ARUNACHALAM MURUGAN J K SIVAN

ரமண மஹரிஷி   –  நங்கநல்லூர்  J K  SIVAN 

கம்பத்திளையனார் 

ரமண மஹரிஷி  ரொம்ப ரொம்ப எளிமையான தாத்தாவாக  தான் எல்லோருக்கும்  காட்சி அளித்தார்.  ஆரம்ப காலத்தில் அருணாசலம் வந்த போது  வெங்கட்ராமன்  என்கிற  ரமணன்  ஒரு  சிறுவன்.  பாதாள லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்யும்போது அவரை  மாட்டுக்கார  சிறுவர்கள் கல்லால்  அடித்து துன்புறுத்தினார்கள்.  சேஷாத்ரி ஸ்வாமிகள் இதை கவனித்து  எதை, யாரோ  கல்லால் அடிக்கிறார்கள் என்று தேடி   அந்த  பையன்களை  விரட்டி சிறுவன் ரமணரை அவர்களிடமிருந்து மீட்டு  வெளியே மட்டும் அல்ல, வெளி உலகத்துக்கே  கொண்டுவந்தவர்.   இதை எல்லாம் அடிக்கடி  ரமணர் நினைத்துப் பார்த்து பக்தர்களோடு  பழைய விஷயங்களை பரிமாறிக் கொள்வார்.

”நான்  சின்ன பையன் தான் என்றாலும் கூட  பெரியவர்கள் என்னை ஆதரித்தார்கள். திருவண்ணாமலை  சுப்ரமணியன் சந்நிதி  ரொம்ப  விசேஷம்.  கம்பத்திளையனார் என்று முருகனுக்கு பெயர். இந்த  பெயர் வர காரணம்  தெரியுமா?

சம்பந்தாண்டான் என்னும் புலவன் ஒருவன்  சக்தி உபாசகன்.  அருணகிரி  நீ  என்ன எப்பவும் முருகன் முருகன் என்று பாடுறியே, உன் முருகனை எங்கே  நேரில் வரச்சொல்லு பார்க்கலாம்” என்று  சவால் விட்டான்.  அருணகிரிநாதரின் முருக பக்தியை கேலி செய்து  தூற்றினான்.  மனம் நொந்து, கண்களில் நீர் சொறிய  அருணகிரி நாதர்  இந்த சந்நிதியில்  உருகி  பாடினார்.   

”என்னப்பா முருகா, இதோ இங்கே இருக்கும் 16 கால் மண்டபத்தூணில் எல்லோருக்கும் நீ நேரில் வந்து காட்சி கொடுக்க வேண்டும்”

என்று வேண்டினார்.  அப்படியே  முருகனும்  காட்சி யளித் தார்.   ஆகவே  தான்  தூணில் வந்த முருகன் ‘கம்பத்திளையனார்’ ஆனார். 

இன்னொரு  கதையும் இருக்கிறது.

இக்கோவில் கட்டுமாண பணி நடைப்பெற்றுக்
கொண்டிருந்தபோது, வயது முதிர்ந்த சிற்பி ஒருவர், தலைமை சிற்பியிடம் வந்து தனக்கு எதாவது ஒரு சிலை செய்யும் பாக்கியத்தினை அருளுமாறு கேட்டார். முதியவர் என்ன பெரிதாய் சிலை செய்துவிடப் போகிறார் என எண்ணிய தலைமை சிற்பி, கோவிலின் மூலையில் ஒரு இருண்ட இடத்தை காட்டி அங்கு எதாவது சிலை வடிக்குமாறு முதியவரை அனுப்பி வைத்தார். கிடைத்த இடத்தில் ஆத்மார்த்தமாக ஊண், உறக்கமின்றி முருகன் சிலை ஒன்றை வடிக்கலானார். 

அருணாசலேஸ்வரர்  கோவில் கோவில் கட்டி  கும்பாபிஷேகம் தடபுடலாக  நடக்கும் சமயம்.  ராஜா கோவிலை பார்வையிட வந்தான்.   ஒரு முதிய  சிற்பி  மண்டபத்துக்குள்  அருமையாக  ஒரு  முருகன் சிலை வடித்துக் கொண்டிருந்தார். 

” ஐயா  சிற்பியாரே,  இவ்வளவு அழகான  முருகனை  ஏன் இப்படி  ஒரு இருட்டு மூலையில்  வைத்திருக் கிறீர்கள்? நாலு பேர்  பார்க்கும்படியான  இடத்தில் இருக்கவேண்டாமா? இந்த இருட்டு மண்டபத்தில் யார் வந்து பார்க்கப்  போகிறார்கள்? உமக்கு  இந்த அழகிய முருகனை வடிக்க இந்த தூண் தானா கிடைத்தது?

 ”மஹாராஜா,  என்ன சொன்னீர்கள்.  இந்த முருகனை யார்  பார்க்கப்  போகிறார்கள் என்றா,   யார்  கண்டு மகிழப் போகிறார்கள்  என்றா கேட்டீர்கள்?  யாரோ  ஒருவன்  நிச்சயம்  இந்த முருகனை கண்டு மகிழ்ந்து பணிந்து வணங்குவான்.இது  அந்த முருகனே  காட்டிய  இடம் ”    என்று எனக்கு  மனதில் படுகிறது.”  

அப்படியே  நடந்தது.     கர்ப்ப கிரஹத்தில் இருக்கும் முருகனை தரிசித்தவர்களில் ஒரு பக்தர்   கண்ணில் இந்த மண்டப  தூணில் வடித்த  முருகன் தென்  பட்டான்.   அந்த தூண் முருகனுக்கு  அவர்  பூஜை செய்து  அந்த தூனைச் சுற்றி கம்பி பாதுகாப்பு வலை போட்டா கிவிட்டது. விளக்கு வெளிச்சமும்  கிடைத்தது. அந்த முருகன் அதுமுதல்   கம்பத்து  இளைய வனாகக் காட்சி தருகிறான்.  அருணாசலம்  தீர்த்தக்  கரையில் கம்பத்து இளையனார் கோயில் சன்னதியை மறக்காமல்  தரிசனம் செய்யவவேண்டும். 

பிற்காலத்தில் அருணகிரிநாதர் இங்கே  கோபுரத்தி லிருந்து விழுந்து உயிர்விட முயன்ற நேரத்தில் காப்பாற்றி திருப்புகழ் பாட அருளியவர் இந்த முருகன். அதனால் அவருக்கு  கோபுரத்திளையனார் எனவும் பெயர்  உண்டு. 

பிச்சை இளையனார் – பிச்சை இளையனார் சந்நிதி கிளிக்கோபுரம் அருகே உள்ளது. இங்கு இரண்டு இடங்களில் சுப்ரமணியன்  தன் திருப்பாதத்தினை பதித்துள்ளார்.

இங்கே  தான்  ஆரம்ப காலத்தில்  ரமணர்  16 வயது சிறுவனாக  தவமிருந்து தங்கினார். அப்போதெல்லாம்  முக்கியமா  ரெண்டு வக்கீல்கள்  அடிக்கடி  அங்கே வருவார்கள்.  முருகன் கோவில் வாசல்படி யில்  உட்கார்ந்திருக்கும்  ரமணனை  கவனித்தார்கள்.  ஏதோ ஒரு விசேஷம் நடந்தபோது  விருந்து. அதில் சாப்பிட  ரமணனை அழைத்தார்கள்.  ரமணர் மௌனமாக  இருந்ததால்  பதில் இல்லை.  அதை தப்பாக  புரிந்து கொண்டார்கள். 

”ஓஹோ இவனுக்கு வர விருப்பமில்லை’. லக்ஷியம் பண்ணாமல் இருக்கிறான்” என்று எடை போட்டு விட்டார்கள்.  ரெண்டு வக்கீல்களும் கைகளை கோர்த்துக்கொண்டு  ரமணரை அப்படியே குண்டு கட்டாக  தூக்கிக்கொண்டார்கள்.   ரமணர்  சைகையில் ”என்னை விடுங்கள், நானே நடந்து வருகிறேன் ”என்று ஜாடை  காட்டினார் .அந்த  ஒரு வீட்டிலே  தான் நான் திருவண்ணாமலையில் சாப்பிட்டேன்” என்று ரமணர்  பக்தர்களிடம் சொல்வார். 

”இதே போல தான்  இன்னொரு சமயம்  என்னை தூக்கிக் கொண்டு போனார்கள். அது ஏதோ வீட்டுக்கு இல்லை.  வடக்கே இருக்கிற ஈசான்ய மடத்துக்கு. என்னை   மாட்டு வண்டியிலே  தூக்கிக் கொண்டு போட்டுவிட்டார்கள்.  அங்கேயும் எனக்கு சாப்பாடு போட்டார்கள்” 

இதெல்லாம்  படிக்கும்போது ரமணர் வாழ்ந்த காலத்துக்கே  நாம் போய்விடுகிறோம். .