THOUGHT WAVES. J K SIVAN

எண்ணங்கள்  எத்தனையோ –        நங்கநல்லூர்  J K   SIVAN
ஏழாயிரம் வருஷம் ஓடிவிட்டது.  ராமனுக்கும்   ராவணனுக்கும்   யுத்தம்  18  மாதங்களாக தொடர்கிறது. போரின் உக்ரம் அனைவரையும் தகித்தது. இதோ  முடிந்துவிடும் என நினைக்கப்பட்ட போர் இன்னும்   ஏன் முடியாமல் இழுத்தடிக்கிறது?  ராவணனைக் கொல்லவே  முடியாதா? ராமனால் கூடவா? எல்லோர்க்கும் வியப்பு .ஜானகி மணாளனோடு போரிடும் இலங்கேசன் அவ்வளவு பராக்ரமசாலியா.  பகவானே வியக்கும் விதத்தில் போர் புரிந்தான் இலங்கேஸ்வரன்.  ரகுவீரனின் பாணங்களை சுலபமாக தடுத்து எதிர்பாணங்களால் தசரத மைந்தர்களையும், வானர சைன்யத்தையும் தகித்து கொண்டிருந்தான் அவன்.
இறுதிப்  போருக்காக இந்திரனின் திவ்ய தேரோடு வந்த மாதலி போர்க்களத்தில் தன திறமையை காட்டி ராகவனுக்கு தேரோட்டி கொண்டிருந்தான்.  அரக்கனின் வீரத்தை கண்ட மாதலி ஸ்ரீ ராமனைப் பார்த்து  ” சுவாமி, இது என்ன விளையாட்டு?  பிரம்மாஸ்திரத்தை மறந்தீரா, அதை எய்து அவன் கதையை முடித்து லோகத்தை அவன் கொடுமையில் இருந்து காப்பாற்றுங்கள்,” என வேண்டி கொண்டான்.
”என் மனதில் தோன்றியதை நீயே  சொல்லிவிட்டாய் மாதலி”  என ராமர்  சிரித்தார் .  பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்து அதன் திவ்ய மந்திரத்தை மனத்தால் தியானித்து,  கோதண்டத்தில் பூட்டி நாணை காது வரை இழுத்து எய்த போது உலகமே ஆடியது,  பிரளயம் மீண்டும் வருமோ? தனது காலம் முடிந்ததை  உணர்ந்துவிட்டான்  ராவணன். சிறந்த சிவபக்தன் அல்லவா.  இரு கரம் கூப்பி பாணத்தை மார்பில் ஏந்தி ஈசனடி புகுந்தான்.  மானிடரும், வானரரும், தேவரும், முனிவரும், கின்னரரும் களிநடம் புரிந்தனர்.  உலகை சூழ்ந்த இருள் மறைந்தது.  இலங்கையின் அழுகுரலும், வானரரின் ஆனந்த நடனமும் ஓன்று சேர்ந்து ஒலித்தது
களைப்பு தீர இளைய பெருமாள்  லக்ஷ்மணன் மடி மீது தலை வைத்து கண் அயர்ந்தார் ராமர்.  கண்  இமைகள் மூடி இருந்தாலும் பகவானது மனதில்  போர்க்களம் முழுதும் வியாபித்து இருந்தது.  ஒவ்வொரும் மூலையிலும் நடப்பதை  படுத்திருத்தபடியே  அவரவர் மனதில் ஓடும் எண்ணங்களை  கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார்  பகவான்  ராமர்.
”அதோ வருகிறானே  வேகமாக  இலங்கை நகரத்தை நோக்கி, ராவணன் தம்பி விபீஷணன். அவன் மனத்தில் ஓடும் எண்ணங்கள்  துல்லியமாக ராமருக்கு  புரிகிறது.  விபீஷணன்   மனம் பல கூறுகளாக பிரிந்து இருந்தது.  ”ஆஹா  நான் அல்லவோ  என் அண்ணன்  ராவணன் அழிவுக்கு காரணம்.   இப்படி எனக்கு ஒரு அரசபதவி  தேவையா?அப்படி ஒன்றும் இல்லை.   இலங்கையை அழிவில் இருந்து மீட்டு மீண்டும் ஒரு  ஸ்வர்கபுரி ஆக்கவேண்டியது என் கடமை.
ஐயோ, மலை மலையாக குவிந்து  கிடக்கிறதே  என் மக்கள்  உடல்கள். மஹா  வீரர்கள் கடைசியில் இப்படியா முடியவேண்டும்?  என் உதவி இல்லாவிட்டால்  ராமனால்  ஜெயித்திருக்க முடியுமா?.   சே சே.  ராமன் தெய்வம். நிச்சயம் தனி ஒருவனாகவே  ராவணனை  அழித்திருப்பான்.;
பகவான் ராமரின் முகத்தில் ஒரு புன்முறுவல்.
அதோ பார்  சுக்ரீவனை.   டெஸ்ட் மேட்சில் ஜெயித்த  ரோஹித் போல  வானர சேனை அவனை தோளில் வைத்து கூத்தாடுகிறது.  அவன்  தலைமையில் வெற்றியை கொண்டாடுகிறது.  சுக்ரீவனின் மாமன் சுஷேணன் அவனை புகழ்ந்து தள்ளுகிறான்.  அதே பலம்  தானே  இருக்கும்.  சுக்ரீவன்  மனதில்  ”நான்   நினைத்திருந்தால் நானே  தனி ஒருவனாக  சென்று  சீதையை மீட்டு இருப்பேனே .  ஒருவேளை இந்த பெரிய  வானர சேனை உதவி இல்லாவிடில் வெற்றி கிடைத்திருக்காதோ?” பகவான்  ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல்.

ஏன் அங்கதன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது?. அவன் மனதில் கோவம்.  ”சித்தப்பன்  சுக்ரீவன் அப்படி  என்ன பெரிதாக  கிழித்துவிட்டான்?  வாலியின் தம்பியாகிய சுக்ரீவனுக்கே இவ்வளவு வலிமை என்றால், வாலியின் ஒரே சந்ததி, செல்ல மகன் எனக்கு இருக்கும் வலிமையை யாரும் ஏன்  மதிப்பதில்லை?” நான் லங்கேஸ்வரனின்  மகா வீரர்களான வித்யுன்மாலி, வஜ்ரதம்ஷ்ட்ரன், முதலிய அரக்கர்களை வென்றதை மறந்து விட்டார்களா? அனுமனுக்கு  பதிலாக  நான் கடல் தாண்டி சென்றிருந்தால் இலங்கையை அழித்து ராவணனை கொன்று சீதையை மீட்டு வந்திருக்க முடியாதா  என்ன?”பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல் 

இன்னொரு  மூலையில்  ஜாம்பவான். அவனைச்சுற்றி கரடிப்  படை வீரர்கள். போரில்  தனது சாகஸத்தைப் பற்றி  பேசிக்கொண்டிருக்கிறான். முதிய வயதிலும் உக்கிர போர் புரிந்ததை  பெருமையோடு சொல்கிறான்.  ”நான் தான்  தசரத மைந்தர்களின் உயிரை காப்பாற்றி வெற்றியைத்  தேடி தந்தேன்” என  மார் தட்டுகிறான்.   என் யோசனையால்  தான்  அனுமன் சஞ்சீவி பர்வதத்தை கொண்டு வந்தான்.  இல்லாவிட்டால்  ராம லக்ஷ்மணர்களின் உயிரும் போய் இருக்கும், போர் நிலைமை மாறி இருக்கும்”
பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல்.
தூரத்தில் மணலில் நளன்  பாலம் கட்டிக்  கொண்டிருக்கிறான். அருகே  நீலன்,  ”நளா , நீ  சரியாக ரொம்ப  ஸ்திரமாக பலமாக பாலம் கட்டுகிறாய் .நீ  கட்டும்  சேதுபந்தனம்  பற்றி  என்றும் மக்கள்  பேசிக்கொண்டிருக்கப்போகிறாரக்ள்.  ‘ நீலா, நீ மெச்சினாலும் மெச்சாவிட்டாலும்   நான் திறமை மிக்கவன்.    சீறிக்கொண்டு  கொந்தளிக்கிற கடலில்  வேறு எவனால்  இது போல்  ஒரு பலமான பாலம் கட்ட முடியும்?”பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல்.

ராமர்  தனது  தேரோட்டி  மாதலியைப் பார்க்கிறார்.அவன்மனதில் ஓடும் எண்ணம் தெரிகிறது.  ”இந்திரலோகத்தில் எல்லோருக்கும்  தெரியுமே.  நான்  சொன்ன  யோசனையால்  தான் அற்புதமாக தேரோட்டி  ராமரை  ராவணன் ஆயுதங்களிலிருந்து தப்ப வைத்தேன். ராவணனை அழிக்க நான் தான் ஒரு முக்கிய காரணம்” பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல் 

ஆதிசேஷன் மேல் சயனித்த , மஹா விஷ்ணு போல்    ராம  லஷ்மணர்களின் தனுசுகள் கோதண்டமும், வைஷ்ணவமும் ஒன்றோடொன்று பேசுவதை ராமர் கேட்கிறார். ”என்னை யார் என  நினைக்கிறாய்?  என்  ஆற்றலால் தான்  ராமருக்கே  கோதண்டராமன் என்று உலகம் போற்றுகிறது.  என் உதவி இல்லாவிட்டால்  ராமரால்  இத்தனை  ராக்ஷஸர்களை ஜெயித்து  கொன்றிருக்க முடியுமா?””கோதண்டா, நானும் இளைத்தவன்  இல்லை. மஹா வீரர்கள் பலரை என் உதவி கொண்டுதானே என் தலைவன்  லக்ஷ்மணன்  வென்றார்” என்றது  வைஷ்ணவம்.
பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல்.

லக்ஷ்மணனை பார்க்கிறார். அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் ஓடுகிறதே.  ”அதிகாயன், மகாபர்ச்வான், அஹாம்பணன், முக்கியமாக இந்திரஜித் போன்றோரை நான் வென்றது ராமருக்கு  சௌகர்யமாக போய்விட்டது.  பாவம்  அயோத்தியில் என்   மனைவி ஊர்மிளை  வாடி  ஏங்குகிறாள். அவளிடம்  என்  வீர பிரதாபங்களை சொன்னால்  அசந்து போவாள்”பகவான் ராமர் முகத்தில் ஒரு புன்முறுவல்.

அங்கே  என்ன  அழுகுரல்? கேட்டுக்கொண்டிருந்த  ராமர்  உள்ளத்தில்  ஒரு அதிர்ச்சி. வேதனை.  யார் இப்படி  அழுவது?  தூரத்தில் தனியாக முகத்தை தன் முழங்கால்களில் பதித்துக் கொண்டு  எதற்கு ஆஞ்சநேயன் அழுகிறான்?  அவன் மனதில் ஓடும்  எண்ணம் புரிகிறது கேட்கிறது
” ஹே ராமா, உனக்கு சேவை செய்து காலத்தை போக்கி வந்த எனக்கு, இனி அந்த பாக்கியம் மீண்டும்  கிடைக்குமா? நீ உன் நாடு, அயோத்திக்குத்  திரும்பினால் என்னை  மறந்துவிடுவாயா?  என்  சேவை இனியும் உனக்கு தேவை படுமா? . அற்ப வானரன் நான். இனி எப்படி உனக்கு மீண்டும்  சேவை செய்வேன்?பகவான்  ராமர்  முகத்தில் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. 

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *