PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் –    நங்கநல்லூர்  J K SIVAN

அனுஷம் ஸ்பெஷல்  

அநேகர்  என்னென்னவோ  ஸ்ட்ரெஸ் டென்ஷன்  STRESS & TENSION என்கிறார்கள். அவர்களை அப்படியே  உலுக்கிவிடுகிறது இது. உடலளவிலும் உள்ளத்திலும்  பாதிப்பை உண்டாக்குகிறது.தலைவலி, வயிற்று கோளாறு, மன அழுத்தம், தூக்கமின்மை. சொறி, சிரங்கு, அஜீரணம், ஹ்ருதய கோளாறுகள், தனிமை.  இதெல்லாம்  தான் விளைவுகள் என்கிறார்களே.

”சின்னசாமி ஐயர் ,  அடிக்கடி  தொந்தரவு பண்றது என்கிறீர்களே, இதெல்லாம்  மறந்துடுங்கோ, வாழைத் தண்டு  மோர் கூட்டு  சுட சுட  சாப்பிடுங்கோ, மணத்தக்காளி பொறிச்ச கூட்டு  சுட்டப்பளம்  தொட்டுண்டு சாப்பிடுங்கோ.அதை மட்டும்  நினையுங்கோ.  அடுத்த வாரம் வாங்கோ நிறைய விஷயம் சொல்றேன்.”  என்று ஒரு நண்பரிடம் சொன்னேன்.அடுத்த வாரம் வந்தார்.
”போனவாரம் எப்படி ?”
”நீங்க  சொன்னதை வீட்டுலே பண்ணினா. அடடா  ரொம்ப  சுகமாக இருந்தது ருசி. எதுக்கு அதை சாப்பிட சொன்னீர்கள்?? என்று யோசித்தேன். காரணம் புரியவில்லை. எதற்கு அதை சாப்பிட சொன்னீர்கள்?”

”அது இருக்கட்டும். போன வாரம் முழுதும்  ஸ்ட்ரெஸ், டென்ஷன்  எல்லாம் என்ன பண்ணித்து? அதை முதல்லே சொல்லுங்கோ?
”அதெல்லாம் இல்லவே இல்லை.நன்றாக சாப்பிட்டு தூங்கினேன்”

மோர்கூட்டும் ,பொறிச்ச கூட்டும் காரணம் இல்லே சின்ன சுவாமி,  உங்கள்  மனக்குரங்கு  வேறே  கிளைகளில் தாவி  மோர்க்கூட்டு ,பொறிச்சக்கூட்டை பிடித்துக் கொண்டு விட்டது.இனிமேல்  ஸ்ட்ரெஸ் டென்ஷன் பற்றியே நினைக்காமல்  நிறைய வேறு விஷயங்கள் பேசுங்கோ. சரியாகிவிடுவீர்கள்.   மஹா பெரியவா பற்றி எத்தனை அற்புத  விஷயங்கள் இருக்கு. படியுங்கோ.  இதோ ஒன்று சுருக்கமா சொல்கிறேன் கேளுங்கோ.
++
”முனுசாமியை தெரியுமா?  கோவிந்தசாமியின் பிள்ளை. என்னன்னவோ பண்ணி பார்த்தான் அப்பன். பிள்ளை முனுசாமி உருப்படமாட்டான் என்று அவனே சாபம் கொடுத்தான். ஆனால் அப்பன் கண்ணை மூடறதுக்குள்ளே பிள்ளை அமோகமா வளந்துட்டான். நாலு கடை இருக்கு. முனுசாமி இப்போ முதலாளி. கார்லே போறான். செய்யறது எந்த தொழிலானாலும் அதுலே ஒரு பிடிப்பு, ஜனங்களோடு அன்பா பழகறது இதெல்லாம் ஒருவனை வளர்க்கும் என்பதற்கு முனுசாமி உதாரணம். எப்போதும் சிரித்த முகம். ஒரு அரை மணி நேரம் எல்லோரும்  அவன் எதிரே  தலையை  ஆட்டாமல் குனிந்து கொண்டு அவன் பேச்சை கேட்டாலே மகிழ்ச்சியா இருக்கும். தக்கார்க்கு தக்கபடி ன்னு பழக, பேச, முனுசாமி  கிட்டே தான் கத்துக்கணும்.

நாவிதன் என்றால் கடைத்தர மனிதன் அல்ல. .அவனது சேவை சமூகத்துக்கு  அவசியம். அவன் எல்லோ ருக்கும் தேவையானாவன்.  சமூகத்தில் அத்தியாவசியமான ஒரு உயர்ந்த தொழிலை  கண்ணியமாக செய்பவன். லஞ்சம் கொடுக்காத, வாங்காத ஒரே தொழில். தனது தொழிலால் அனைவரையும்  திருப்தி யடைய பண்ணுபவன்.

“இவன் பெரியவன், பணக்காரன், வேண்டியவன், ஏழை, கெட்டவன்” இந்த பாகுபாடெல்லாம் நம் கண்ணுக்கு தான், மஹா பெரியவாளுக்கு, எல்லாருமே பகவான் ஸ்வரூபம். வித்யாசமே இல்லாத பார்வை!!எப்படின்னு
கேக்கறேளா? சொல்றேன்.
++
ஓர் சமயம் ஆந்திரா வழியா வடக்கே யாத்ரை. அன்னிக்கு பௌர்ணமி. மஹா பெரியவாளுக்கு க்ஷவரம் பண்ண  நாவிதர் எங்கே கிடைப்பார் என்று தேடின அணுக்க தொண்டர்கள் ஒரு உள்ளூர் தெலுங்கு நாவிதரை  அழைத்து வந்தார்கள்.அவர் பெயர் தெரியாததால் பங்காரு நாய்டு  என்று வைத்துக் கொள்வோம்.

பங்காருவுக்கு பெரியவாளைப்  பற்றி ஒன்றுமே தெரியாது.  யாரோ ஒரு முதியவருக்கு  காசுக்கு வேலை செய்யறோம் என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் பெரியவாளை பார்த்த பிறகோ அல்லது அந்த மகானின் உடலை தொடும் பாக்கியம் கிடைத்ததாலோ தெரியவில்லை,  பங்காரு ஆசாமி ரொம்ப மாறிட்டார்.

பெரியவாளை நெருங்கவோ தொடவோ நம் யாருக்காவது பாக்கியம் உண்டா, கிடைக்குமா? ஆகவே ரொம்ப பக்தியோடு பெரியவாளைத்  தொடுவதே யாருக்கும் கிடைக்காத பாக்யமாக கருதி பங்காரு பரம சந்தோஷத் தோடு க்ஷவரம் செய்தார். பெரியவா கிட்டத்தட்ட ரெண்டு மாசம் மேலாக ஆந்த்ராவிலே இருப்பதாலே அடுத்தடுத்த பவுர்ணமிக்கும் பங்காருவே சேவை செய்ய நேரிட்டது. அது அவரது பூர்வ ஜென்ம சுக்ருதம் என்பேன். பங்காரு ரொம்ப அதிர்ஷ்டசாலி..

பேசும் தெய்வத்தின் முகத்தின் அருகில் அமர்ந்து சேவை செய்யும்போது மஹா பெரியவாளின் ஸ்வாஸம் அவர் முகத்தில் பட்டு பங்காருவும்  அதை ஸ்வாசிக்க பங்காருவுக்கு ஒரு இன்ப லாஹிரி. எங்கோ கொண்டு செல்லப்பட்டார். சொல்லமுடியாத ஒரு சந்தோஷம். ஆகாசத்திலே பறப்பதுபோல் ஒரு இன்பம். தேன் சாப்பிட கசக்குமா ?!!!.

பங்காரு குதூகலமாக பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ணினாலும் மனதில் ஒரு  ஏக்கம். நிறைய பேர் பெரியவாளை தரிசிக்க வருபவர்கள்  பெரிய பெரிய தட்டுகளில் ஏதேதோ பழம், வஸ்த்ரம் மாலை பூச்சரம் ரூபாய் காணிக்கைகள் தந்து பெரியவாளை தரிசனம் பண்ணுகிறார்களே. நம்மால்  ஒன்றுமே கொண்டு வர உடையாமல் பெரியவாளை தரிசனம் பண்ணுவது  என்னவோ போல் இருக்கிறதே.  எதைக்  கொண்டு வரலாம்? மண்டையை குடைந்து கொண்டு பங்காரு கடைசியில் பெரியவா பல் துலக்க உபயோகிக்கும் மாங்குச்சி , உடம்புக்கு குளிக்கும்போது உபயோகிக்கும் புற்று மண் ஆகியவற்றை கொஞ்சம் மூட்டை கட்டிக்கொண்டு வந்து ஒவ்வொரு முறையும் பெரியவாள் முன்னே வைத்து நமஸ்காரம் பண்ணிவிட்டு தான் தனது க்ஷவர சேவையை தொடங்குவார்

மஹா பெரியவா என்ன சாமானியரா? பங்காருவிடம் காணப்பட்ட மாறுதல்களை புன்னகையுடன் கவனித்தார். ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பங்காருவை பார்த்தவுடன் மஹா பெரியவா முக மண்டலத்திலும் பவுர்ணமி மலரும்.
காலம் ஓடியது.  ஆந்த்ராவிலிருந்து மஹா பெரியவா வடதேச மெல்லாம் சென்று சில மாதங்கள் கழிந்த பின் காஞ்சி வந்தாச்சு.
பெரியவாளுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக்  கொண்டிருந்த பங்காருவும் காஞ்சிக்கு வருவது தொடர்ந்தது.
எத்தனையோ தட்டுகள் நிறைய பழங்கள் முந்திரி ஏலம், திராட்சை, ஆபரணங்கள்,விலை உயர்ந்த அபூர்வ வஸ்துகள் தங்க நாணயங்கள், பட்டு சால்வைகள் நிறைந்திருந்தாலும் மகாபெரியவா கண்கள் பங்காரு கொண்டு  வரும் மாங்குச்சி, புற்றுமண், நிரம்பிய அழுக்கு மூட்டையை மட்டும் ஆர்வமாக நோக்கும். மற்றவை தொடப் படாமலேயே இருக்கும்,. பங்காருவுக்கோ தாழ்வு உணர்ச்சி அவமானம் தாங்கவில்லை.

அடுத்த முறை வரும்போது மற்றவர்க்கு இணையாக தானும் ஒரு தட்டு நிறைய பழங்கள், ரூபாய் நோட்டுகள், சால்வைகள் போன்ற விலை உயர்ந்த வஸ்துகளை நிரப்பி பெரியவாளுக்கு சமர்ப்பித்தார். எல்லா தட்டுகளும் பெரியவா முன் கொண்டு  செல்லப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டன. ஆனால்  மஹா  பெரியவா கண்கள் மாங்குச்சி புற்று மண் மூட்டையை தேடின.
” ஏன் இன்னிக்கு அந்த தெலுங்கர் வரல்லையோ?  –  அருகில் நின்றவரிடம் கேட்டார்.
” வந்திருக்கார். இதோ இந்த தட்டு தான் பங்காரு கொண்டுவந்தது”
“இதை பார்த்தா அவர் கொண்டுவந்தது மாதிரி தெரியல்லையே”!!.
ஆவலாக எதிர்பார்த்தது இல்லையே என்ற ஆதங்கம் அந்த த்வனியில் எதிரொலித்தது. தூரத்தில்நின்றிருந்த பங்காருவை அழைத்தார்.
” இதை நீயா கொண்டுவந்தே!! உனக்கேது இவ்வளவு பணம் ?
நெளிந்து கொண்டே மென்று முழுங்கி கொண்டு அஷ்ட கோணலுடன் பங்காரு வார்த்தை வார்த்தையாக பிரயாசைப்பட்டு என்ன சொன்னார்?
” சாமிக்கு, எல்லோரையும் போல் நாம்பளும் காணிக்கை செய்யணும்னு தோணிச்சு. என் பழைய ஓலை வீட்டை வித்துட்டு வித்த காசிலே இதெல்லாம் வாங்கி, மீதி பணமும் தட்டிலே வச்சிட்டேன்.”

“எனக்கு தேவையான மாங்குச்சி , புற்று மண் இல்லாம பண்ணிட்டேயே. தேவையில்லாததை நிரப்பிண்டு வந்திருக்கே. அதுவுமில்லாமல் உன்னையே நம்பியிருக்கிற மனைவி கொழந்தைகளுக்கு ஒதுங்க இடமில்லாம பண்ணி, இருக்கிற ஒலைக்குடிசையையும் வித்துவிட்டு வாங்கின இந்த வஸ்துகள் எனக்கு பிடிக்கும் என்று எப்படிப்பா நீ முடிவு பண்ணினாய்? சரி, சரி” மடத்திலே போய் முதல்லே சாப்பிட்டுட்டு என்னை வந்து மறுபடியும்  பாரு.”

இதற்கிடையில் யாரோ ஒரு தனவான் பெரியவாளை தரிசனம் பண்ணி ஆசீர்வாதம் வேண்டி நிற்கும்போது அவருக்கே உரித்தான காந்த சக்தி கொண்ட சிரிப்புடன் பெரியவா
“ நீ எனக்கு ஏதாவது பண்ணியே ஆகணும்னு சொல்லிண்டே இருப்பையே. ஒரு சின்ன ஒத்தை ரூம் ஒட்டு வீடாவது ஒண்ணு உடனே காஞ்சிபுரத்திலேயே வாங்கி கொடேன்”
தெய்வம் கேட்டால் மனிதர் சும்மாவா இருப்பார்!
“ இப்பவே ஏற்பாடு பண்றேன் பெரியவா” என்று அவர் ஓடியதும் அந்த  வீட்டை பங்காருக்கு பெரியவா அளித்ததும் எத்தனையோ மகாத்மியங்களில் ஒன்று என்று எடுத்துக் கொள்வோமே. எதுக்கு விஸ்தாரமாக வார்த்தைகளை வளர்த்தணும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *