ஒரு   பழைய ஞாபகம்

ஒரு   பழைய ஞாபகம்  –   நங்கநல்லூர்  J K  SIVAN 
 
இன்று  தை அமாவாசை தர்ப்பணம் பண்ணிவிட்டு  சற்று  கம்ப்யூட்டர் முன் உட்கார்ந் தபோது நான் தர்ப்பணம் பண்ணிய  என் அப்பா, ரெண்டு பக்க தாத்தா, கொள்ளு தாத்தா, அம்மா, பாட்டிகள்  கொள்ளு பாட்டிகள் பற்றி யோசித்தேன்.  அப்பா  அம்மா  நினைவில் இருக்கிறார்கள், அம்மாவின் அம்மாவை அம்மாவே  சரியாக பார்ப்பதற்கு முன் விடை பெற்றவள். அம்மாவின் அப்பாவை என் ஐந்து ஆறு வயதில் ஒரே ஒரு முறை பார்த்ததோடு சரி. என்  அப்பாவுக்கும் தாத்தாவை சரியாக தெரியாது.  அப்புறம் எப்படி கொள்ளுத்தாத்தாக்களை பாட்டிகளைப்  பற்றி தெரியும்.  அவர்கள் வாழ்ந்தபோது போட்டோ எடுக்கும்  காமெராவோ, படம் எடுக்கும் பழக்கமோ இல்லை.

அப்பா   ஜே .கிருஷ்ணய்யர்  பார்ப்பதற்கு பரங்கிப் பழம் போல் இருப்பார். காலையில் 7.45 அல்லது 8 க்குள் குளித்து விட்டு ஈரத் துணியை பிழிந்து  உயர்த்திவிட்டு, மடி வேஷ்டி இடுப்பில் சுற்றியவாறு  அண்ணா  வீட்டில் இப்போதும் இருக்கும்  200 வருஷ பிள்ளையாருக்கு முன்பாக உட்கார்ந்து ஒரு தாம்பாளத்தில் அவருக்கு அபிஷேகம், அர்ச்சனை, வஸ்த்ரம் , புஷ்பம் சாற்றி, சாதம் ரெடியாக இருக்கும் அதை நைவேத்யம் பண்ணிவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு,  பஞ்சகச்சத்தோடு  ஸ்தோத்ரங்கள் சொல்லிக் கொண்டே  நுங்கம்பாக்கம் கார்பொரேஷன் உயர்நிலைப்  பள்ளிக்கூடம் போக தயாராவார். படிக்க அல்ல.  ஆங்கிலம், சரித்திரம் சொல்லிக் கொடுக்க.  அவர்  அங்கே  உதவி ஹெட்மாஸ்டர்.  நெற்றியில் விபூதிப் பட்டையின் மேல்  கீர் சந்தனம் பளபளக்கும்.அவர் உச்சரிக்கும்  ஸ்தோத்ரங்களை நான் ஆறு ஏழு வயதில் தினமும் கேட்டிருக்கிறேன். வார்த்தைகள் அடையாளம்  தெரிந்தவையாக இருந்தும் அர்த்தம் புரியாது. அவர் உச்சரிக்கும் சப்தம் இன்னும் காதில் ஒலிக்கிறது.

கொஞ்சம் ரெட்டை நாடியான அவர் ஒரு வீட்டில் துவை த்த ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த ஜிப்பாவை அணிந்து கொண்டு தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வார். இன்னும் வாய் ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டு தான் இருக்கும். அது பகவத் கீதையின் விஸ்வரூப தர்சன 11ம் அத்தியாய ஸ்லோகங்கள் என்று அப்புறம் தான் சில வருஷங் களுக்குப் பின் எனக்கு தெரிந்தது.

இதன் பிறகு சூளை மேட்டிலிருந்து நுங்கம்பாக்கம் ஹை ஸ்கூல் வரை நடக்கும்போது ராமாயண ஸ்லோகங்கள் தொடரும். அவர் தமிழ், ஸம்ஸ்க்ரிதம், ஆங்கிலம் மூன்றிலும் வல்லவர். அவர் யாரென்று சொல்லாமல் விட்டேனே. அப்பா  என்னைவிட 45 வருஷங்கள் பெரியவர். கையில் ஒரு பை. அதில் மாணவர்களின் காம்போசிஷன் நோட்டுகள், ஈயம்பூசின  பித்தளை  சாப்பாடு சம்படத்துடன் அவர் நடக்க நாங்கள் பின்னால் ஓடிக்  கொண்டே செல்வோம். எல்லோரும் ஒரே பள்ளிக் கூடம் தானே. அவர் அஸிஸ்டன்ட் ஹெட்மாஸ்டர் நாங்கள் மாணவர்கள்.நான்  first  form   ஆறாம்  வகுப்பு  மாணவன்.
J .K .  ஐயர் வகுப்பு என்றால் எல்லா மாணவர்களுக்கும் கொண்டாட்டம். யாருக்கும் திட்டு அடி கிடைக்காது. இனிய கதைகள், ஹாஸ்ய சம்பவங்கள் நிறைய இருக்கும். பாடமும் , ஆங்கிலமோ, சரித்திரமோ ஜோராக மனதில் பதியும். நேரம் போவதே தெரியாது.  அப்பா     தினமும் உச்சரித்த ஸ்லோகம் பற்றி சொல்கிறேன்.

கீதை  11 வது   அத்யாயம்  விஸ்வரூப தர்சனம்.  அதில்  அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்கிறான்:

 ”கிருஷ்ணா, நீ இதுவரை, சொன்ன ஆத்ம தத்தவத்தை கேட்டதில் ஓரளவு என் மதி மயக்கம் தீர்ந்தது. பிறப்பு இறப்பு பற்றி அறிந்தேன். உன் செயலால் எதும் ஆகும் என புரிந்து கொண் டேன். நீ யாதும் ஆகி யாவும் ஆனவன் என்றாயே அந்த உருவத்தை எனக்குக்  காட்டேன். என்னால் அதைக் காண முடியுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதைக் காண  ஆவலாக இருக்கிறதப்பா.’

” அர்ஜுனா, உன் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். உன் கண்களால் என்  பிரம்மாண்ட  ஸ்வரூபத்தைக் காண முடியாது. ஆகவே  உனக்கு  ஒரு  திவ்ய நேத்ரம் தருகிறேன். அதன் மூலம் மட்டுமே நீ என்னை காண இயலும்.”

இந்த மா பெரும் பிரபஞ்சமே   கண்ணுக்கு சரியாக தெரியாத ரொம்பச்  சின்ன துக்குணி யூண்டு  என்று எண்ணி பாருங்கள். அப்படி என்றால்  அண்ட பகிரண்டம் எவ்வளவு பெரியதாக இருக்கும் என்று கற்பனை செய்யுங்கள். அதற்கு அளவோ கணக்கோ இல்லை. இடமும் காலமும் ஒன்றாக கலந்த சேர்க்கை. நம்மால் அதைக் காண வழியில்லை என்பதா லே தன்னை குறுக்கிக் கண்டு பகவான் காட்சி தருகிறான். பெரிதாய் இருந்தாலும் சிறிதாய் இருந்தாலும் அவன் சக்தி ஒன்றே.

ஒரு சொம்பு பாலும் ஒரு ஸ்பூன் பாலும் ஒரே ருசி. ஆனால் ஒரு சொம்பு பால் அளிக்கும் சக்தி யை ஒரு ஸ்பூன் பால் அளிக்குமா? அமிர்தம் அம்மாதிரி இல்லை. ஒரு கடல் அளவுக்குள்ளும் ஒரு துளிக்குள்ளும் அதே சக்தி, ”நிரந்தரம்” சாஸ்வதம், சாகாவரம் அம்ருத்வம் தர வல்லது.  பெரியது சிறியது இரண்டுமே ஒன்று என்று புரிந்து கொள்ள ஒரு உதாரணம் தருகிறேன்.

ஒரு பெரிய பேன்னர் 20 அடி நீளம் 15அடி அகலம் – அதில் சிரித்துக்கொண்டு நமது பிரத மரோ அல்லது  சினிமா நடிகர் உருவம்  என்று  வைத்துக் கொள்ளுங்கள். அதையே ஒரு சிறு ஸ்டாம்ப் அளவு புகைப் படமாக காட்டினாலும் அதுவும்  அவர் தான், அதே சிரிப்பு தான். துளியும் வித்தியாசம் இல்லாத உருவம். அளவில் தான் வித்யாசம். புரிகிறதா?

எதையுமே பெரியதாக இருப்பதை.    ஹோ  என்று ரொம்ப பெரிசாக,  காணும்போது ஒரு பிரமிப்பு, பயம், நடுக்கம் உண்டாகிறது. நயாகரா நீர் வீழ்த்ச்சி, கடல் சுனாமி அலை,  சூறாவளி காற்று  என்ற உதாரணம் புரிய வைக்கும்.  சூரியனையும் சந்திரனையும், நக்ஷத்ரங்களையும் மேலே ஆகாயத்தில் சிறிதாக ஒளிர்பவையாக கண்டால் சந்தோஷம். அருகே சென்றால் அதன் வேகம், சுழற்சியின் சப்தம், உஷ்ணம், நம்மால் தாங்க முடியுமா? இதைதான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். ”அர்ஜுனா, டேய் ,என்னை உன்னால் காண முடியாது” என்று.

ஆண்டவன் வெவ்வேறு பொருளில், வெவ்வேறு உருவில் எங்கும் காணப்படுவதை அறிந்து கொள்ள வேண்டும். விராட் உருவாக எல்லாவற்றையும் அவனுக்குள்ளே  இருப்பதைக்  காண நம்மால் முடியாது.
அதே போல் தான்  ஆச்சர்யமாக  பகவான்,   எல்லா நினைவுகளையும் நாம் பெறாமல் ரகசியமாக வைத்திருக்கிறான். ஏன் நமக்கு சிறு வயது நினைவுகள் கூட சரியாக தோன்ற வில்லையே. முற்பிறவிகள் அடையாளம் தெரிந்தாலோ, அடுத்து வரும் காலங்களைப் பற்றிய நிகழ்வுகள் நமக்கு தெரிந்தாலோ ஒரு கணமும் நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியாது. நிகழ் காலத்தைக்  கூட அதை பற்றி அறியும் முன்பே  சட்டென்று இறந்த காலமாக மாற்றிவிடுகிறான் கிருஷ்ணன்.  மரணம் பற்றிய உண்மைகளை அதனால் தான் ரகசியமாகவே வைத்திருக்கிறான். தெரிந்தால் நாம் ஒவ்வொரு கணமும் மரண பயத்தில் சித்ரவதைப் பட்டு துன்புறுவோம்.
அர்ஜுனன் கிருஷ்ணன் வடிவில் விஸ்வத்தையே  கண்டான். சகலமும் அங்கே காணப் பட்டது. எத்தனையோ சந்திரர்கள், சூரியர்கள், மலைகள், கடல்கள், ஆறுகள், ஏரிகள், வனங்கள், வனாந்திரங்கள்,மக்கள், மாக்கள், ரிஷிகள், தேவாதி தேவர்கள், எத்தனையோ மண்டலங்கள், ஏன் பீஷ்மன், துரோணர், கர்ணன் இவர்களைத் தவிர தன்னையே, தன் சகோதரர்  களையே கூட அங்கே கண்டான். .”போதும் கிருஷ்ணா, போதும், என்னால்  இதை  தாங்கிக்கொள்ள முடியவில்லை, பார்க்க  முடியவில்லை என இரு கை கூப்பினான், மண்ணும் விண்ணுமாய் ,இடைவெளி இன்றி எல்லாவற்றையும் எல்லோரையும் உன்னில் கண்டேன். போதும். உள்ளம் நடுங்குகிறது. நா உலர்கிறது. நிகரற்ற தெய்வமே, உன்னை நமஸ்கரிக்கிறேன். மீண்டும் எப்போதும் போல் கிரீடமும், கதையும், சக்ரமும் சதுர் புஜமும் கொண்ட நாராயணனாகவே காட்சி தர வேண் டும்” என்றவுடன் கிருஷ்ணன் புன்னகையோடு  அவ்வாறே  அருள் புரிகிறான்.”கிருஷ்ணா,  என் அறியாமையினால் உன்னை வா போ என்று கூப்பிட்டு என்னை உனக்கு சமானமாக நினைத்து நடந்து கொண்டுவிட்டேனே. மன்னித்து விடு” என்று அலறுகிறான் அர்ஜுனன். கிருஷ்ணன் சிரிக்கிறான்.”அர்ஜுனா என்னை யாருமே இப்படிக்  கண்டதில்லை. இதோ பார், எதற்கு இதையெல்லாம் உனக்கு உணர்த்தினேன் தெரியுமா. ”எதையும் பகவானுக்கே என்று உன் கர்மத்தை செய். அடையும் நன்மையையும் பகவானே  இது உனதே என்ற பக்தியோடு  பற்றில்லாமல்,  எந்த உயிரையும் பழிக்காமல் அன்போடு இரு. நீ என்னை அடைவாய்”மிகவும் அருமையான அத்யாயம் இந்த விஸ்வரூப தர்சனம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *