட்டு லட்சோப லக்ஷம் மக்கள் வீடு , வாசல், சுற்றம், உறவு, சுகம் அனைத்து இழந்து பரதேசிகளாக ஒரே இரவில் அனாதைகளாக, மதவெறி, இனவெறி,கொலை வெறி அவர்களைச் சூறையாட, ரத்தம் அநேக இடங்களில் ஆறாக ஓடியது. டில்லி பேருக்குத் தான் தலைநகர். அதற்கு தலை சுற்றியது. அல்புகர்க் தெருவில் பிர்லா மாளிகையின் முதல் மாடியில் நிசப்தம்.
கல்கத்தாவில் அமளியை ஒருவாறாக சமாதானப் படுத்திவிட்டு  செப்டம்பர் மாதம் 10 தேதி வாக்கில், அவர் டில்லி வந்தார்.  அவர் வரவால் கொஞ்சம் ரத்த சேதம் குறையும். ஆத்திரம் அடங்கும், அமைதி ஏற்படும் என நம்பிக்கை.  கடந்த  4 மாத காலத்தில் மக்கள் கோபம் கொஞ்சம்  குறைந்தது  அந்த  மனிதரின் அலாதி திறமை. 78 வயதில் அன்பு தான் அவருக்கு பலமாக கை கொடுத்தது.

”அமைதி நீங்கள் காக்கவில்லை என்றால் என் பிராணனை விடுகிறேன். உங்கள் பொறுமைக்காக, விட்டுக் கொடுக்கும் குணத்துக்காக நான் பட்டினி உபவாசம் கிடக்கிறேன்.”உபவாசம் பயனளித்தது.  12 நாள் ஆகி அவர் உண்ணாவிரதம் முடிந்து. ”ஒற்றுமை , ஒற்றுமை, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். கஷ்டங்களை எதிர்கொள்வோம். காலம் மாறும். நிச்சயம் எதிர்காலம் இந்த சுதந்திர நாட்டில் நமக்கு இன்பத்தைத் தரும்” என்ன தான் அவர் கத்தினாலும், சில காதுகளில் ஏறவில்லை.  அவர்கள் இழந்த, பணம், சொத்து, குடும்ப நாசம், பொறுமையாகவா அவர் பேச்சைக் கேட்க வைக்கும்? ஒரு சிலர் அவரையே கொல்ல முயற்சி செய்தனர். இவரால் தானே இவ்வளவும்?  எதிரிக்கும் அன்பு காட்டும், தவறு செய்பவ னையும் சகோதரனாக அணைக்கும் இவர் தேவையில்லை” என்றனர் சிலர்.  தினமும் சாயந்திரம்  பிர்லா மாளிகையின் வெட்ட வெளியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில்  உபதேசம் செய்வார். அமைதி காக்க வேண்டுவார். இந்து முஸ்லிம் இருவரும் இரு கண்கள், ஒரே உயிர் என்றெல்லாம் எடுத்து சொல்வார். மக்களை ஒரே நாளில் அமைதியுறச் செய்ய இயலுமா? காலம் அல்லவோ உதவும்!

அன்று காலையும்  வழக்கம் போல் மரப் பலகை படுக்கையிலிருந்து எழுந்தார். மற்றோரை எழுப்பினார். யார் அவர்கள்? உதவியாளர் பிரிஜ் கிருஷ்ண சண்டிவாலா, பேத்திகளான மனு, அபா. எப்போதும்உடனிருக்கும் வைத்தியர் டாக்டர் சுஷீலா நய்யார் அன்று புதிதாக உருவான பாகிஸ் தானில் ஏதோ முக்கிய  வேலையாகச் சென்றுவிட்டார் .

முதியவர் வேப்பங்குச்சியால் பல் விளக்கினார். அது தான் டூத் பிரஷ் அவருக்கு எப்போதும். எத்தனையோ  இந்தியர் களுக்கும் இன்றும் அது தானே  ப்ரஷ்..

காலை மணி 3.45. — முதல் மாடி வெராந்தாவில் குளிர் உடலைத் துளைக்க, வழக்கமான பிரார்த் தனை. எப்போதும் கீதை ஸ்லோகங்கள் வாசிக்கும்  சுஷீலா நய்யார்  இல்லாததால் மனு. அபா இன்னும் தூக்கத்திலேயே . கிழவரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே அவள், என்னை விட்டுப் பிரிய எண்ணமோ? எனக்கு விருப்பமில்லாத செயல்கள் எங்கும் நிறைய இப்போ தெல்லாம் நடக்கிறதே. ”ஹே ராமா, என்னை சீக்கிரமே கொண்டு போய் விடு. வெகு காலம் இதை யெல்லாம் இருந்து பார்க்க வைக்காதே. என் கட்டுக்கு மீறி போகிறதே.”
”தாத்தா, இன்று என்ன பிரார்த்தனை படிக்கட்டும்? — மனு .
”உனக்கு தெரியுமே, அந்த குஜராத்தி பிரார்த்தனைப் பாட்டையே படி.பாடு”
அந்த பாட்டு சொன்ன பொருள் கிட்டத் தட்ட ” ஒ மனிதா, களைத்தோ, இளைத்தோ போனாலும், தொய்யாதே , விடாதே, தனி மனிதனானாலும் எதிர்கொள். மனதில் பலம் கொள். கைக்கு அது தானாகவே கிடைக்கட்டும். தொடர்ந்து முயன்று கொண்டே இரு!” ( இது என்ன  குஜராத்தி பாட்டு?)
பிரார்த்தனை முடிந்தது. அபாவும்  எழுந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டாச்சு. இருவர் தோளிலும் கைத்தாங்கலாக நடந்து தனது அறைக்கு திரும்பினார் பெரியவர். மனு அவரது குளிரில் உறைந்திருந்த   கால்கள் மேல் கம்பளி சுற்றினாள் . வெளியே கும்மிருட்டு. இன்னும் சூரிய உதயமில்லை. காரிருளும் பனியும், உறைய வைக்கும் டில்லிக்கே உரித்தான ஜனவரி மாத பனிப்படலம். கிழவர் தன் அன்றாட வேலையைத் துவங்கிவிட்டார்.
காங்கிரஸ் எப்படி இயங்க வேண்டும் (??) என்று முதல் நாள் இரவில் தான் எழுதிய சட்ட திட்டம் அவரது பார்வையில் மெருகு பெற்றுக் கொண்டிருந்தது. காங்கிரசின் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என்றுஅவர் எழுதியது தான் அவர் விட்டுச் சென்ற அவரது உயில் எனலாம்.
காலை 4.45 மணி. — ஒரு குவளை எலுமிச்சம்பழ சாறு, தேனுடன் வெந்நீரில் கலந்து பருகினார்.
காலை 5.45 மணி. — ஒரு சிறு டம்பளர் ஆரஞ்சு பழ சாறு. இதெல்லாம் அவருக்கு ஏன் தேவை என்றால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் கலகலத்து விட்டது. சக்தி இல்லை. விரைவில் உணர்வு இழக்க தொடங்கியது. மயக்கம் லேசாக வருகிறதே. தலை கிறு கிறு கிறது. தூக்கமாகிவிட்டது. அரை மணி நேரம் நடை பழகினார். காலுக்கு சக்தி வேண்டுமே. பொழுது ஒரு நிமிஷம் கூட வீணாக்காமல் உழைக்கவேண்டும்? யாருக்கு, தனக்கு பணம் சேர்க்கவா? (அது மற்றவர்களை சேர்ந்தது)
”எங்கே அந்த கடிதங்கள்? சீக்கிரம் கொண்டுவா? நேற்று அந்த கிஷோரிலால் மஷ்ருவாலாவுக்கு பதில் எழுதி சீக்கிரமே நான் குஜராத் வருவேன் அதற்குள் குஜராத்தில் சேவா கிராமத்தில் செய்யவேண்டியதை விளக்கினேனே? ”
அந்த கடிதத்தை    மனு  எங்கோ ஞாபக மறதியாக வைத்து விட்டாள் . விடுவாரா கிழவர். ”தேடிக் கண்டு பிடித்து உடனே தபாலில் அனுப்பு”
தாத்தா, நாம்ப எல்லோரும் பிப்ரவரி 2 வாக்கில் சேவா கிராமம் போகிறோம் இல்லையா?”
”மனு, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கம்மா தெரியும்?” எல்லாமே கொஞ்சம் தெளிவானால் இன்று சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் நாம் இங்கிருந்து செல்வதைப் பற்றி அறிவிக்கிறேனே. ரேடியோவில் ராத்திரியே தெரியப் படுத்தலாம்.””
உண்ணா விரதங்கள் அவரை வாட்டி எடுத்தன. சில காலமாகவே இருமல். அதைச் சமனப்படுத்த பனை வெல்லம், இருமல் மாத்திரை, லவங்கப்பொடி எல்லாம் எடுத்துக் கொண்டார். ”அடடே! என்ன இது? லவங்கப் பொடி தீர்ந்து விட்டதே. தினமும் காலையில் சற்று நேரம் அறைக்குள் ளேயே நடப்பதில் அவருக்கு உதவி செய்யாமல், உடனே லவங்கத்தைப் பொடி பண்ண மனு தயாரானாள். பொடி பண்ணிவிட்டு நொடியில் வருகிறேன்” என்று குரல் கொடுத்தாள் . ”ராத்திரி உங்களுக்கு தேவைப்படுமே.”
”ராத்திரி பத்தி இப்போ என்ன கவலை? இருப்பேனோ மாட்டேனோ? அப்போ பார்த்துக்கலாமே!”
அவருக்கு மேற்கத்திய மருந்துகள் பிடிக்காது. கிட்டேயே வரக்கூடாது. பென்சிலின் இருமல் மாத்திரை கொடுக்கும்போது கூட அவளிடம்”பைத்தியமே, என் ராமன் பெயரைக் காட்டிலுமா இது சக்தி வாய்ந்தது.” என்பார்.
காலை 7 மணி – ராஜன் பாபு வருவார். அவருடன் நேருவும் சேர்ந்துகொண்டு இருவரும் அமேரிக்கா பயணம் விரைவில் போகவேண்டும். உண்ணாவிரத பாதிப்பு இன்னும் சரியாக பழையபடி நடக்க முடியவில்லை.
ஒரு பெஞ்சில் படுத்திருந்தார், பிரிஜ் கிருஷ்ணா அரை மணி நேரம் நன்றாக அவர் கால்களைப் பிடித்து எண்ணெய் தேய்த்து உருவி விட்டார். தெம்பாக இருந்தது. மாடியிலேயே உதவியாளர் பியாரேலால்  அறையும். அவரைக்  கூப்பிட்டு தான் எழுதித் திருத்திய காங்கிரஸ் செயல்பாட்டு திட்டம் குறிப்பை நீட்டி
”இதைப் படித்துப் பார்த்து நான் ஏதாவது விட்டிருந்தால் பூர்த்தி செய்து, அடுத்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் பேசி முடிவெடுக்கச் சொல்லுங்கள்”
டில்லி குளிரிலிருந்து விடுபட ரெண்டு மின் ஹீட்டர்கள் ”உர்” என்று உறுமிக் கொண்டு மேலே இயங்கின. நேரத்தை வீணடிக்காமல் கிழவர் அன்றைய செய்தித் தாள்களைமேய்ந்து கொண்டிருந்தார்.
” என்ன பியாரேலால், நான் எழுதியதைப் படித்து முடித்தாயா? இனி தமிழ்நாட்டில் அரிசிப்  பஞ்சம் இருப்பதை எப்படி தீர்க்கலாம் என்று ஒரு யோசனை சொல்லியிருக்கிறேன் இதையும் சேர்த்துக் கொள் ”. மனு   அவரது எண்ணெய்  உடம்பை குளிப்பாட்டி விட்டாள். அவளையும் விடவில்லை.
” கைகளுக்கு சக்தி அளிக்க நான் உனக்குச் சொல்லிக்  கொடுத்த பயிற்சியை விடாமல் செய்து வருகிறாயா?
”இல்லையே தாத்தா எனக்கு அது பிடிக்கலை” மெல்லிதாக கோபித்துக்கொண்டாலும் அவளுக்கு தாத்தாவின் அக்கறை புரிந்தது. வழக்கமாக பார்க்கும் எடை இயந்திரம் 109 1/2 பவுண்டு காட்டியது. 5 அடி 5 அங்குலம்.உண்ணாவிரதத்துக்கு அப்புறம் ரெண்டரை பவுண்டு கூடியிருக்கிறதே. குளித்தவுடன் புத்துணர்ச்சி. ஒருவர் வந்து ஏதோ ஒரு செய்தி சொல்கிறார். ”ஒரு பெண்மணி சேவா கிராம் போய்ச் சேரவில்லை”.
”ஏன்?”
”வார்தாவிலிருந்து வண்டி எதுவும் கிடைக்கவில்லையாம்”.
”வண்டி இல்லையென்றால் நடந்து போக வேண்டியது தானே.  சில மைல்கள் நடக்க முடியாதா?”
பலே கிழவர்.   எத்தனை மைல்கள் மின்னல் வேகத்தில் நடப்பவர். நடந்தவர். அப்புறம் சிறிது நேரம் வங்காளமொழி எழுத்துப் பயிற்சி.
”இந்தியாவின் அத்தனை மொழியும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் ஒரு இந்தியன்” என்ற கட்டுப்பாடு அவருக்கு. வங்காளியில் என்ன எழுதினார்?:
” பைரவன் வீடு நைஹாதியில் இருந்தது. ஷைலா அவன் முதல் பெண். இன்றைக்கு ஷைலாவுக்கும் கைலாஷுக்கும் கல்யாணம்”
காலை 9.30 மணி. — சாப்பாடு. வேகவைத்த காய்கறி. 12 அவுன்ஸ் ஆட்டுப்பால். 4 தக்காளி. 4 ஆரஞ்சு, கேரட்டு+ எலுமிச்சை, இஞ்சிச்சாறு. நேரம் வீணாகலாமா? இதைச் சாப்பிட்டுக் கொண்டே காங்கிரஸ் சட்டதிட்ட ஒழுக்க நெறி முறைகள் பற்றி பியாரே லாலுடன் விவாதம். நேற்று ஹிந்து மகா சபா தலைவர் சயாம பிரசாத் முகர்ஜியுடன் பேச்சு வார்த்தை. ”அவரிடம் சொல்லுங்கள், அந்த சபையில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக கொலை, வன்முறை என்று பேசுவது ஈடுபடுவது தவறானது. நாட்டுக்கு நல்லதல்ல. முகர்ஜி தலையிட்டு இவற்றை நிறுத்தலாமே ”
”தலைவரே இவ்வாறு வன்முறையை வளர்க்கும் விதத்தில் பேசுகிறாரே என்ன செய்ய?”
கிழவரின் புருவங்கள் நெருங்கின. அடுத்து நவகாளி கலவரம் பற்றி நிலவரம், விவாதம்.
”நான் பாகிஸ்தான் போகப்போகிறேன். என்னால் வன்முறையை நிறுத்த என்ன வெல்லாம் செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன்’. நீங்கள் உடனே நவகாளி திரும்புங்கள். சிறிது நாளில் நானும் வந்துசேர்ந்து கொள்கிறேன்.”
அப்போது அங்கே தென்னாப்ரிக்காவில் கூடவே உழைத்த ருஸ்தும் சொராப்ஜி குடும்பத்தோடு வந்தார். சிறிது நேரம் தான் அவரோடு.
காலை 10.30 மணி —- சிறிய தூக்கம். உள்ளங்கால் மரத்து விட்டது. நெய் தடவி அமுக்கிப் பிடித்து விட்டார்கள்.
12மணி நடுப்பகல். — ஒரு டம்ளர் வெந்நீர் தேனுடன் கலந்து. தானாகவே பாத் ரூம் சென்றார். அது தான் முதல் முறையாக ஒருவரையும் பிடித்துக் கொள்ளாமல் நடந்தது. பலநாட்களாக ”உண்மையிலேயே” அவர் செய்த உண்ணாவிரதம் அவர் உடல் நிலையை ரொம்பவே பாதித்து விட்டதே.
”பாபுஜி ஆச்சர்யமாக இருக்கிறதே, மீண்டும் தானாகவே நடக்க ஆரம்பித்து விட்டீர்களே”  சிரித்துக்கொண்டு ”பிரமாதம் இல்லை? ”தனியே நட, தனியாகவே நட” இது தாகூரின் கடைசி வார்த்தை அல்லவா? ” என்றார்.
மதியம் 12.45 மணி. — ஒரு உள்ளூர் டாக்டரிடம், இலவச மருத்துவ மனை. அனாதை இல்லம் கட்டச் சொல்லி ஒரு ஆலோசனை.
மதியம் 1மணி — சில முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு. பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டங்கள், அலங்கோலங்கள், இழப்புக்கள், மதக் கலவரம், வெறியாட்டம் குறைக்க என்னவெல்லாம் வழி என்று ஆலோசனை.
” நான் வார்தாவுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2ந்தேதி சேவா கிராமின் வளர்ச்சி வேலை முறைகள் கவனித்து விட்டு 14ம்தேதி திரும்ப டில்லி வருகிறேன். கடவுள் சித்தம் அப்படியிருந்தால், ஏனென்றால் நாளைக்கு மறுநாள் என்னால் டில்லியை விட்டு புறப்பட முடியுமா என்பது கூட தெரிய வில்லையே. அது அவன் உத்தரவல்லவா. சாயந்திரம் ப்ரார்த்தனைக் கூட்டத்தில் என் பிரயாணம் குறித்து சொல்கிறேன்”
”மறைந்த என் காரிய தரிசி மகாதேவ தேசாய் பற்றி ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமே. என்ன அற்புதமான மனிதர் அவர். இதை வெளியிட பணம் வேண்டுமே ? மஹா தேவ தேசாய் எழுதி வைத்தவைகள் வேண்டும் .அவற்றில் இருந்து குறிப்பெடுத்து தான் ஒரு புத்தகம் தயார் செய்ய வேண்டும். நரஹரி பாரிக் இதற்கு சரியான ஆள். ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, அடுத்து இந்த வேலையை சந்திரா ஷங்கர் ஷுக்லாவிடம் கொடுக்கலாம் ” என்றார் .
அதற்குள் சுதிர் கோஷ் என்ற நிருபர், ஆங்கிலே செய்திகளில் பிரதமர் நேருவுக்கும் உதவி பிரதம படேலுக்கும் இடையே விரிசல், லடாய் என்று விமர்சனங்கள் வருவதை கிழவரிடம் சொன்னார்.
”அப்படியா. இன்றே படேலைக்கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஜவகரும் ஆஜாத்தும் இன்றிரவு 7 மணிக்கு வருவார்களே. அவர்களிடமும் பேசுகிறேன்”
மத்தியானம் கொஞ்சம் ரெஸ்ட். அடி வயிற்றில் களி மண்ணைப் பிசைந்து பத்து கெட்டியாக போட்டுக்கொண்டு வெயில் பட படுக்கை. முகத்தில் வெயில் படாமல் நவகாளியிலிருந்து கொண்டுவந்த தாழங்குடை. மனுவும் அபாவும் மீண்டும் கொஞ்ச நேரம் கால் பிடித்து விட்டார்கள்.
ஒரு நிருபர்:  ”பாபுஜி நீங்கள் குஜராத் சேவாக்ராம் 1ம் தேதி பிப்ரவரி செல்கிறீர்களா?
”யார் சொன்னது அப்படி?”
”சில பத்திரிகைகளில் அப்படி ஒரு செய்தி ”
”ஆமாம். ஆனால் எந்த காந்தி போகிறார் என்று எனக்கு தெரியவில்லையே” (அப்போதே காந்தி என்ற பேரில் சிலர் முளைத்து விட்டார்கள்)
பகல் 1.30 மணி. —- பிரிஜ் கிருஷ்ணா ஒரு செய்தி படித்துக் காட்டினார். அகாலி தாள் தலைவர் மாஸ்டர் தாராசிங் ”ஹே காந்தியே, நீ நாட்டுக்கு செய்ததெல்லாம் ரொம்ப ஜாஸ்தி, உடனே இமயமலைக்குப் போய் தவம் செய்” என்றும் பிரிவினைக் கலவரங்களுக்கு காந்தியே காரணம்” என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நேற்று ஒரு பாகிஸ்தான் அகதி பண்ணிய ரகளையும் கிழவருக்கு  வருத்தம் தந்தது.  ஒரு  பெருமூச்சுவெளிப்பட்டது. கொஞ்சம் கேரட் எலுமிச்சை ஜூஸ்.
சில குருடர்கள், போக்கிடம் அற்ற அகதிகள் என்று சிலர் அவரைப் பார்க்க வந்தனர். அவர்களை ரட்சிக்க பிரிஜ் கிருஷ்ணாவிடம் சில ஆணைகள் இட்டார். அலஹாபாத் கலவரங்கள் பற்றி கேட்ட செய்தியால் கண்களில் ஜலம்.
பகல் 2.15 மணி. — மக்கள் சந்திப்பு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலர். ரெண்டு பஞ்சாபியர் அவர்கள் மாகாணத்திலிருந்த ஹரிஜன் மக்கள் நலம் பற்றி பேசினர். சில சிந்திகள். இலங்கை யிலிருந்து சிலர். அவர்கள் நாட்டு விடுதலை பெப்ரவரி 14க்கு வாழ்த்து செய்தி வாங்க .கூட வந்த ஒரு குட்டி சிங்களப்பெண், கிழவரின் கையெழுத்தை தனது புத்தகத்தில் பெற்றுக்கொண்டாள் . அதிர்ஷ்டக்காரி அவள்.!!
பகல் 3 மணி — ஒரு பேராசிரியர் வந்தார். ” பாபுஜி, நீங்கள் செய்வதைத்தான் பல்லாயிரம் வருஷங்க ளுக்கு முன் புத்த பிரான் சொல்லியும் செய்தும் வந்தார்.
பகல் 3.15 மணி — ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரர் வந்து ஒரு  போட்டோ  ஆல்பம்   பரிசு தந்தார். ”எல்லாம் நானே எடுத்த போட்டோ”. பஞ்சாபிலிருந்து ஒரு குழு வந்து  கேட்டது:    ”பெப்ரவரி 15ம் தேதி டில்லியில்  நாங்கள் நடத்தும்  மாநாட்டிற்கு தலைவர் ஒருவரை பரிந்துரை செய்யுங்கள்” ” ராஜன் பாபு’வை  அழையுங்கள்.  மாநாட்டுக்கு நான் வாழ்த்து செய்தி அனுப்புகிறேன்”.
பகல் 4 மணி – படேல் தனது பெண் மணிபென்னுடன் வந்தார். கிழவர் எழுந்து தானே பாத்ரூம் சென்றார்.
” பிரிஜ் கிருஷ்ணா. நாளைக்கு நாம் குஜராத் வார்தா செல்ல ரயில் டிக்கெட் வாங்கிவிடப்பா”. படேல் ப்ரிஜ்  க்ரிஷ்ணாவுடன் சிறிது சம்பாஷணை செய்தார். கிழவர் பாத்ரூமிலிருந்து மெதுவாக வந்தார். ரெண்டு பேரும் அவர் காலில் விழுந்து வணங்கினர்.  படேலுடன் பேசியபோது   ” பட்டேல்  ஜி, மந்திரி சபையிலிருந்து   நீங்களும்  நேருவும்  விலகணும் னு  சொன்னேன்.  ஆனால் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன்   நீங்க  ரெண்டு பேரும் அத்யாவசியம் என்று சொல்லிவிட்டதால் சரி என்று ஒப்புக்கொண்டேன். இன்னிக்கு  சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் இது பற்றி அறிவிக்கிறேன். இரவு நேரு வரும்போது அவரிடமும் இது பற்றி பேசுகிறேன். தேவைப்பட்டால் உங்கள் இருவரிடையே சமரசம் திருப்திகரமாக இல்லை  யென்றால் நாளை நான் வார்தா செல்வதையும் தள்ளிப்  போடறேன்”’
அவர் படேலுடன் பேசிக்கொண்டிருக்கும்  போது  மனு உள்ளே வந்தாள் :”பாபுஜி, கத்திய வாரிலிருந்து சில தலைவர்கள்  வந்திருக்கிறார்கள். சந்திக்க விரும்புகிறார்கள்”
” கட்டாயம் சந்திக்கிறேன், ஆனால் இன்றைய ப்ரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு தான். அதுவும் நான் இருந்தால்”.
மனு  இதைச் சொன்னபிறகு அவர்களும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்காக காத்திருக்க, அவர் படேலுடன் பேசிக்கொண்டே அபா  அவருக்கு  சாயந்திர உணவு தந்தாள். என்ன தட புடல் சாப்பாடு தெரியுமா?. ஆட்டுப்பால், வேகவைத்த காய்கறி ச்சாறு, வழக்கமான ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை சாறு.
”எங்கே நான் நூற்கும் சர்க்கா அதைக் கொண்டுவா” ஆர்வமுடன் கொஞ்ச நிமிஷம் நூல் நூற்றார்.
+++
அன்று காலை 37வயதான ஒருவன் டில்லி ரயில் நிலையத்திலேயே 6ம் நம்பர் அறையில் வந்து தங்கினான். கூட ரெண்டு நண்பர்கள்  சேர்ந்துகொண்டார்கள். நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே . மொத்தம் எட்டு பேரில் இவர்கள் மூன்று பேருக்கு தான் இன்றைக்கு டில்லியில் வேலை.. அன்று எப்படியாவது  கிழவரை அருகில் சென்று சந்திக்கணும் .பிரார்த்தனைக் கூட பந்தல் மேடைக்கருகே வெளியே வடப் பக்க ஓரத்தில் நின்றால் அவரைக்  கிட்டத்திலேயே காணலாம் என்று முடிவு. அங்கிருந்து 35 அடி தூரம் தான் இருக்கும். அவருக்கு வெகு அருகில் செல்ல முடியாது. மற்ற இருவரும் துணைக்கு.
+++
பிற்பகல் 4.30 மணி. — தான் புதிதாக வாங்கிய காகி கோட்டை போட்டுக்கொண்டான் அவன். நேராக ஒரு டோங்கா பிடித்து பிர்லா மாளிகை வந்தான் நண்பர்களோடு. 20ம் தேதி ஜனவரி அன்று யாரோ சில  விஷமிகள் கிழவரைக் கொல்ல சதி முயற்சி நடந்து தோற்றபின் நேருவும் படேலும் எப்போதும் 30 போலிஸ் காரர்கள் சூழ தான் கிழவரை வெளியே எங்கும் உலவ அனுமதித்தார்கள். ஆகவே எவருமே கிட்டே செல்ல முடியாது. எண்ணற்ற போலிஸ் வேறு சாதாரண உடையில் எங்கும் சுற்றிய வாறு கண்காணிப்பு.   ”மக்களை துன்புறுத்த வேண்டாம். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம்” என்று கிழவர்  கேட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக்காக நேருவும் படேலும் செய்ய வேண்டியதைச் செய்திருந்தனர்.
+++
3 நண்பர்களும் தனித் தனியாக பிர்லா மாளிகை மைதானத்தில் நுழைந்த நேரத்தில் தான் கிழவரும் படேலும் உள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.
+++
மாலை 5 மணி — கார்கால சூரியன் ஒளி குன்றியிருந்தான். – அது பிரார்த்தனை நேரம். கிழவருக்கு குறித்த நேரத்தில் எதையும் செய்யவேண்டும். கால தாமதம் அவருக்கு அறவே பிடிக்காது. இடுப்பிலே கச்சத்தில் தொங்கும் இங்கர்சால் சங்கிலி கடிகாரத்தை எங்கே காணோம்?. கொஞ்ச நாளாக அருகில் உள்ளோர் தான் மணி சொல்லுவார்கள். மனுவும் அபாவும் நேரமாகிவிட்டதை  உணர்ந்தனர். ஆனால் கிழவர் படேலோடு மும்முரமாக பேசிக்கொண்டிருக்கிறாரே.
மாலை 5.10 மணி — இனி தாமதிக்கக் கூடாது என்று அபா கடிகாரத்தை கிழவருக்குக் காட்டினாள். பாவம்.  அவர் கவனிக்கவில்லை. படேலின் பெண் மணிபென் தைரியமாக குறுக்கிட்டு  பிரார்த்தனைக்  கூட்டத்துக்கு  நேரமாகிவிட்டது”  என்றாள் .
”ஒ,  ஆமாம்.வெகு நேரமாகிவிட்டது.  இப்பவே  நான் கிளம்பிப் போகவேண்டும்”.படேலுடன்  பேச்சு முடிந்தது.
கிழவர் எழுந்தார். காலில் பாதுகை அணிந்தார். பக்க வாட்டு கதவைத் திறந்து அந்தி நேரத்தில் வெளி நடந்தார். மேலே ஒரு கம்பளி குளிருக்காக. ரெண்டு பேத்திகள் தோளில் கைத்தாங்கலாக, வலது கைக்கு மனுவின் தோள், இடது  கைக்கு அபாவின் தோள். மனுவின் ஒரு கையில் அவர் உபயோகிக்கும் எச்சில் துப்பும் பாத்திரம். மூக்குக் கண்ணாடி கூடு, ஜபமாலை, அத்துடன் அவளுடைய நோட்டுப் புத்தகம். பின்னால் பிரிஜ் கிருஷ்ணா. அவர் அருகில் பிர்லா குடும்பத்தினர் சிலர், மற்றவர்கள், கத்திய வாரிலிருந்து வந்த குழு. கூட்டத்தில் எல்லோருக்கும் ஆச்சர்யம். எப்படி கிழவர் நேரம் தவறினார் என்று. அவரைக் கண்டதும் ”ஓ” வென்று ஆரவாரம்.
நேரம் கடந்ததால் வழக்கமாக வரும் வழியை விட்டு, குறுக்கு வழியாக புல் தரை கடந்து மேடைப் படி நோக்கி நடந்தார்.
”அபா , இன்று எனக்கு நீ கொடுத்த கேரட்  சரியாக வேக வில்லை. ஆடு மாடு உணவு  தான் எனக்கு,”
”இல்லை தாத்தா இதை கஸ்துரிபா பாட்டி குதிரை உணவு என்பாளே ஞாபகமிருக்கிறதா?” இருவரும் சிரித்தார்கள். ”மற்றவர்கள் ஏற்காததை நான் ஏற்று உண்பது சிறப்பல்லவா” என்றார். ரெண்டுபேத்திகளும் தாத்தா கடிகாரம் உபயோகிக்காததை கேலி செய்தார்கள்.
”அது உங்கள் தப்பு. நீங்கள் எனக்கு அப்பப்போ  மணி சொல்லும்போது  எனக்கு எதற்கு கடிகாரம்?. நான் பத்து நிமிஷம் லேட்டானதற்கு நீங்கள் தான் காரணமே!”
”பிரார்த்தனைக்கு நேரம் தவறினது பிசகு. குறித்த நேரத்தில் செய்யவேண்டிய வேலைக்கு குறுக்கே கடவுளே வந்தாலும் காக்க வைக்க வேண்டும். நோயாளிக்கு மருந்து குறித்த நேரத்தில்  கொடுக்க வில்லை யானால் அவன் மரணமடைவான்.”
++++
200 கஜ  தூரத்தில்  170 கஜ தூரம் கடந்தாகிவிட்டது.  6 வளைந்த படிகள் தான் பாக்கி. அதைக் கடந்தால் பிரார்த்தனைத்  திடல்.  அங்கே  எதுவும்  பேசக்கூடாது. போலிஸ்காரன் குர்பச்சன் சிங் கும்பலை விலக்கினான். நூற்றுக் கணக்கானோர் சூழ, அதில் இருபது முப்பது பேர் போலிஸ் ஆட்கள். மேடையின் மேல்  படி முன் நின்று இரு கரம் கூப்பி கூட்டத்தை வணங்கினார் கிழவர். அனைவரும் மரியாதையாக வழி விட்டனர். கடைசி படி ஏறிவிட்டார்.
+++
தான் நிற்கும் இடத்திற்கு நேராக அவர் வருவது தெரிந்தது அவனுக்கு. எண்ணத்தை மாற்றிக் கொண்டான். முன்னே இருந்தவர்களை முழங்கையால் இடித்துத்   தள்ளி முன்னேறினான். மற்ற இருவர்கள் தயாராக வழி விட இரு கரம் கூப்பி கிழவரை வணங்கினான். இரு கூப்பிய கரங்களுக்கும் இடையே கைக்கடக்கமான அந்த கருப்பு இத்தாலி நாட்டு பெரெட்டா கைத்துப்பாக்கி! (அட. இதுவும் இத்தாலியா, எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே!!) ”
”நமஸ்தே காந்திஜி” அவன் குரலைத்தொடர்ந்து, மனு பதிலுக்கு வணங்கினாள். காந்திஜியும் பதிலுக்கு வணங்கினார். அவன் குனிந்தான். மனுவுக்கு அவன் அவரது கால்களை வணங்கி முத்தமிடப் போகிறான் என தோன்றியது.  ”வேண்டாம், அவருக்கு இந்த மரியாதை எல்லாம் பிடிக்காது , நகருங்கள் ” என்று கையால் ஜாடை காட்டியும் அவன் நகரவில்லை.
”அண்ணா, பாபு, ஏற்கனவே பிரார்த்தனைக்கு லேட். ஏன் அவரை தடை செய்கிறீர்கள்?” போலீஸ் யாரும் பக்கத்தில் அப்போது இல்லை.
+++
நாதுராம் விநாயக கோட்சே தன் இடக்கையால் மனுவைப் பிடித்து தள்ளினான். அவன் வலக்கரத்தில் துப்பாக்கி. அவள் கையில் வைத்திருந்த பொருள்கள் யாவும் கீழே சிதறின. சில வினாடிகள் மனு அவனை எதிர்த்தாள். அவருக்குத் தேவையான ஜப மாலையைக் கீழே யிருந்து எடுக்க குனிந்தாள். ஒரு வினாடிக்குள் அந்த அமைதிச் சூழலில் காது செவிடு பட  வெடி சத்தம். கோட்சே செலுத்திய துப்பாக்கி ரவைகள் காந்திஜியின் அடிவயிற்றைத் துளைத்தன. மூன்று குண்டுகள் அடிவயிற்றையும் இதயப்பகுதியையும் துளைத்தன. மூன்றாவது குண்டு துளைத்தபோது கூட காந்தி நின்றுகொண்டே இருந்தார். இருகைகளும் கூப்பியபடி இருந்தன.
” ஹே ராம், ஹே ராம்” . மூச்சு திணறியது. பிறகு, பிறகு, மெதுவாக அந்த மகா புருஷர் தரையில் சாய்ந்தார். கைகள் இன்னும் கூப்பியே இருந்தன. அஹிம்சா மூர்த்தி பின் எப்படி காட்சி யளிப்பார்?? கண் பிதுங்கி,நாக்கு முன்னே தள்ளி, கை கால் உதைத்துக் கொண்டா நம் போல் இருப்பார்? புகை மண்டலம் சூழ்ந்தது. எங்கும் ஒரே குழப்ப நிலை,அமளி, பயம்,கலவரம் பரவியது. இரு பேத்திகளின் மடியிலேயே தலை சாய்த்து அந்த மகான் கீழே விழுந்தார். முகம் வெளுத்து விட்டது. அவர் மேலே போர்த்தியிருந்த வெள்ளை நிற ஆஸ்திரேலிய கம்பளி செக்கச்ன் செவேலென்று ரத்த நிறம் பெற்றது.
மாலை 5.17 மணி –  மோகன் தாஸ்  கரம் சந்த் என்ற பெயர் வைக்கப்பட்டாலும் இனி அவர் ”மகாத்மா காந்தி”. அவர் இனி இல்லை.
பின்னர் மனு சொன்னது  ”அவருக்கு ஏற்கனவே இன்று தான் கடைசி நாள் என்று தோன்றி இருக்கிறது.  விடிகாலை இன்று அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?
”என்னை யாராவது சுட்டால் கூட ஒரு முணு முணுப்பும் இன்றி இறைவன் நாமத்தோடு என் மறைவு இருக்கும். நீ பின்னால் உலகுக்குச் சொல் இங்கு உண்மையாக ஒரு சத்தியம் கடைப்பிடித்த மகாத்மா இருந்தார் என்று”
காந்தி என்ற கிழவர், போர்பந்தரிலிருந்து துவங்கி, உலகமெங்கும் நமது தேசத்துக்கு நற்பெயர் தந்து, புகழ் பெற்று, அந்நியனிடமிருந்து நாட்டை மீட்டு, சுதந்திர நாடாக்கி இன்று நம் இஷ்டம் போல் களியாட்டம் ஆட வழி வகுத்தார். அவர் நடந்த பாதை, அசத்தியத்திலிருந்து சத்தியத்துக்கு. இருளிலிருந்து ஒளி மயத்துக்கு, அழிவிலிருந்து அழியாத அமரத்வத்துக்கு. அவர் சொன்னவை நாலு திசையிலும் உண்மை, தர்மம்,சத்யம் எது என்று எதிரொலித்து, நீதியை நிலைநாட்டி அனைவரையும் அவரைத் தெய்வமாக யுக புருஷனாக, அவதாரமாக, மகாத்மாவாக நோக்கச்செய்தது.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *