BAJA GOVINDAM SLOKAS 1 TO 5 J K SIVAN

“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 1 – 5
1. 1. भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं मूढमते। .संप्राप्ते सन्निहिते काले न हि न हि रक्षति डुकृञ् करणे .
bhajagovindaM bhajagovindaM govindaM bhajamuuDhamate . saMpraapte sannihite kaale nahi nahi rakshati DukRiJNkaraNe ..
பஜகோவிந்தம் பஜகோவிந்தம் கோவிந்தம் பஜ மூட மதே சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே.
மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்த நமக்கு சுருக்கமாக கிடைத்த சிறந்த நல்வழிப்பாதை பஜகோவிந்தம். பாடுவதற்கு வெகு சுகமாக சந்தம் அமைந்திருக்கிறது. பாட்டிற்கு என்றே பிறந்த பாரத ரத்னம், என்றும் நினைவில் நிற்கும் திருமதி M .S . சுப்புலக்ஷ்மியின் குரலில் எங்கும் ஒலிக்கிறதே
காசியில் ஒரு குடு குடு கிழவர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு மிகவும் ஸ்ரமத்தோடு பாணினியின் சம்ச்க்ரித இலக்கண (வ்யாகரணத்தை) உருபோட்டு படிப்பதை சங்கரர் கங்கை ஸ்னானத்துக்கு போகும் போது விடியற்காலை ஒரு நாள் பார்த்தார். சிரிப்பு வந்தது அவருக்கு.
”எதற்கு இந்த தள்ளாத வயதில் இவருக்கு இப்படி புத்தி போகிறது? . இனிமேல் பண்டிதனாக ஆசையா? இதற்கு பதில் கடவுள் மேல் பிரார்த்தனை செய்யலாமே. போகிற வேளைக்கு புண்ணியமாவது உண்டே”.
இந்த கிழவர் மட்டும் அல்ல. நம் அநேகரின் வாழ்க்கையும் இவ்வாறு தானே, உலக வாழ்வின் ஆடம்பரங்கள், கவர்ச்சிகள், பண ஆசை ஆகியவற்றில் ஈடுபட்டு பாழாகிறது. கையில் வெண்ணை போல் அந்த வெண்ணை திருடி இருக்கிறானே ஒரு கணம் அவனை நினைத்தாலே போதுமே என்று தோன்றியதின் விளைவு தான் பஜகோவிந்தம் 31 ஸ்லோகங்கள்.
‘ஏ மனதே , எப்பவும் நீ பெருமைப் பட்டுக் கொள்வாயே, ‘ நான் பெரிய பண்டிதன், சகலமும் கற்றவன் என்று. எத்தனையோ மேடைகளில் பேசினாய், கைதட்டல் வாங்கினாய். மாலைகளை, மெடல்களை கழுத்தில் கனமாக சுமந்தாய். போட்டோக்களில் சிரித்தாய். உனது இலக்கண அறிவு, நீ படித்த யாப்பு, நிகண்டு, புஸ்தகங்கள், எழுதினது எதுவுமே உனது அந்திம காலத்தில் உனக்கு கை கொடுக்காது என்பது நினைவில் கொள். விடாமல் நீ மனசார உச்சரித்த ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற சொல் ஒன்றே உன்னை சம்சார சாகரத்தில் இருந்து கடத்திக் கொண்டு செல்ல உதவும் ஒரே சாதனம். உன் இலக்கண அறிவு பாவம் உனக்கு உதவாது அப்பனே. எத்தனை காலம் நீ அதோடு வாழ்ந்தாய்! என்ன பிரயோசனம்? உன் எழுத்துக்கள், நீ படித்தவை, போற்றி திண்டு திண்டாக அலமாரியில் வைத்திருந்தவை, எல்லாமே பழையபேப்பர் கடை பாலுவிடம் தான் போகும், கிலோ பத்து ரூபாய் கிடைத்தால் அது அதிர்ஷ்டம்.
கோவிந்தா கோவிந்தா என்று ஒருவர் சொன்னால் மற்றவர்கள் அவரோடு சேர்ந்து கை தட்டி தலையசைத்து கோவிந்தா என்று கோருவது தான் ‘ கோவிந்தம் போடுதல்’. இந்த வழக்கம் எக்காலத்திலும் உள்ளது. திருப் பதி மலைக்குப் போனால் மலை ஏறும் போதெல்லாம் கோவிந்தம் போடு’ என்று ஸகல ஜனங்களும் கோவிந்தா என்று சொல்வதை இன்றைக் கும் காணலாம். கேட்கும்போது ஒரு உத்வேகம் நமக்குள் பிறக்கும்.
பெரியோர்கள் சாப்பிடும் போது கூட கோவிந்த, கோவிந்த, கோவிந்த’ என்று சொல்லுகிறார்கள். “சாப்பிடும் போது, கோவிந்த’ என்று சொன்னால், அந்த மனோபாவத் தோடு அன்னம் உள்ளே போனால், அது பரமாத்ம தியானம் உண்டாக அனுகூலமாக இருக்கும். கோவிந்த சப்தத் தோடு கூடிய அன்ன ரஸம் உடம்பில் சேரச்சேர ஈச்வர ஞாபகம் உண்டாகும். தினந்தோறும் போஜனம் பண்ணும் போது, ‘கோவிந்த’ என்ற நாமாவைச் சொல்ல வேண்டும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. சாப்பிடாமல் இருக்க போவதில்லை.
பஜ கோவிந்தம், பகவந்நாமாவை எப்பொழுதும் சொல்ல ரொம்ப அப்யாஸம் செய்ய வேண்டும். விடாமல் சொல்லிக்கொண்டு வந்தால் தான் பழக்கத்துக்கு வரும். எந்த காரியம் செய்து கொண்டிருந்தபோதிலும் பகவானுடைய நாமத்தில் முக்கியமாக கவனம் இருக்கவேண்டும். நாளையிலிருந்து நீங்கள் ஆரம்பித்தால் முதலில் சில நாட்கள் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக நிறுத்தக்கூடாது. நம்முடைய கடைசிப் பிரயாண காலத்தில் பகவந்நாமத்தை மனம் தானாகவே விடாமல் நினைக்கும். எல்லாப் பலனையும் கொடுக்கும்.
“प्रयाणकाले मनसाऽचलेन भक्त्या युक्तो योगबलेन चैव । ‘..ध्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ॥”. சஞ்சலம் அற்ற மனதோடும் பக்தியோடும் யோக வலிமையோடும் கூடியவன் சாகுங்காலத்தில் பிராணனை இரண்டு புருவங்களுக்கும் இடையே செவ்வையாக நிறுத்தி அந்த திவ்வியமான பரம புருஷனை அடைகிறான் என்கிறது கீதை.
2. मूढ जहीहि धनागमतृष्णां कुरु सद्बुद्धिं मनसि वितृष्णाम् । यल्लभसे निजकर्मोपात्तं वित्तं तेन विनोदय चित्तम् ॥ भज ॥
mUDha jahiihi dhanaagamatRishhNaaM kuru sadbuddhiM manasi vitRishhNaam. yallabhase nijakarmopaattaM
vittaM tena vinodaya chittam. .. (2)
மூட ஜஹீஹி தனாகம த்ரிஷ்ணாம் குரு சத்புத்திம் மனசி வித்ரிஷ்ணாம் யல்லபஸே நிஜ கர்மோ பாதம் வித்தம் தேன வினோதய சித்தம்
”ஹே முட்டாள் மானுடா, ஏக்கர்கள் நிலம் குறைந்த விலையில் வாங்கிப் போடாயே. அதால் கோர்ட் கேஸ் தான் மிச்சம். எவனோ ஆக்ரமித்தான். ஏரி இருந்த இடத்தில் 3 மாடி கட்டி அதில் ரெண்டு மாடி வரை சமீபத்தில் சாக்கடை நீர் நிரம்பியதே. அலைந்து அலைந்து கடன் வாங்கி, ஏமாற்றி வீடுகள் கட்டினாய். அந்த சொத்துக் காக உன் பிள்ளைகளும் உறவும் அடித்துக்கொண்டு சாவதை நீ பார்க்கவில்லை போகும்போது . இதான் மிச்சம்.
எவ்வளவு அழகாக தேவைக்கு மட்டும் சம்பாதித்து அந்த கோவிந்தனை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்தி ருக்கலாம். உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக கூடாது. வியர்வை ரத்தம் சிந்துவது பிறர்க்குதவ என்று வாழ். நீயே கோவிந்தனாவாய்.
3. नारीस्तनभरनाभीदेशं दृष्ट्वा मा गा मोहावेशम् । एतन्मांसवसादिविकारं मनसि विचिन्तय वारं वारम् ।। भज ॥
naariistanabhara naabhiideshaM dRishhTvaa maagaamohaavesham. etanmaaMsaavasaadi vikaaraM manasi vichintaya vaaraM vaaram. .. (3)நாரீ ஸ்தனபர நாபீ தேசம் த்ரிஷ்ட்வா மா கா மோஹாவேசம் ஏதன் மாம்ச வசாதி விகாரம் மனஸி விசிந்தய வாரம் வாரம்.
மனசே, நினைவில் கொள். ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே. மூன்று பேராசைகளில் முக்கியமானது, பல பேரை விழுங்கியது பெண்ணாசை. மற்ற மண்ணாசை, பொன்னாசை எல்லோருக்கும் இருப்பதில்லை. காசு அதிகம் தேவைப்படும் விஷயம் அவை. பெண்ணால் பல சாம்ராஜ்யங்களே வீழ்ந்தி ருக்கின்றன. சம்யுக்தையால் இந்த நாட்டிற்கே முகலாய ஆட்சி வந்தது எனலாம். ரொம்ப அழகாகவோ வேறு எந்த கவர்ச்சியாலோ ஒரு பெண் உன்னை அடிமையாக்கும் நேரத்தில் ஒரு எக்ஸ்ரே படம் கையில் வைத்துக்கொண்டு அடிக்கடி பார். அதில் உள்ள உன் திவ்ய ஸ்வரூப எலும்பு படம் உன்னை சம நிலைக்கு கொண்டுவரும். பெண் பெயரளவில் தான் ஒரு காந்த சக்தி . மற்றபடி அவளும் சதை, ரத்தம், எலும்பு, ஆனால் நிறைய தொந்தரவு. இதை மறவாதே. கோவிந்தன் மேல் மனதைச் செலுத்து. அவனைப்பார்த்துக் கொண்டே இரு. அந்த கவர்ச்சிக்கு எது ஈடு?
4. नलिनीदलगतजलमतितरलं तद्वजीवि तमतिशयचपलम् । विद्धि व्याध्यभिमानग्रस्तं लोकं शोकहतं च समस्तम् ॥ भज ॥
naliniidalagata jalamatitaralaM tadvajjiivitamatishayachapalam . viddhi vyaadhyabhimaanagrastaM lokaM shokahataM cha samastam .. (4)
நளினி தள கத ஜலமதி தரளம் தத்வா ஜீவித மதிசய சபலம் வித்தி வ்யாத்யாபிமான க்ரஸ்தம் லோகம் சோகஹதம் ச சமஸ்தம்
”இறைவன் நமக்கு கொடுத்த 24 மணி நேரத்தில் மிக அற்புதமான ரம்யமான நேரம் எது என்றால் அது விடியற்காலை தான். உடல் புத்துணர்ச்சி பெற, உள்ளம் ஆனந்தமாக அவனை நினைக்க நமக்கு ஒதுக்கிய நேரம். அதை தூங்கிக் கெடுக்கிறோம். தூங்கும்போதும் திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் கனவில் வந்து மிரட்டுகிறான். வார்த்தை புரியாமல் உளருகிறோம்.
அமைதியான விடியற்காலை சூழ்நிலையிலே, மந்த மாருத மயக்கத்தில் கிருஷ்ணன் கோவில் அருகில் பழைய தாமரைக்குளம் இருக்கிறதே. அதில் நிறைய வாத்துகள் உலவுமே. எத்தனை பச்சை பசேலென்று அகன்ற தாமரை இலைகள். அவற்றில் கண்ணைக் கூசும் முத்துக்கள். அவற்றின் மீது சூரியன் கதிர்கள் மோதி சுக்கல் சுக்கலாக சிதறி வர்ண ஜாலங்களை ஏழு வண்ணங்களில் வாரித் தெளிக்குமே. அந்த நீர் முத்துக்கள் இலையில் ஒட்டாமல் பாதரசம் போல் அங்கு மிங்கும் நகருமே. எந்த கணமும் அந்த முத்துத் துளிகள் நீரின் மேல் ஆடிநிற்கும் தாமரை இலையிலிருந்து வழிந்து உருண்டு மறையும். சாஸ்வதமில்லாதது. இந்த
அழகிய தாமரை இலை நீரை ரசிக்கும்போது ஒரு பேருண்மை நினைவுக்கு வந்தாக வேண்டும். நமது உலக வாழ்க்கையை சுட்டிக்காட்டுகிறது இது. ஒட்டியும் ஒட்டாமலும் வாழ் என்று சொல்லிக்கொடுக்கிறது. ஆங்கிலத்தில் DETACHED ATTACHMENT பற்றற்ற வாழ்க்கை, என்பது அதைத்தான். உலக வாழ்வில் ஈடுபடும்போது நாம் செய்வது எதுவும் நமது கடமையே தவிர பரோபகாரத்துக்கு இந்த சரீரம் என்ற நினைப்போடு கர்மாவைச் செய்வது ஆத்ம திருப்தியை அளிக்கும். இந்த உலக வாழ்க்கையும் தாமரை இலைத் தண்ணீர் தான் ஸார். .அநித்ய மானது. எப்போது முடியும் என்பதே தெரியாத ப்ரம்ம ரகசியம். அந்த குறுகிய வாழ்க்கையிலும் எத்தனை துக்கம், வருத்தம், ஏமாற்றம், கோபம், சோகம், வியாதி. மன வியாகூலம்!.
உலக வாழ்வில் ஈடுபடும்போது நாம் செய்வது எதுவும் நமது கடமை யே தவிர பரோபகாரத்துக்காகத்தான் இந்த சரீரம் பகவானால் கொடுக்கப்பட்டிருக்கிறது ”இதம் சரீரம் பரோபகாரம்’, என்ற நினைப்போடு தான் நமது காரியங்களை, கர்மாவைச் செய்ய வேண்டும். அதுவே ஆத்ம திருப்தியை அளிக்கும். இந்த உலக வாழ்க்கையும் தாமரை இலைத் தண்ணீரல்லவா? அநித்யமானது என்பதால் எப்போது முடியும் என்று நோட்டீஸ் முன்னாலேயே கொடுக்காது. அது தான் பரம ரகசியம். அந்த குறுகிய வாழ்க்கையிலும் எத்தனை துக்கம், வருத்தம், ஏமாற்றம், கோபம், சோகம், வியாதி. மன வியாகூலம் எல்லாம் நாமாகவே வரவழைத்துக் கொள்கிறோம்.
‘கோவிந்தா இதை உணர உன்னை நினைத்து பலன் எதிர் நோக்காது பிறர்க்கு சேவை புரிய எனக்கருள்வாயாக. கிருஷ்ணனாக பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு சொல்வது போல் எங்களுக்கும் நீ சொன்னது தானே இது. கோவிந்தா கிருஷ்ண பரமாத்மா.”
5. यावद्वित्तोपार्जनसक्तः तावन्निजपरिवारो रक्तः ।पश्चाजीवति जर्जरदेहे वार्ता कोऽपि न पृच्छति गेहे ॥ भज ॥
yaavadvittopaarjana saktaH staavannija parivaaro raktaH pashchaajjiivati jarjara dehe vaartaaM ko.api na pRichchhati gehe .. (5)
யாவத் வித்தோ பார்ஜன சக்த : தாவன்னிஜ பரிவாரோ ரக்த: பஸ்சாத் ஜீவதி ஜர்ஜரதேஹே வார்த்தாம் கோபி ந ப்ருச்சதி கேஹே:
இந்த தோல் பையில் காற்று இருக்கும் வரை தான் பேர் உள்ள மனிதன். எல்லோரும் க்ஷேமலாப சமாச்சாரம் பேசுவார்கள். பாலிடிக்ஸ் அலசுவார்கள். மூச்சு ஸ்வாசம் நின்று போனால் அவ்வளவு தான். இந்த உடம்பைப் பார்த்தே மனைவி பிள்ளை குட்டிகள் எல்லோருமே கிட்டே வர பயப்படுவார்கள்.
மனித மனது விசித்திரமானது. ஒரு கடைக்கு செல்கிறோம். அங்கே நமக்கு வேண்டியது ஏதாவது இருக்கிறதா என்று கண்ணால் தேடுகிறோம். எதையோ ஒன்றை அது நூறு சதவிகிதம் தேவையில்லாதது, பொருத்தம் இல்லையென்றாலும் வாங்கி விடுகிறோம். ஆனால் எல்லாம் நிறைந்த மிகப்பெரிய மால் ஒன்றில் எல்லாம் இருக்கிறது. எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் அப்படியே எதையும் பார்க்காமல் திரும்பி விடுகிறோம். நம்மால் இதையெல்லாம் வாங்க போதிய பணம் கிடையாது என்ற எண்ணம் வந்துவிடுகிறது. மிகப்பெரிய உன்னத ஞானிகளின் அறிவுரைகள், புத்தகங்கள், உபதேசங்கள் இப்படித்தான் ”நம்மால் இதை யெல்லாம் புரிந்து கொள்ள முடியாது” என்ற போர்வையில், பயன் படுத்தாமல் மறைந்து விடுகிறது. அப்புறம் தெரிந்து கொள்வோம் என்று வாங்கி வைத்துவிட்டு கடைசி வரை அதைத் தொடாமலேயே சிலர் நாலுபேர் தோளில் பிரயாணம் செய்கிறார்கள். .
ஒருநாள் எங்கோ எவரோ அதில் கொஞ்சம் எடுத்துச் சொல்லும்போது எதையோ புதிதாக பார்ப்பது போல் உணர்கிறோம். எல்லாம் நம்மிடமே உள்ளது. மனதை செலுத்தி தேடினால் கிடைக்கும் என்று தெரியாமல் போகிறது.
உடம்புக்கு இன்னொரு பெயர் காயம். காயம் என்றால் புண் என்றும் அர்த்தம். உயிர் பிரிந்தபின் இந்த மனிதனின் உடம்புக்கு சிறிதும் மதிப்பு கிடையாது. சீந்துவாரில்லை. காயமே இது பொய்யடா என்பதை உயிரிருக்கும்போதே நினைத்துக் கொள்வது புரிந்து கொள்வது சாலச் சிறந்தது. இந்த சரீரம் உயிரோடு இருக்கும்போதே இதனால் பிறருக்கு, பிற ஜீவன்களுக்கு ஏதானும் உதவி செய்ய முடிந்தால் அதுவே இந்த சரீரம் எடுத்ததற்கு நல்ல பரிசு, பயன். பலன்.
”ஏ, மனிதா, அந்த ஒளவைக்கிழவி நமக்காகத்தான் அப்பவே சொல்லிவிட்டுப்போய்விட்டாள் . ஒரு குளத்தில் நீர் நிரம்பி யிருந்தால் அதில் இருக்கும் மீன்கள் வளரும். அதை உண்ண நிறைய பறவைகள் வரும். அதில் குளிக்க (துணி துவைக்கக் கூட! எல்லோரும் வருவார்கள். அதில் மலரும் பூக்களின் தேனை ருசிக்க வண்டுகளும் வரும். நீர் வற்றிப்போனால் இவை யாவுமே அந்த குளத்தை அநாதையாக்கிவிடும்.
உண்மை நண்பனாக அந்த வரண்ட குளத்தில் அடியில் இருக்கும் கொட்டி, ஆம்பல் , நெய்தல் போன்ற பூண்டுகள் தாவரங்கள் தான் கடைசி வரை நிற்கும்” என்று.
உன்னிடம் பணமோ பதவியோ, அந்தஸ்து, கௌரவம் இல்லை யென்றால், நீ தனியனாகி விடுவாய். உன்னை நோய் வாட்டி மூலையில் படுக்க வைத்தால் , உன்னையே சுற்றிக் கொண்டிருந்த உன் நெருங்கிய உறவு கழட்டிக் கொள்ளும். இதுவரை ”நட்பாக” இருந்தவர்கள் அப்போது காணாமல் போவார்கள். உனக்கு என்றும் துணை கோவிந்தன் தான். இன்றே இப்பவே அவனை நினை. கோவிந்தா, காருண்ய மூர்த்தி கோவிந்தா நீயே கதி. மீண்டும் மீண்டும் கோவிந்த னையே அணுகுவோம். attached is the immortal artist Raja Ravi Varma ‘s painting of Adhi Sankara with His disciples.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *