KAMBA RAMAYANAM SARAYU J K SIVAN

கம்ப ராமாயணம் – நங்கநல்லூர் J K SIVAN

சரயுவில் வெள்ளம்

ராமாயணம் என்றால் ராமன், ராவணன், சீதை, ஹனுமான் போல் பிரிக்கமுடியாத ஒரு பெயர் சரயு. ராமனின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட புண்ய நதி. இன்னும் இருக்கிறது. உத்தரகாண்ட் , உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக பாயும் ஒரு நதி. வேதம் போற்றும் புண்ய ஆறு. உ.பியில் கர்னாலி (ககாரா), சாரதா (மகாகாளி) ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உருவாகிறது. சாரதா நதி இந்திய-நேபாள எல்லையை உருவாக்குகிறது. அயோத்தி நகரம் சரயு ஆற்றுக் கரையில் அமைந்துள்ளது. எண்ணற்ற பக்தர்கள் அன்றாடம் அயோத்தியில் சரயுவில் ஸ்னானம் செய்கிறார்கள். சரயு நதிக்கரையிலேயே பிறந்த ராமர் சரயுவில் நீராடியே வளர்ந்து சரயுவைக் கடந்து வனவாசம் சென்று கடைசியில் சரயுவில் கலந்தே வைகுந்தம் புகுந்தார். கம்பர் ராமாயணத்தை சரயுவிலிருந்தே துவங்குகிறார்.
16. மானம்‌ நேர்ந்து. அறம்‌ நோக்கி. மனு நெறி
போன தண்‌ குடை வேந்தன்‌ புகழ்‌ என.
ஞானம்‌ முன்னிய நான்மறையாளர்‌ கைத்‌
தானம்‌ என்ன. தழைத்தது – நீதீதமே.
சரயுவில் வெள்ளம் போல் நீரோட்டம் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்குமாம். அது எது போலாவாம் தெரியுமா? தனது பெருமை புகழ், ஒழுக்கம் இவற்றுக்கு பங்கம் வராமல் தன் மாணத்தைக் காக்கும், தர்ம வழியில் நேர்மையோடு அரசாளும் தான தர்மத்தில் சிறந்த ராஜாவின் புகழ் போல, வேதம் கற்ற ப்ராமணர்கள் உச்சரிக்கும் மந்திரம் போல கடகடவென்று வேகமாக, என்றும் குறைவில்லாமல் ஓடுமாம். தன்னை நாடிவரும் ஆண்களின் அணிகலம் பணம் எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளும் விலைமாதர் போல மலையிலிருந்து புறப்பட்ட சரயு நதி, மலையின் செல்வங்களையெல்லாம் தன்னோடு வாரி வளைத்து எடுத்துக்கொண்டு ஓடிவருகிறது. 18. மணியும்‌ பொன்னும்‌. மயில்‌ தழைப்‌ பீலியும்‌.அணியும்‌ ஆனை வெண்கோடும்‌. அகிலும்‌. தன்‌
இணை இல்‌ ஆரமும்‌. இன்ன கொண்டு ஏகலான்‌.
வணிக மாக்களை ஒத்தது – அவ்‌ வாரியே.
மணி, பொன் மயில்பீலி, யானை தந்தம், வேரோடு சந்தனமரம் தெல்லாம் வாரிச்செல்வதால் சரயு பெரிய வியாபாரிக போல என்கிறார் கம்பர்.
19. பூநிரைத்தும்‌. மென்‌ தாது பொருந்தியும்‌.
தேன்‌ அளாவியும்‌. செம்‌ பொன்‌ விராவியும்‌.
அனை மா மத ஆற்றொடு அளாவியும்‌.
வான வில்லை நிகர்த்தது – அவ்‌ வாரியே.
சரயுவில் பல வர்ணங்களில் மலர்கள், தேன் அடைகள், போன்ற என்னென்னவோ பொருள்கள் அடித்துக் கொண்டு வருவதைப் பார்க்கும்போது சரயு வான வில் போல ஏழு வர்ணங்கள் கொண்டதாக தெரிகிறதாம்.
20. மலை எடுத்து. மரங்கள்‌ பறித்து. மாடு
இலை முதல்‌ பொருள்‌ யாவையும்‌ ஏந்தலான்‌.
அலை கடல்‌-தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக கவி நீக்கம்‌ – அந்‌ நீத்தமே.

சரயுவில் மலைகளின் பெரும் பாறைகள், சிறு குன்றுகள்,பெரிய மரங்கள் இலைகள், கிளைகள், பழங்கள் காய்கள் எல்லாம் நிறைய வருவதைப் பார்க்கும்போது சேது பந்தனம் செய்ய வானரக் கூட்டங்கள் பெரிய பெரிய பல வித வண்ண பாறைகளையும் அணைகட்ட தேவையான வஸ்துக்களைத் தூக்கிக் கொண்டு சமுத்ர கரையில் நடமாடுவதைப் போல் தெரிகிறது என்கிறார்.
21. ஈக்கள்‌ வண்டொடு மொய்ப்ப. வரம்பு இகந்து
ஊக்கமே மிகுந்து. உள்‌ தெளிவு இன்றியே.
தேக்கு எறிநது வருதலின்‌. – தம்‌ புனல்‌ –
வாக்கு தேன்‌ நுகர்‌ மாக்களை மானுமே.

வரம்பு மீறி குடித்த குடிகாரன் வாயிலிருந்து கள் ஒழுகுமே, அதை உண்ண ஈக்களும்‌ வண்டுகளும்‌ மொய்ப்பது போல எல்லையை மீறி, கரையைத் தாண்டி சரயு ஓடுகிறதாம். கரையில் உள்ள உயிரினங்கள் கூட்டமாக ஓடுகிறதாம்.
23. இரவிதன்‌ குலத்து எண்‌ இல்‌ பல்‌ வேந்தர்தம்‌
பரவு நல்‌ ஒழுக்கின்‌ படி பூண்டது.-
சரயு என்பது-தாய்‌ முலை அன்னது. இவ்‌
உரவுநீர்‌ நிலத்து ஓங்கும்‌ உயிர்க்கு எலாம்‌.
நடுவிலே தொய்வில்லாமல் ஒரே சீராக ஓடும் சரயு நதியின் நீரோட்டம் இதைப்போல இருக்கிறதாம் தெரியுமா. ரவிகுல மன்னர்கள் அத்தனை ராஜாக்களும் ஒழுக்கம், பக்தி, பொதுநலம், மக்கள் சேவையில் ஒரே மாதிரியாக முழு கவனம் உள்ளவர்களாக எண்ணம் கொண்டவர்களாக இருந்ததைப் போல என்கிறார் கம்பர்.
24. கொடிச்சியர்‌ இடித்த சுண்ணம்‌. குங்குமம்‌. கோட்டம்‌. ஏலம்‌.
நடுக்குறு சந்தம்‌. சிந்து ரத்தொடு நரந்தம்‌. நாகம்‌.
கடுக்கை. ஆர்‌ வேங்கை. கோங்கு. பச்சிலை. கண்டில்‌ வெண்ணெய்‌
அடுக்கலின்‌ அடுத்த தீந தேன்‌. அகிலொடு நாறும்‌ அன்றே.

அயோத்தியில் வாழ்ந்த பெண்கள் தமது ஸ்னானத்துக்கு வாசனைப்பொடியை வீட்டில் இடித்து, பொடித்துக் கொள்வார்கள். குங்குமம், ஏலக்காய், குங்குமப்பூ, சந்தனம் நறுமண பூக்களின் இதழ்கள், நாகம் வெட்சி, நரந்தம், புள், சுர புன்னை புஷ்பா, வேங்கை, கொன்றை, ஆத்தி, வேங்கை, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்தது போல் எங்கும் காற்றில் நறுமணம் மூக்கைத் துளைப்பது போல பலவித வண்ண வஸ்துக்களோடு சரயு ஓடும்போது எங்கும் நறுமணம் பரவியது

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1398

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *