THIRUPPULINGUDI PERUMAL – J K SIVAN

திருப்புளிங்குடி  காய்சினவேந்தன்  கோயில்  –   நங்கநல்லூர்  J K  SIVAN

ஒரு சமயம்  வழக்கம்போல் எனக்கும் என்  கம்ப்யூட்டருக்கும்  தகராறு. வேலை செய்யவில்லை. காரணம் ஏதாவது வராதா என்று தேடவேண்டாம்.  ‘வரதா ‘  புயல் ஒன்றே காரணம். இணைய தளம் செல்ல வழியில்லை.  மரங்களில் கட்டியிருந்த  மின் வலை  கம்பிகள் அறுந்தது. ஒருவழியாக மரங்களை அப்புறப்படுத்தியவுடன் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. ஒளி வந்தது. மின்னலை வரவில்லை. இன்னும் அதே நிலை தான். கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட். BSNL தர்காலிக ஏற்பாடு ஒன்று வசதி செய்து தந்தான் என் மகன். அப்போது  தான்  நான் சென்று வந்த நவ திருப்பதி க்ஷேத்ரங்களைப்  பற்றி எழுத முற்பட்டேன்.  திருப்புளிங்குடி.

வரகுண மங்கையிலிருந்து புறப்பட்ட எங்களை ஸ்ரீ சடகோப ராமானுஜ சுவாமி என்ற  நண்பர்  அழைத்து சென்ற அடுத்த க்ஷேத்ரம் வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் இருந்தது. வரகுண மங்கையிலிருந்து எங்களுக்கு ஒரு கி..மீ. தூரம் தான். அந்த ஊர் பெயர் திருப்புளிங்குடி . நவ திருப்பதியில் முக்கியமான ஒன்று. அமைதியான கிராமம். நாங்கள் சென்றபோது வெயில் உச்சிக்கு வந்து விட்டது.   ஆயிரத்துக்கு மேல் வருஷங்கள் வயது கொண்ட ஒரு பழைய பெருமாள் கோவில் கோவில் .

மூலவர் பூமி பாலகப் பெருமாள். புஜங்க சயனம். அதாவது ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார். அருகே தாயார் மலர் மகள் நாச்சியார், பூ மகள் நாச்சியார் என்ற தாயார் திரு உருவங்கள் பெரியதாக இருக்கின்றன புளியங்குடி  வல்லி என்பது உற்வச தாயார். பெருமாளின் பாதங்களை வெளிப்பிரகாரத்தில் இருந்து ஒரு ஜன்னல் வழியாக பார்க்க வைக்கிறார்கள். இது ஒரு தோஷம் நீக்கும் தலம். இங்கு தான் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கினதாம்.

பக்தர்களை சோதிப்பதில் பகவானுக்கு கொள்ளை  ஆசை. பூமாதேவியையும்   பெருமாள்  விட்டு வைக்கவில்லை. தன்னை வேண்டும்  ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும்  சாபமிடும் சக்தியை கொடுத்துவிட்டு அதே சமயம்  பக்தர்கள் இப்படி சாபம் பெற்று பரிகாரம்,  அவர்கள் பிரார்த்தித்து சாப விமோச்சனம் தேடும்போது அவர்களுக்கு அருள்வதும்  பெருமாள் வேலை.

 ஸ்ரீவைகுண்டம்  எனும் க்ஷேத்ரத்தில் இருந்து வடகிழக்காக தாமிரபரணி ஆற்றின் வடகரை பகுதியில் திருப்புளிங்குடி எனும்  வைணவ திவ்ய தேச ஸ்தலம் உள்ளது. சுமார் 3 ஏக்கர்  நிலப்பரப்பில் இரண்டு பிரகாரங்கள் . பெருமாள் பெயர்  பூமி பாலகன்.  புஜங்க சயனம்.  ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கிறார்.  உற்சவர்  பெயர்  காய்சின வேந்தன்.  பூமிதேவி திருமகளுடன் காட்சி.  தாயார் பெயர்  மலர்மகள் நாச்சியார்,  பூ மகள் நாச்சியார்.  தீர்த்தம் வருண தீர்த்தம்.  விமானம் வேதசார விமானம்.  நம்மாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம்.

இந்த ஸ்தல புராணம் என்ன சொல்கிறது?  ஸ்ரீமந்  நாராயணன்  மஹா லக்ஷ்மியோடு  மட்டும்  உற்சாகமாக உலா வருவதைக் கண்டு வெகு காலம் காத்திருந்து பொறுமை இழந்து பூமாதேவி கோபப்பட்டு பூமிக்குள் பாதாள லோகத்தில் சென்றுவிட்டாள்.  நிலைமையை உணர்ந்த   நாராயணன்  பூமாதேவியை தேடி பாதாள லோகம் சென்று சமாதானப்படுத்தி மேலே அழைத்து வந்தார்.  இதற்குப் பிறகு பூமாதேவியும் லக்ஷ்மியும் ஒன்றாக  பெருமாளோடு  இந்த  திருப்புளிங்குடியில் நமக்கு காட்சி தருகிறார்கள்.

 வசிஷ்டரின்  மகனான சக்தி முனிவரை யக்ஞசர்மா என்பவர் சரியான மரியாதை கொடுக்காமல்  போனதால்  சக்தி முனிவர்  அவரை அரக்கனாக மாற சாபமிட்டார்.  பிறகு  இந்த  சாப  விமோசனம் நீங்க ஒரு வழியும் சொன்னார்.’  இந்திரன் இந்த இடத்தில் ஒரு யாகம் செய்வதற்கு வருவான்.  அப்போது அதை நீ  கெடுக்க  முற்படுவாய்.  அப்போது திருமால் தன் கதையினால் உனக்கு சாப விமோசனம் தருவார்’  என்றார் சக்தி முனிவர்.  அப்படியே  நடந்தது.  இந்திரன்  இங்கே யாகம் செய்ய வரும்போது  அரக்கனாக இருந்த யஞ சர்மா அதை ஹா ஹூ என்று கத்திக்கொண்டு கெடுக்க முற்பட அப்போது அங்கு தோன்றிய  மஹா விஷ்ணு தன் கதையால் அரக்கனை  அடிக்க  அரக்கன் இறந்தான்,  யக்ஞசர்மா சாப விமோச்சனம் பெற்றார்.

மூலவர்  பெருமாள் 12 அடி நீளம்.  பிரம்மாண்டமாக  சயனக்கோலம்.   திருப்புளிங்குடி  என்பது புதன் ஸ்தலம். புதன் நவகிரகங்கள் வரிசையில் நான்காவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் மூன்றாவதாகவும் விளங்கும் கோவில் “திருப்புளிங்குடி”.

ஒருசமயம் மகாவிஷ்ணு,  மஹா லக்ஷ்மியோடு  பூலோகத்தில் கருட வாகனத்தில்  வந்து கொண்டிருந்தபோது   இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள மணல்மேடான இடங்களை பார்த்து அங்கே  கொஞ்ச நேரம்  அமர்ந்து லக்ஷ்மியோடு  ரசித்து பேசிக்  கொண்டிருந்தார். நாரதர் இதைப்  பார்த்துவிட்டார். சும்மா இருப்பாரா?  நேராக  பூமா தேவியிடம் சென்றார்

”நீ இவ்வளவு அசடாக  இருக்கிறாயே. நீயும் தானே  பெருமாள் பத்னி. அங்கே போய் பார்  லக்ஷ்மியோடு என்ன கோலாகலமாக  தாமிரபரணி கரையில்  உல்லாசம்” பூமாதேவி சென்று பார்த்து  வெகுண்டாள்.  அப்படியே  பாதாள லோகத்துக்கு  சென்று  மறைந்து விட்டாள். பூமாதேவியின் கோபத்தால் உலகனைத்தும் நீரின்றி வறண்டது. குடிக்கக்கூட தண்ணீரின்றி உயிர்கள் தத்தளித்தன.  சகல தேவாதி தேவர்களும்   இந்த நிலைமையைக் கண்டு  பயந்து  பெருமாளிடம் வந்து  முறையிட்டார்கள்.

பெருமாளுக்கு தெரியாமல் ஏதாவது நடக்க முடியுமா? விஷயம் புரிந்து கொண்ட திருமால்  பூமாதேவியிடம் சென்று சமாதானப்படுத்தி   ”எனக்கு நீயும் லக்ஷ்மியும் ஒன்று தான்  சமமானவர்கள்.  சமாதானமடைந்த பூமாதேவி  மீண்டும் வைகுண்டம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் பூவுலைகையும் வளம் கொழிக்க செய்தாள். இவ்வாறு பூமிதேவியின் சினத்தை தணித்ததால் இங்கே பெருமாளுக்கு  ‘பூமிபாலகர் என்றும் காய்சினிவேந்தர் ‘  என்றும் பெயர். இப்போது புரிகிறதா இந்த பெயர்  காரணம்?

திருப்புளிங்குடி என்பது 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.  தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல்.  பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும்  இந்த ஸ்தலம்  சொல்லப்பட்டிருக்கிறது.
 இங்கே ஒரு அதிசய  கல் ஓவியம். வேறு கோயில்களில் காண முடியாதது.  பெருமாளின்  நாபி யிலிருந்து
 செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்கிற மாதிரி  ஒரு சிற்பம்.

3684.
பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்*
தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்*
தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)
3685.
குடிக்கிடந்து ஆக்கம்செய்து*  நின்தீர்த்த அடிமைக் குற்றேவல்செய்து*  உன்பொன்
அடிக்கடவாதே வழிவருகின்ற*  அடியரோர்க்கு அருளி*  நீஒருநாள்
படிக்குஅளவாக நிமிர்த்த*  நின்பாத பங்கயமே தலைக்குஅணியாய்*
கொடிக்கொள் பொன்மதிள்சூழ் குளிர்வயல்சோலை*  திருப்புளிங் குடிக்கிடந்தானே.
3686.
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்கிடத்தி*  உன்திருஉடம்புஅசைய*
தொடர்ந்து குற்றேவல்செய்து தொல்அடிமை வழிவரும்*  தொண்டரோர்க்கு அருளி*
தடம்கொள் தாமரைக்கண்விழித்து*  நீஎழுந்து உன்தாமரை மங்கையும்நீயும்*
இடம்கொள் மூவுலகும் தொழ இருந்தருளாய்*  திருப்புளிங்குடிக்கிடந்தானே!
3688.
பவளம்போல் கனிவாய்சிவப்ப நீகாணவந்து*  நின்பல்நிலா முத்தம்*
தவழ்கதிர்முறுவல்செய்து*  நின்திருக்கண் தாமரைதயங்க நின்றருளாய்,*
பவளநன்படர்க்கீழ் சங்குஉறைபொருநல்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
கவளமாகளிற்றின் இடர்கெடத்தடத்துக்*  காய்சினப்பறவைஊர்ந்தானே!  

3689.  காய் சினப் பறவை ஊர்ந்து பொன் மலையின் மீமிசைக் கார் முகில் போல
மா சின மாலி மாலிமான் என்று அங்கு அவர் படக் கனன்று முன் நின்ற
காய் சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப்புளிங்குடியாய்
காய் சின ஆழி சங்கு வாள் வில் தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே (6)  

3690.
எம்இடர்கடிந்து இங்கு என்னைஆள்வானே!*  இமையவர்தமக்கும் ஆங்குஅனையாய்*
செம்மடல்மலருந் தாமரைப்பழனத்*  தண்திருப்புளிங்குடிக்கிடந்தாய்*
நம்முடைஅடியர் கவ்வைகண்டுஉகந்து*  நாம்களித்து உளம்நலம்கூர*
இம்மடஉலகர்காண நீஒருநாள்*  இருந்திடாய் எங்கள்கண் முகப்பே.
3691.
எங்கள்கண்முகப்பே உலகர்கள்எல்லாம்*  இணைஅடி தொழுதுஎழுதுஇறைஞ்சி*
தங்கள்அன்புஆர தமதுசொல்வலத்தால்*  தலைத்தலைச் சிறந்துபூசிப்ப*
திங்கள்சேர்மாடத் திருப்புளிங்குடியாய்!*  திருவைகுந்தத்துள்ளாய்! தேவா*
இங்கண் மாஞாலத்துஇதனுளும் ஒருநாள்*  இருந்திடாய் வீற்றுஇடம்கொண்டே.
3692.
வீற்றுஇடம்கொண்டு வியன்கொள்மாஞாலத்து*  இதனுளும் இருந்திடாய்*  அடியோம்
போற்றி ஓவாதே கண்இணை குளிர*  புதுமலர்ஆகத்தைப்பருக*
சேற்றுஇளவாளை செந்நெலூடுஉகளும்*  செழும்பனைத் திருப்புளிங்குடியாய்*
கூற்றமாய்அசுரர் குலமுதல்அரிந்த*  கொடுவினைப்படைகள் வல்லானே!
3693.
கொடுவினைப்படைகள் வல்லையாய்*  அமரர்க்குஇடர்கெட, அசுரர்கட்குஇடர்செய்*
கடுவினைநஞ்சே! என்னுடைஅமுதே*   கலிவயல் திருப்புளிங்குடியாய்*
வடிவுஇணைஇல்லா மலர்மகள்*  மற்றைநிலமகள் பிடிக்கும்மெல்அடியைக்*
கொடுவினையேனும் பிடிக்கநீஒருநாள்*   கூவுதல்வருதல் செய்யாயே.
3694.
‘கூவுதல்வருதல் செய்திடாய்’என்று*  குரைகடல் கடைந்தவன் தன்னை*
மேவிநன்குஅமர்ந்த வியன்புனல்பொருநல்*  வழுதிநாடன் சடகோபன்*
நாஇயல்பாடல்ஆயிரத்துள்ளும்*  இவையும்ஓர் பத்தும் வல்லார்கள்*
ஓவுதல்இன்றிஉலகம் மூன்றுஅளந்தான்*  அடிஇணை உள்ளத்துஓர்வாரே  (2)
நம்மாழ்வார் என்ன சொல்கிறார் இந்த பத்து பாசுரங்களில் ?
எங்கும் சுற்றி ப்பார்க்கும்போது நீண்ட பச்சை பசேல் வயல்கள். கடல் மாதிரி நீர். பக்தர்கள் இங்கு பரம்பரை  பரம்பரையாக ஏன் வருகிறார்கள்.?   செந்தாமரைச் செல்வி யோடு நீ தரிசனம் கொடுக்கிறாய் அதற்காக.  திருவாய் மலர்ந்து எனக்கருள்புரி.. தாமரைக் கண் திறந்து அனுக்கிரஹம் பண்ணு .
உன் பொற்றாமரை பாதங்களை சரணடைந்தோர்க்கு  அருள் புரிபவனே .காலம் காலமாக  நாங்கள் உன் அடிமைகள். மூவுலகும் அளந்த உன் திருவடிகளே தஞ்சம். திருப்புளிங்குடி நாதனே.
திருப்புளிங்குடி நாயகனே,  நீ எவ்வளவு காலம்  பாற்கடலில்  சயனத்தில் இருப்பாய்?  படுத்துக்கொண்டே இருந்தால் உடம்பு வலிக்காதா? எழுந்திரு   லக்ஷ்மி தாயாரோடு உன் அடியார்கள்   எங்களுக்கு  தரிசனமளித்து எங்களுக்கு அருள்புரிவாய்.
நீ இங்கே  திருப்புளிங்குடியில் சாயனக்கோலத்தில் உள்ளாய். அருகே வரகுணமங்கையில் வீற்றிருந்த கோலம்.  ஸ்ரீவைகுண்டத்தில்  நின்ற திருக்கோலம் தரிசனம் தந்தாய் .  இதோ என் இதயம். வா அதில் வந்து உட்கார். கோவைப்பழம் போல் சிவந்த வாயனே, உன்னை போற்றி நாங்கள் எப்படிஉரக்க பாடுகிறோம் பார். கேள். எப்படி ஆடுகிறோம் பார். மூவுலகும் மகிழ்ந்து எங்களை வேடிக்கை பார்க்கிறதே.
திருப்புளிங்குடி சயன கோல  பெருமாளே,  சங்கம் ஒலிக்கிறது. தாமரை விழிகளை எங்கள் பக்கம் திருப்பி அருள் புரிவாய். மெல்லிய புன்னகை பூத்தால்  நிலவைப் போல் வெள்ளை பற்கள் தெரிகிறது.  எங்கோ ஒரு முதலை  கஜேந்திரன் எனும் யானையின் காலை பிடித்து நீரில்  இழுத்து  யானை தவித்து ஆதிமூலமே என்று குரல் கொடுத்தபோது ஓடிவந்தாயே, உன் சக்ரம்  கஜேந்திரனை காப்பாற்றியதே எங்களையும்  கொஞ்சம்  காப்பாற்றுவாய்.
கருட வாகனா, மாலி மாலியவான்  ஆகியோரை ஸம்ஹரித்தவனே ,  தங்கமலையில் கருமேகம் உட்கார்ந்தது போல்  கருட வாகன காட்சி தந்தவனே,  பொற்கிரீடம் அணிந்த  திருப்புளிங்குடி நாயகா,  எங்கள் துன்பம் தவிர்ப்பாய்.
திருப்புளிங்குடி தேவாதிதேவா,  நீ  தீன  ரக்ஷகன் ஆயிற்றே. ஒருநாள் எங்களுக்கும் உன் திவ்ய தரிசனம் தருவாயா? எங்கள் இதயம்  நன்றியோடு நனைய வேண்டாமா?

எங்கும் நிலவின் ஒளி பால்வண்ணமாக  எல்லாவற்றையும் மாற்றும் திருப்புளிங்குடி நாதனே,  உலகமே உன் திருவடியை போற்றி  பாடுகிறதே.  உன்னை மனதார வணங்குகிறதே,   வைகுண்ட வாசனே , இங்கே வா எங்களுக்கும் உன் தரிசனம் கிடைக்கட்டும். வயலில் வாலை  மீன் ஈர மண்ணில்  துள்ளிக் குதிக்கிறது. அசுரர் குல காலனே , நீ  பூவுலகத்திலும் பக்தர்களுக்கு  உன் தரிசனம் வழங்கு,  நாங்கள் போற்றி பாடுவதை கேட்டு மகிழவேண்டும்.
விண்ணவர் குறை தீர்த்த  திருப்புளிங்குடி நாதனே, அசுரர்களுக்கு விஷம் போன்றவனே,  எங்களுக்கு அம்ருதமானவனே, திருநிறைச் செல்வி மார்பில் உறையும் ஸ்ரீநிவாஸா, உன் திருவடியை பிடித்துவிடும் பாக்யத்தை எமக்கருள்வாயா?
பரிசுத்த நீர்  எங்கும் நிறைந்திருக்கும்  திருப்புளிங்குடி நாதனே, ஆயிரக்கணக்கான  இசை மணக்கும் பாசுரங்களை பாடுகிறோம்.   பாற்கடலில் அம்ருதத்தை கடைந்தெடுக்க அருள் புரிந்தவனே உன் மேல் இந்த பத்து பாசுரங்களை ப்படும் அடியேனை  வா என்று உன்னிடம் அழைத்திடு, அல்லது நீயே என்னிடம் வந்துவிடு.   உன்னை வணங்கி தொழும் எம் இதயம் நிறைய மூவுலகம் அளந்த உன் திருவடிகளை நிரப்பி இருக்கிறோம். ”