BAJAGOVINDAM SLOKAS 27 -28 J K SIVAN

ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்

பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் -27-28

27 कामं क्रोधं लोभं मोहं त्यक्त्वाऽऽत्मानं भावय कोऽहम्। var पश्यति सोऽहम् आत्मज्ञान विहीना मूढाः ते पच्यन्ते नरकनिगूढाः ॥
kaamaM krodhaM lobhaM mohaM tyaktvaa.atmaanaM bhaavaya ko.aham.h atmaGYaana vihiinaa muuDhaaH te pachyante narakaniguuDhaaH ..

காமம் குரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா ஆத்மானம் பச்யதி ஸோஹம் (or )பாவய கோ ஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடாஹ் தே பச்யந்தே நரகனிகூடா.

மனிதனை என்று சொல்வதை விட மனதை என்று சொன்னால் தான் ரொம்ப பொருத்தம். மனது தானே மனிதன். இந்த மனது மனிதனை ஆக்கிரமித்து அல்லல் பட வைக்கும் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம் ஆகியவை மனதிற்குள் எங்கிருந்து வந்தவை?
யாராவது பிடித்து நம் வாயைப் பிளந்து உள்ளே தள்ளியதா?
யாரிடமிருந்தாவது நாம் கற்றுக் கொண்டதா?
கொரோனா போல் நாம் தேடாமலேயே நம்மை வந்து ஒட்டிக்கொண்டதா?
எங்கேயாவது உள்ளூரிலோ வெளியூரிலோ போய் காசு கொடுத்து வாங்கி வந்ததா?

இதெல்லாம் ஒன்றுமே இல்லை. நாம் காணும்,கேட்கும், பேசும், உணரும், முகரும் உலக விஷயங்கள் கெட்டியாக நம் கவனத்தை ஈர்த்து, ஏகபோகமாக நமது மனதில் தானாகவே புகுந்து இடம் பெற்று நம்மை ஆட்டி வைப்பவை. அதற்கு அடிமையாகி நாம் கடைசியில் பெறுவது நிம்மதியின்மை, அளவற்ற துன்பம், பாப மூட்டை முதுகில் பெரிய சுமையாக. இதெல்லாம் தொலைத்து விட்டு உண்மையில் இது எதுவுமே சம்பந்தமில்லாத நாம் யார் என்று உணரவைப்பவை தான் பஜகோவிந்தம் போன்ற அற்புத அறிவுரைகள்.

ஆத்ம ஞானம் இல்லாத அறியாத, மூடர்களாக இனியாவது இருக்க வேண்டாம். ஞானம் பெறுவோம்.
ஸம்ஸார நரகத்தில் வெகுகாலம் சிக்கி அவஸ்தைப்பட்டது போதும். ஞானமில்லாதவர்கள் ஸம்ஸார சாகரத்தை தாண்ட வேறு வழியே இல்லை.
ஆசை, பொறாமை, அனாவசிய பேச்சு, அகம்பாவம் நம்மை விட்டு நீங்க முயல்வோம்.
ஆசை தவறான வழியில் முயற்சி செய்ய வைக்கிறது. அது பாபம். ஆசையை தான் ‘காமம்’ என்கிறோம். கிடைக்காதபோது ஏமாற்றம்,கோபமாக மாறுகிறது. கோபம் நமக்கு ஒரு சத்ரு. க்ரோதம் தான் கோபம்.

இந்த பஜகோவிந்த ஸ்லோகத்தை இயற்றியவர் பாரதி வம்சர் என்ற ஆதி சங்கரரின் சிஷ்யர்.இவர் முத்துப் போல சொல்வது என்னவென்றால் ”ஹே மூடனே, உன்னை நரகத்தில் இருந்து வெளியே கொண்டுவர நீ தான் பாடுபட வேண்டும். அதற்கு நீ செய்யவேண்டியது என்ன? உன்னை நரகில் விடாமல் ஆழ்த்திக் கொண்டி ருக்கும் , காமம், மோகம், கோபம், பேராசை, பொறாமை இவை எல்லாவற்றிலிருந்தும் தப்பி விடுபட்டு உடனே உன்னை மெதுவாக கழற்றிக் கொள். அடுத்த கணமே உன் ஆத்ம ஒளி உனக்கே தெரியும். இதற்கு ஊன்று கோல் ”கோவிந்தா கோவிந்தா” என்று நீ பஜிக்கும் அவன் நாமமே. விடாதே அவனை. அவன் நாமத்தை.”
அடேடே, ரொம்ப சுலபமான வழியாக இருக்கிறதே. கெட்டியாக பிடித்துக் கொள்வோமா?

”ஜீவனாகிய நான் அந்த பரமாத்மாவே தான் என்று அறிந்து அனுபவியுங்கள்” என்று பொருள். மனிதனுக்கு ஏதோ ஒரு வஸ்து வேண்டும் என்று ஆசை வந்தால் அதை அடைய பிரயத்தனம் செய்கிறான். நியாய மான வழியில் அகப்படாவிட்டால் அநியாயமான வழியில் அதை அடைய தயங்கவில்லை. அங்கு தான் பாபம் உருவாகிறது. . அந்த பாபத்திற்குக் காரணமாய் இருப்பது ”அது வேண்டும்’ என்னும் ஆசை . அதைத் தான் ‘காமம்’ என்று சொல்லுவார்கள். அது நமக்கு ஒரு சத்துரு. மற்றொன்று இருக்கிறது; அது க்ரோதம்’ – கோபம். ஒரு வஸ்துவின் மேல் ஆசைப்பட்டு அது கிடைக்காத போது ஏற்படுவது. தடையாக இருந்தவர்கள் மேல் குரோதம் உண்டாகிறது. ஏமாற்றத்தால் அந்த காமம் கோபமாகிறது. ஆதலால் இரண்டையும் ஒன்றென்றே சொல்லிவிடலாம்.

28. त्वयि मयि चान्यत्रैको विष्णुःव्यर्थं कुप्यसि मय्यसहिष्णुः । भव समचित्तः सर्वत्र त्वं वाञ्छस्यचिराद्यदि विष्णुत्वम् ॥

tvayi mayi chaanyatraiko vishhNuH vyarthaM kupyasi mayyasahishhNuH bhava samachittaH sarvatra tvaM vaaJNchhasyachiraadyadi vishhNutvam.

த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு வ்யர்த்தம் குப்யசி மய்யஸ ஹிஷ்ணு பாவ சமச்சித சர்வத்ரத்வம் வாஞ்ச்சஸ்ய சிராத்யதி விஷ்ணுத்வம்:

மேதாதிதீரர் என்று ஆதிசங்கரரின் ஒரு சிஷ்யரைப் பற்றி தெரியவேண்டுமானால் அவர் தான் இந்த ஸ்லோகத்தை இயற்றியவர் என்ற ஒரே ஒரு விஷயம் மட்டுமே அறியலாம். அது ஒன்றுதான் அவரைப் பற்றியதான எனக்குத் தெரிந்த விபரம் கைவசம் இருக்கிறது. அவரது இந்த ஸ்லோகம் சிகரமாக உள்ளது. அந்த மேதாவி அதி தீரரான சிஷ்யர் என்ன அற்புதமாக சொல்லியிருக்கிறார் இந்த ஸ்லோகத்தில் என்பதை உணர்வோம்.

”இதோ பாரப்பா, தம்பி, எனக்குள்ளே மட்டுமில்லை,உனக்குள்ளேயும், அதைத் தவிர காணும் யாவிலும் உள்ளே உறைபவர் அந்த மஹா விஷ்ணு தான்”

ஸ்படிகத்தை விட தெள்ளிய எளிய வாசகம் இது. இதில் எள்ளளவும் சந்தேகமே வேண்டாம். எனவே உன் கோபம், தாபம், அவசரம், பொறுமையின்மை இவை தேவையற்றவை. அர்த்தமில்லாதவை. உன் உள்ளே உள்ள விஷ்ணுவை உணர்ந்து நீயே விஷ்ணுவாக இருக்கிறவன் என்ற உண்மையை நீ முதலில் புரிந்து கொள்ளவேண்டும். நீ செய்ய வேண்டியது பெரிசாக ஒன்றுமில்லை. அனைவரும் அனைத்தும் ஒன்றே, சமம், எல்லோர் உள்ளேயும் அதே விஷ்ணு தான் இருக்கிறார் என்று என்று ஆழமாக நினைவில் கொள். இதுக்கு ஆணிவேர் தான் ” கோவிந்தா கோவிந்தா கோவிந்தா” எனும் நாமஸ்மரணம். பார்ப்பதெல்லாம் பார்ப்பவரெல்லாமோ அவர்கள் கோவிந்தன் தானே. இந்த உபாயத்தை மறந்து, வீணாக, அனாவசியமாக, எதற்காக, மக்கள் துன்பத்தில் ஏன் உழலவேண்டும்?

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *