PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
நமது எட்டு குணங்கள்
”அவன் ஒரு குணம் கெட்டவன்” என்று சிலரைச் சொல்கிறோமே . என்னகுணம் எதிர்பார்த்து அது அவர்களிடம் இல்லை என்று நமக்கே தெரியாது. கோபம், வெறுப்பினால் வரும் வார்த்தை இது. பிறரது குணம் நமக்கு தெரியாது. ஏன், நமது குணமே ஒரு சமயம் இருப்பது போல் இன்னொரு சமயம் இல்லையே. நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுவது நமது ஸ்வபாவம். எல்லாம் எண்ணச் சிக்கல்கள்.
குணம் என்று சொல்கிறோமே அது என்ன? நமது முன்னோர்கள்,ரிஷிகள் ஞானிகள் அதை எட்டாக பிரித்துக் காட்டு கிறார்கள். அவை நம்மிடம் இருக்கவேண்டியவை. இதைப்பற்றியும் மஹா பெரியவா சொன்னதை கொஞ்சம் சுருக்கி என்னால் முடிந்தவரை புரியும்படியாக கொடுத்திருக்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.
தயை, க்ஷாந்தி, அநஸூயை, சௌசம், அநாயாசம், மங்களம், அகார்ப்பண்யம், அஸ்ப்ருஹா என்பவை தான் அஷ்ட (எட்டு) குணங்கள். இப்படி சொன்னால் எப்படி புரியும்?ஒவ்வொன்றாக விளக்கினால் புரியும்.
(1) ‘தயை’ என்பது ஸர்வபூதங்களிடமும், சகல ஜீவராசிகளிடமும் நாம் காட்டவேண்டிய அன்பு, அருளுடைமை.
நமது வாழ்க்கையில் நாம் பெறும் நிறைந்த பலன், பெரிய ஆனந்தம் எல்லாமே பிற உயிரிடம் அன்பு செலுத்துவது தான். அதுதான் அஸ்திவாரம், (முதுகெலும்பு) .
(2) ‘க்ஷாந்தி’ என்றால் பொறுத்துக் கொள்வது. TOLERANCE . நமக்கு வியாதி, விபத்து, தாரித்ரியம் முதலானவற்றால் உண்டாகிற கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வது ஒன்று. கஷ்டத்துக்கு நமக்கு என்ன பஞ்சம். மேலே மேலே தான் வந்து கொண்டே இருக்கிறதே. நமக்கு ஒருத்தர் ஏதாவது ஒரு கஷ்டத்தைக் கொடுக்கிறபோது அவரையும் மன்னித்து அன்பைக் காட்டுவது இன்னொருவிதப் பொறுமை. இது உண்மையில் நாம் செய்யாத, செய்ய முயற்சிக்காத ஒரு காரியம். இதை முதலில் பழக்கம் பண்ணிக்கொள்ள வேண்டும்.
(3) ‘அநஸூயா என்பது அத்ரி மஹரிஷியின் பத்னியான மஹாபதிவிரதையின் பேர். உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இல்லையென்றால் இப்போது தெரிந்து கொள்ளவும். அஸுயை (பொறாமை) இல்லாதவள் அநஸூயை. (அநுஸூயை என்றால் வேறு அர்த்தமாகிவிடும். ) நம்மைவிட ஒருத்தன் நல்ல நிலையில் இருந்தால் வயிற்றெரிச்சல் படக்கூடாது. பொறாமை வேண்டாம். அதற்குப் பதிலாக பெருமை படுவோமே. ”ஆஹா, அவன் நம்ம பையன். நன்னா இருக்கான் ” இப்படி சில பேர் சொல்லிக் கேட்டதில்லையா. பொறைமையின்மைதான் அநஸூயை.
முதலில் சொன்ன அன்பு எல்லாரிடமும் காட்ட , இருக்க வேண்டியது.
இரண்டாவதாகச் சொன்ன பொறுமை நமக்கு இடைஞ்சல், தப்புப் பண்ணுகிறவனிடம் இருக்க வேண்டிய குணம். பகைவனுக்கும் அருள்வாய் என்று பாரதியார் எவ்வளவு அற்புதமாக பாடியிருக்கிறார்.
பொறாமையின்மை நம்மைவிட மேல் ஸ்தானத்திலிருக்கிறவனிடம், உயர்ந்திருக்கிறவனிடம், (நம்மைக் காட்டிலும் யோக்யதையில் குறைந்தவனாக இருந்தாலும்கூட) நமக்குமேல் ஸ்தானத்துக்குப் போய்விட்டான் என்றால் அஸூ¨யைப்படக் கூடாது. ‘பூர்வ ஜன்மாவில் நம்மைவிடப் புண்ணியம் பண்ணியிருப்பான். ஏதோ அதிருஷ்டம் என்று அதைக் கருதவேண் டும். பகவான் அருள் அவனுக்கு இருக்கிறது என்று மனஸைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
(4) சௌசம் என்பது ‘சுசி’ என்பதை வைத்து வைத்து ஏற்பட்ட வார்த்தை. ‘சுசி’ என்றால் சுத்தம். ஸ்நானம், மடி வஸ்திரம், ஆஹார நிர்ணயம் முதலான ஆசாரங்கள் எல்லாம் ‘சௌசம்’ என்பதில் வரும்'(ரயிலில் கழிவிடத்திற்கு ”ஸௌசாலயா” என்று டாய்லட்டுக்கு இந்தியில் பேர் போடுவதை பார்த்திருப்பீர்களே. ரயிலில் அது ஒன்று தான் அசுத்தமான இடமாக இருக்கிறது. சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய இடம் — ஆனால் நாம் அவ்வாறு செய்வதில்லையே) . ‘சுத்தம் சுகம் தரும். சுத்தம் சோறு போடும்’ என்று நிறைய படிக்கிறோம்,சொல்கிறோம், எழுதுகிறோம் அதோடு சரி. வெளியிலே நன்றாக சுத்தமாக இருக்கிறவனைப் பார்த்தாலே நம் மனஸுக்கும் சுத்தமாயிருக்கும். அவனிடம் ஒரு அன்பு, மரியாதை மதிப்பு எல்லாம் ஏற்படுமே. .
ஐந்து தர்மங்களை மநு சொல்கிறபோதும முதலில் அஹிம்ஸை, அப்புறம் ஸத்யம், அப்புறம் பிறர் பொருளில் ஆசையின்மை (அஸ்தேயம் – திருடாமலிருப்பது என்பது நேர் அர்த்தம்) என்ற மூன்றைச் சொல்லி, நாலாவதாக இந்த ‘சௌசம்’, கடைசியாக இந்திரிய நிக்ரஹம் (புலனடக்கம்) என்கிறார்.
(5) ‘அநாயாஸம்’ என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத்துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். ‘லைட்’டாக எடுத்துக்கொள்வது. ” இந்த டெண்டுல்கர் எப்படி அனாயாசமாக நூறு அடிச்சான்யா” — ”ஆயாஸம் ”இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு கஷ்டப்படாமல், லைட்டாக லேசாக அதை அணுகுவது அநாயாஸம். எப்போதும் ‘உர்’ரென்று இருந்துகொண்டு, வாழ்க்கையில் ”எல்லாமே கஷ்டம்” என்று புலம்பி, நொந்து கொள்ளாமல், கடுமையாக தீவிரத்தோடு சிடுசிடு வென்று எதையும் செய்யாமல், அவசரமில்லாமல் லேசாகச் செய்வது. இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப் பட்டுக்கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு சுலபமாகவே (டென்ஷன் இல்லாமலே) வேலைசெய்து விடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். “பட பட” என்று எதையும் செய்தால் நம்மையும் கசக்கிக் கொண்டு மற்றவர்களையும் நசுக்கு வது தான் மிஞ்சும் . காரியம் நகராது.
அநாயாஸம் சாதாரண விஷயமல்ல. அது ஒரு ரொம்ப மகத்தானது. (குணசீலம்) . அலட்டிக் கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். நாம் இது மாதிரி இருக்கும் ஒன்றிரண்டு பேரைக் கூட நாம் லட்சியம் செய்வதில்லையே.
அநேக கர்மாநுஷ்டானங்கள் உடம்பால் சிரமப்பட்டு செய்யவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் சிராத்தம் என் றால் மத்யான்னம் இரண்டு மணி, மூன்று மணி வரை பட்டினி கிடக்க வேண்டும். ஒரு யாகம்,ஹோமம், என்றால் அதில் நிறைய சரீர சிரமம் இருக்கிறது. அப்படியும் நிறைய பேர் சந்தோஷத்தோடு அதில் ஈடு படுவது மதிக்கப்பட வேண்டிய விஷயம். சிரமம் என்றால் உடம்பினால் மட்டும் அல்ல. மனஸினால் சிரமப்படாமல் இருப்பதைத்தான் முக்கியமாக குறிப்பிடுகிறேன். எந்தக் காரியமானாலும் விக்னங்கள், குறுக்கீடுகள், இடர்ப்பாடுகள், தடைகள், ஏதாவது வரத்தான் வரும். அதற்காக மனஸை கலங்க விடாமல் திட சித்தத்தோடு ஈடு பட வேண்டும். எல்லாம் பகவான் செயல் என்று, மனஸிலே பாரமில்லாமல் இருக்கவேண்டும். ஸங்கீத வித்வான் அநாயஸாமாக உச்ச் ஸ்தாயிலே ஆலாபனை பண்ணினார் என்றால் என்ன அர்த்தம்? கஷ்டத்தை அமுக்கி தனக்கு சாதகமாக்கி, ஸுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? விடாமல் அப்படி பழக்கப் படுத்திக் கொள்வது தான் சாதகம். சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக் கொள்வதுதான் ‘அநாயாஸம்’.
(6) ‘மங்களம்’ என்றால் திருப்தி ,சுகம். ஆனந்தமாக – அதிலேயே ஒரு கம்பீரத்தோடு தூய்மையோடு இருந்து கொண்டிருப்பதுதான் மங்களம். எதற்கெடுத்தாலும் சள்ளென்று எரிந்து விழாமல் , ‘ஆஹா’ என்று எப்போதும் ஸந்தோஷமாக இருக்கவேண்டும். இதுதான் இந்த உலகிற்கே நாம் செய்கிற பெரிய ஒத்தாசை, பெரிய தொண்டு. பணத்தை வாரிக் கொடுப்பதை விட, வேறு ஸர்வீஸ்கள் பண்ணுவதை விட, நாம் போகிற இடமெல்லாம் நம் மங்களத்தாலேயே எல்லோருக்கும் ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதுதான் மற்ற ஜீவர்களுக்குப் பெரிய தொண்டு. ‘லைட்’டாக, லேசாக எதையும் ஸாதிப்பது அநாயாஸம். போகிற இடமெல்லாம் நாமே ஒரு ‘லைட்’ (தீபம்) மாதிரி ஒளியை, ஆனந்தத்தைக் கொடுப்பது ‘மங்களம்’. நாம் ஒரு இடத்துக்குப் போனால் நாம் தான் ரொம்ப யோக்கியம் மாதிரி, எல்லாம் தெரிந்தவன் மாதிரி மற்றவர்களை ‘குற்றம் கண்டு பிடிக்க வந்துவிட்டான்’ என்று சொல்லாதபடி, ”அவர் ஒரு அருமையான ஆளு, எப்பவும் எல்லோரோடும் ஜாலியா, சிரிச்சுண்டே ,சந்தோஷமா இருக்கிற ஆசாமி, வந்தாலே களை கட்டுகிறது” என்று சொல்லும்படியாக இருப்பது. எங்கும் நாம் சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும். நாமும் மங்களமாக இருந்து கொண்டு, பொங்கும் மங்களம் எங்கும் தங்குமாறும் செய்ய வேண்டும்.
(7) ‘அகார்ப்பண்யம்’ – ஸம்ஸ்க்ரிதத்தில் லோபித்தனம், கருமித்தனம். இது இல்லாமல் தான தர்ம சிந்தையோடு இருப்பது அகார்ப்பண்யம். மனஸார வாரிக் கொடுக்கிற தாராள குணம் வேண்டும்.
அர்ஜுனன் ரொம்பவும் மனஸு ஒடிந்து போய் தளர்ந்து தேர்த்தட்டிலே உட்கார்ந்து, ‘யுத்தம் பண்ண மாட்டேன்’ ஆளை விடு” என்று அழுதபோது அவனுக்கு ‘கார்ப்பண்ய தோஷம்’ ஏற்பட்டதாக கீதையில் வருமே. அந்த இடத்தில் ‘தன்னையே ரொம்பவும் தாழ்த்திக் கொண்டு தீனமாகப் போய்விட்டவன்’ என்று அர்த்தம். தன் விஷயத்திலேயே தான் லோபியாகி விட்டான் என்று அர்த்தம்.
“அகார்ப்பண்யம்” என்றால் இப்படி தீனனாக, நோஞ்சானாக, கையாலாகாதவனாக இல்லாமல் தீரனாக, நல்ல உத்ஸாஹ புருஷனாக, மனஸ்வியாக இருப்பது என்றாகும்.
(😎 ‘அஸ்ப்ருஹா’ — அஷ்டகுணத்தில் கடைசி. ‘அஸ்ப்ருஹா’ என்றால் பற்றின்மை, ”ஆசையின்மை” . அத்தனை கெட்டதுக்கும் ஆணி வேராக இருப்பது ஆசைதான். ஆனால் அதை அடியோடு வெட்டுவதுதான் முடியவில்லை. ஸம்ஸ்காரங்களைப் பண்ணிப் பண்ணி, அவற்றோடு அஷ்ட குணங்களையும் சேர்த்துச் சேர்த்து அப்பியாஸம் பண்ணிக் கொண்டு போகும்போது கடைசியில் இந்த ஆசையின்மை, பற்றின்மை, ‘அஸ்ப்ருஹா’என்பது பூர்த்தியாக அநுபவத்தில் வருகிறது. இதையே “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு” – என்று வள்ளுவர் சொன்னார்.
‘இப்படி ஈச்வரன் என்ற பற்றற்றானைப் பற்றிக் கொண்டு மற்றப் பற்றுகளை விட்டுவிட்டால் மட்டும் போதாது. அப்புறம் அந்த ஈச்வரனுடனும் பற்றைக் கத்தரித்து விடவேண்டும்’ என்று இன்னும் ஒருபடி மேலே போய்விட்டார் திருமூலர்:
“ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்”
ஆசையைத்தான் தாகம் (வேட்கை) என்று புத்தர் சொன்னார். “ஜலம் வேணும்” என்று தாகத்தில் பறக்கிற மாதிரி ஆசையின் வாய்ப்பட்டுப் பறப்பதை ‘த்ருஷ்ணா’ என்பார்கள். பிராகிருதத்தில் இதையே ‘தன்ஹா’ என்று புத்தர் சொன்னார். ஆசையைப் போக்கடித்துக் கொள்வதுதான் புத்தருடைய முக்கியமான உபதேசம். இது அஷ்ட குணங்களில் கடைசி. முதலில் சொன்ன தயை(love) தான் கிறிஸ்து மதத்துக்கு ஜீவநாடி.
இப்படி ஒவ்வொன்றையம் ஒவ்வொரு மதத்தில் ரொம்பவும் அழுத்தம் கொடுத்துச் சொன்னாலும் இந்த அஷ்ட குணங்களையுமேதான் கிறிஸ்து, புத்தர், நபி , நானக், ஜொராஸ்த்ரர், கன்ஃபூஷியஸ், இன்னும் என்னென்ன மதங்கள் இருக்குமோ அவை எல்லாவற்றின் ஸ்தாபகர்களும் சொல்லியிருக்கிறார்கள். நேராக அவர்கள் இந்த எட்டைச் சொல்லாமலிருந்தாலுங்கூட மநுஷ்யனானவன் இந்த குணங்கள் இல்லாமலிருப்பதை எந்த மதஸ்தாபகரும் ஆதரித்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *