அன்னதாதா  சுகி பவா

அன்னதாதா  சுகி பவா :    நங்கநல்லூர்  J K  SIVAN 
 
உண்டி கொடுத்தோர்  உயிர்கொடுத்தோர். அன்னம் அளித்தவர்கள் அனைவரும் பல்லாண்டு வாழ்க.
 

அன்னம் எனும் வார்த்தைக்கு ரெண்டு அர்த்தம். ஒன்று  வாத்து போல  ஒரு வகை ஹம்ஸ பக்ஷி. இன்னொன்று  உயிர் காக்கும்  உணவான சாதம். அன்ன தானம் என்றால் தெரியுமே. 

 
வேதத்தில்  “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்ற  வார்த்தை வருகிறதே அதன் அர்த்தம் என்ன? எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் உருவமானது.  அன்னம்  தான் உலகில்  எல்லா  உயிரினங்களும் வாழ  உயிர்நாடி.  ஆகவே  அன்னம் கடவுள்.  சோறு கண்ட  இடம் ஸ்வர்கம்.  அம்பாள் பாரில் அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் அன்ன பூரணி.  காசிக்கு சென்றால்  கங்கா ஸ்னானம் செய்து  விஸ்வநாதர்  அன்னபூரணியை தரிசிக்காமல்  இருக்கவே முடியாது.

வருஷா வருஷம்    சிவபெருமானுக்கு  அன்னம் முழு கவசமாக   சாற்றி  வழிபடும்  அன்னாபிஷேகம்  பார்க்க கண்ணிரண்டும் போதாது. கங்கை கொண்ட சோழபுரத்தில்  ஒரு  இரவு, அதுவும் சிவராத்திரி எனக்கு அந்த ஆனந்தம் நள்ளிரவில் கிடைத்தது.  அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் வைபவம் அன்னாபிஷேகம்.

 ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயந்திரம்  சிவனின் லிங்க திருமேனிக்கு அன்னாபிஷேகம் நடக்கும்.  ப்ரஹதீஸ்வரர்  அன்னாபிஷேகத்தில் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் திகழ்பவன். அன்று  அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணிய கார்யம்.
சிவன் பிம்பஸ்வரூபி.  நாமெல்லாம் ப்ரதிபிம்பங்கள்.   பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த   அர்த்தநாரீஸ்வரனுக்கு   அன்னாபிஷேகம் செய்தால்  உலகில் பஞ்சம் எப்படி வரும்?

சிதம்பரத்தில்  தினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடை பெறுகிறது. அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படும். அப்பர் பெருமான் சிதம்பரேசன் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலதான் என்கிறார்.  சிற்றம்பலம் என்றால்  சின்ன  அம்பலம் அல்ல. சித்  நிறைந்த  அம்பலம்.

அன்னாபிஷேகத்தன்று   சிவலிங்கத்தின் மேல் சார்த்தப்படுகிற   அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கம்.  அன்று நாம் தரிசனம்  செய்தால்  கோடி சிவதரிசனம் செய்த பலன்.
அபிஷேகப்பிரியன் சிவனுக்கு   மொத்தம் 70 திரவியங்களால்   அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். உயர்ந்த சிறப்புடையது.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் கலவை.  அன்னாபிஷேகம் செய்வது பரமனின்  பார்  முதல் பஞ்சபூதமும் அடக்கம் என  காட்டுகிறது.

காஞ்சியில் காமாட்சிக்கு அன்னாபிஷேகம்.  அன்னபூரணி அல்லவா. ஒரு அற்புத ஸ்லோகம்.:

 
अन्नपूर्णे सदापूर्णे  शंकर प्राणवल्लभे ।  ज्ञान वैराग्य सिध्यर्थं भिक्षां देहिच पार्वति ॥
माता च पार्वती देवी  पिता देवो महेश्वरः ।  बान्धवाः शिवभक्ताश्च स्वदेशो भुवनत्रयम् ॥
annapūrṇe sadāpūrṇe śaṃkara prāṇavallabhe jñāna vairāgya sidhyarthaṃ bhikṣāṃ dehica pārvati
mātā ca pārvatī devī  pitā devo maheśvaraḥ bāndhavāḥ śivabhaktāśca svadeśo bhuvanatrayam
 
அன்ன பூரணே , சதா பூர்ணே,  சங்கர பிராண வல்லபே,  ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி’
மாதாச  பார்வதி தேவி, பிதா தேவோ மஹேஸ்வரா,  பாந்தவா  சிவபக்தஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம்”

தாயே  அன்னபூரணி,   எங்கும் எதிலும் நிறைந்தவளே ,  சங்கரனின்  பிராணனே  நீ தான் அம்மா. உன்   கருணை தான் எனக்கு  இடும் பிச்சை.  எனக்கு ஞானத்தை அருள்வாய். பற்றற்று நான் உன் திருவடியிலேயே  லயித்து தியானிக்க  திட சித்தம் தந்து அருள் புரிவாய்.    என் தாய் நீதானம்மா   பார்வதி தேவி, அப்பா  மஹேஸ்வரன், சிவ பக்தர்கள் அனைவரும் என் சொந்த பந்தங்கள்,  நண்பர்கள், இந்த மூவுலகும் என் வீடு. அது தான் உன் விழியில் வாழும்  பிரதேசம் .
Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *