ULLADHU NAARPADHU 24 J K SIVAN

உள்ளது நாற்பது – நங்கநல்லூர் J K SIVANபகவான் ரமண மஹரிஷி .

24. மனத்தின் வேறு பெயர்கள்…

”சடவுடனா னென்னாது சச்சித்துதியாதுடலளவா நானொன் றுதமிடையிலிது
சிச்சடக்கி ரந்திபதஞ் சீவனுட்ப மெய்யகந்தை
யிச்சமு சாரமன மெண்ணெவிச்சை 24
இந்த பதிவு  ரொம்ப  மெதுவாக  படித்து  சிந்திக்க வேண்டிய ஒன்று .  இந்த பாடலில்  ரமணர்  அற்புதமாக  உடல், அதை கண்காணிக்கும்  சித்  எனும்  சத்யம், ஆத்மா,  உடலை ஆட்டிப்படைக்கும் மனம், அகம்பாவம்,  இதோடு எல்லாம்  சேர்ந்திருந்தாலும் எதிலும் ஒட்டாத தனித்வமான ஆத்மா–   எல்லாவற்றையும்  விளக்குகிறார்.
ஆத்மாவை  உணர்ந்தவர்கள்,  ஞானிகள், நமது உடலை எப்போதும் ஜடம் ,கட்டை, என்று சொல்வது தான் வழக்கம். ஜட சரீரம் எப்போதும் ”நான்”  ஆகாது.  நான் என்று சொல்வது அறியாமை.
உடல்  ஆத்மா  வெவ்வேறு.  ஆத்மாவினால் தான் உடல்  இயங்குகிறது.  ரெண்டற்ற ஒன்றேயான ஆத்மா தான் ”நான்”.  எங்குமே அது ஒன்று தான் நிறைந்திருக்கிறது.  தனியாக ” நான்” எதனிடமும் தன்னை  வெளிப்படுத்திக் கொள்ள  வேண்டிய  அவசியமில்லை.  ஆத்மா தான்  ”நான்”  என்ற உண்மையை  மறந்து எப்படி சரீரம் தான் ”நான்” என்று  ஏன் சொல்ல வைக்கிறது?  தப்பாக  நம்ப வைக்கிறது?
”சித்” துக்கும் ஜடத்திற்கும் இடையே தோன்றும் இது தான் ‘சித் ஜட கிரந்தி”.  பந்தம், ஜீவன், சூக்ஷ்ம சரீரம், மனம், ஸம்ஸாரம் (மனைவி அல்ல) என்றெல்லாம் இதற்கு பெயர். அதை முழுதுமாக அழித்தால் தான்  ”ஆத்ம  ஞானம், ”நான்”   புரியும்,. மோக்ஷம் கிட்டும்.ஆழ்ந்த உறக்க நிலையான ஸுஷுப்தியில் ஆத்மா இருந்தும் உணரப்படவில்லை. மனமோ, தேஹமோ இல்லாத நிலை அது. ஏதோ ஒரு ஆனந்தம் மட்டும்  தான் உணரமுடிகிறது. அது ஆத்மாவால் விளைந்தது என்று உணராமல்  இருப்பது தான்  அஞ்ஞானம்.
மேலே சொன்ன சித் ஜட க்ரந்திக்கு   இன்னொரு பெயர் பந்தம். ஆத்மாவிற்கு  பந்தம்  இல்லை.  பந்தம் தோன்றுகிறதே? அது யாருக்கு தோன்றுகிறது? அந்த நான் யார்?  அதைப் புரிந்து கொள்வது  தான் ஸத்யத்தை  அறிந்து கொள்வது.
 ஜீவன் என்றாலும் மேலே சொன்ன பந்தம் தான். சுத்தமான ”நான்”எனும் ஆத்மாவை, வேறாக்கி  தானே  ஆத்மா என்று உடலைக்  காட்டும் அஹம்பாவம்.
பானையில்  உள்ளே  இருக்கும்  ஆகாசம்  பானை இல்லாவிட்டாலும் அங்கேயே  நிறைந்திருக்கிறது  பானையில் இருக்கும்போது அது கடாகாசம்.  எதனுடனும் சேராமல், கட்டுப்பாடில்லாமல் பறந்து விரிந்து இருக்கும்போது அதை மஹா ஆகாசம்  என்கிறோம்.  கண்ணால் காண முடியாமல் உணரத்தான் முடியும். கடாகாசத்தில் தோன்றும் மஹாகாஸம்  தான் நம் உடலில் உள்ள  ஆத்மா.  சூக்ஷ்ம சரீரம் என்பதும் இந்த சித் ஜட க்ரந்தி தான். ஸ்தூல சரீரத்தில் இருந்து கொண்டு தானே ஆத்மா என்று நம்ப வைக்கிறது. அகந்தை எனும் அஹம்பாவமும் அது தான். நான் எனது என்பது தான் ஸம்ஸார பந்தம். அதுவும் அந்த முடிச்சு தான். மனம் என்றாலும் அதுவே, மனத்தை பற்றி கேட்கவே வேண்டாம். சகலத்திற்கும் காரணம் அது ஒன்றே. நமது முதல் துரோகி. இந்த திரையெல்லாம் விலகினால் தான் ஆத்மஸ்வரூப அனுபவம் உண்டாகும்.