PESUM DEIVAM J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
”என்னடா நானும் பண்ணிக்காட்டணுமா”
மஹா பெரியவாவுடைய ஞாபகசக்தி உலகப் பிரசித்தி. அடேயப்பா எவ்வளவு ஆழ்ந்த அபார தீர்க்க தரிசன, ஞாபக சக்தி. அவருக்கு தெரியாத விஷயங் களே கிடையாது என்பது போல் அவரால் எவரையும் ஒரு தடவை சந்தித்தால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட அற்புத விஷயம் ஒன்றை ஏற்கனவே எழுதி இருந்தாலும் இன்று மீண்டும் ஒரு தடவை எனக்கே உங்களுக்கு ஞாபகப் படுத்த தோன்றியதால் எழுதுகிறேன்.
மஹா பெரியவா இருந்தவரை காஞ்சி மடம் ஒரு தாய் வீடு. யாருக்கு என்ன குறை இருந்தாலும் அதை நீக்கிக் கொள்ள ஓடி வருவார்கள் அதே போல் யாருக்கு என்ன சந்தோஷ நிறைவான விஷயம் இருந்தாலும் பெரியவா ளோடு அதை பகிர்ந்து கொள்ளவும் மனதிருப்தியோடு வரும் பக்தர்களும் உண்டு.
அன்று பெரியவா மௌன விரதம் இல்லை . வழக்கம் போல பக்தர்கள் கூட்டம் ஜேஜே என்று பொங்கி வழிந்தது. கொஞ்சமும் களைப்போ தளர்ச்சியோ இல்லாமல் உள்ளே மஹா பெரியவா தரிசனம் தருகிறார். பலரோடு பேசுகிறார். பய பக்தியோடு வரிசையாக பக்தர்கள் அவரை நெருங்கி நமஸ்கரிக்கிறார்கள்.
ஒரு இளவயதுக்கார பக்தன். சிவப்பா உடலில் பட்டை பட்டையாக விபுதி, கழுத்தில் ருத்ராக்ஷம் , மார்பில் ஒத்தை பூணல். சாதாரண நாலு முழ கனமான கதர் வேஷ்டி. அதன் மேல் மேல துண்டை வரிந்து கட்டி இருக்கிறது. தலையில் கிராப்புக்கு பின்னால் ஒரு சிண்டு. சாஸ்திரத்துக்கு ஒரு சின்ன குடுமி அது. கையில் பிரம்பு தட்டில் புஷ்பம், பழம், கல்கண்டு, திராட்சை முந்திரி, வில்வ மாலை. அதை அவர் முன்னாள் வைத்துவிட்டு தடால் என்று கீழே விழுந்து நமஸ்கரித்தான். வாய் நிறைய ”ஜயஜய சங்கர ஹரஹர சங்கர”.
பேசும் தெய்வம் புன்னகையோடு அவனை ஒரு எக்ஸ்ரே XRAY பார்வை இட்டது. கெட்டியான மூக்குக் கண்ணாடி வழியாக காந்த ஒளி பக்தனை கவர்ந் தது. நமஸ்காரம் பண்ணி எழுந்து கைகட்டி குனிந்து அவர் எதிரே நின்ற அவனுக்கு அபய ஹஸ்த ஆசீர்வாதம். அப்புறம் பேச்சு: ‘
‘ஏண்டா நீ குளித்தலை சங்கரன் தானே? சவுக்கியமா இருக்கியா? ”
”ஆமாம் பெரியவா எல்லாம் பெரியவளோட ஆசிர்வா தம்”
”உனக்கு என்ன வயசாறது?”
”முப்பது பெரியவா””
”கல்யாணம் கில்யாணம் பண்ணிக்கிற உத்தேசம் இல்லையா. ப்ரம்மச்சாரியாவே இருந்துடலாம்னு எண்ணமோ ?”
”அப்படித்தான் பெரியவா”
”இரு யார் வேணாம்னா. இப்போ என்ன காரணமா என்னை பார்க்க தோணித்து உனக்கு ? புன்னகை. அருகில் எல்லோரையும் பார்க்கிறார். சங்கரன் நெளிகிறான். மென்று விழுங்கிக் கொண்டே பதிலளித்தான்.
”எனக்கு ஒரு சந்தேகம் பெரியவா”
”’ஒ அதானே பார்த்தேன். என்ன சந்தேகம் பெரிசா உனக்கு, சொல்லு?”
”மந்திர ஜபத்தைப் பத்தி…
”ம்ம் நீ எதாவது மந்திர ஜபம் பண்றதுண்டா?
”ஆமாம் பெரியவா””
”யார் உனக்கு குரு?”
”மைசூர் யஞ நாராயண கனபாடிகள்”
”அடடா, அவரா. ரொம்ப விஷய ஞானி ஆச்சே அவர். என்ன மந்த்ரம் உபதேசம் பண்ணினார் நோக்கு?சரி சரி என்கிட்டே சொல்லப்படாது. உபதேச மந்த்ரம் யார் கிட்டேயும் நீ சொல்லப்படாது. ரகசியமாகவே இருக்க ணும் என்கிறது தான் சாஸ்திரம். எந்த சுவாமி மேலே மந்திரம் னு மட்டும் சொல்லு அது போறும். ”
”ஹனுமத் உபாசனா மூல மந்த்ரம் பெரியவா””
”ஓஹோ. அதுலே உனக்கு என்ன சந்தேகம் வந்துடுத்து?”
”வந்து.. வந்து.. ஏழு வருஷமா அவா உபதேசம் பண்ணி னதிலேருந்து விடாம மந்திர ஜபம் பண்ணிண்டு வரேன். அப்படியும் எனக்கு ஒன்னும் வித்யாசமா எதுவும் தெரியலையே.. ன்னு…””
”’சங்கரா…வித்யாசமா தெர்யல்லேன்னு எதைச் சொல்றே?”
”மந்திர ஜபம் பண்றதாலே எனக்கு எதுவும் சித்தி அடைஞ்சதா மனசிலே படலையே பெரியவா”
குரலில் சோகம் ஏமாற்றம் த்வனித்தது.
”இதோ பார். அதைத் தெரிஞ்சிண்டு நீ என்ன பண்ணணும்? மந்திர ஜபத்தை ஆத்மார்த்தமா பண்றி யா எதாவது ஒரு கார்யார்த்தமா பண்றியா?”
”இல்லை, இல்லை, பெரியவா. ஆத்மார்த்தமா தான்”. எந்த கார்யம் சித்தியாகணும்னும் பண்ணலே. இருந் தாலும் மந்த்ர ஜபத்தால எதாவது சித்தி கிடைச்சி ருக்கா? மந்திர தேவதையோட அருள் எனக்கு ஏதாவது வந்து சேர்ந்திருக்கா? எவ்வளவு தூரம் நான் முன்னேறி யிருக்கேன்? என்கிறதெல்லாம் புரியலையே”
சங்கரன் கண்களில் நீர் அருவி. நாக்கு தழு தழுத்தது.
”சங்கரா, ஜபம் பண்றவனுக்கு தான் மந்திர சித்தி தனக்கு கிடைச்சிருக்கா என்று உணரமுடியும். நேரம் காலம் வரும்போது தானே அனுபவத்திலே உனக்கு இது தெரிய வரும். வெயிட் பண்ணு . காத்திண்டு இரு.”
”இல்லை பெரியவா. ஏழு வருஷமா ஒண்ணுமே தெரியலை. விடாம பண்ணிண்டு வரேன். என்னாலே புரிஞ்சிக்க முடியலே. மனசு பேதலிக்கிறது. களைச்சு போயிடறது. எனக்கு என்ன கிடைச்சிருக்குன்னு நீங்க தான் சொல்லணும். ”
அழுது கொண்டே இரு கரம் சிரம் மேல் குவித்து மீண்டும் நமஸ்கரித்தான் சங்கரன். மஹா பெரியவா தீர்க்கமாக அவனை உற்று நோக்கின சில நொடிகளில் மௌனம். .
”இப்படி உக்கார். சொல்றேன் கேள். சில வருஷங்கள் முன்னாலே சிருங்கேரி சாரதா பீடத்துக்கு மஹா சன்னி தானம் நரசிம்ம பாரதி சுவாமி பீடாதிபதியா இருந்த போது இப்படித்தான் ஒரு சிஷ்யன் அவரை தரிசனம் பண்ண வந்தான். வெறுமனே வரலை. உன்னை மாறி யே ஒரு கேள்வியை தூக்கிண்டு வந்தான். நீ கேட்டதே தான் அவனும் அவா கிட்டே கேட்டான். ஒரு தட்டுலே நிறைய கொய்யா பழம் எதிர்க்க வைச்சுட்டு நமஸ்கா ரம் பண்ணிட்டு தான், சந்தேகத்தை கேட்டான். எல்லாத்தையும் கேட்டுட்டு மஹா சுவாமி என்ன சொன்னார் தெரியுமா?
”நீ பாட்டுக்கு ஜபம் பண்ணிண்டே வா. ஆத்மார்த்தமா பண்ணு. அந்த தேவதை உனக்கு சித்தி பலனை கொடு க்க வேண்டிய நேரத்திலே கொடுக்கும்”
‘சுவாமி இதுவரை பண்ணின ஜபத்துக்கு என்ன சித்தி யாயிருக்குன்னு எப்படி தெரிஞ்சிப்பேன் ? சுவாமி தான் சொல்லி த்தரணும்”.
சுவாமி சிரித்தார்.
”அதுக்கு ஒரு வழி இருக்கே” என்றார்.
”என்ன வழி என்று சுவாமி சொல்ல காத்திருக்கேன்”
”ஒரு பலகை மேலே நிறைய நெல் பரப்பி, உன்னுடைய வஸ்த்ரத்தைப்போர்த்தி மூடிட்டு அது மேலே உக்கார்ந்து ஜபம் பண்ணு. எப்போ அந்த நெல்லு சூட்டிலே பொரிஞ்சு பொரியாறதோ அப்போ உனக்கு சித்தியாயிருக்கிறது புரியும்.”
சிஷ்யனுக்கு சுவாமி கேலி பண்றாரோன்னு ஒரு சம்சயம். தன்னை வெளியே அனுப்பறதுக்காக இதை பண்ண சொல்றாரோ? மஹா ஸ்வாமி நரசிம்ம பாரதி க்கு அவன் மனசிலே ஓடும் எண்ணம் தெரியாமலா போகும்?
.”ஒருக்கால் நான் உன்னை இங்கிருந்து அனுப்பறதுக் காக தட்டிக்கழிக்க இப்படி சொன்னேன்னு நினைக் கிறியா? போ. உள்ளே போய் ஒரு பலகை கொண்டு வா”
பலகை வந்ததும் அதன் மேல் நெல் பரப்பி தனது வஸ்த்ரத்தால் மூடி தானே அதன் மீது அமர்ந்து கண்களை மூடி மந்திர ஜபம் செய்தார். அனைவரும் பார்க்க, அவருள்ளே சில நொடிகளில் அக்னி பரவியது. அவர் உடல் மூலம் அக்னி வஸ்த்ரம் தாண்டி நெல்லை பொரித்தது. பட பட வென்று சப்தத்துடன் நெல் தானி யங் கள் பொரிந்தன. வெள்ளை வெளேரென்று பொறி தலை தூக்கியது. சிறிது புகையும் அங்கே சூழ்ந்தது.
நரசிம்ம பாரதி சுவாமிகள் கண் திறந்து சிஷ்யனை பார்த்தார். அவனுக்கு புரிந்து விட்டது. தேம்பி தேம்பி அழுதுகொண்டு நின்றான்”.
காஞ்சி மஹா பெரியவா இந்த சம்பவத்தை குளித் தலை சங்கரனுக்கு சொல்லி நிறுத்தி அவனைப் பார்த்தார். சங்கரனும் தேம்பி தேம்பி அழுதுகொண்டு நின்றான் கூப்பிய கரங்களுடன். பேச முடியவில்லை அவனால்.
அவனை கையால் ஜாடை செய்து நிறுத்தி
” என்ன சங்கரா நானும் உனக்கு நரசிம்ம பாரதி ஸ்வாமிபோல் டேமான்ஸ்ட்ரெட் பண்ணனுமா? ” சிரித்துக்கொண்டே கேட்டார்.
”போறும் பெரியவா போறும்.’ எனக்கு புரிய பண்ணிட் டேள். மந்திர சக்தி மகிமையை தெரியறது இப்போ. என் சந்தேகம் நிவர்த்தியாயிட்டுது. உங்க பூரண ஆசீர்வாதத் தோடு நான் ஊருக்கு திரும்பறேன்” மீண்டும் ஒரு நமஸ்காரம்.
அருகே இருந்த அனைவரும் இந்த சம்பவத்தை கண் ணால் பார்த்து, காதால் கேட்டவர்கள் எவ்வளவு பாக்ய சாலிகள்!

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1397

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *